Thanjai

Thanjai

திங்கள், 21 ஏப்ரல், 2014

மனமொத்து வாழ....அர்த்தநாரீஸ்வரர்

மே 5ம் தேதி – 2005 தீபம் இதழில் பிரசுரமான என் கட்டுரை....

மனமொத்து வாழ....




திருமணம், பிள்ளைப் பேறு , படிப்பு, நல்ல வேலை, கணவன் மனைவி ஒற்றுமை இவை அனைத்தையும் ஒருங்கே தரக் கூடிய ஒரு தலம்  வடகுரங்காடுதுறை ஸ்ரீ தயாநிதீஸ்வரர் ஆலயம்.   

ஆம்! காவிரியின் வடகரையில் திருஞான சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்று 49வது திருமுறைத்தலமாக அமைந்திருக்கும் இவ்வாலயப் பெருமைகள் எத்தனை எத்தனை?ஒவ்வொரு இறைவருக்கும் ஒரு தனிச் சிறப்பு! வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பதில்  தெய்வங்ளுக்குள்ளேயே போட்டி வந்துவிடும்! அத்தனை வரப்பிரசாதியான  தெய்வங்கள்! ஒருமுறை இத்தலம் சென்று இறைவனை மனமுருக வணங்கி வந்தால் சகல க்ஷேமங்களும் உண்டாகும்



கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று கும்பாபிஷேகம் ஆகி தற்போது மண்டலாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. கிழக்கு  திசை நோக்கி கோயில் கொண்டு, தம்மை நாடி வருவோரின் குறைகளைக் களைந்து அருள் புரியும்  இறைவனின் பெருமைகளைப் பார்ப்போம்.
நல்ல வெயில். சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அந்த கர்ப்பிணியான செட்டிப்பெண்! அவளுக்கோ தாகம் தாங்க முடியவில்லை. சோலைகளும், பயிர்ப் பச்சைகளும் நிறைந்திருந்த அவ்விடத்தில் எங்கும் தண்ணீரைக் காணமுடியவில்லை. தாகமும், களைப்பும் அவளை வாட்ட அப்படியே மயக்கமானாள்.

அந்த இடத்தில் கோயில் கொண்டிருந்த ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக இருந்து ஒரு பக்தைக்கு திருச்சியில் அருளிய இறைவன், கர்ப்பிணியின் தாகத்தைத் தீர்க்க எண்ணினார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்துகொடுத்தார். 

இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள். இறை வனும் 'குலை வணங்கிநாதர்' எனும் பெயர் பெற்றார். இந்த இறைவன் இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிய சுயம்புவாக இங்கு குடிகொண்டுள்ளார். இவ்விறைவனைத் தொழும் கர்ப்பிணிகளுக்கு சுகபிரசவத்தை வரமாகத் தரும் தயாநிதி இவர்!




இனி ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம் தாண்டி உள்நுழைந்ததும் வலப்பால் நவகிரஹ சன்னதியும், அடுத்து அம்மன் சன்னதியும் உள்ளது. அம்மன் சன்னதி எதிரில் உள்ளிருக்கும் சிவனை நோக்கி நந்தியம்பெருமான் வீற்றுள்ளார். மேலே காட்சி தரும் ஈசனின் கைலாயக் காட்சி கண்களுக்கு விருந்து! 
இனி ஈசனைத் தொழ  ஆலயத்துள் செல்வோம்.  சன்னிதியின் வலப்பக்கம் அமர்ந்துள்ள ஐயனின்  பிள்ளைகளான துவார விநாயகர், ஆறுமுகன் , பூர்ண புஷ்கலா சமேத அய்யனாரை வணங்கி உள்நுழைவோம். 
கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமின்றி தன்னை வணங்கிய ஒரு சிட்டுக் குருவிக்கும் கூட அருள் செய்த இவ்விறைவன் 'தயாநிதீஸ்வரர்', 'சிட்டுலிங்கேஸ்வரர்என்றும் போற்றப்படுகிறார். 

ஒருமுறை வாலி ராவணனுடன் போரிட்டபோது  வால் அறுந்துவிட  பல சிவத்தலங்களுக்கும் அவன் சென்று வணங்கியும் வளராத வால்இத்தலம் வந்ததும் வளர்ந்ததாம். வாலி வணங்கியதால் 'வாலிபுரீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய காட்சியும், சிட்டுக்குருவி, வாலி மற்றும் அனுமன் பூஜித்த காட்சிகளும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.!




கர்ப்பக் கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுறக்  காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். சிட்டுக் குருவிக்கும் கூட கருணை செய்த சிட்டிலிங்கேசரிடம் நாமும் தயையை  வேண்டி தியானித்து, மனம் ஒன்றி சிவபஞ்சாட்சரத்தை ஜபித்து அங்கிருந்து வலம் வருவோம்.

ஹனுமன் தான் செய்த சில பாவங்கள் நீங்க ஐந்து சிவாலயங்களில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.அவற்றுள் இவ்வாலயமும் ஒன்றாகும்.ஈசனின் கர்ப்பக்கிரகத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் ஹனுமான் இப்பெருமானை பூஜிக்கும் காட்சி அமைந்துள்ளது. இந்த ஹனுமனிடம் நம் விருப்பத்தை வேண்டிக் கொண்டு  ஒரு மட்டைத் தேங்காயைக் கட்ட வேண்டும். காரியம் நடந்ததும் அந்தக் காயை அவிழ்த்துவிட்டு, ஹனுமனுக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.

சுற்றுப் பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ள தட்சிணாமூர்த்தி எங்கும் இல்லாவிதமாக எட்டு சீடர்களுடன் மோன நிலையில் காட்சி தருவது எவ்வாலயத்திலும் காணக் கிடைக்காத அரிய காட்சி. குருபலம் வேண்டுவோர் இச்சன்னதியில் வேண்டிக் கொண்டால் உடன் நிறைவேறும். படிப்பு, நல்ல வேலை வேண்டுவோர்  இங்கு வழிபட்டு பயன் பெறலாம்.



இங்கு கோஷ்டத்தில் அருள்காட்சி தரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அற்புதமான படைப்பு. சிவனும்,சக்தியும் இணைந்து,முறுவல் பூத்த முகத்துடன்,அய்யன் வலக்கையில் மழுவும், அம்மையின் இடக்கையில் மலரும் ஏந்தி நளினத்துடன் காட்சி தரும் இந்த தெய்வத்தை வணங்குவோரின் இல்லறம், நல்லறமாக விளங்கும். 




தம்பதிகளுக்குள் ஒற்றுமையின்மை, இருவருக்கிடையே மன வேற்றுமை,விவாகரத்து இவற்றை இல்லாதாக்கும் தெய்வம் இந்த அர்த்தநாரீஸ்வரர். பிரிந்திருக்கும் தம்பதியர்விவாகரத்து  வரை சென்றுவிட்ட  கணவன், மனைவியர் இந்தக் கடவுளை வணங்கி வழிபட்டால் பிரிவு நீங்கி இணைந்து வாழ்வர்.


இதற்கென பிரத்யேக பூஜை முறைகள் உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை, ரோகிணி  நட்சத்திரம், மாத சிவராத்திரி நாட்களில் ஒரு வெள்ளை நிற ரவிக்கை துணியும், ஒரு மஞ்சள் நிற ரவிக்கை துணியையும் இணைத்து தைத்து, அர்த்தநாரீஸ்வரருக்கு மஞ்சள்பொடியால் அபிஷேகம், அர்ச்சனை செய்து, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்தால்.பிரிவு நீங்கி இருவரும் மனமொத்து வாழ்வர்.இது கண்கூடாக பலர் வாழ்விலும் நடந்துள்ளதாக இவ்வாலய அர்ச்சகர் திரு ரவி அவர்கள் கூறுகிறார்.


ஆலயத்தைச் சுற்றி வரும்போது, வள்ளி,தேவையானா சமேத முருகன், கைலாய லிங்கம், கஜலக்ஷ்மி அழகுறக் காட்சி தருகின்றனர். 
அஷ்டபுஜங்களுடன், கையில் சங்கு,சக்கரங்களுடன் அழகுறக் காட்சிதரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை, சாந்தமும், அபரிமிதமான சக்தியும் படைத்தவள். ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ராகு காலத்தில் இந்த துர்கைக்கு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்ற தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். கன்னிப் பெண்கள் உடன் தாலி பாக்கியம் பெறுவர். நவராத்திரி நாட்களில் இந்த தேவியை உள்ளமுருகி வழிபட்டால் பன்மடங்கு நன்மை தருவாள் என்பது பலனடைந்தோர் கூற்று.
  
இங்கு அமைந்துள்ள நடராஜ சபை எங்கும் இல்லாத விதமாக கல்லினால் ஆனது. மூலவராக நடராஜா இருப்பது மிகவும் அபூர்வம்.சிவகாமியுடன் ஆனந்த நடனமிடும் நடராஜா ஆட்சி செய்யும் இத்தலம் ஆதி சிதம்பரம் எனப்படுகிறது. ஆதி நாட்களில்  திருவாதிரைத் திருநாளில் இந்த நடராஜருக்கு பின்பே சிதம்பரத்தில் நடராஜஸ்வாமிக்கு தீபாராதனை நடக்குமாம்.







சனி பகவான் இங்கு திருநள்ளாறு போன்று தனியாகக் காட்சி கொடுப்பதும், அவரது எதிரில் கஜலக்ஷ்மி சந்நிதி இருப்பதால் பொங்குசனியாகவும் போற்றப் படுகிறார். 




கால பைரவர், பைரவர், சூரியன், நாகர், அப்பர், நாவுக்கரசர், சுந்தரர், செட்டி ப்பெண்ணின் சிலைகள் உள்ளன.



 வெளியில் வந்ததும் இடப்பக்கம் காட்சி தரும் அம்பிகை ஜடாமகுடநாயகியின்  சன்னதிக்கு செல்வோம்.உயர்ந்த ஜடைகளால் ஆன கொண்டை அணிந்தவளாதலால் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடியம்மை என்று திருநாமம் கொண்டுள்ளாள்.சன்னதிக்கு வலப்புறம் வெளியில் கரம் பின்னமான அம்பிகை சிலை நிறுவப் பட்டுள்ளது. 






பல நாட்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்திருந்த  ஆலயத்தில் அம்மனின் கை பின்னமாகியிருந்ததால் அந்த சிலையை அப்புறப் படுத்திவிட்டு, வேறு புதிய சிலை நிறுவப்பட்டதாயும், அச்சமயம் அம்மன் ஒருவர் கனவில் வந்து தன்னையும்  சன்னதியில் வைக்கும்படியும் கூறியதால் பின்னப்பட்ட சிலைக்கும் வழிபாடு நடக்கிறது. உயர்ந்த கொண்டையுடன் நான்கு கரங்கள் கொண்டு, கீழிரண்டு கரங்கள் அபாய, வராத ஹச்தங்கலாகக் கொண்டு அழகுதேவதையாகக்  காட்சி தரும் அம்மனின் கண்களின் தீட்சண்யமும், கருணா கடாட்சமும் நம்மை நகர விடாமல் செய்கிறது. 'உன் குறையை என்னிடம் சொல்; நான் சரி செய்கிறேன்' என்பது போன்ற அழகிய புன்முறுவல்!


பல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த புனிதமான தலம் இது. இந்த ஜடாமகுட நாயகி சன்னிதியில் வேண்டியது கிடைக்கும். சத்ரபதி சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர்களுக்கு ஓர் ஆண் சந்ததியை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் இந்தத் தேவியை பவுர்ணமி நாளில்  தொழுதால் அனைத்து தோஷங்களும் நீங்கி பிள்ளைப் பேரு உண்டாகும்..இது சத்ய வாக்காக சித்தரால் அன்று உரைக்கப்பட்டதாகும். 


அன்னையிடம் பிள்ளைவரம் வேண்டி பவுர்ணமி நாட்களில் செய்யப்படும் முளைப்பயறு பிரார்த்தனையினால் பயன் பெற்றோர் பலராம். பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் முளைவந்த பச்சைப் பயிரை அம்மன் வயிற்றில் கட்டி, 5,7,9 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சளை திருமாங்கல்யக் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாற்றி  அர்ச்சனை செய்ய வேண்டும்.மறுநாள் காலை  ஆலயத்திற்கு சென்று அம்மன் மாடியிலிருந்து எடுத்து அர்ச்சகர் கொடுக்கும் முளைப்பயிரைத் தானும் சாப்பிட்டு, மற்றவருக்கும் விநியோகம் செய்யவேண்டும். மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிக்க வேண்டும். 


இது போன்று ஐந்து பவுர்ணமிகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.அன்னை அருளால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.தொடர்ந்து வர முடியாதோர் அர்ச்சகரிடம் அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு சென்றால் அவரே பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்புவார். கடைசி பவுர்ணமி அன்று நேரில் வந்து பிரார்த்தனையை பூர்த்தி செய்து, அம்மனுக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். 


 இந்தப் பிரார்த்தனை செய்து, அம்மன் அருள் பெற்ற மஞ்சளை தேய்த்துக் குளித்தால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். கர்ப்பிணியின் தாகம் தீர்த்த, இறைவனின் சரிபாதி பாகம் பெற்ற அம்பிகை, பெண்களின் பிள்ளையில்லாக் குறையை  நீக்குவதில் வியப்பென்ன


இத்தலத்தின் தல விருட்சம் தென்னையாதலால், விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல் பெறுகின்றனர். 


ஆனி பெளர்ணமியில் 'முப்பழ விழா', ஆடிப் பூரத்தில் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, நவராத்திரி, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா, நவராத்திரி, திருவாதிரை, சிவராத்திரி என்று வருடம் முழுவதும் உற்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை   வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண் கொள்ளாக் காட்சி!


மானுடரின் இம்மைத் தேவைகளான திருமணம், மக்கட்பேறு, கல்வி, செல்வம் இவற்றுடன் மறுமைக்குத் தேவையான புண்ணியங்களும் பெற அருள் செய்து, பிறவாப் பேறு தந்து அருளும் அம்மையப்பனாம் தயாநிதீசுவரரையும், வேண்டி வந்தோர் குறை தீர்த்து, குறைப் பிரசவம், பிள்ளையில்லாக் குறைகளை நீக்கி, மங்கையர்க்கு புத்திர பாக்கியமும், சுகப் பிரசவமும் தரும் அழகு சடாமுடியம்மையையும் வணங்கி அனைத்து நலன்களும் பெறுவோமாக!


தொடர்புக்கு....அர்ச்சகர்...ரவிச்சந்திர குருக்கள் --மொபைல் எண்....8056534016

இத்தலம் கும்பகோணம்-திருவையாறு பஸ் தடத்தில் 22வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. "ஆடுதுறை பெருமாள் கோயில் சிவாலயம்" என்று கேட்டு இறங்க வேண்டும். 108 வைணவத் தலங்களில் ஒன்றான 'பெருமாள் கோயில்' அருகில் அமைந்துள்ளதால் இந்தத் தலம் ஆடுதுறை பெருமாள்கோயில் எனப்படுகிறது.






2 கருத்துகள்:

  1. ஸ்ரீ தயாநிதீஸ்வரர் கோயிலின் சிறப்பான தகவல்கள், விளக்கங்கள் என அனைத்திற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான தகவல்கள்.

    //மனமொத்து வாழ....அர்த்தநாரீஸ்வரர்//

    தலைப்பே வெகு அழகாக உள்ளது.

    //மே 5ம் தேதியிட்டு இன்று வெளியான தீபம் இதழில் பிரசுரமான என் கட்டுரை....//

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு