ஸ்ரீ ராமாவதாரம், மஹாவிஷ்ணுவின்
ஏழாவது அவதாரம். ‘எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் ராமனும், சீதையும்
இருப்பார்கள்’ என்றார் விவேகானந்தர். ஒரு மனிதன் குடும்பத்தில், சமுதாயத்தில் முறையாக
எப்படி வாழ வேண்டுமென்பதை வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமபிரான். அதனாலேயே அவர் ‘புருஷோத்தமன்’
என்று போற்றப்படுகிறார்.
‘ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று
(ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே,
தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.
தந்தை சொல்லைத் தட்டாத, சகோதரர்களிடம்
அன்பு கொண்டு, உடன் பிறவாத விபீஷணனையும், குகனையும் தம் சகோதரர்களாக ஏற்று, சின்ன
அணிலுக்கும், வானரங்களுக்கும் கூட மதிப்பு கொடுத்து, தன் அருளை வழங்கி, அநீதியாக
தன் மனைவியையே அபகரித்துச் சென்ற ராவணனைக் கூட ‘இன்று போய் நாளை வா’ என்று
பெருந்தன்மையுடன் கூறிய ராமனின் அளப்பரிய அன்பை ராமாயணம் முழுவதும் அனுபவிக்கலாம்.
ஸ்ரீராமன் இந்தியா முழுவதும்
போற்றப்படும் தெய்வம். இறக்கும் நிலையில் உள்ளவர் காதில் ‘ராம் ராம்’ என்று
சொல்வதால் அவர்கள் முக்தியடைவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்பது நம்
தேசிய பஜன் என்று சொல்லலாம். ராம நாம ஜபம் சகல இன்பங்களையும், மோட்சத்தையும்
தருமென்பது சிவபெருமான் திருவாக்கு.
ஸ்ரீராம நவமி பூஜையை ப்ரதமை முதல்
ஆரம்பித்து ஸ்ரீராம நவமியுடன் பூர்த்தி செய்வது ‘கர்ப்போத்ஸவம்’ என்றும், நவமி
முதல் ஆரம்பித்துப் பின் ஒன்பது நாட்கள் செய்வது ‘ஜன்மோத்ஸவம்’ என்றும்
கூறப்படும். இந்நாட்களில் ஸ்ரீராம பூஜை, ராம நாம ஸ்ரவணம், ராமாயண பாராயணம் இவற்றை
செய்ய வேண்டியது முக்கியம். ஸ்ரீராம நவமி அன்று சுத்த உபவாசம் இருப்பவர்களுக்கு 21
ஏகாதசி விரத பலன் கிடைக்குமென்று கூறப்படுகிறது.
ஸ்ரீராமனின் பிறப்பிடமான அயோத்தியில்ஸ்ரீராம
நவமி மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படும். ரத யாத்திரைகளும், சிறப்பு
வழிபாடுகளும் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும். ஸ்ரீராமனின் அத்யந்த பக்தனான
அனுமனுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
ஸ்ரீ ராம ராமேதி ரமே
ராமே மநோரமே!
ஸகஸ்ர நாம தத்துலயம்
ராம நாம வரானனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக