Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சுவிட்சர்லாந்தில் சுப்ரமணியசுவாமி


ஞான ஆலயம் ஜனவரி 2005 இதழில் வெளியானதுமுருகப் பெருமானின் ஆலயங்கள் பெரும்பாலும் குன்றுகளிலேயே உள்ளன. ஆல்ப்ஸ் மலைகளால் சூழப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டில், சூரிச் நகரில், நம் தமிழ்க் குமரனுக்கு அற்புதமான ஒரு ஆலயம் அமைந்துள்ளது என்றால் வியப்புதானே!

இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இவ்வாலயம் சூரிச் வாழ் தமிழர்களுக்கு ஒரு சிறந்த வழிபாட்டுக் கேந்திரமாக விளங்குகிறது.

ஆலய கர்ப்பக் கிரகத்தில் முருகவேளின் அம்சமான வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆகம விதிப்படி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வேலுக்குப் பின்னால் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தேவயானையுடன் ஐம்பொன்னாலான சிலையாக அழகுறக் காட்சியளிக்கிறார். சந்நிதியை விட்டு நகரவே மனமில்லை.

கர்ப்பக் கிரகத்திற்கு எதிரிலுள்ள உயர்ந்த துவஜஸ்தம்பம் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றப்பட்டுள்ளது. அங்கு கற்பூர ஆரத்தியே காட்டப்படுவதால் அந்த கரிப்புகை அதில் படியாமலிருக்கவே அவ்வாறு செய்திருப்பதாகக் கூறினார்கள். விரைவில் நெய் தீபாரதனை ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

இங்கு முருகனின் விசேஷ தினங்களான கார்த்திகை, சஷ்டி போன்றவை மாதாமாதம் விமரிசையாகக் கொண்டாடப்படுவதுடன் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், பெரிய கார்த்திகை திருவிழாக்களும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை வெள்ளிகளில் திருவிளக்கு பூஜை, ஐயப்ப பூஜை, ராகுகால பூஜைகள், நவராத்திரி நாட்களில் அம்பாளுக்கு தினமும் விதவிதமாக அலங்காரம் என விமரிசையாக நடத்துகிறார்கள்.

உடலை சில்லிட வைக்கும் குளிரிலும் இரவு எட்டு மணிக்கு மேல் ஆலயத்தில் நிறைய தமிழர்கள் வந்திருந்ததைக் கண்ட எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் இவ்வாலயத்தில் ஐயப்பன்மார்கள் முறையாக மாலை அணிந்துகொண்டு, கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சபரிமலை ஜோதி தரிசனத்திற்குச் செல்வதாக, ஆலய அதிகாரி ஒருவர் சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது. உண்மையான பக்திக்குமுன் தூரம் ஒரு பெரிய விஷயமல்ல என்று உணரமுடிந்தது.

சலசலக்கும் பளிங்கு போன்ற அழகிய நீரோடையின் அருகில், எழிலான சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் வேற்று இனத்தவரும், வேற்று மதத்தவரும் கூட வந்து வழிபடுகிறார்கள். ஆலயம் மிகச் சுத்தமாக நிர்வகிக்கப்படுகிறது. அற்புதமான இறைவனின் தரிசனமும், பிரசாதம் என்ற பெயரில் அளவில்லாமல் 'போதும் போதும்' என்கிற அளவுக்கு அங்கு அளிக்கப்பட்ட அற்புதமான சுவையான அன்னமும், ஆறாயிரம் மைல்கள் தாண்டிச் சென்றும், நாம் தமிழ் தமிழ் நாட்டுக் கோயிலில்தான் இருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்ததை மறக்கமுடியாது.

ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் ஸ்விட்சர்லாந்தில் சூரிச்(ZURICH) நகரில், அட்லிஸ்வில் (ADLISWIL) என்ற இடத்தில் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக