Thanjai

Thanjai

புதன், 6 ஏப்ரல், 2016

ஆயுள் பலம் தரும் உஜ்ஜீவன நாதர்


திருச்சி மாவட்ட செய்திகள் தொடரில்… ஏப்ரல் 20, 2016 இதழில் வெளியானது.




ஈசனாகிய பரம்பொருள் தம்மை மெய்யன்புடன் வழிபடும் தேவர், மனிதர் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் அருளும் பொருட்டு எழுந்தருளி அருள் செய்யும் ஆலயங்களுள், சமயக் குறவர் முதல் மூவரால்  பாடப்பெற்ற தலங்கள் 274. அவற்றுள் 67வது தேவாரத்தலமாக விளங்குவது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்ட, நூறடி உயரத்தில் மிகப் பெரிய மதில் சுவர்களுடன், அழகிய கருங்கல் மலையின் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான உய்யக் கொண்டான் திருமலை சிவாலயம். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ உஜ்ஜீவநாதர். மார்க்கண்டேயனை எமனின் பிடியிலிருந்து காப்பாற்றி அருள் செய்தவர். உயிர்களை உய்யக்கொள்வதற்கு எழுந்தருளியபடியால் உய்யக் கொண்டான் திருமலை எனப் பெயர் பெற்றது இத்தலம். நூறு அடி உயர மலையில் எண்பது படிகளுடன் கல்லினால் கட்டப்பட்ட ஆலயத்தில் குடியிருப்பதாலும், இத்தலப் பாறைகள் களவு போனபோது பெருமான் கல்லின் சாரத்தைக் குடித்து விட்டதாலும் இம்மலைக்கு திருக்கற்குடி என்ற பெயரும் உண்டு. பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் இயற்கை வளமிக்க, குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மூர்த்தி,தலம், தீர்த்தம் இவற்றில் சிறந்த  தலமாக விளங்குகிறது. ஐந்து பிரகாரங்களும், மூன்று வாயில்களும், ஐந்து தீர்த்தங்களும் கொண்டு   ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக  ஆலயம் நம்மை பரவசப் படுத்துகிறது.

உய்யக்கொண்டான் திருமலை

வலிமையான மதில்களுடன் ஒரு கோட்டை போல விளங்கும் இவ்வாலயம்  18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும்,மைசூர்க்காரரும் தங்கும் யுத்த அரணாக விளங்குகியது.   ராணுவ வீரர்கள்  தங்கவும்,பகைவர் நெருங்கியபோது தப்பிச் செல்லும் இடமாகவும் இருந்தது. இவ்வாலய சுற்றுச் சுவர்களிலும், தூண்கள், தளவரிசைகள் மற்றும்  கோபுர வாயில்களிலும் பல  தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. 

இனி ஆலயம் சென்று இறைவனை தரிசிப்போம். இங்கு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் கொண்டது எவ்வாறு? மார்க்கண்டேயருக்கு பதினைந்து வயதானபோது , தாய், தந்தையர் தன்னைப் பற்றிக் கவலைப் படுவது கண்டு காரணம் கேட்டு அறிந்து, ' தான் ஈசனின் அருளால் சிரஞ்சீவியாவேன்' என்று காசி முதல் தெற்கு நோக்கி எல்லா தலங்களுக்கும் சென்று வழிபட்டபோது, இத்தலம் வந்து பொன்னொளி ஓடையில் நீராடி இறைவனை தரிசிக்க மலை மீது சென்றார்.அம்மலையைச் சுற்றிலும் பல முனிவர்கள் அருந்தவம்  செய்வது கண்ட மார்க்கண்டேயர் அங்கிருந்த உபமன்யு  முனிவரையும், நாரதரையும் கண்டு இறைவனை பூசிக்கும் முறை அறிந்து, இறைவனை நோக்கி தவம் புரிந்தார். பக்தனுகிறங்கிய பகவான் உமையுடன் கருவறையிலிருந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாக வாழ வரம் அருளினார். அதன் பொருட்டே திருக்கடையூரில் பாசக்கயிறு வீசிய எமனை அழித்து மார்க்கண்டேயரை ஆட்கொண்டார்.மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவத்துக்கு வரம் பெற்ற இடம் இத்தலம்.
உஜ்ஜீவன நாதர்

இதனைக் காண நெடுநாளாய் தவம் புரிந்த ரிஷிகள் 'தமக்கு உலகின் நியம நெறியை அனுக்கிரகிக்க வேண்டும்' எனக்கூற, ஈசனும்தெற்கு முகமாய் எழுந்தருளி, அதனை எடுத்துக் கூறி மறைந்தருளினார். எவருக்கும் யமபயம் இல்லாதிருக்கும் பொருட்டு தெற்கில் கொடிமரமும்,ஈசனின் திருப்பாதுகை கொடிமரத்தின் அருகிலும் விளங்குகின்றன. மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததன் அடையாளமாக  லிங்கத்தின் சிரத்தில் இரு சிறிய குழிகள் உள்ளன.  ஆலயத்தின் ஆலயத்தின் தலமரம் வில்வம். இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் ஐந்து. அவை பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு. மூன்றாம் பிரகாரத்திலுள்ள நாற்கோணக் கிணற்று நீரே ஆலய இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

படிகளில் ஏறிச் செல்லும்போது வல்லப கணபதியை வணங்கிச்  செல்வோம்.  ஓம் வடிவில் அமைந்துள்ள மலைக்கோவிலில் இறைவன் உஜ்ஜீவநாதர் சுயம்பு மூர்த்தியாக  ஆவுடையுடன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவித்துவம் அளித்துக் காத்த உய்யக்கொண்ட நாயனார் சிரத்தில் ஐந்துதலை நாகக் குடையுடன்  அழகிய அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்கிறார்.என்னை முழுதும் நம்பி வந்து தரிசித்தவர்களுக்கு சிரஞ்சீவித்துவமும் முக்தியும் உறுதி என்று அருளும் கற்பக நாதரிடம் நாமும் மனக்குறைகளைக் களைந்து, முக்தியை   வேண்டுவோம்.மார்க்கண்டேயருக்கு உயிர்வரம் தந்த நாள் ஆடி பௌர்ணமி என்பதால் அன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும்  ஈசனுக்கு தேன் , பால் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். வேண்டுவார் வேண்டுவதை அளிக்கவல்ல எம்பெருமான் இவ்வூரில் வசிப்போருக்கு நீண்ட ஆயுள், செல்ச்வம், பிள்ளைப்பேறு அனைத்தும் தரவல்லவராம். இத்தல ஈசனை சஷ்டி அப்த பூர்த்திக்கு முன்பாக ஐம்பத்தொன்பதாம் வயதில் வழிபட்டால், எந்த உடல்நலக் கோளாறும் இல்லாமல் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பாக நடப்பதுடன் தம்பதிகள் நீண்ட நாள் வாழலாம் என 85 வயதுக்கு மேலான இவ்வாலய அர்ச்சகர் திரு சத்திய கீர்த்தி அவர்கள் கூறுகிறார். இது ஒரு பீடா பரிகார தலமாக விளங்குகிறது. தனது பதினைந்து வயது முதல் இவ்வாலய குருக்களாக இருப்பதாகக் கூறும் அவர், ஆலயம் பற்றிய பல அரிய, அதிசய செய்திகளை மெய் சிலிர்க்க எடுத்துக் கூறுகிறார். 
சத்யகீர்த்தி குருக்கள்
மை தீட்டிய அழகிய கண்களைக் கொண்ட அஞ்சனாட்சி தேவி அலங்கார ரூபமாய் காட்சி தருகிறாள்.நான்கு கரங்களுடன், அபயவர ஹஸ்தங்களுடன்  நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகை தொழுதவரை அஞ்சேல் என்று ஆறுதலும், அபயமும் அளித்துக் காக்க வல்லவளாம். தை மாதத்தில் ஒரு நாள் இறைவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி படுவதோடு, அது முதல் 90 நாட்களுக்கு ஒரு முறையாக வருடத்தில்  நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும்.
அஞ்சனாட்சி அம்மன்

இவர்களுக்கு இடையில் தரிசனம் தரும் பாலாம்பிகை  குழந்தைகளின் பாலாரிஷ்டம் போக்கும் அபூர்வ சக்தி கொண்டவளாம். இவ்வன்னையின் இடது கரத்திருந்த  பூவின் ஒரு இதழ் உடைபட்டதால், அவளை அப்புறப் படுத்த முயன்றபோது, கோயில் அதிகாரியின் கனவில் தோன்றிய அம்மை தன்னை அப்புறப் படுத்த வேண்டாம் என்றதால் அவ்வம்மனும் அங்கு காட்சி தருகிறாள்.நான்கு கரங்களுடன் அழகுக் காட்சிதரும் அன்னை பெண்களுக்கு திருமணவரம், மற்றும் பிள்ளை பாக்கியம் தர வல்லவளாம். இவ்வன்னையின் அருளால் அவ்வூரில் குழந்தைகளின் பாலாரிஷ்டம் எனும் நோய்க்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் முடிகயிறு போடப்படுகிறது. 
 
பாலாம்பிகை
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னனுக்கு இங்கு ஆனந்த தாண்டவக் காட்சி அருளினாராம் எம்பெருமான். பாதம் மட்டுமே பிடிமானமாகக் கொண்டு காட்சி தரும் நடராஜா மிக விசேஷமாக திருவாதிரை நாட்களில் கொண்டாடப் படுகிறார்.

வள்ளி, தேவசேனாவுடன் காட்சி தரும் ஆறுமுகத்தானை அருணகிரிநாதர் 'திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு' என்று பாடி சிறப்பித்துள்ளார்.வைகாசி விசாகத்தில் புறப்பாடு, கந்தசஷ்டியில் திருமணம், கார்த்திகை உற்சவம் என்று இந்த கந்தக் கடவுளுக்கு பல விழாக்கள் தவறாது நடக்கும்.

தைப்பூசநாளில் உற்சவரான  சந்திரசேகரர் அம்மையுடன் அருகிலுள்ள சோமரசம்பேட்டைக்கு  எழுந்தருளுவார். அங்கு வயலூர் முருகப்பெருமானும் எழுந்தருள, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிரகாரத்தில் நால்வர், கஜலக்ஷ்மி,  நவக்கிரகம்,பைரவர்,சனீஸ்வரர், சூரியன்,ஜேஷ்டாதேவிக்கு சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள ஜேஷ்டாதேவியின் சிலை வித்யாசமாக உள்ளது.அவளது இரு கைகளிலும் இரண்டு குழந்தைகளைத் தாங்கியவாறு அமைந்துள்ள இவளை வணங்குவதால் விபத்துக்கள் ஏற்படாமல் காப்பாற்றுவாள்.நவாவர்ணத்தில் இரண்டாவது ஆவரண தேவதையான ஜேஷ்டாதேவி இங்கு ஆதிபராசக்தி ரூபமாக விளங்குவதாகக் கூறுகிறார்கள்.பிரயாணங்களின்போது இந்த தேவியை  வழிபட்டுச் சென்றால் விபத்துகள் ஏற்படாது என்கிறார்கள்.இந்த ஜேஷ்டா தேவிக்கு புது வஸ்திரம் வாங்கி சாற்றுவது இங்கு சிறப்பான வழிபாடாகும்.

திருஞான சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற இத்தலத்தை,கரன், உபமன்யு முனிவர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.கரன் வழிபட்ட ஆளுடையார் கோயில் மேற்கிலும், இரண்டாம் பிரகாரத்தில் இடர் தீர்த்தார்  கோயிலும், நான்காம் பிரகாரத்தில் சண்முகர் கோயிலும் சுற்றுக் கோயில்களாக அமைந்துள்ளன.மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ்வாலயம் பற்றி கற்குடி மாமலை மாலை என்ற 100 பாடல்களை எழுதியுள்ளார்.

இவ்வாலயத்தில் இரண்டு கால பூஜைகளும், பங்குனியில் பிரம்மோற்சவமும், மாத கார்த்திகைகள்,நவராத்திரி,தைப்பூசம், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் 5 கி.மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது.
ஆலய நேரம்...காலை  6 - 9...மாலை 5 - 9
தொலைபேசி..திரு சத்தியகீர்த்தி .குருக்கள்....94426 28044
ஆலயம்....04364 223 207...9443150332




வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மும்பா தேவி ஆலய புராணம்

மங்கையர் மலர் பர பர சிறப்பிதழ் – ஏப்ரல் 1-15, 2016 இதழிற்காக மும்பாதேவி பற்றி நான் எழுதிய முழு கட்டுரையையும் இங்கே பிரசுரித்துள்ளேன். பத்திரிகையாளர்கள் அவர்கள் காரணம் கருதி சிறிய குறிப்பு மட்டும் மேலே கூறிய இதழில் பிரசுரித்துள்ளார்கள். அதனுடைய ஸ்கேன் செய்த பகுதியையும் இணைத்துள்ளேன்.







மும்பையின் முதல் தெய்வம் மும்பாதேவி


மேற்கத்திய நாகரீகத்தின்  தலைவாசலாகவும்,  நம் பாரதத்தின் அழகிய நகரமாகவும், பல பெரிய நிறுவனங்களின்    தலைமையிடமாகவும், ஆங்கிலேயர்களால் பாம்பே என்று அழைக்கப்பட்டு வந்த இன்றைய மும்பை நகரின் வளமைக்கும், பெருமைக்கும் காரணமாய் நின்று அந்நகர வாசிகளைக் காத்து நிற்கும் தேவியர் இருவர். ஒன்று அன்னை மஹாலக்ஷ்மி. இன்னொன்று அன்னை மும்பாதேவி.


மும்பாதேவியின் பெயராலேயே அந்நகரம் மும்பை ஆயிற்று. மீனவ மக்களின் குலதெய்வமான மும்பாதேவியின் ஆலயம் மும்பையின் முக்கிய வியாபாரத் தலமான பூலேஷ்வர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அருளாட்சி செய்யும் அன்னையின் ஆலயம் சிறிதானாலும், அனுதினம் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் மகிமை பெற்றது. அன்னை மும்பாதேவி பார்வதி தேவியின் அவதாரம் எனப் போற்றப்படுகிறாள். மும்பை இவ்வளவு செல்வச் செழிப்போடு இருப்பதற்குக் காரணம் இவளே என்பது மும்பை வாசிகளின் நம்பிக்கை.


இவ்வாலயம் தோன்றியதற்கான புராணக் கதை இது. பல்லாண்டுகளுக்கு முன் ‘மும்பாரக்’ என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாக அவன் முன் தோன்றிய பிரம்மா, அவன் கேட்டபடி எப்பொழுதும் இறவாத வரம் கொடுக்க, அதைப் பெற்ற ஆணவத்தால் தேவர்களையும், பூவுலக மக்களையும் கொடுமைப்படுத்த, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர்.


மகாவிஷ்ணு, சிவபெருமான் இருவரின் அம்சமாக எட்டு கரங்கள் கொண்ட சக்தி தேவியை அவனுடன் போரிட்டு, அழிக்க அனுப்பினார், ஸ்ரீமந் நாராயணர். வெகு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரின் இறுதியில் மும்பாரக்கின் மரணம் நெருங்கிய நேரம், மும்பாரக், தேவியை வணங்கி ஒரு வரம் வேண்டினான். தேவி அவனுடைய பெயரையே கொண்டு, அவ்விடத்திலேயே கோயில் கொண்டு, தீயோரை அழித்து, நல்லோரை வாழவைக்க வேண்டினான். அதனாலேயே தேவிக்கு ‘மும்பாரக் தேவி’ என்று பெயர். நாளடைவில் ‘மும்பா தேவி’யாகக் குறுகிவிட்டது.


600 ஆண்டுகளுக்கு முன் கடலோர மீனவர்களின் குல தெய்வமாக விளங்கிய தெய்வத்திற்கு, ‘முங்காதேவி’ என்ற மீனவப் பெண் அளவற்ற பக்தியால் தன் பெயரையே அன்னைக்கு வைத்து பூஜித்து வந்ததால், முங்காதேவி என்றழைக்கப்பட்டு நாளடைவில் ‘மும்பாதேவி’யாகி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.


மும்பாதேவி ஆலயம் இன்றைய விக்டோரியா டெர்மினஸ் கடற்கரையோரமாக இருந்ததாயும், பிரிட்டிஷார் துறைமுகம் கட்ட வேண்டி கோவிலை அழித்து விட்டதால், சமீபத்தில் ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன் பூலேஷ்வரில் புதிதாக அமைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் தேவியின் சக்தி மிகவும் அதிகம். 


மும்பாதேவியின் முகம் மட்டுமே பெரிதாகக் காட்சி தரும். அலங்கார ஆடையுடன், சிரத்தில் வெற்றி கிரீடம், மூக்கில் பெரிய மூக்குத்தி, கழுத்தில் அழகான நெக்லஸ், எட்டு கரங்களில் விதவிதமான ஆயுதங்களோடு, கருணை பொங்கும் அழகு விழிகளோடு காட்சி தரும் அன்னையின் தரிசனம் கண்களை நிறைக்கிறது. நினைத்ததை நிறைவேற்றும் மும்பாதேவியின் சன்னிதிக்கு இடப்புறம், சிம்ம வாகனத்தில் ஸ்ரீஜகதம்பா என்ற பெயரில் துர்கா தேவியும், மயில் வாகனத்தில் ஸ்ரீஅன்னபூரணியும் அருள் பாலிக்கிறார்கள்.


ஆலயத்திற்கு வெளியே கணபதி, சந்தோஷிமா, அனுமன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளன. தினமும் இரண்டு வேளை ஆர்த்தி நடைபெறும். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு தினமும் ஒரு அலங்காரம், தினம் ஒரு வாகனம். திங்களன்று சிவபெருமானுக்குகந்த நந்தி  வாகனம், வெள்ளியன்று மகாலட்சுமிக்கான அன்ன வாகனம், நவராத்திரி முழுவதும் அம்மனின் தரிசனத்திற்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.


வேண்டியோர்க்கு வேண்டும் வரம் தந்து, வளமான வாழ்வை அருளும் மும்பை நகரின் பட்டத்து ராணியாய் விளங்கும் மும்பாதேவி இந்நகரின் முதல் தெய்வம், இவ்வூரைக் காத்து நிற்கும் காவல் தெய்வம், அனைவரின் கண் கண்ட தெய்வமும் கூட!

மும்பாதேவி கோவில்-ஒரு தோற்றம்





மும்பாதேவி கோவில் - மற்றொரு தோற்றம்




மும்பாதேவி