Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பல்சுவை பரங்கி

மங்கை ஜூன் 1997 இதழில் வெளியானது



பரங்கிக் காயில் (சிவப்பு பூசணி) நாம் சாதாரணமாக சாம்பார், வற்றல் குழம்புதான் செய்வோம். இப்பொழுது பூசணி, பரங்கி அதிகம் கிடைக்கும் நேரம். அதில் வேறு சில சுவையான பதார்த்தங்களையும் செய்து சாப்பிடலாமே!

பரங்கிக்காய் ஸ்வீட் பூரி

தேவையானவை:
பரங்கிக்காய்  - ½ கிலோ
வெல்லம் - ½ கிலோ
உப்பு சிறிது
கோதுமை மாவு – 3 கப்
எண்ணெய் வேகவிட

செய்முறை:
பரங்கியை தோல் நீக்கி சிறு துண்டாக்குங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் துண்டங்களைப் போட்டு, சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும். பரங்கிக்காய் பாதியளவு வெந்ததும், அதில் வெல்லம் போட்டு நன்கு கிளறவும். வெல்லம் கரைந்து சேர்ந்து கொண்டதும், ஆற விடவும். அத்துடன் கோதுமை மாவு சேர்த்து பூரிக்கு பிசைவது போல பிசைந்து சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பூரிகளை பொன்னிறமாகப் பொரிக்கவும். பரங்கி வெல்லக் கலவையுடன் கோதுமை மாவு தேவையெனில் மேலும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும். கோதுமை மாவிற்குப் பதில் மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

பரங்கிக்காய் போளி

தேவையானவை:
பரங்கிக்காய் - ¼ கிலோ
சர்க்கரை – 200 கிராம்
தேங்காய் – 1 மூடி
ஏலப்பொடி
நெய் - ½ ஆழாக்கு
மைதாமாவு – 2 கப்
கேஸரி பவுடர்

செய்முறை:
பரங்கிக் காயை தோல் சீவி துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு துண்டங்களை நன்கு தீயாமல் வதக்கவும். முக்காலளவு வெந்ததும் இறக்கி பிசைந்து கொள்ளவும். ¼ கப் நீரில் சர்க்கரையைப் போட்டு பாகு வைத்து, துருவி சற்று அரைத்த தேங்காயையும், வெந்து பிசைந்த பரங்கிக் காயையும் போட்டு சுருளக் கிளறி எடுக்கவும். கிளறும் போது கேசரி பவுடர் சேர்க்கவும். சற்று ஆறியதும், ந்ன்கு நைஸாக அரைக்கவும். ஏலப்பொடி போட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

மைதாவுடன் ¼ டீஸ்பூன் உப்பு, மஞ்சள் பொடி போட்டு நீர் விட்டுப் பிசையவும். 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுப் பிசையவும். வாழை இலையில்  நெய் தடவி மைதா மாவு விழுதை எடுத்து வைத்துத் தட்டி, நடுவில் பரங்கி பூரணம் வைத்து, மூடிக் கவிழ்த்து மெல்லியதாகத் தட்டி, அடைக் கல்லில் நெய் தடவி போளிகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பரங்கி ஸொஜ்ஜி அப்பம்

மேற்கூறிய முறையிலேயே எல்லாம் செய்து மூடிய உருண்டையை போளியாகத் தட்டாமல் சற்று கனமாக வட்டமாக தட்டி வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் அதில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பரங்கித் துவையல்

தேவையானவை:
இளம் பரங்கிக் கொட்டை – நறுக்கிய துண்டம் (தோலியுடன்) – 1 கப்
மிளகாய் வற்றல் – 6-7
உப்பு, புளி – சிறிது
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது, எண்ணெய்

செய்முறை:
4 ஸ்பூன் எண்ணெயில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை வறுக்கவும். அதில் நறுக்கிய பரங்கித் துண்டங்களைப் போட்டு நன்கு வதக்கவும். ஆறியதும் அத்துடன் மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்து கடைசியாக உளுத்தம் பருப்பு வைத்து கரகரப்பாக அரைக்கவும்.

பரங்கிக்காய் ஹல்வா

தேவையானவை:
பரங்கி - ½ கிலோ
சர்க்கரை – 10 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ½ கப்
ஏலப்பொடி
கேஸரி பவுடர்
நெய் – 4 ஸ்பூன்
முந்திரி – 6

செய்முறை:
பரங்கிக் காயை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது நீர் விட்டு நன்கு குழைய வேகவிடவும். பிறகு கரண்டியால் மசித்து சர்க்கரையைப் போட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு, கேஸரிப் பவுடரும் போட்டு ஹல்வாவில் கொட்டி, ஏலப்பொடியும் போட்டு சேர்த்துக் கிளறி இறக்கவும். சர்க்கரை தேவையானால் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

பரங்கி பால் கூட்டு


இளம் பரங்கிக் கொட்டையை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு நறுக்கிய துண்டுகள் 1 கப் போட்டு ந்ன்கு வெந்ததும், அதில் 5, 6 ஸ்பூன் சர்க்கரை போட்டு கரைய விடவும். கரைந்து சேர்ந்ததும், 2 ஸ்பூன் அரிசி மாவு ½ கப் பாலில் கரைத்து விட்டு ந்ன்கு கொதி சேர்ந்து கொதித்ததும், ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். இதில் முழுதும் பாலிற்கு பதிலாக தேங்காய்ப் பால் கலந்தும் விடலாம். சீனி போடும் முன் நீர் அதிகமாக இருந்தால் பரங்கித் துண்டங்களை வடிய விட்டுப் பின் சர்க்கரை சேர்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக