Thanjai

Thanjai

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நெருல் பாலாஜி மந்திர்


ஞானபூமி நவம்பர், 2003 இதழில் வெளியானது






நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம்ஸதா
வதாமி நாராயண நாமநிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்
-      முகுந்தமாலை
‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரமானது அதனை ஜபிப்பவருக்கு இகபர நன்மைகளைத் தந்து இறுதியில் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும். எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த பெருமாளின் மூன்று மந்திரங்கள் எட்டெழுத்துள்ள நாராயண மந்திரம். ஆறெழுத்துள்ள விஷ்ணு மந்திரம், பன்னிரண்டு எழுத்துடைய வாசுதேவ மந்திரம்.

இப்பூலோகத்திலுள்ள நாராயண தலங்களில் பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம் வ்யக்த தலங்கள் எட்டு. அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், தோத்தாத்ரி, புஷ்கரம், பத்ரி. தேவர்களால் ஏற்படுத்தப்பட்டவை ‘திவ்ய க்ஷேத்திரம்’ எனப் பெயர் பெறும். சித்தி பெற்ற மகரிஷிகளால் உருவாக்கப்பட்டவை ‘ஸைத்தம்’ எனப்படும். மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை ‘மானுஷ க்ஷேத்திரங்கள்’

 

நூற்றெட்டு திருப்பதிகளில் தலை சிறந்து விளங்குவது திருமலை என்பது நாம் அறிந்ததே. திருமலையின் பிரதிபலிப்பாக நம் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆலயங்கள் நிறுவப்பட்டிருப்பதும் நாம் அறிந்ததே. அந்த வகையில் மும்பையில் திருமலையில் வேங்கடவன் காட்சி தருவதப் போன்றே காணப்படும் ஆலயங்கள் மூன்று. ஃபனஸ்வாடியிலுள்ள சின்ன திருப்பதி ஆலயம், டோம்பிவிலியிலுள்ள பஸ்சிம் திருப்பதி, நவிமும்பை நெருலில் அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி மந்திர். நவிமும்பை நெருலில் பிரம்மகிரி என்ற அழகிய இயற்கையான சிறிய குன்றின் மீது கோயில் கொண்டு அடியவரை ஆட்கொண்டு, எளியவரை ஏற்றம் பெறச் செய்து, தன்னை அண்டியவர்க்கு வேண்டியன கொடுத்து, அருள் பாலிக்கும் பாலாஜி அப்படியே திருப்பதி பெருமாள் போலவே காட்சி தருகிறார்.

 

1991-ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் பூமி பூஜை செய்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், பத்மாவதி ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதை அடுத்து 2000ம் ஆண்டு பிப்ரவரியில் வித்யா கணபதி சன்னதி, துவஜஸ்தம்பம், பலிபீடம், துவார பாலகர்கள் அமைக்கப்பட்ட்து. அதை அடுத்து நரசிம்ம சுவாமி, ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைக்கப்பட்டு இன்று அழகிய பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது.

ஆலயத்தில் நுழைந்ததும் இடப்பக்கம் ஸ்ரீவித்யா கணபதி சன்னதி அமைந்துள்ளது. விக்னங்களை நீக்கி, வித்தையை அருளும் விநாயகப் பெருமான் அழகாகக் காட்சி தருகிறார். விநாயகர் சன்னதியின் மூன்று பக்கங்களில் அஷ்ட கணபதி சிற்பங்களும், பின்னால் பிள்ளையார்பட்டி பெருமானின் திருவுருவமும், சித்தி விநாயகரின் உருவமும் காட்சி தருவது பேரழகு. அடுத்து, த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி எம்பெருமான் சன்னதியில் நுழைகிறோம்.

காஞ்சி பீடாதிபதி சுவாமிகளால் அடிக்கல் நாட்டப் பெற்று, திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகள் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தின் அதிபதியான லக்ஷ்மிபதி ஸ்ரீவேங்கடரமணன் இதயத்தில் ஸ்ரீதேவியுடன், மேலிரண்டு கைகளில் சங்கு சக்ரதாரியாக ‘என்னிடம் வந்துவிட்டாயா?’ இனி நான் காப்பாற்றுகிறேன்’ என்றுரைக்கும் விதமாக ஆஜானுபாகுவான உருவத்துடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.

ஒரு நிமிடம் நாம் நிற்பது திருமலை பாலாஜி முன்பா? என்ற எண்ணம் தோன்ற, நம்மை நகரச் சொல்பவர் யாருமில்லாததால் நின்று நிதானமாக அவர் அழகை கண்களால் கண்டு, அவரது பாதமலர்களிடம் நம் கவலைகளை விட்டு விட்டு தெளிந்த மனதுடன் நகர மனமின்றி நகர்கிறோம்.

வேங்கடவனின் தரிசனம் மெய்மறந்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐயன் சன்னதியை விட்டு வெளியில் வந்தால் சுற்றுப் பிரகாரத்தில் பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. மனம் குவித்து வணங்குவோரை வள்ளலாக்கும் தேவி அமர்ந்த திருக்கோலத்தில் அருளாட்சி செய்கிறார்.

ஸ்ரீலட்சுமியுடனான நரசிம்மசுவாமி சன்னதிக்கு எதிரில் ராம நாமத்தை ஜபிக்கும் யோக ஆஞ்சநேயர் உள்ளது. ஸ்ரீராமானுஜருக்கு சன்னதி உள்ளது. அமைதியான இயற்கை சூழ்நிலை தியானம் செய்யும் மனநிலையை ஏற்படுத்துகிறது.

நவிமும்பை வாசிகள் நினைத்தவுடன் திருப்பதி செல்வது இயலாதபோது ஓடிவருவது இந்த பாலாஜி மந்திருக்கே! வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் இருக்கும். வைகுண்ட ஏகாதசி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்று சுவாமி புறப்பாடு உண்டு. ஆங்கில, தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் இங்கு வரிசையிலேயே பெருமாளைத் தரிசிக்க முடியும்.

இவை தவிர கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, மார்கழி மாத உற்சவங்கள் நடைபெறும். புரட்டாசி சனிக் கிழமைகளில் விசேஷ வழிபாடு உண்டு.

ஆலயத்தில் தினமும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரை மற்றும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11-30 முதல் 4 மணி வரை தரிசனம் உண்டு. இங்கு திருப்பதி போன்றே கல்யாண உத்சவம், வஸந்தோத்சவம், பிரம்மோத்சவம் போன்றவை நடத்தப் பெறுகின்றன.

இந்த ஆலயத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்து வரும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சபா இவ்வாலயத்தின் அருகில் மூன்று மாடிகளைக் கொண்ட கல்யாண மண்டபம், கலாசார மையம், நூலகம் இவற்றை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நம் பாரம்பரியக் கலைகளான இசை, நடனம் இவற்றைப் பயிற்றுவிக்கவும், சமஸ்கிருதம், வேத பாடசாலைகள் நடத்தவும் திட்டங்கள் தீட்டியுள்ளனர். தற்சமயம் இவற்றுக்கான வேலைகள் ஆயத்த நிலையில் உள்ளது. விரைவாக நடக்கவும் ஆரம்பித்துள்ளது.

பாலாஜி மந்திர் அமைந்துள்ள பிரம்மகிரியில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம், ஸ்ரீசுவாமி நாராயண ஆலயம், ஒரு மாதா கோயில் ஆகியவையும் உள்ளது. பிரம்மகிரிக்கு ஏறிச் செல்ல படிகளும் உண்டு. ஆலயத்தின் எதிரில் சில படிகள் இறங்கிச் சென்றால் நவக்ரஹ சன்னதி உள்ளது.

மொத்தத்தில் திருப்பதி சென்று வேங்கடவனைத் தரிசித்த திருப்தியையும், மனமகிழ்ச்சியையும் எங்களுக்குத் தருகிறது நவிமும்பை நெருல் பாலாஜி மந்திர்! பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதிலும் திருமலை பாலாஜியாகவே திகழ்கிறார் பிரம்மகிரி ஸ்ரீநிவாசப் பெருமாள்!


 




3 கருத்துகள்:

  1. நவிமும்பை நெருல் பாலாஜி மந்திர் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நவி மும்பை பாலாஜி கோவில் பற்றித் தெரிந்து கொண்டேன். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு