Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

சந்தியாவந்தனத்தின் மகிமை

காமகோடி ஆகஸ்டு 2003 இதழில் வெளியானதுஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று மட்டுமே பலரும் சந்தியாவந்தனமும், காயத்ரி ஜபமும் செய்வது வழக்கமாக உள்ளது. காயத்ரீ என்பது தன்னை தியானம் பண்ணுபவர்களை ரக்ஷிப்பது. காயத்ரி வேத மந்திரங்களுக்கெல்லாம் அன்னை, காயந்தம்+த்ராயதே இதி = காயத்ரி. சந்தியாவந்தன காயத்ரியான நிச்ரு காயத்ரியில் 23 எழுத்துக்களும், வேதத்தில் வரும் காயத்ரி சந்தஸில் 24 எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள 24 எழுத்து மந்திரங்களும் எல்லா தேவதைகளையும் குறிப்பது. சந்தியாவந்தனம் பிரும்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்தன் ஆகிய மூவராலும் செய்யத் தக்கது. சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் செய்வதாலேயே ஒருவன் சகல வைதிக காரியங்களும் புரிய அருகதை பெறுகிறான். சந்தியாவந்தன மகிமையைப் பற்றி ஜகத்குரு மகா பெரியவாள் அவர்கள் 1939-ல் முடிகொண்டான் கிராமத்தில் அருளிய உபதேசத்தின் சாரம்.

ஸந்தியாவந்தனத்தின் மகிமையைப் பற்றி ஒரு கதை. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர் எள்ளினால் ஒரு கால புருஷன் உருவத்தைச் செய்து அதனுள் துவரம்பருப்பு வடிவில் ஏராளமான பொற்காசுகளை வைத்து, அவற்றை தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

நிபந்தனை:

கால புருஷன் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல வேண்டும்! பலர் தானம் வாங்க வந்து தோல்வியடைந்தார்கள். கன்னடியர் என்ற ஒரு பிரம்மசாரி ஸந்தியாவந்தன கர்மாவில் வெகு சிரத்தையுள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவைகளில் அவருக்கு அப்பியாசம் கிடையாது என்றாலும் அந்தத் தானத்தை வாங்க விரும்பி அரசவைக்கு வந்தார். கால புருஷன் உருவம் மூன்று விரலைக் காட்டியது. அவர் முடியாதென்றார். பிறகு அது இரண்டு விரல்களைக் காட்ட, அதற்கும் முடியாதென்ற பிரம்மசாரி, கடைசியாக அது ஒரு விரலைக் காட்டியதும் ‘சரி’ என்றார். உட்னே கால புருஷன் அந்த உருவத்திலிருந்து மறைந்தான்.

அந்த உருவச் சிலையிலிருந்த பொற்காசுகள் அனைத்தையும் அந்தப் பிரம்மசாரி தானமாக அடந்தார்.

காலபுருஷன் காட்டிய மூன்று விரல்களும் மூன்று வேளைகளில் செய்யப்படும் சந்தியாவந்தனம், மற்றும் மாத்யான்னிகத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை, மாலை சந்தியாவந்தனங்களின் பலன். ஒரு விரல் ஒரு வேளை மட்டும் செய்யப்படும் மாத்யான்னிகத்தின் பலன். கால புருஷன் கடைசியாகக் கேட்ட அந்த ஒரு வேளையின் பலனை மட்டும் பிரம்மசாரி அவனுக்கு அளித்ததால் அவருக்கு ஐஸ்வர்யம் கிட்டியது.

ஆனால், மாத்யான்னிகத்தின் பலனைக் கொடுத்து தானத்தைப் பெற்றுக் கொண்ட்தால் அவருக்கு பாபம் சம்பவித்தது. அதைப் போக்கிக் கொள்வதற்காக, தனக்குத் தெரிந்த கோவில் குருக்களிடம் பொற்காசு மூட்டையைக் கொடுத்து பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, அவர் தல யாத்திரை புறப்பட்டார். வழியில் ஒரு கிழ வேதியர் எதிர்ப்பட்டார். அவரது தவக்கோலம் கண்ட பிரம்மசாரி அவர் காலில் விழுந்து வணங்கித் தன் பாபம் போக்க வழி சொல்லுமாறு கேட்டார். அந்த வேதியர், “நீ செல்லும் வழியில் ஒரு பசு மாடு எதிர்ப்படும். நீ அதைப் பின் தொடர்ந்து செல். அது எவ்வளவு தூரம் போகிறதோ அவ்வளவு தூரம் நீ ஒரு கால்வாய் வெட்ட வேண்டும். இதுவே உன் பாபம் நீங்க வழி” என்று சொன்னவர் தானே அகத்திய முனிவர் என்பதை வெளிப்படுத்தி விட்டு மறைந்தார்.

பிரம்மசாரி அதன்படியே கால்வாய் வெட்டும் செலவுக்காக கோயில் குருக்களிடம் சென்று தான் கொடுத்து வைத்த திரவியத்தைக் கேட்டார். அவருக்கோ பிரம்மசாரி தன்னிடம் கொடுத்த செல்வத்தை அபகரித்துக் கொள்ளவேண்டும் என்று துராசை ஏற்பட்டது.

அவர் பிரம்மசாரியிடம் ஒரு மூட்டை துவரம் பருப்பைக் கொடுத்து, “நீங்கள் கொடுத்தது இதுதான்” என்று சொல்லி விட்டார். பிரம்மசாரி மன்னனிடம் சென்று முறையிட, குருக்கள் வரவழைக்கப்பட்டார். பிரம்மசாரி தங்கள் ஊர் கோயிலில் உள்ள சுவாமி முன் அவரை சத்தியம் செய்யச் சொன்னார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகம் செய்வதில் வல்லவர். அவர் சுவாமியைப் பக்கத்தில் உள்ள மரத்தில் ‘ஆவாஹனம்’ செய்து விட்டார். அதை இறைவன் பிரம்மசாரிக்கு உணர்த்திவிட, அந்த மரத்தின் முன்தான் குருக்கள் பிரமாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிட்டான். வேறு வழியில்லாமல் குருக்கள் மரத்தடியில் பிரமாணம் செய்தபோது தீச்சுவாலைகள் தோன்றி அவரை எரித்தன. பிரம்மசாரி தன் தனத்தை அடைந்து அதன் மூலம் வேதியர் சொன்னவாறு கால்வாய் வெட்டி தன் பாபத்தைப் போக்கிக் கொண்டார். கன்னடியன் கால்வாய் என்ற பெயரில் அது இன்னும் இருக்கிறது.


ஸ்ரீபரமாச்சார்யாள் சொன்ன இந்தக் கதையினால் சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் இவற்றின் மகிமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக