Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

குழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்

சக்தி விகடன் 04-08-2005 இதழில் வெளியானது






அந்தச் சிறிய கிராமம், கடும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் வெள்ளம் வர ஆரம்பிக்க, கிராம மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். வேறிடம் செல்வதற்கு வழியின்றித் திண்டாடினர். அந்த ஊர் ஆலயப் பெருமாளை அண்டி, "இனி நீயே கதி. நீதான் இந்த வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று அவன் திருப்பாதங்களைப் பற்றினர்.

கஜேந்திரனுக்கும் திரெளபதிக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த நாராயணன், இந்த மக்களைக் காப்பாற்றத் திருவுளம் கொண்டார். உடைப்பெடுத்த இடத்தில் அணையாக அமர்ந்தார். வெள்ளம் வடிந்தது. மக்கள் 'நாராயணா, நாராயணா' என்று இறைவனை வணங்கித் துதித்தனர். அவர்தான் நெமிலி என்ற ஊரில் காட்சி தரும் வைகுண்டப் பெருமாள். மதுராந்தகத்தில் ஏரியைக் காத்தவர் ராமர். இங்கு ஏரி காத்தவர் நாராயணன். உடைப்பில் அமர்ந்ததால், இந்தப் பெருமாளின் உடல் இன்றும் வியர்ப்பதைக் கண்கூடாகக் காணலாம். அவரது உடைகள் நனைவதால் அடிக்கடி மாற்றப்படுமாம்.

ஸ்ரீவைகுண்டப் பெருமாள் இங்கு ஆலயம் கொள்ளக் காரணமானவர் பிருகு முனிவர். ஆம்! பல யுகங்களுக்கு முன் பிருகு முதலான முனிவர்கள் நாராயணனின் தரிசனம் வேண்டி ஒரிஸ்ஸாவிலுள்ள புரி என்ற இடத்தில் தவம் செய்தனர். நாராயணன் அவர்கள் முன் தோன்றி, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அவர்கள், "தேவனே! தாங்கள் வைகுண்டத்தில் காணப் பெறும் தோற்றத்தில் சங்கு-சக்கரம்-கதையுடன் பீதாம்பரதாரியாக தரிசனம் தர வேண்டும்" என வேன்டினர்.

அதற்குத் திருமால், "நீங்கள் காஞ்சிபுரம் சென்று தவம் செய்தால் அங்கு நான் வைகுண்டப் பெருமாளாகக் காட்சி அளிப்பேன்!" என்று அருளினார்.
காஞ்சியில் பல புனிதத் தலங்கள் இருப்பதால், எங்கு தவம் செய்வது என பிரம்மாவிடம் கேட்டனர். உடனே பிரம்மா பெருமாளை தியானிக்க... அந்தக் கணமே ஸ்ரீமன் நாராயணன் சங்கு-சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் நெமிலியில் காட்சி அளித்தார். வலக்கை அபயஹஸ்தமாக விளங்க, இடக்கையில் ஒரு நெல் மணியுடனும் தோற்றம் கொண்டார். அந்த இடம் மற்ற தலங்களைவிட நெல்மணி அளவு அதிகப் புண்ணியம் கொண்டதால் 'நெல்மேலி' என அழைக்கப்படும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவே இன்று நெமிலி எனப்படும் திருத்தலம்.

ஸ்ரீதேவி-பூதேவியைத் தன் இரு பக்கமும் கொண்டு ஆஜானுபாகுவாக வைகுண்டப் பெருமாள் அழகாக வீற்றிருந்து அருளும் புண்ணியத் தலம். தரிசிக்கும் பக்தர்களின் துன்பங்களை, தடைகளை நீக்கி அவர்களுக்குப் பேரின்பப் பெருவாழ்வு தரும் அருட்தலம்!

இனி இறைவனை தரிசிப்போம். இரு பக்கமும் துவாரபாலகர்கள் அழகாகக் காட்சி தர, கர்ப்பக் கிரகத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார் வைகுண்டப் பெருமாள். ஆறடிக்கு மேற்பட்ட உயரம். திருப்பதி பெருமாளைப் போல் நெற்றியில் பெரிய நாமம். நான்கு கரங்களில் மேல் வலக்கையில் பிரயோகச் சக்கரம், இடக்கையில் சங்கு, கீழ் வலக்கை அபயஹஸ்தமாயும் இடக்கையில் சிறு நெல்மணி தாங்கியும் அமர்ந்த கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார். இரு பக்கமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் பெருமாளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றனர். இந்த மூன்று திருவுருவங்களும் ஒரேகல்லில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெருமாள் கையில் பிரயோகச் சக்கரம் இருப்பது விசேஷம் என்கிறார்கள். இதனால் அடியவர்களின் துன்பங்கள் உடனுக்குடன் தீருமாம். மூலவர் கையில் ஒரு தானிய மணி வைத்திருப்பதற்கு வேறொரு கதையும் உள்ளது! விவசாயி ஒருவர், தன் நிலத்தில் நல்ல விளைச்சல் ஏற்பட வேண்டுமென்றும் அப்படி விளைந்தால் பெரும்பான்மையான நெல் மணிகளை பெருமாளுக்குப் பங்கு தருவதாகவும் வேண்டிக் கொண்டார். இறையருளால் நெல் நன்கு விளைந்து, மலை போல் குவிந்தது. இதைக் கண்டு மனம் மாறிய விவசாயி, இறைவனுக்கு பங்கு கொடுக்க விரும்பவில்லை. அவனது திடீர் பேராசையைக் களைய விரும்பிய பெருமாள், நெல் முழுவதையும் கூழாங்கற்களாக மாற்றினார். பெருமாள் கொடுத்த தண்டனையைக் கண்டு தவறை உணர்ந்தார் விவசாயி. இறைவனின் பாதம் பற்றி மன்னிப்பு வேண்ட, பெருமாள் ஒரே ஒரு நெல்லை எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அந்த விவசாயியே எடுத்துச் செல்ல அருள் புரிந்தார். உலக மக்களுக்கு உணவளித்து, காக்கும் கடவுளான திருமாலின் கரத்தில் நெல்மணி இருப்பது நியாயம்தானே?

இறைவனின் முன் நாம் நிற்கும்போது அவர் உடல் வியர்ப்பதை நன்கு காண முடிகிறது. தரிசனத்துக்கு பக்தர்கள் இருக்கும்போது மட்டுமே அதிகமாக வியர்ப்பதாகவும் அதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும் அர்ச்சகர் கூறினார். பக்தர்களின் குறைகளைக் கேட்டு அவர்கள் செய்த பாவம் அகல்வதற்காக பெருமாளின் உடல் வியர்க்கிறதாம்.

பெருமாளின் வலப்புறம் அழகுப் பெட்டகமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீதேவி. இங்கு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் கண்மலருவதை தத்ரூபமாக தரிசனம் செய்யலாம் என்பதைக் கேட்க, மெய் சிலிர்த்தது! பெருமாளைப் போன்றே இங்குள்ள உற்சவ விக்கிரகங்களும் அற்புதத் தோற்றமும் மகிமையும் உடையனவாம். மகப்பேறு வேண்டும் பெண்கள், அழகு மிளிரும் குழந்தையான சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகத்தை (ஆலிலை கிருஷ்ணன் தோற்றமுள்ள விக்கிரகம்) புடவைத் தலைப்பில் வைத்து, அர்ச்சகர் சொல்லும் சுலோகங்களைச் சொன்னால் விரைவில் பிள்ளைப் பேறு உண்டாகுமாம். அப்போது விக்கிரகத்தின் கனம் அதிகரிக்குமாம்!

இங்குள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்கிரகத்தின் அழகையும் ஆற்றலையும் சொல்ல ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் முடியாது! இவருக்கு பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாவது ஓர் அதிசயம்! இதில் காளிங்கனின் தலை மிதித்து ஆடும் கிருஷ்ணன் கைகுவித்து வணங்கியபடி காணப்படும் தோற்றம், அற்புத அழகும் கலைத்திறனும் கொண்டுள்ளது. இந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு ரோகிணி நட்சத்திர நாளில் திருமஞ்சனமும் ஆராதனையும் செய்வதால் ராகு, கேது தோஷநிவர்த்தி ஏற்படுவதுடன் திருமணம், பிள்ளைப் பேறு போன்ற வரங்களும் ஈடேறும் என்கிறார் அர்ச்சகர். ரோகிணி நாட்களில் இதனால் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

இத்தனை சிறப்புகளும் அதிசயங்களும் கொண்ட இந்த ஆலயம் நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி இருந்தது. ஒரு பக்தரின் கனவில், அருகில் நல்லாத்தூர் என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள ஆஞ்சநேயர் தோன்றி இந்த ஆலயம் பற்றிக் கூறி புதுப்பிக்கும்படி கட்டளையிட்ட பின்பு, ஆலயம் சீரமைக்கப்பட்டு கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் வைணவத் திருநாட்கள் முறைப்படி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தனை சிறப்புடைய இந்த ஆலயத்துக்கு ராஜ கோபுரம், சுற்றிலும் சந்நிதிகள் எதுவும் இல்லாதது மனதை என்னவோ செய்கிறது. விரைவில் ராஜகோபுரம் கட்டுவதற்குப் பணிகள் துவங்க இருப்பதாக ஆலயத்தில் சொன்ன தகவல் இதமளித்தது.

தரிசனத்துக்கு வரும் அன்பர்களின் குறை கேட்டு, அதற்குண்டான முறையான பரிகாரத்தைச் செய்து, 'உங்கள் விருப்பம் நிச்சயம் ஈடேறும்' என்று முழு நம்பிக்கை தந்து, பொறுமையுடன் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து நம்மைத் திருப்தியுடன் அனுப்புகிறார் ஆலய பட்டாச்சார்யார். பக்தர்களின் பாவங்களை வியர்வையாக வெளிப்படுத்தி, அவர்கள் வேண்டியதை நிறைவேற்றும் வரப்ரசாதியான வைகுண்டப் பெருமாளையும், காளிங்க நர்த்தன கண்ணனையும் ஒருமுறை தரிசித்தால் துன்பங்கள் தூசாகி, பேரின்பப் பெருவாழ்வு கிட்டும்.

இந்தத் தலம் சென்னைக்கு அருகிலுள்ள திருத்தணியிலிருந்து நாகலாபுரம் செல்லும் வழியில் 11 கி.மீ. தூரச்த்தில் அமைந்துள்ளது.

இக்கட்டுரையைப் படித்த வாசகர்கள் தங்கள் எண்ணங்களை 19-08-2005 இதழில் வெளிப்படுத்தியுள்ளனர்.




'குழந்தை வரம் தரும் கிருஷ்ணர் விக்கிரகம்'.... மக்கட்பேறு வேண்டித் தவிக்கும் தம்பதியருக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. - கு.பவித்ரா, சென்னை-63

நெமிலி சந்தானகோபாலன் வண்ணப்படம் கண்களை விட்டு அகலவே இல்லை. சுவாமிக்கு வியர்ப்பது கண்டு வியந்தேன். உடன் சென்று ஆலயம் தரிசிக்க ஆவல் பிறந்தது. - ஸ்ரீவித்யா காளிதாஸ், சிதம்பரம் - 2






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக