Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

விளையாடலாம் வாங்க

கிருஹ ஷோபா அக்டோபர் 2002 இதழில் வெளியானது



மெஸேஜ் பாஸிங்
இந்த விளையாட்டிற்கு 6 முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோரும் வட்டமாக சுற்றி உட்கார வேண்டும். எல்லோர் பெயரையும் காகிதத்தில் எழுதி மடித்துப் போட்டு, வயதில் சிறியவரை ஒரு சீட்டு எடுக்கச் சொல்லவும். அவரே தொடக்க ஆட்டக்காரர். அவர் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது சின்ன வாக்கியத்தை தன் பக்கத்தில் உள்ளவர் காதில் சொல்ல வேண்டும். அதை அடுத்தவர் காதில் சொல்ல, அப்படியே தொடர்ந்து சென்று கடைசியாக இருப்பவர் அந்த வார்த்தையை உரத்த குரலில் சொல்ல வேண்டும். அந்த வார்த்தை ஆரம்ப ஆட்டக்காரர் சொன்ன அதே வார்த்தை எனில், ஆரம்ப ஆட்டக்காரரே மீண்டும் ஆட்டம் தொடர வேண்டும். வார்த்தை மாறியிருந்தால், ஒவ்வொருவராக அவர்கள் கேட்டதை உரக்கச் சொல்ல, யார் அதை மாற்றினார்களோ, அவரே அவுட் ஆனவர். உதாரணமாக ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்ற வார்த்தை கடைசியாக ‘நீடி கீரை’ என்று மாறிவிடுவது வேடிக்கையாக இருக்கும்! இந்த விளையாட்டை வேகமாக விளையாட வேண்டும். காதில் ஒரு முறைதான் சொல்ல வேண்டும்.

கண்ணாடி விளையாட்டு
எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். வட்டமாக அமர்ந்து கொள்ளவும். பின்னணியில் டேப்பில் பாடல் ஒலிக்க, முதலாமவரிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுக்கவும். அவர் அதில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு, அடுத்தவரிடம் தர, அவரும் தன் முகத்தைப் பார்த்து அடுத்தவரிடம் தர, கண்ணாடி சுற்றிவரும். டேப்பை இயக்குபவர் திடீரெனப் பாடலை நிறுத்த, கண்ணாடி யார் கையில் இருக்கிறதோ அவருக்கு அடுத்தவர் ஆட்டத்திலிருந்து விலக வேண்டும். பின் பாடல் ஒலிக்க, கண்ணாடி சுற்றி வர விளையாட்டைத் தொடரவும். இது எளிமையான, ஆனால் விறுவிறுப்பான விளையாட்டு. கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் நபரின் முகத்தில் படரும் வெட்கத்தை மற்றவர்கள் ரசிக்கலாம். அதற்கு முன் அவுட் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் அடுத்தவர் கண்ணாடியைப் பிடுங்க, கடைசியில் யார் கையில் கண்ணாடி இருக்கிறதோ அவரே வென்றவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக