Thanjai

Thanjai

சனி, 28 நவம்பர், 2015

எனக்குப் பிடித்த வீடு - நிறைவேறிய ஊஞ்சல் கனவுகள்


தி இந்து தமிழ் நாளிதழ், சனி, நவம்பர் 28, 2015 தேதியில் இணைப்பாக கொடுக்கப்பட்ட சொந்த வீடு பகுதியில் வெளியான என் கனவுகள்.

நேரடியாக தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


எனக்குப் பிடித்த எங்கள் வீட்டு ஊஞ்சலில் நான்

நாம் எங்கு சென்றாலும், எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்பாடா என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு  இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை  காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட் டைப் போலவும் வராது! வங்கி அதிகரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்பல ஊர்களில், மாநிலங்களில்  வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த  இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச்  செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பற ந்த நாட்கள் அவை. ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிம, சித்தி குழந்தைகளுடன் ) சண்டையே நடக்கும்! கிழக்கு வாசல் படத்தில் பச்சமலைப் பூவு பாடலில் ரேவதி ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து அது போல ஆட ஆசைப் பட்டிருக்கிறேன்!

குடந்தையில் பார்த்துப் பார்த்து நாங்கள் ஒரு வீடு கட்டினோம்.அதில் ஊஞ்சல் ஆசையில் மேலே கொக்கி எல்லாம் வைத்தேன்.என்ன செய்ய...ஒரே வருடத்தில் என் கணவருக்கு அடுத்த மாற்றல்! மீண்டும் வாடகை வீடு! பின் மகாராஷ்டிராவுக்கு மாற்றல். சில தவிர்க்க முடியாத காரணங்களால் மனமின்றி வீட்டை விற்றோம். குழந்தைகள் படித்து முடித்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல, மீண்டும் அவர்களுடன் ஊர் ஊராகப் பயணம். மனதில் மட்டும் ஊஞ்சல் ஆசை குறையாமல் இருந்தது. இத்தனை ஊர்களில் இருந்தும் ஒருவீட்டிலும் ஊஞ்சல் போட வாய்ப்பில்லை. மூம்கில், கயிற்றினால் செய்யப்பட்ட ஊஞ்சலை வாங்கி அதில் ஆடியும் பாரம்பரியமான நம்மூர் மர  ஊஞ்சலில் ஆடும் சந்தோஷம் அதில் கிடைக்கவில்லை. குழந்தைகள் ஒருவாறாக செட்டில் ஆகிவிட என் ஆசையை என் கணவரிடம் சொன்னேன். எல்லா கடமைகளும் முடித்த நிலையில் நாம் தனியாக ஒரு வீடு வாங்கி, அங்கு என் மனம் போல் வாழும் ஏக்கம் இருந்ததைப் புரிந்து கொண்டார் என் அன்புக் கணவர். என் பிள்ளைகளிடம் இதைப் பற்றி சொல்ல மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்கள்.

எங்கு வீடு வாங்கலாம் என யோசிக்க, திருச்சி வெளிநாட்டில் வாழும் என் பிள்ளைகள் வர வசதியாக இருக்கும் என்பதால் இங்கு தென்னூரில் வாங்கினோம். அங்கு நான் முதலில் தேடியது ஊஞ்சல் மாட்டும் வளையங்களை! ஆனால் முன்பே கட்டி விட்ட வீட்டில் வளையங்கள்  இல்லாதது கொஞ்சம் எனக்கு ஏமாற்றம். பல வீடுகள் பார்த்தும் இங்கு ஹால் பெரிதாக இருப்பதால் ஊஞ்சல் போடலாம் என்பதாலேயே இந்த வீடு எனக்கு பிடித்து போயிற்று.அதைப் புரிந்து கொண்ட என் கணவர் கொத்தனாரிடம் சொல்லி மேலே உடைத்து, வளையங்களை மாட்டினார். எங்கள் கிராமத்திலிருந்து தேக்கினாலான ஊஞ்சல் செய்யச் சொல்லி அதை மாட்டியதும்தான் என் வீட்டுக்கே ஒரு ஸ்பெஷல் களை, அழகு   வந்த மாதிரி இருந்தது எனக்கு. எத்தனை நாள் ஆசை! நிறைவேற்றிக் கொடுத்த என் கணவருக்கு கண்களால் நன்றி சொன்னேன்!  

ஆஹா! அந்த ஊஞ்சல் ஆடும் சுகம் இருக்கிறதே....என்ன சொல்ல தினமும்  ஊஞ்சலில் வேகமாக ஆடிக் கொண்டுதான் டி.வி. பார்ப்பேன்; புத்தகம் படிப்பேன்! நானும், என் கணவரும் எங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஊஞ்சலில்தான்! என் பேரன், பேத்திகள் விடுமுறை எப்ப விடும் என்று காத்துக் கொண்டு வந்து விடுவார்கள் ஊஞ்சல் ஆட! வெய்யில் நாட்களில் ஊஞ்சலில் வேகமாக ஆடினால் இயற்கை காற்று வீசி உடலைக் குளிர்விக்கும். என் வீட்டுக்கு வருபவர்கள் ஊஞ்சலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்! யார் வந்தாலும் ஊஞ்சலில் அமர்ந்து சற்று ஆடி ரசித்து விட்டே செல்வார்கள்.எனக்கு என் பெண், பிள்ளைகள், மருமகள்களுடன் ஆடிக் கொண்டே அரட்டை அடிப்பது அலாதி சுகம்! வாசல் வழியே நம் வீட்டுக்கு வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடிக்  களிப்புற்று நமக்கு நல்லது செய்வார்கள் என்பது ஒரு ஐதீகம். வீட்டை அழகாக்கும் ஊஞ்சலை வாஸ்துப்படி வீட்டின் முகப்பில் அமைக்க வேண்டும். அதனாலேயே அந்நாட்களில் கூடத்தில் ஊஞ்சல் அமைத்தார்களாம்.

ஊஞ்சல் ஆடுவது உடல் ஆரோக்கியத்துடன் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.எனக்கு மன வருத்தம் ஏற்பட்டால் ஊஞ்சலில் அமர்ந்து வீசி ஆடினால் சட்டென்று கலக்கம் நீங்கி தெளிவு பிறக்கும்; மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.நான் ஒரு எழுத்தாளர்; ப்ளாகர்.  கம்ப்யூட்டரில் பலமணி நேரம் அமர்ந்து வேலை செய்து சோர்வு ஏற்படும்போது சற்று நேரம் கைகளை ஊன்றி, கால்களை உந்தி நிமிர்ந்து உட்கார்ந்து ஊஞ்சல் ஆடும்போது முதுகுவலிகழுத்துவலி காணாமல் போகிறது. சாப்பிட்டவுடன் ஊஞ்சல் ஆடுவது ஜீரணத்திற்கு உதவும். வெளியில் போய்விட்டு வந்து சில நிமிடங்கள் ஊஞ்சல் ஆடினால் எல்லா களைப்பும் போய் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.


என் கனவை மெய்ப்பட வைத்து, என்னை  எப்போதும் சந்தோஷப் படுத்தும் என் மனதுக்கினிய அழகான ஊஞ்சல் என் இனிய தோழி! 
வியாழன், 26 நவம்பர், 2015

ஸ்ரீஐயப்ப சுவாமியின் பதினெட்டு படி தத்துவமும் அனுஷ்டானமும்


தி இந்து - தமிழ் நாளிதழ், ஆனந்த ஜோதி 26-11-2015 இணைப்பில் வெளியான கட்டுரை

நேரடியாக வெப் தளத்தில் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்:

முதல் படி...மாலை அணிதல்.
ஐயப்ப பக்தர்கள் தம் காதுகளின் வழி ஓங்காரப் பேரொளியான 'ஸ்வாமியே சரணம்' என்ற உபதேச மொழியைத்  தம் குருஸ்வாமிகள் மூலம் உள்வாங்கி, அவ்விறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்த மாலை அணிதல்.

2.நீராடல். 
மெய் உணர்ச்சியை வெல்லும் பொருட்டு சூரிய உதயத்திற்கு முன்னும், மாலையும் இருவேளை நீராடி சரீர உணர்வுகளை சமப்படுத்தல்.

3. உருவம். 
காணும் அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்த்தும் பொருட்டு தம் கண்ணில் காணும் அனைத்திலும் அய்யன் இருப்பதாக எண்ணி வணங்குதல்.

4.ரஸம். 
நாவைக் கட்டுப் படுத்தும் பொருட்டு நினைத்த நேரம் உண்ணாமல், தினம் ஒருவேளை மட்டுமே சாத்வீக உணவுகளை உண்ணுதல்.

5.கந்தம்.
பாச உணர்வுகளிலிருந்து ஒதுங்கி எந்நேரமும் இறை உணர்வுடன் வேறு தேவையற்ற நினைவுகளில் இருந்து விலகி இருத்தல்.

6.வசனம்.
அனைத்து மானிடரையும் இறை அம்சமாகக் கருதி 'சாமி' என்று அழைத்தலும், இருவேளை சரணம் விளித்தலும்.

7.கமனம்.
இரண்டு வேளையும் இறைவழிபாடு செய்வதால் தீய செயல்களில் மனம் ஈடுபடாதிருத்தல்.

8.தானம். 
இயன்ற அளவு தானமும்,தர்மமும் செய்தல்.

9.விசர்க்கம். 
பொய், களவு, காமம், சூது, வாது இவற்றை ஒழித்து பிரம்மசரிய விரதம் காத்தல்.

10.ஆனந்தம். 
மேலே விவரித்த வழிகளில் விரதம் கடைப்பிடிப்பதால் ஒரு புதிய சக்தியும்,புனித உணர்வும் ஏற்படும். ஆத்ம  சக்தி நிறைந்த ஆனந்த நிலை பேரின்ப பரமானந்த நிலை பெற கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

11.மனம்.
மனதை அடக்கி துறவு நிலையைக் குறிக்கும் காவி, கருப்பு, நீல வண்ண ஆடைகளை அணிதல்.

12.புத்தி. 
மனம் ஒடுங்கி இறைவனைப் பற்றிய எண்ணமும், சிந்தனையும் மனத்தில் தோன்றி நல்லொழுக்கங்களுக்கு  மனம் கட்டுப்படுவதே புத்தி.

13.அகங்காரம். 
முறையான விரத விதிகளைக் கடைப் பிடிப்பதால் 'நான்' என்ற ஆணவம் அழிந்து பாத நமஸ்காரம் செய்தல்.

14.சித்தம். 
எந்தத் துன்பம்,இடர் ஏற்பட்டாலும் இறைவனை அடைந்தே தீருவேன் என்ற திடமான வைராக்கியம் ஏற்பட்டு இருமுடி சுமத்தல். நாம் செய்யும்  பாவம்,புண்ணியம் மட்டுமே நம்முடன் வருவதை உணர்தல். ஒரு முடியில் ஐயப்பனின் பொருட்கள். மற்றொன்றில் தனக்காக எடுத்துச் செல்லும் ஆகாரம், யாத்திரையின் சமயம் குறைவது போல தான, தர்மம் செய்து பாவச் சுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் சித்த சுத்தி கிடைக்கும்.

15. சொப்பனம்.
கனவில் கண்டவற்றை மறந்து விடுவது போல மேலே கூறப்பட்ட பதினான்கு நிலைகளையும் அடக்கி ஆளும் நிலை பெற்று விட்டதைக் குறிப்பதே எரிமேலி பேட்டைத் துள்ளல் என்ற வேட்டை ஆடும் நிலை.

16.சுழுத்தி.
கருவி, கரணாதிகளை வென்று தன்னிறைவு பெற்றதன் அடையாளமாக தெளிந்த நீர் ஓடும் மணிமேகலை நதியில் நீராடுதல்.

17.துரியம்.
துரிய நிலையைப் பற்றிக் கொண்டிருக்கும் இரண்டு கரணங்களில் ஒன்றை அழுதா நதியில் நீராடிக் கரைத்து, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு அதை இன்னொரு கரணமாகப் பாவித்து, அதையும் பாதி வழியிலேயே விட்டொழித்த அடையாளமாக அக்கல்லை கல்லிடும் குன்றில் எரிந்து விடுதலாம்.

18. துரியாதீதம். 
இறைவனைத் தரிசித்து அவரின் ஜோதி ஸ்வரூபத்தில் இரண்டறக் கலந்த துரியாதீத நிலையே பம்பா நதியில் நீராடி 18 படிகள் ஏறி ஐயனை தரிசிக்கும் பேறாகும்.

இதன் பின் சபரி பீடத்தில் நடக்கும் ஆனந்தக் கூத்து, மகரஜோதி ஆகியவை ஐயன் ஐயப்ப சுவாமியின் தேவாம்ச சித்து விளையாட்டுகளாகும்.

சுவாமியே சரணம் ஐயப்பா


புதன், 11 நவம்பர், 2015

சத்ரு சம்ஹாரர்

தீபம் நவம்பர் 20 இதழில் தஞ்சை மாவட்ட கோயில்கள் பகுதியில் பிரசுரமானது
பக்தருக்கருளும் பட்டுக்குடி முருகன்

பட்டுக்குடி முருகன்

அழகுத் தமிழ்க் குமரன் ஆறுமுகனுக்கு குன்றுகள் தோறும் கோயில் உண்டு.அந்தக் குமரன் குன்றில்லாமல் கோயில் கொண்ட தலங்களில் ஒன்று பட்டுக்குடி ஆலயம். எட்டுக்குடி முருகனை அறிந்த நமக்கு பட்டுக்குடி ஆறுமுகனைப் பற்றி தெரிவதில்லை.  பல சிறப்புகளையும் பெற்று விளங்கும் இவ்வாலயத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் வித்யாசமான கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களின் குறைகளை கண நேரத்தில் காணாமல் போகச்  செய்து, இகபர சுகங்களை அள்ளித் தரும் வள்ளலாகக் காட்சி தருகிறார்.. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இவ்வாலய இறைவனின் அழகு நம் கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்கிறது.

சோழ மன்னர்கள் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தைக் கட்டியபோது மீதமிருந்த கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் இவ்வாலயம். பின் கால மாற்றங்களால் சிதைவடைந்தது. கடவுள் சிலைகள் சிதிலமடைந்தன. ராணி மங்கம்மாவின் ஆட்சிக் காலத்தில் புதிய சிலைகள் உருவாக்கப்பட்டு ஆலயம் புனரமைக்கப்பட்டது. கிழக்கு பார்த்த ராஜகோபுரம். இவ்வாலயம் இங்கு அமைந்த விதம் பார்ப்போம். அறுபடை வீடுகளில்  சுவாமிமலையில் தகப்பன் சுவாமியாக சிவபெருமானுக்கு உபதேசம் செய்து, உயர்ந்த கோலத்தில் கையில் வேல்கொண்டு காட்சி தருகிறார் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணிய சுவாமி!  ஆண்டிக்கோல இறைவனை மணக் கோலத்தில் காண ஆசைப்பட்டனராம் தேவர்கள். உடன் மனம் மகிழ்ந்த குமரப் பெருமான் வள்ளி, தேவானையுடன் ஆறுமுகங்களுடன், மயிலுடன் அற்புதக் காட்சி தந்த தலமே இந்த பட்டுக்குடி. தனயனின் அழகுத் திருக்கோலம் கண்டு வாழ்த்திய பெற்றோர்கள் பசுபதீஸ்வரர், மங்களாம்பிகை என்ற பெயரில் அங்கேயே கோயில் கொண்டனர்.
 
வாதாபி கணபதி


இனி ஆலயத்துள் செல்வோம். ராஜகோபுரத்தின் அருகில் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி உள்ளே சென்றால், இறைவன் பசுபதீஸ்வரர் சம்ன்னதி. கருவறைக்கு வெளியில் காட்சி தரும் கணபதி, முருகனை வணங்கி இறைவனை தரிசிப்போம். சிறிய லிங்கத் திருமேனி. அங்குள்ள அமைதி நம்மை இறைவனுடன் ஐக்கியப் படுத்துவதை உணர முடிகிறது.ஈசனின் இடப்பக்கத்தில் தென்திசை நோக்கி காட்சி தரும் அம்மன் மங்களாம்பிகை நான்கு கரங்களுடன் அழகுறக் காட்சி தருகிறாள். அன்னை வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் வரப்பிரசாதியாம்.

வெளியில் வந்து பிரதட்சணமாகச் சென்றால் ஈசனுக்கு பின்னால் பவ்யமாகக் காட்சி தருகிறார் ஷண்முக சுப்பிரமணியர்.இரு புறமும் வள்ளி, தேவசேனையுடன் அசுர மயிலை வாகனமாகக் கொண்டு நின்ற நிலையில் ஆறு சிரங்களும்,பன்னிரு கரங்களும் கொண்டு அருள் பொங்கும் வதனத்தோடு காட்சி தரும் அவரின் அழகில் சொக்கிப் போகிறோம். சிரித்த முகத்துடன், அபாய, வர ஹஸ்தங்களுடன், வேலும், சேவல் கொடியும் கொண்டு கம்பீரமாக நிற்கிறார் கார்த்திகேயப் பெருமான். உன் கவலைகளை  என்னிடம் விடு. நான் அவற்றை நீக்கி உன்னைக் காப்பாற்றுகிறேன்' என்று ஆறுதல் தருவது போலக் காணப்படுகிறார் ஆறுமுகசுவாமி. ஆண்டிக்கோல  முருகப் பெருமான் முக்தி மட்டுமே தருபவராம். ஆனால் மணக்கோலப் பெருமானோ புத்தியும், முக்தியும் தருபவர் என்று விளக்கம் சொன்னார் ஆலய அர்ச்சகர் திரு ராஜு குருக்கள். இங்குள்ள முருகப் பெருமானின் சிலை, எட்டுக்குடி, என்கண் க்ஷேத்திரங்களில் சிலை வடித்த  ஸ்தபதியால் வடிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

பசுபதீஸ்வரர்

மங்களாம்பிகா

முருகன்

தந்தையும், மகனும் ஒரே நேர்க் கோட்டில் அமைந்த தலச் சிறப்பு பெற்றது இவ்வாலயம். இவ்வாலயத்தில் ஈசனுக்கும்முருகப் பெருமானுக்கும் அமைந்துள்ள கருவறைக் கோபுரங்கள் ஒரே உயரத்தில் அமைந்து இருவரும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.. ஆலய பிரகாரத்தில் பல்லவர் கால சிற்பக்கலையுடன் காணப்படும் வாதாபி கணபதி அழகு. இங்கு குருவான பைரவரும், சீடன் சனீஸ்வரரும் இணைந்து காணப்படுவதும் சிறப்பான தோற்றமாகும். இது மங்குசனி என்கிறார் அர்ச்சகர். பைரவரின் இடப்பக்கம் தேவியின் அம்சம் என்பதால் அவரது காதில் ஒரு ஓட்டை உள்ளது. இங்கு மற்ற முருகன் ஆலயங்கள் போல் இல்லாது இடும்பன் சந்நிதி கோபுரத்திற்கு பின்னால்  சில படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.காவிரியில் வெள்ளம் வரும் சமயங்களில் இந்த ஊரை அதிலிருந்து காப்பாற்றவே இடும்பன் உயரமாக சந்நிதி கொண்டுள்ளாராம்.  பலமுறை வெள்ளப் பெருக்கு வந்தபோதும் இவ்வூர் அதிகம் பாதிக்கப் படாததற்கு இவரே காரணமாம். இடும்பனே  பட்டுக்குடியின் காவல் தெய்வமாக வணங்கப் படுகிறார்.

ஆலய விமானம்

பைரவர்

இடும்பன்

ராஜூ குருக்கள்


இங்குள்ள ஷண்முகஸ்வாமிக்கு செய்யப்படும் சத்ரு சம்கார பூஜை எல்லா நலன்களையும் அள்ளித் தருமாம். திருமணம், புத்திரப் பிராப்தி, கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் அபிவிருத்தி, நல்ல வேலை, சொத்து வழக்குகள் என்று எந்த பிரச்னையும் தீர இங்கு கந்தப்பெருமானை வேண்டி 8 செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் சத்ரு சம்கார பூஜை செய்தால் விரைவில் அவர்கள் எண்ணம் ஈடேறும். இந்த பூஜைக்கு ஆறு மலர்கள், ஆறு பழங்கள், ஆறுவித அன்னங்கள், ஆறு நிவேதனங்கள்  வைத்து ஆறு முகங்களுக்கும் அபிஷேக, அர்ச்சனை செய்வதால் ஒன்றுக்கு ஆறாகப் பலன் தருபவராம் இவ்வாலய இறைவன்.

தன்னை நம்புபவரைக் கைவிட மாட்டான் இந்த ஆறுமுகப் பெருமான் என்பதற்கு நிறைய சம்பவங்களைச் சொல்கிறார்கள் அவ்வூர் மக்கள். இவ்வாலயத்தில் வேண்டிக் கொண்டு கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு முன்பு ஏதோ பிரச்னை ஏற்பட்டதாம். அவள் இந்த ஆறுமுகனையே சதா ஜபித்துக் கொண்டு  நம்பிக்கையுடன் இருந்தாளாம். மருத்துவமனையில் சிகிச்சை நடந்தபோது யாரோ ஒருவர் இந்தப் பெண்ணைப் பார்த்து விபூதி கொடுத்து இட்டுக் கொள்ள சொன்னாராம். அந்தப் பெண்ணும் அப்படியே செய்து மருத்துவர்களே ஆச்சரியப் படும் விதத்தில் குணமாகிவிட்டாளாம். வந்தவர் அவரது பையை மறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அதில் 'யாமிருக்க பயமேன்' என்ற வாசகம் இருந்ததாம். உடன் இருந்தோர் அந்தப் பையுடன் அவரைத் தேடியபோது காணவில்லையாம். முருகனே அந்தப் பெரியவர் உருவில் வந்து அப்பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார். இது சமீபத்தில் நடந்தது என்று மெய்சிலிர்க்க கூறினார்கள் அவ்வாலய ஊழியர்கள்.

கடந்த 205ம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகத்தின்போது மாரியப்பன் என்பவர் கர்ப்பக்கிரகத்தில் இறைவன் பீடத்திற்குக் கீழே மருந்து கலந்து வைத்தபோது திடீரென்று 'முருகன் என் மோதிரத்தைக் கேட்கிறான்'என்று சொல்லியபடி தன்  மோதிரத்தை மருந்துடன் உள்ளே திணித்து விட்டாராம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட அர்ச்சகர் அவருக்காக மோட்ச தீபம் ஏற்றி தீபாராதனை செய்து அவர் நற்கதி அடைய வேண்டிக் கொண்டபோது முருகனின் இடக்கையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்ததாம். இதனை அந்த முருகனின் கருணையாக மனம் நெகிழ்ந்து, மெய்சிலிர்க்க கூறினார் ராஜு குருக்கள். தன்னை நம்புபவரை என்றும் கைவிட மாட்டான் எங்கள் ஆறுமுகன் என்கிறார். இவ்வாலயம்  மேன்மை அடைய மிகவும் ஈடுபாட்டுடன்  உழைக்கிறார்கள் இவரும், ஆலய நிர்வாகிகளும்.

இக்கோயிலில் பங்குனிமாதம் ரோகிணியில் நடைபெறும் லட்சார்ச்சனை மிகச் சிறப்பானதாகும். கார்த்திகை, திருவாதிரை, கந்த சஷ்டி, ஆடி, தை கிருத்திகைகள், நவராத்திரி உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. ஆலயம் சிறப்பாகப் பராமரிக்கப் படுகிறது. வரும் 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல சிறப்புகளைக் கொண்ட வரப்பிரசாதியான இந்த முருகப் பெருமானை தரிசித்து, கும்பாபிஷேகத் திருப்பணியில் பங்கு கொண்டு வாழ்வில் நலமும், வளமும் பெறலாம்.

இவ்வாலயம் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-  திருவையாறு பாதையில் கணபதி அக்ரஹாரம்  அருகில் அமைந்துள்ளது.

தொலைபேசி...9688726690