‘அவள் விகடன்’ 02.02.2001 இதழில்
காசியிலுள்ள ‘சோழி அம்மன்’ பற்றி ஒரு வாசகி எழுதியிருந்தார். காசி யாத்திரை பற்றிய
ஒரு புத்தகத்திலுள்ள கதை வேறு விதமாயுள்ளது.
கவுளீபாய் (சோழிக்கு இந்தியில்
கவுளி என்று பெயர்) ஒரு சிறந்த விஸ்வநாத பக்தை. காசி விஸ்வநாதனை தன் சகோதரனாகப்
பாவித்து தினமும் கங்கா ஸ்நானம் செய்து, மிக சுத்தமாக பகவானைத் தரிசிப்பாள். ஒரு
நாள், சிவபெருமான், “நான் வாழும் காசி எப்போதும் சுத்தமானது. இங்கு திருஷ்டி
தோஷம், ஸ்பர்ச தோஷம் எதுவும் கிடையாது. அதனால் நீ இவ்வளவு ஆசாரம் பார்க்க
அவசியமில்லை.” என்றார். ம்ஹூம்! கவுளிபாய் அதைக் கேட்கவில்லை. அவளுக்கு இதனை
உணர்த்த விசுவநாதர் ஒரு சோதனை செய்தார்.
அவள் ஸ்நானம் செய்து மடியாக
வரும்போது, ஒருவர் அவள் மேல் பட, மீண்டும் ஸ்நானம் செய்தாள். எதிரில் ஒரு பிணம்
வர, மீண்டும் கங்கையில் மூழ்கி எழுந்து வந்தாள். அச்சமயம் வேறொருவர் மேலே பட...
இவ்வாறு பல முறை குளித்து குளித்து பாதி இரவாகி விட, விசுவநாதர் ஆலயம்
மூடப்பட்ட்து.
பகவான் அவள் முன் தோன்றி, “உனக்கு
ஒரு சுத்தமான இடம் காட்டுகிறேன். இங்கு இரு.” என்று ஓரிடத்தில் கொண்டு விட்டார்.
காலையில் எழுந்து பார்த்தவள், அது சேரி என்ற்றிந்தாள். இது இறைவனின் லீலை என்று
உணர்ந்து, “ இங்கிருந்து கொண்டு உன் ஆலயம் வர எனக்கு மனமில்லை. ஆனால், உன் தரிசன
பலன் கிடைக்க ஒரு வழி சொல்.” என்றூ விசுவநாதரை வேண்டினாள்.
விசுவநாதரும், “என்னை தரிசிப்பவர்
உன்னையும் தரிசித்து சோழி அளித்தாலே காசி யாத்திரை பலன் தரும். அந்தப் பலனில் சோழி
அளவு பலன் உன்னைச் சேரும். உன்னை தரிசிக்காத யாத்திரை பலனில்லை” என்று கூறினார்.
அதனால் காசிக்குச் செல்வோர்
யாத்திரை முடிந்த பின்பு கவுளீபாய் ஆலயம் சென்று, காசியில் தங்கிய நாட்கள்
எத்தனையோ அத்தனை சோழிகளை வாங்கி மூலஸ்தானத்தில் போட்டு, “காசீ பலம் ஹம்க்கு; கவுளீ
பலம் தும்க்கு” (காசி புண்ணியம் எங்களுக்கு, சோழி புண்ணியம் உனக்கு)_ என்று கூறுகிறார்கள்.
இறைவனுக்கு முன் மனிதரில்
உய்ரந்தவர், தாழ்ந்தவர், தீண்டப் படாதவர் என்பதெல்லாம் கிடையாது என்பது இறைவன்
வாயிலாகவே உலகுக்கு உணர்த்தப் பட்டிருப்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக