நடராஜர் என்றதும் நம்
நினைவில் தோன்றும் தலம் தில்லை அம்பலம் எனும் சிதம்பரம். அந்த சிதம்பரத்தில் நாம் தரிசிப்பது அங்கு வடிக்கப்பட்ட முதல் சிலை அல்ல. எப்படி, ஏன்?தில்லைக்காக முதலில் செய்யப்பட நடராஜ
உருவம் அங்கு நிறுவப் படவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? இப்பொழுது நாம் தரிசிப்பது முதல் சிலை
அல்ல. அந்த சிலை இருப்பது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பரை என்ற ஊரில்!
அதற்கான இறைவனின் திருவிளையாடலைப் பார்ப்போம்.
செப்பரை நடராஜர் கோவில் |
நடராஜர் |
இந்த புண்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகள் அமைந்துள்ளன. தில்லை பொன் அம்பலம்,மதுரை வெள்ளி அம்பலம்,திருவாலங்காடு ரத்ன அம்பலம்,நெல்லை தாமிர அம்பலம்,குற்றாலம் சித்ர அம்பலம். ஆனால் உண்மையான தாமிரசபை நெல்லையில் உள்ளது அல்ல. நெல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பரை அழகியகூத்தர் ஆலயம்தான் தாமிரசபை. அந்த சுவாரசியமான கதை என்ன?
சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரம்
ஆலயத்தில் ஒரு நடராஜ சிலையைச் செய்யும்படி நமசிவாய ஸ்தபதியிடம் ஆணையிட்டார்.
அவரும் ஐம்பொன்னால் பொன்னார் மேனியனுக்கு ஒரு அழகு வடியும் அற்புதச் சிலையை
உருவாக்கினார்.அதனைக் கண்ட அரசனுக்கு திருப்தி இல்லை. 'என் ஈசன் பொன்னம்பல வாணனுக்கு பசும்பொன் சிலை வடிப்பீராக' என ஆணையிட்டான். இரண்டாம் முறையாக வடித்த சிலையும் பொன் வண்ணமாக இன்றி செப்பு நிறமாகவே இருந்தது. கோபம் கொண்ட
மன்னன் சிற்பியை சிறையிலிட்டான். அன்று அவன் கனவில் தோன்றிய அம்மையப்பன் தான்
மன்னன் கண்களுக்கு மட்டுமே பொன்னிறமாகத் தோன்றுவதாயும், மற்றவர்களுக்குத் தாமிரமாகத் தோன்றுவேன் என்றும் கூறினார்.
ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த அரசன் சிற்பியை விடுதலை செய்து அவர் இரண்டாவதாகச்
செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தார். நம் ஆர்த்த பிறவி துயர்க்கெட
கூத்தாடும் அய்யன் பொற்சபையாகிய தில்லையில் கொண்டார். மன்னனும் இறைவனின் ஆணைப்படி முதல் சிலையை
அச்சிற்பியிடமே அளித்து விட்டார்.
சிற்பியிடம் இருந்த நடராஜர் சிலை என்னாயிற்று? இறைவனே அதற்கும் வழி சொன்னார். சிற்பியை அச்சிலையுடன் தென்
திசை செல்லும்படியும், சிலையின் எடை கூடுமிடமே தாம் எழுந்தருளப்
போகும் இடம் என்றும் உரைத்தார். அவ்வண்ணம் சென்ற சிற்பி நெல்லை மாவட்டம் செப்பரை என்ற ஊருக்கருகில் சென்றபோது சிலை கனமாக இருந்ததால் மிகவும்
களைப்பாக உணர்ந்து சிலையை அங்கு வைத்துவிட்டு, அருகில் கண்ணயர்ந்து விட்டார்.
தாமிரபரணியின் வடகரையிலிருந்த ராஜவல்லிபுரம் என்ற ஊரில் மன்னன் ராமவர்மபாண்டியனின் அரண்மனை இருந்தது.
மன்னன் தினமும் நெல்லை சென்று
காந்திமதி
சமேத நெல்லையப்பரை தரிசித்த பின்பே உணவு அருந்துவார். ஒருநாள் தாமிரபரணியில்
வெள்ளம் பெருக்கெடுத்து, நெல்லை செல்ல முடியாத அரசர் அன்று உணவு
உண்ணாமலேயே உறங்கிவிட்டார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய அம்பலவாணன்
சிதம்பரத்திலிருந்து தன் சிலையுடன் ஒரு சிற்பி வருவாரென்றும், அவர் கொண்டுவரும் நடராஜ விக்கிரகத்தை அவன் அரண்மனை அருகில் பிரதிஷ்டை செய்து,அதன் அருகில் எறும்புகள் ஊர்ந்து செல்லும் குழியின் மீது ஒரு சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யும்படியும், இனி நெல்லை செல்லவேண்டாம், தன்னை இவ்விடத்திலேயே தரிசிக்கும்படியும்
உரைத்தார்.
கண்ணயர்ந்த சிற்பி விழித்துப் பார்த்தபோது
சிலையைக் காணாமல் பதறி மன்னனிடம் முறையிட,
இறைவன்
கூற்றுப்படி மன்னனும் சென்று சிலை யைத் தேடினர்.வேணுவனத்தில் சதங்கை ஒலியும், நடமாடும் சப்தமும் கேட்க அங்கு இருந்த நடராஜர்
விக்கிரகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தான் அரசன். இறைவன் அவ்விடமே தென்தில்லை, செப்பரை அம்பலம், தாமிர சபை என்று உரைத்து மறைந்தார்.மன்னன்
அவ்விடத்தில் ஆலயம் அமைத்து அழகிய நடராசசபை அமைத்தான். இவ்வாறு தில்லையில்
செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அங்கு நிறுவப்பட்டது. செப்பாலான விக்கிரகம் அமைந்த
ஊர் செப்பரை எனப் பெயர் பெற்றது.
தாமிர சபை |
1221ம் ஆண்டு பெரும் மழை...அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆலயம் முற்றிலும் அழிந்துபோயிற்று. ஆற்றில்
தேடியதில் விக்கிரகங்கள் மீட்கப் பட்டு, இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் வைத்து
வழிபடப் பட்டன. தன் சிறப்பை உலகறிய விழைந்த பெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி
நெல்லை ஆரைஅழகப்ப முதலியாரின் உதவியுடன் ஆலயம் அமைக்கும்படி அருள, அவ்வாறே ஆலயம் மீண்டும் உருவாயிற்று. செப்பரை ஆலயக் கற்கள்
அரசவல்லிபுரத்துக்குக் கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிதம்பரம் போன்றே இங்கும்
செப்புத் தகடு வேயப்பட்ட நடராஜ சபை அமைந்துள்ளது. இதுவே உண்மையான தாமிரசபை.
அகத்தியர், திருமால், அத்திரி முனிவர் ஆகியோர் தவமிருந்து இறைவனை
வழிபட்ட தலம் இது. கிருத யுகத்தில் ஆடல்வல்லான் தன் நடனக் காட்சியை அக்னி
தேவனுக்கு இங்கு காட்டியதாக புராண
வரலாறு.
ராமபண்டியனின் எல்லைக்குட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் இச்சிலையின் அழகில் மயங்கி
இதனைப் போன்ற இரண்டு சிலைகளை கட்டாரி மங்கலத்திலும், கரிசூழ்ந்த மங்கலத்திலும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தான்.
இது போன்ற அழகில் வேறு யாருக்கும் சிலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக்
கொலை செய்யும்படி கூற, வீரர்கள் அவரது கைகளை வெட்டி விட்டனர். இது
அறிந்த மன்னன் ராமபாண்டியர் வீரபாண்டியனின் கைகளை வெட்டி விட்டார். சிற்பிக்கு
மரக் கைகளை பொறுத்த மீண்டும் மிக அழகான, அற்புதமான ஒரு சிலையைச் செய்தார் சிற்பி.
அதன் அழகில் மயங்கிய மன்னன் அதன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளியதால் ஏற்பட்ட
வடுவுடன் அந்த நடராஜர் கருவேலங்குளம் ஆலயத்தில் காட்சி
தருகிறார்.
காந்திமதி அம்மன் |
நடராஜர் |
நெல்லையப்பர் |
திருவாதிரை அலங்காரம் |
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தில் நடராஜர் சன்னதியே பிரதானமானது. நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சன்னதிகள் உண்டு. மழலைப் பேறு, கல்வி வளர்ச்சி, திருமணத்தடை இவற்றிற்கான பிரார்த்தனைகள்
விரைவில் நிறைவேறும். வேண்டவளர்ந்த நாதர் என்ற பெயரில் சுயம்புவாக விளங்கும் ஈசனே
நெல்லையப்பராகப் போற்றப்படுகிறார். இந்த லிங்கத்தின் நடுவில் அம்பிகை உருவத்தை
அபிஷேக சமயங்களில் காணலாம். இது இவ்வாலய அதிசயமாகக் கூறப்படுகிறது. இங்கு
திருவாதிரைத் திருநாள் சிதம்பரம் போன்றே மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
அன்று நடக்கும் அபிஷேகங்களும், அலங்கார ஆராதனைகளும், நடராஜா புறப்பாடும் கண்ணுக்கு பெருவிருந்து. மற்றும்
சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷம் முதலிய விழாக்களும் கொண்டாடப் படுகின்றன.
இவ்வூர் மக்களின் முயற்சியினால்
இவ்வாலயத்திற்கென தேர் அமைக்கப்பட்டு,
2007ம்
ஆண்டு தேரோட்டமும், மகா கும்பாபிஷேகமும் நடத்தப் பெற்றது.
இத்துணை சிறப்புப் பெற்ற இவ்வாலய இறைவனை திருவாதிரையில் சென்று வணங்கி பலன்
பெறுவோம்.
இவ்வாலயம்
திருநேல்வேலியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. தாழையூத்து வழியாக
அரசவல்லிபுரம் சென்று அங்கிருந்து செப்பரை செல்லலாம்.
ஆலய
நேரம்...காலை 8 - 11....மாலை 4 - 9
தொலைபேசி....+91-4622339910
படங்களும், பதிவும் மிக அழகாக ஜொலிக்கின்றன.
பதிலளிநீக்கு//ஆடல்வல்லானின் தாமிர சபை - தீபம் ஜனவரி 20, 2016 இதழில் திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் சிறப்பிதழில் வெளியான கட்டுரை.//
மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.