Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்!


(பெண்மணி ஜூன் 2010 இதழில் வெளியானது)








    உலகிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'கம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ள சியாம்ரீப் நகரில் அமைந்துள்ளது. 

    அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள்.

    முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக கம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது கம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1200) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.

    இவ்வாலயங்களில் பிரதான தெய்வமாக சிவனும், மகாவிஷ்ணுவுமே இருந்திருந்தாலும், இடையில் பெளத்த மதமும் பரவியதன் காரணமாக இடைப்பட்ட மன்னர்களால் அந்த ஆலயங்கள் புத்தவிஹாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதத்தையும் மாறிமாறிப் பின்பற்றியதால் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் மகாவிஷ்ணு சிலைகள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன.

    பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சயாம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளால் அடிக்கடி தாக்கப்பட்டதால் கம்போடியா சீர்குலைந்து, தம் சிறப்புகளை இழந்து காடுகளுக்குள் மறைந்து போனது. மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள போராடிக் களைத்து பசியிலும், பட்டினியிலும் வாடி இறந்து போக, இறுதியாக 1989க்குப் பின்பே சீர்பெற ஆரம்பித்தது. பல நூறு ஆண்டுகள் காடுகளுக்குள் காணாமல் போயிருந்த அங்கோர்வாட் ஆலயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை மேற்கத்தியரான ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860ல் அவர் கண்டுபிடித்த பின்பே, அங்கோர்வாட் ஆலயங்கள் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறியது.

    இறுதியாக பெளத்த மதமே பின்பற்றப்பட்டதால் இன்றைய கம்போடிய மக்கள் பெளத்த மதத்தவர்களாக 'க்மேர்' என்ற பெயரில் அழைக்கப் படுகின்றனர்.

கம்போடியா ஏழ்மையான நாடு. இங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம். எல்லா இடங்களிலும் பெண்களே அதிக அளவில் வேலை செய்கிறார்கள். அங்கோர்வாட் ஆலயங்களில் 5 வயது குழந்தைகள் முதல் தண்ணீர், குளிர்பானங்கள், அவ்விடம் பற்றிய குறிப்புப் புத்தகங்கள் ஆகியவை விற்பதைக் காணலாம்.
    இன்று அங்கு இந்துக்களே இல்லாததால் அவ்வாலயங்களில் இறைவனும் இல்லை; வணங்குவதற்கு மக்களும் இல்லை. அன்றைய நாடு கடந்த இந்துமதத்தின் சான்றாக மட்டுமே இவ்வாலயங்கள் நிற்கின்றன.

    அங்கோர்தாம், பேயான், டா ப்ரோம், ப்ரேவிஹார், ப்ரே ரூப், நாம் பேகங், பன்ட்டி ஸ்ரே, பன்ட்டி க்டேய், பபுவான் என்று நம்மை வியக்க வைக்கும் ஆலயங்கள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது அங்கோர்வாட்தான். ஆகவேதான் சியாம்ரீப்பைச் சுற்றியுள்ள இந்த ஆலயங்கள் அனைத்தையும் மொத்தமாக அங்கோர்வாட் ஆலயங்கள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

    'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, வானளாவ நின்று நம் இந்துக் கலைக் கட்டிட உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆலயத்தை வெளியிலிருந்து காணும் போதே அதன் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. பெரிய அகழிக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலய வெளிச் சுவர் 1300 மீட்டர் நீளமும், 1500 மீட்டர் அகலமும் கொண்டு, ஒரு கிலோ மீட்டர் சதுர பரப்பளவும் கொண்டது. இவ்வாலயத்தை மட்டும் சுற்றிப்பார்க்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். மூன்று நிலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரமும், அதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு கோபுரங்களும் மேருமலையைக் குறிக்கிறது. சூரிய வர்மனின் தலைநகரமாக விளங்கிய 'அங்கோர்வாட்' விஷ்ணுவின் ஆலயமாகும்.

    நீண்ட ஐந்து, ஏழு தலை நாகங்களைக் காவலாகக் கொண்டு, நீண்ட பிரகாரங்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள், கல்தூண்களால் கட்டப்பட்ட வரிசையான சன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் கொண்ட இவ்வாலயங்களின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.

    ஆலயச் சுவர்களில் 'அப்சரஸ்' எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றாங்களைக் காணலாம். கோபுர நுழைவு வாயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கோவிலில் மட்டும் 2000 அப்சரஸ் சிற்பங்கள் உள்ளதாம். கீழ்நிலையின் சுற்றுச் சுவர்களில் குருக்ஷேத்திரப் போர், ராமாயணக் காட்சிகள், சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் மற்றும் தேவாசுரர் பாற்கடல் கடையும் காட்சியும், சூரியவர்மன் எதிரி நாடுகளுடன் போரிட்ட காட்சிகளும் மனம் கவரும் விதத்தில் காட்சியளிக்கின்றன. பல ஆண்டுகள் காடுகளில் மறைந்து கிடந்து பல இடங்களில் சிதைந்திருந்தாலும், இன்றும் சில சிற்பங்கள் உயிரோவியமாகக் காட்சி தருகிறது. மேல்நிலைக் கோபுரம் மிக மோசமாக சிதிலமடைந்துள்ளதால் சீர்திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் மட்டும் 8 கைகள் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை காணப்படுகிறது.

    இவ்வாலயத்தின் பக்கவாட்டு பிரகாரங்கள் புத்த விஹாரங்களாக்கப் பட்டுள்ளன. இங்கும் ஒரு புத்தர் சிலை வழிபடப்படுகிறது. பல புத்தர் சிலைகளுக்கு தலை இல்லை. பல ஆவுடைகளில் சிவலிங்கம் இல்லை. இங்குள்ள படிகள் மிகக் குறுகியவை, செங்குத்தானவை. பக்கச் சுவரைப் பிடிததபடி மிகக் கவனமாக ஏற வேண்டும்.

    இவ்வாலயம் மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளதால் மாலை நேர சூரிய வெளிச்சத்தில் தங்கம் போல தகதகக்கும் காட்சி மனதை சொக்க வைக்கிறது. 

    இங்கு சிற்பங்களில் மட்டும் அப்சரஸ்கள் அல்ல; உண்மையான அப்சரஸ்களும் ஆங்காங்கே அமர்ந்துள்ளனர். ஆம்! சின்னப் பெண்கள் அப்சரஸ்கள் போல் வண்ண உடை, நகை அணிந்து, வெளிநாட்டுப் பயணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான்கு பக்க நுழைவுவாயில்கள் நகர வீதிகளுடன் இணைக்கப்பட்டு அளவெடுத்தாற்போல் அழகு, உயரம் இவற்றுடன் அமையப்பெற்று காணப்படுகிறது.

    மிகப் பெரிய அகழியும், சுவர்களும் கொண்டு ஏழாம் ஜெயவர்மனால் உருவாக்கப்பட்ட சிறந்த அரண்மனையைக் கொண்ட தலநகரம் அங்கோர்தாம். 3 கி.மீட்டர் சுற்றளவுள்ள அங்கோர்தாம் ஐந்து வாயில்களைக் கொண்டது.

    இந்த அரசன் புத்த மதத்தைப் பின்பற்றியதால் 'அவலோகிதேஸ்வரா' என்ற நான்கு முகங்களைக் கொண்ட உருவ அமைப்பில் உருவாக்கப்பட்ட புதுமையான கோபுரங்களைக் கொண்ட பேயான் அரசுக்கோவிலாக விளங்கியது. தற்போது அர்ண்மனை முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.
கம்போடியாவில் மழையினால் அடிக்கடி வெள்ளம் வருவதால், கிராமப்புற வீடுகள் நான்கு மூங்கில் கால்கள் உயரமாக அமைக்கப்பட்டு அதன்மேல் கட்டப்படுகிறது.
கம்போடியப் பட்டு மிகப் பிரபலமானது. மேலும் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், கலப்பு வெள்ளியால்    செய்யப்பட்ட பாத்திரங்கள், சிறுமிருகங்கள் போன்ற பெட்டிகள் விற்கப்படுகின்றன. அங்கோர்வாட்டிலுள்ள 'இரவு நேர சந்தை' அங்கோரின் பிரபலமான பொருட்களை வாங்க சிறந்த இடம் ஆகும்.
   
 இதன் தென்பக்க வாயிலில் ஆறடிக்கு மேல் உயரமுள்ள தேவர்களும், அசுரர்களும் நாகங்களைத் தாங்கியபடி காட்சி தருகிறார்கள். நடு நாயகமாக விளங்கும் பேயான் ஆலயத்தில் நான்குமுக கோபுரங்கள் 54, நான்கு நிலைகளில் காணப்படும் மொத்தம் 216 முகங்களும் புத்தரின் உருவங்கள் எனப்படுகிறது. நான்கு முகங்களும் ஒவ்வொரு முகபாவம் காட்டுவது இதன் சிறப்பு. தற்சமயம் இதில் 37 கோபுரங்களே காணப்படுகின்றன. அங்கோர்வாட் ஆலய பாணியிலிருந்து வித்தியாசமாக அமைக்கப்பட்டவை இந்த பேயான் பாணி கோவில்கள்.
    அரண்மனையின் கிழக்கில் 350 மீட்டர் நீளத்தில் பக்கச் சுவர்கள் யானைகள் மற்றும் தேவர்கள் தாங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளம், அரசவை விருந்துகள், வரவேற்புகள் நடைபெறும் இடமாம். மேலும் அரச குடும்பத்தினர் அமர்ந்து நகர வீதிகளில் செல்லும் ஊர்வலங்களையும், விழாக்களையும் காண்பார்களாம்.

    இதனை அடுத்துள்ளது வெண்குஷ்டத்தினால் இறந்த யசோவர்மன் என்ற அரசனின் நினைவாகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் 'டெர்ரேஸ் ஆப் லேபோர்கிங்' தளம். 6 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மேல் அமர்ந்த நிலையில் காணப்படும் இந்த அரசனின் சிலை, அங்கங்கு வெண்திட்டுகளுடன் காணப்படுகிறது. இத்தளத்தின் பக்கவாட்டு உள், வெளிச் சுவர்களில் காணப்படும் தேவர்கள், அசுரர்கள், அப்சரஸ்களில் தோற்றங்கள் இன்று செதுக்கியது போல் காணப்படுவதே இதன் சிறப்பு.

    'பன்ட்டி ஸ்ரே என்ற' ஆலயம் 'பெண்களின் கோட்டை' எனப் புகழ் பெற்ற சிவாலயம். இங்குள்ள நுழைவுவாயில் சிற்பங்கள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. கம்ச வதம், காளிய நர்த்தனம், சிவபார்வதி சிற்பங்கள் அழகானவை.

கம்போடியாவில் மன்னர் வம்சம் தொடர்ந்து வருகிறது. இதன் தலைநகரான 'நாம் பென்னில்' அரசரின் மாளிகை உள்ளது. அங்குள்ள 'சில்வர் பகோடா' என்ற புத்தர் ஆலயத்தில் மரகதத்தாலான புத்தரின் சிலை அருமையாகக் காட்சியளிக்கிறது. மற்றும் மறைந்த மன்னர்களுக்கான நினைவு மண்டபங்களும் உள்ளன.
தற்கால மன்னர்கள் வாழும் இல்லமும் அருகிலேயே அமைந்துள்ளது. இங்குள்ள நேஷனல் மியூசியத்தில் கம்போடியாவின் அக்கால நாகரீகம், வாழ்க்கை முறை, க்மேர் மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கோர்வாட் ஆலயங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவலிங்கம், விஷ்ணு, புத்தர் சிலைகள் இங்கு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'டுக்டுக்' என்ற ரிக் ஷாக்களின் முன் பக்கம் ஸ்கூட்டர்கள் இணைத்து ஓட்டுகிறார்கள். பஞ்சம், பட்டினியால் வாடியபோது கரிய வண்டுகள், எட்டுக்கால் பூச்சிகள், வெட்டுக்கிளிகளை வறுத்துச் சாப்பிட்டார்களாம். இன்றும் சந்தைகளில் இந்த வறுவல்கள் ஏராளமாக விற்கப்படுகின்றன. பார்கும்போதே வயிற்றைக் குமட்டும் இவற்றை கம்போடிய மக்கள் மிக ருசித்து சாப்பிடுகிறார்கள். இங்கு அமெரிக்க டாலரே உபயோகிக்கிறார்கள்
   
'ப்ரே கான்' என்ற ஆலயம் ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தைக்கு அர்ப்பணமாக உருவாக்கியது. இது பெளத்த விகாரமாக இருந்து 1000 பெளத்த குருமார்கள் இங்கு பாடம் கற்றுக் கொடுத்ததாக அறியப்படுகிறது.
 
    '
ப்ரஸாத் க்ராவன்' என்ற ஆலயம் முதலாம் ஹர்ஷவர்மனால் மகாலட்சுமிக்காக உருவாக்கப்பட்ட ஆலயமாகும். ஐந்து கோபுரங்கள் வரிசையாக அமைந்து ஒரு தாமரை போல் காணப்படும் இவ்வாலயத்தில், இன்னமும் ஓவியங்கள் அழியாமல் காட்சி தருவது இதன் சிறப்பு.

    முதலாம் யசோவர்மனால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து எண்கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஆலயமான 'நாம் பெகங்க்' 65 மீட்டர் உயரமுள்ள ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது. சுற்றிலும் 108 சிறிய கோபுரங்கள் வளர்பிறை, தேய்பிறை நாட்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. தினமும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் முதல் மலைக் கோயிலான இங்கு சென்று சூரிய அஸ்தமனத்தைக் கண்டு மகிழ்வதுடன், அந்நேரம் அச்சூரிய ஒளியில் அற்புதமாகக் காட்சி தரும் அங்கோர்வாட்டையும் காண்கிறார்கள். மலைமீது நடந்து ஏறமுடியாதவர்கள் வசதிக்காக யானை சவாரியும் உண்டு.

    'பால் ஸ்பீன்' மற்றும் 'நாம் குலேன்' என்ற மலைகளில் ஓடும் நதி ஆயிரம் லிங்க நதி எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும், கிரீச்சிடும் பல பூச்சிகளும் நிறைந்த கரடு முரடான மலைப் பாதையில் சுமார் 2 கி. மீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரேவடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். இது தவிர நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்நதி கம்போடியாவின் மிகப் புனித நதியாகக் கருதப்படுகிறது. இம்மலை ஏறிச் செல்வது சற்று கடினம் என்றாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம். நாம்குலேனில் ஒரு அழகிய அருவியும், புத்தர் ஆலயமும் உள்ளது. இம்மலையில்தான் இரண்டாம் ஜெயவர்மன் தன்னை 'இறையரசன்' என்று அறிவித்தான்.

    ஏழாம் ஜெயவர்மன் தன் தாயாருக்காக 'ப்ரக்ஞபரிமித்ரா' என்ற சிலையுடன் கட்டிய ஆலயம் 'டா ப்ராம்'. 39 கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம் நீண்ட பிரகாரங்கள், கலையழகு மிக்க நுழைவு வாயில்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு, துவாரபாலகர், அப்சரஸ் சிலைகள் என்று இன்னமும் காணப்படுகிறது. செல்வச் செழிப்புடன் விளங்கிய இவ்வாலயம் புத்த விஹாரமாக இருந்ததாம். 3000 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் பல ஊழியர்கள் பணிபுரிந்த தங்க, வெள்ளி நகைக் கடைகளும் இங்கு இருந்ததாம். இவ்வாலயத்தில் தங்கமும், விலைமதிப்பற்ற முத்து, உயர்ரகக் கற்கள் இருந்ததாகவும் இவ்வாலயச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. காட்டு மரங்களின் வேர்களும் கிளைகளும் ஆலயத்துடன் பின்னிப் பிணைந்து ஒரு அதி அற்புத இயற்கை காட்சியாக இந்த ஆலயம் காணப்படுகிறது.

    இவ்வாலய சீர்திருத்தப் பணியில் இந்தியாவும் பங்கு பெற்றுள்ளது. இது போலத்தான் எல்லா ஆலயங்களும் மரத்தினடியில் மறைந்து போய் காட்டுக்குள் இருந்ததை நாம் தத்ரூபமாக உணரும் பொருட்டு இவ்வாலயம் மட்டும் தற்போது காட்டுச் சூழலிலேயே காணப்படுகிறது.

    அங்கோர்வாட்டின் அற்புத ஆலயங்களை ஆற அமர ரசிப்பதற்கு மூன்று நாட்கள் தேவை. இந்தியாவிலிருந்து அங்கோர்வாட் கோயில்கள் அமைந்துள்ள சியாம் ரீப்பிற்கு சிங்கப்பூர், மலேசியா வழியாகச் செல்லலாம். அங்கோர்வாட் சுற்றுலா பயணம் நிச்சயம் ஒரு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தைத் தரும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக