Thanjai

Thanjai

சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒரு வித்யாசமான அனுபவம் ...ஓசி ஷாப்பிங்!!!

2013, ஜூலை 5 தினமலர் செய்தித்தாள்  இணைப்பான  அங்காடித்தெருவில் 'வாங்க வாங்கலாம்' பகுதியில் நானும், என் மருமகள் ஆர்த்தியும் பங்குபெற்று வெளியான  செய்தித் தொகுப்பு    
 கண்ணுபடப் போகுதம்மா...!!







 மெகாசீரியல் மாமியாரும், மருமகளும் நம்மளை  மாதிரியே சிரிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்!

எல்லோரும் கிழக்கு திசையை ஆர்வமா  பார்த்துகிட்டு இருக்கும்போது,மேற்கு திசையில சூரியன் உதிச்சா எந்த அளவுக்கு ஆச்சரியப்  படுவோமோ, அப்படி ஒரு ஆச்சரியத்தை நமக்கு கொடுத்தாங்க...வாங்க வாங்கலாங்கற  நம்மோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, சேலையூர்ல இருந்து கிளம்பி 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்திருந்த ராதாவும், ஆர்த்தியும்!


ராதாவோட மகன் கணே ஷுக்கும்,ஆர்த்திக்கும் கல்யாணமாகி ஏழு வருஷம் ஆகுது.இந்த ஏழு வருஷ த்துல...மாமியார் ராதாவுக்கும், மருமகள் ஆர்த்திக்கும்  ஒருமுறை கூட சண்டை வந்தது கிடையாதாம்.


அப்படியே வந்தாலும்...'வரவர நீ சரியாவே சாப்பிடுறதில்லை' , 'இப்பல்லாம் நீங்க ஒழுங்காவே ஓய்வு எடுக்கறது இல்ல'ன்னு   ஒருத்தர் மேல இன்னொருத்தர் காட்டுற அக்கறையாதான் அது இருக்குமாம்!ஆரம்பத்துல நாங்க கூட இதை நம்பல.


ஆனா ஒருத்தரை ஒருத்தர் ஆலோசனை பண்ணிக்கிட்டு, ஒருத்தர் கருத்தை இன்னொருத்தர் மதிச்சு பொருட்களைத் தேர்ந்தெடுத்த விதத்தைப் பார்க்கும்போது நம்பாமலும் இருக்க முடியல. ஆர்வத்தை அடக்க முடியாம நாம கேட்ட சில கேள்விகளுக்கு அர்த்தத்தோட அவங்க சொன்ன பதில்கள்...அடிக்கடி அடிதடியில் இறங்கற மாமியார்-மருமகள்களுக்கான அடிப்படை அரிச்சுவடி!


பெரும்பாலான மாமியார், மருமகள்கள் சமர்த்தா சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் இப்படி?


ராதா: போட்டி, பொறாமை, பிரச்னை, கருத்து வேறுபாடு, சொல்பேச்சு கேளாமை...இப்படி ஏதாவது இருந்தாத்தானே ரெண்டு பேருக்குள்ளே சண்டை வரும்?இது எதுவுமே எங்களுக்குள்ளே இல்லை.அதனால சண்டையும் வரல.


அதான் ஏன்?


ஆர்த்தி: நான் தப்பு செஞ்சா அதைக் குத்திக் காட்டாம, 'சரியாய் செய்யறது எப்படின்னு' கத்துக் கொடுக்கற மாமியார் கிடைச்சிருக்கும்போது, சண்டை எதுக்கு போடணும்?


ராதா; புகுந்த வீட்டை தன இஷ்டத்துக்கு வளைக்காம,எங்கள்ள ஒருத்தியா இருக்கணும்னு நினைச்ச இவளோட குணம்தான், என் மகளே பொறாமைப்படும் அளவுக்கு, இவகிட்ட அன்பா இருக்க வச்சுது!


உங்களை மாதிரியே எல்லா மாமியாரும் இருக்க....ஏதாவது  டிப்ஸ்?


ராதா:  நேத்து வந்த சின்னப்பொண்ணுதானேங்கற ஈகோவை விட்டுட்டு இறங்கி வரணும். பெத்தவங்களை விட்டுட்டு, நம்மளை நம்பி வந்திருக்கற மருமகள் மேல, மகளைவிட அதிகமான பாசத்தைப் பொழியணும். பல வருஷங்களா வேற சூழல்ல வளர்ந்த பொண்ணு  மேல நம்முடைய விருப்பு, வெறுப்புகளை திணிக்கிற அடக்குமுறை கூடாது. இதை ஏன் செய்யலே? அதை ஏன் செய்யறேன்னு எல்லா விஷயங்கள்ளையும் தலையிட்டு கேள்வி கேட்கக் கூடாது. சிம்பிளா சொல்லணும்னா நம்ம மகனோட நல்ல படியா வாழணும்னு அழைச்சுட்டு வந்த பொண்ணை நமக்கு வேலைக்காரியாக்க முயற்சி பண்ணாம, சந்தோஷமா வாழவிடணும்.



அற்புதம்! நீங்க எதுவும் கருத்து சொல்லணுமா?


ஆர்த்தி: கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்க....புருஷன்கிட்டே நல்ல பேர் வாங்கறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மாமியார்கிட்ட நல்லபேர் வாங்குறதும் முக்கியம்'ங்கறதை பொண்ணுங்க புரிஞ்சிக்கணும். மாமியாரோட கோவிலுக்கு போகணும், ஷாப்பிங் போகணும், சினிமாவுக்கு போகணும்...தப்பித் தவறி செய்த தவறுகளுக்காக அவங்க திட்டினாங்கன்னா அமைதியா கேட்டுக்கணும்.'இவ மகனைப் பிரிக்க வந்தவ இல்ல..இவ மகளா வந்திருக்கற மகராசி'ன்னு அவங்களை உணர வைக்கணும். இது போதும். புகுந்த வீடு சொர்க்கமாகிவிடும்.


'இவங்களுக்குள்ளேயும் என்னமோ இருக்கு பாரேன்'னு நாம ஆச்சரியப்படற அளவுக்கு ஆர்த்தி கருத்து சொல்லிட்டு இருக்கிறப்போ, அர்த்தமுள்ள பார்வையோட நம்மளைக் கடந்து போனாரு கடை நிர்வாகி.



'கடைக்கு வந்தோமா ,பொருளை வாங்கினோமா'ன்னு இல்லாம, ஏன் இப்படி வெட்டியா பேசிட்டு இருக்காங்க'ன்னு அந்த பார்வை எழுப்பின கேள்வியை புரிஞ்சிகிட்டு போட்டிக்கு தயாரானோம்.


அரைமணி நேரத்தையும், 5000 ரூபாய் பணத்தையும்கொடுத்து..'இதுக்குள்ள 20 பொருட்களை வாங்கி, மீதமா 100 ரூபாய்க்கு  குறைவான தொகையை திரும்ப கொடுக்கணும்'ங்கற விதிமுறைகளையும் சொல்லி முடிக்க, போட்டி  ஆரம்பமாச்சு.


அஞ்சுமாச கர்ப்பமா இருக்கற மருமகளை கணக்கு பார்க்க சொல்லிட்டு, புயலா பறந்து பொருட்களை எடுத்தாங்க ராதா!கொழுப்புச் சத்து குறைவான கார்ன்ஃ ப்ளேக்ஸ், ஆலிவ்  ஆயில்னு மருமகள் மேல ராதா அன்பைப் பொழிய....மாமியாருக்காக ஓட்ஸ், மாமனாருக்காக நொறுக்குத் தீனின்னு ஆர்த்தியும்  அக்கறையைப் பொழிய....இப்படியும்  இல்லாம, அப்படியும் இல்லாம சரியா 30 நிமிஷத்துல போட்டி முடிஞ்சது.


கூட்டி, கழிச்சு கணக்கு பார்த்ததுல,பொருட்களோட சேர்ந்து வெற்றியும் அவங்க ட்ராலிக்குள்ள இருந்தது உறுதியாச்சு!
பில் போட்டு முடிச்சவுடனே 'வாயும், வயிறுமா இருக்கற மருமகளுக்கு நேரத்தோட மதிய சாப்பாடு கொடுக்கணும்கறதுக்காக அவசர, அவசரமா கிளம்பினாங்க ராதா!



'வீட்டுக்கு போனவுடனே மறக்காம திருஷ்டி சுத்திப் போட்டுக்கோங்க'ன்னு சொல்லி வழியனுப்பினோம்!


இவ்வளவு உத்துப் பார்த்தும் தெரியலையா? கண்ணாடி காலாவதியாகிப் போச்சோ!



அச்சச்சோ! கணக்கு இடிக்குதே! மாமியார் கணக்கு கேட்டா என்ன பண்ணறது?!

மருமகளே! போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது இதே மாதிரி சிரிக்கணும்...சரியா?!


பசி  மயக்கமா இருக்கேன்னு அலமாரியைப் பிடிச்சுக்கிட்டேன்! அதையும் போட்டோ பிடிக்கணுமா?!

              
ஹை ....பிஸ்கெட்டு!இருக்கற பசிக்கு நான் அப்படியே சாப்பிடுவேன்!!


                       

 100/100...சந்தோஷம்!!!