சென்னை மேற்கு மாம்பலம் பல புகழ்
பெற்ற ஆலயங்களை தன்னகத்தே கொண்டு ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது.
எல்லவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல விளங்கும் அயோத்யா மண்டபம் நூற்றாண்டு
விழாவைக் கொண்டாடுகின்றது. இவ்வாலயத்தில் வருடம் முழுவதும் சத்சங்க நிகழ்ச்சிகள்,
கதைகள், காலட்சேபங்கள் நடந்து கொண்டே இருக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளின் போது
அவ்வாலய மூர்த்தியின் அலங்காரமும், மண்டபத்தின் உள் அமைப்பும் நாம் ஏதோ
தேவலோகத்திற்கு வந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றும். அயோத்யா ராமனின் அருட்
கடாட்சத்தை இங்கு பிரத்யக்ஷமாக உணர முடியும்.
இங்குள்ள சீனிவாசன் தெருவில்
அமைந்துள்ள ஸ்ரீசத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் மிக சக்தி வாய்ந்ததும், சிறப்பு
பெற்றதுமான ஆலயமாகும். சத்ய நாராயணரின் தனி ஆலயம் ஆந்திராவில் அன்னாவரம் என்ற
ஊரில் மட்டும் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய ஹனுமான் சன்னிதி
மட்டுமே இருந்த ஆலயம் இன்று 7 சன்னிதிகளுடன் அழகுற காட்சியளிக்கிறது.
இக்கோயிலை நிர்மாணித்தபோது அதில்
பெரும் பங்கு கொண்டிருந்த ரத்தன் தாஸ் என்ற வட நாட்டவர் கூறியபடி பெருமாளுக்கு
சத்ய நாராயணப் பெருமாள் அன பெயரிடப்பட்டது. நெடிதுயர்ந்த உருவத்தில் சங்கு, சக்ர,
கதாபாணியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சத்ய நாராயணப் பெருமாளின் அழகை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தேவி மகாலக்ஷ்மி அமர்ந்த நிலையில் கருணை நிறந்த
விழிகளுடன் அற்புத தரிசனம் தருகிறாள்.
இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர்
சன்னிதி விசேஷமானது. கல்வி, அறிவு, புத்திக் கூர்மைக்கு அதிபதியான ஹயக்ரீவர்
சன்னிதியில் எந்நேரமும் மாணவர் கூட்டம் அலை மோதுகிறது. புதன், வியாழக் கிழமைகளில்
ஹயக்ரீவருக்கு அர்ச்சனை, ஆராதனை செய்வது மிக விசேஷமானது. வேண்டியதை
நிறைவேற்றுவதால் சமீப காலமாக ஹயக்ரீவரை ஆராதிக்கும் பக்தர்கள் அதிகமாக இருப்பதாக
ஆலயத்திலுள்ளோர் கூறுகிறார்கள்.
இதே தெருவில் அமைந்துள்ளது
முருகாசிரமம். சுருண்டு படமெடுத்த நாகத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தரும்
வேலவனின் திருவுருவம் மனதை கொள்ளை கொள்ளுகிறது. அங்கு ஒரு தெய்வீக ஈர்ப்பு
நிலவுவதை நம்மால் உணர முடிகிறது.
சனி பகவானுக்கென திருநள்ளாற்றிற்கு
இணையான தனிப்பட்ட ஆலயம் மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அமைந்து ‘வட திருநள்ளாறு’
என போற்றப்படுகிறது. சனி பகவானுக்கென்றே ஏற்பட்ட தனிச் சிறப்பு பெற்ற கோயில் இது.
சனி பகவான் காக வாகனத்தில் நீலாம்பிகையுடன் இணைந்து சாந்தமாகக் காட்சி தரும் ஒரே
தலம். அறுபது ஆண்டுகளுக்கு முன் இங்கு வருகை புரிந்த பரமாச்சாரியாள் தனது
திருவாக்கினால் வட திருநள்ளாறு என்றூ அருளினார்.
சனியால் பீடிக்கப் படாதவர்கள்
பிள்ளையாரும், அனுமனும். அந்த அனுமன் இங்கு சக்தி வாய்ந்த பஞ்சமுக அனுமனாக நின்று
அருள் பாலிக்கிறார். அரச மரத்தடியில் அருட் காட்சி தருன் ‘யக்ஞ’ விநாயகர் மிகவும்
வரப்ரசாதி. திருமணம், பிள்ளைச் செல்வம், கல்வி அனைத்தையும் அருளும் கற்பக விநாயகராக
அருள் புரிகிறார். அத்துடன் ‘யக்ஞ் விநாயகர்’ என்ற பெயரில் உள்ள ஒரே விநாயகர் இவர்
மட்டுமே என்றூ கூறப்படுகிறது. இவ்வாறு சனி பகவானுடன் சக்தி வாய்ந்த விநாயகரும்,
பராக்கிரமம் மிக்க ஆஞ்சநேயரும் குடி கொண்டுள்ள இவ்வாலய இறைவனை வணங்கும்போது
சனியின் துன்பம் வெகுவாகக் குறைந்து பரமசுகமான மங்கல வாழ்வு கிட்டுவது உறுதி.
இவ்வாலயம் சனஞ்சயா அறக்
கட்டளையினரால் மிக நன்றாக பராமறிக்கப்படுகிறது. மேலும் விஷ்ணு, துர்க்கைக்கு ஒரு
சன்னிதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள் அருளிய யந்திரங்கள் பிரதிஷ்டிக்கப்பட்டு மிகுந்த சக்தியுடன் விளங்கும்
இக்கோயில் மூர்த்திகளைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. மேற்கு மாம்பலத்தின்
பல பிரசித்தி பெற்ற கோயில்களில் முக்கியமான சில ஆலயங்கள் இவை.
//'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்//
பதிலளிநீக்குமிகச்சிறப்பான பக்தி மயமான பதிவு. 2004 லேயே ஞான ஆலயத்தில் வலம் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஒவ்வொன்றுக்கும் வித்யாசமான கமெண்ட் எழுதும் தங்களின் எழுத்துக்குமுன் நான் சும்மாதான்!!
பதிலளிநீக்கு