குன்றுதோறும் நின்றாடும்
குமரனுக்குத் தமிழ் நாட்டில் அமைந்துள்ள ஆலயங்கள் எண்ணிலடங்கா. வள்ளி மணவாளனின் அறுபடை
வீடுகளைத் தரிசித்தோரின் வினைகள் விலகி ஓடும். சுற்றி வரும் பகையைத் துள்ளிவரும்
வேல் தூளாக்கிவிடும்.
அழகுத் தெய்வம் ஆறுமுகனின் ஒவ்வோர்
ஆலயமும் தனிச் சிறப்பும் பெருமையும் பெற்றது. அதில், தொண்டை மண்டலத்தில் அருணகிரி
நாதருக்குக் கனவில் காட்சி தந்து, அவரால் பாடப்பெற்ற சிறப்புத் தலம் சிறுவாபுரி
(சின்னம்பேடு என்றும் அழைக்கிறார்கள்). முருகப் பெருமான் விரும்பி உறையும்
இடங்களாக மூன்று தலங்களை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் உரைக்கிறார். அடி
என்பது திருசிடைக்கழி என்ற தலத்தையும், நடு என்பது அடியார்கள் உள்ளமாகிய
சிறுவாபுரியையும், முடி என்பது திருப்போரூரையும் குறிக்கும் என்று கூறுகிறார்
அருணகிரி நாதர்.
இவ்வூருக்கு இப்பெயர் வரக் காரணம்
மிகச் சுவையானது. ஸ்ரீராமபிரானின் புதல்வர்களான லவகுசர்கள் நான்கு வகைச்
சேனைகளுடன், ஸ்ரீராமரைத் தங்கள் தந்தை என அறியாது எதிர்த்துப் போர் செய்த ஊர்
சிறுவாபுரி. சிறுவர் + அம்பு + எடு = சிறுவரம்பெடு. சிறுவரான லவகுசர்கள்
அம்பெடுத்துப் போரிட்ட ஊர். இது இப்போது ‘சின்னம்பேடு’ என்று மருவியுள்ளது.
உலக மக்களுக்கு மிக முக்கியத் தேவை
ஒரு வீடு. அதுவும் சொந்த வீடாக இருப்பின் எத்தனை மகிழ்ச்சி! அத்தகைய சொந்த வீடு
பெற வேண்டுவோர் வந்து வழிபட வேண்டிய தலம் சிறுவாபுரி. இந்தத் தலத்துக்குரிய
திருப்புகழான ‘அண்டர்பதி குடியேற’ என்ற திருப்புகழைப் பாராயணம் செய்து, இறைவனுக்கு
வஸ்திரம் சமர்ப்பித்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் உடன் சொந்த வீடு
அமையுமாம். இன்றும் சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு வேண்டுவோரின்
பிரார்த்தனைகள் வெகு விரைவில் நிறைவேறுவது கண்கூடு.
கண்களைக் கவரும் அழகுடன், ஐந்து
நிலை ராஜகோபுரம். ஆலயத்துள் நுழைந்ததும் தென் பிரகாரத்தில் சூரிய பகவான் சந்நிதிக்கு
எதிரில் காட்சி தரும் மரகத விநாயகரின் எழில் கோலம். பைரவர் சந்நிதியில் வணங்கி
வழிபட்டு உள்ளே நுழைந்தால், சிறுவை அழகனின் சந்நிதி. உள் மண்டபம் தாண்டிச் சென்று,
அழகுமிகு பாலசுப்ரமணியனைக் காணக்காண ஆவல் மிகுகிறது. மேலிரண்டு கைகளில்
ஜபமாலையும், கமண்டலமும், கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரத்தை இடுப்பில்
தாங்கியும் காட்சி தருகிறார். கண்களில் கருணையும், கம்பீரமும், ‘என்னிடம் வந்து
விட்டாயா? இனி உன் கவலைகள் பனி போல் மறையும்’ என்று பேசுவது போல் தோன்றும் முக
அழகு நம்மை மயங்கி நிற்கச் செய்கிறது.
ஐயனை விட்டுப் பிரிய மனமின்றி, திரும்பத்
திரும்ப நோக்கி அவன் அருட்காட்சியைக் கண்களில் ஏந்தியவாறே வெளிவந்தால் அங்கு
அருணகிரி நாதரின் திருவுருவமும் அவர் சிறுவை முருகன் மீது பாடிய பாடல்களும்
அழகுறக் காட்சியளிக்கின்றன.
இங்குள்ள பஞ்சலோக ஆறுமுகப்
பெருமானின் உற்சவமூர்த்தியின் வடிவமும் அற்புத அழகு வாய்ந்தது.
அடுத்து அருணாசலேசுவரர் மரகதலிங்க
வடிவில் காட்சியளிக்கிறார். அருணகிரியார் தோன்றிய தலமான திருவண்ணாமலையில் ‘மயிலுமாடி
நீ ஆடிவர வேணும்’ என்ற அவரின் வேண்டுகோளின்படி முருகன் கம்பத்தில் காட்சி தந்தார்.
சிறுவை திருப்புகழில் ‘மைந்துமயில் உடனாடி வர வேணும்’ என்று வேண்டியபடி
காட்சியளித்துள்ளதால், இங்கும் அண்ணாமலையப்பரும் உண்ணாமுலை அம்மையும் காட்சி
தருகின்றனர்.
இங்குள்ள வள்ளி மணவாளப் பெருமாள்
திருமேனி மிக அழகாக உயிரோட்டத்துடன் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் அபிஷேகக்
குழுவினரால் 1994 ஆம் ஆண்டில் இந்த விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்து பிரதிஷ்டை
செய்யப் பெற்றுள்ளது. வள்ளியம்மை, முருகப் பெருமானைத் திருக்கரம் பற்றி உலக
உயிர்கட்கு ஆனந்தம் அளிக்கும் அற்புத மணக்கோலக் காட்சி. இவ்வற்புதக் கோலத்தை
வழிபடுவோர், இனிய இல்லற வாழ்க்கை பெறுவர். தடைப்பட்ட திருமணங்கள் சரியாகி நிறைந்த மங்கல வாழ்வு கிட்டும்.
ஒவ்வொரு மாதமும் பூரம், உத்திரம்,
விசாகம் நட்சத்திரங்களில், பௌர்ணமி, சுக்ல த்விதியை, சுக்ல சஷ்டி, செவ்வாய்,
வியாழன், வெள்ளிக் கிழமைகளில் விசேஷ வழிபாடு செய்தால் நல்லது. நெய் அல்லது
இலுப்பெண்ணெய் விளக்கு ஏற்றியும், பழம், தேன், சந்தனம், பச்சைக் கற்பூர
அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு, பச்சை வஸ்திரம் சாற்றியும், தேன் கலந்த தினை
மாவிளக்கு ஏற்றியும், ரோஜா, செண்பகம், செந்தாமரை, அரளி, மகிழம்பூ மலர் மாலைகளை
அணிவித்தும் வள்ளி மணவாளப் பெருமாள் 108 போற்றி அர்ச்சனை செய்து, வெண்பொங்கல், தேன்குழல்,
கடலைப் பருப்பு பாயசம் நைவேத்யம் செய்தால் இனிய இல்லற வாழ்க்கை உடன் அமையும் என்று
கூறப்படுகிறது. இல்லத்தில் தொடர்ந்து பூஜை செய்ய உதவியாக சுவாமி படம், ஷடாக்ஷர
மோகன யந்த்ர டாலர், பூஜை முறைகள் பற்றிய புத்தகங்களும் ஆலயத்தில் கிடைக்கின்றன.
சிறுவை அருளாளனின் முன் காணப்படும்
மயில் மண்டபம் விசேஷமானது. இங்கு த்த்ரூப கலை நயத்துடன் விளங்கும் மரகத மயில்
நம்மோடு பேசுவது போலவே தோன்றும். இக்கோயிலில் உள்ள மகிழம்பூவினால் முருகனை
அர்ச்சிப்பது மிக விசேஷம் எனக் கூறப்படுகிறது.
வாழ்வதற்குச் சொந்தமாக வீடு, மனம்
இயைந்த வாழ்க்கைத் துணை, வளமான வாழ்வு இவற்றைப் பெற ஒரு முறை சிறுவாபுரி சென்று
பாலசுப்ரமண்ய சுவாமியை உளமுருகி பக்தியோடு வணங்கி நின்றால், அந்த சிங்கார வேலன்
நம் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றுவான்.
சிறுவாபுரி திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரியிலிருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து
நிலையத்திலிருந்து பெரிய பாளையம் செல்லும் பேருந்துகளில் சென்று சின்னம்பேடு
நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல்லாம்.
சக்தி
விகடன் 2-6-2004 இதழில் வெளிவந்தது
சொந்தமாக வீடு கட்ட ஒரு மனை வாங்க வேண்டும் என்ற ‘அவா’ சில
வாரங்களாகவே மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து, ‘சொந்த வீடு
அமைய வேண்டுமா? சிறுவாபுரி முருகனைத் தரிசியுங்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டு நெகிழச்
செய்து விட்டீர்கள்!. என் எண்ணத்தின் பிரதிபலிப்பு, சக்தி விகடன் ரூபத்தில் வந்து
என்னைப் பரவசப்படுத்தி விட்ட்து. இதோ, சில தினங்களில் குடும்பத்தோடு கிளம்பப்
போகிறோம் சிறுவாபுரிக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக