|
|
|
|
|
|
20-07-2014 அன்றைய தீபம்
இதழில் பிரசுரமான என் ஆலய தரிசனம்...
ஈரோடு கோட்டை மாரியம்மன்
ஆலயம்...
நம் தமிழ்நாட்டில்
சங்க காலத்தில் சேர, சோழ,பாண்டிய நாடுகளுடன் தொண்டை, கொங்கு நாடுகளின்
ஆட்சியும் சிறப்பாக இருந்து வந்தது. கொங்கு 24 சிறு
உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இவற்றில் வரலாற்றுச் சிறப்பும், பழமையும், சங்க காலச் சிறப்பும் பெற்ற பூந்துறை
நாட்டின் புகழ்மிக்க பெருநகரமாக விளங்கும் ஈரோட்டில் பல ஆலயங்கள் பழமைச் சிறப்புப்
பெற்று விளங்குகின்றன.
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தாய் சக்தியே தெய்வமாகக் கொண்டாடப்படும்
மாரியம்மன் வழிபாடு மிகப் பிரசித்திபெற்றது. அங்கே,
அம்மன் பல்வேறு கோலங்களில் காட்சி தந்து, பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள். மாரி, காளி, தேவி,
பகவதி, மகமாயி, பச்சையம்மன்,
பாஞ்சாலி, நீலியம்மன், பிராட்டியம்மன்,
வஞ்சியம்மன், பெரியம்மன், வெள்ளையம்மன், பார்வதி....இப்படி அந்த
தேவிக்குத்தான் எத்தனை எத்தனை நாமங்கள்! ஈரோடு நகரின் நடுநாயகமாக, காவல் தெய்வமாக, நகர மக்களின் ஆதார தெய்வமாகக்
காட்சி தரும் பெரியமாரியம்மன் ஆலயம் இவ்வூரின் மிகப்
பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
இரண்டு
ஓடைகளுக்கு நடுவே அமைந்தது 'ஈரோடை'.
அதுவே, மருவி 'ஈரோடு'
என்றாகியது. இவ்வூர் ஈசனின் பெயர் 'ஆர்த்திர
கபாலீஸ்வரர்' என்பது. ஈசனின் தலையில் கங்கை இருந்து
எப்போதும் ஈரமாக இருப்பதால் 'ஈர ஓடு' என்பதே
ஈரோடு ஆயிற்று என்றும், காளிதேவி பிரம்மன் தலையைத்
துண்டாக்கியபோது ஈரமான தலையின் ஒட்டுப்பகுதி விழுந்ததால் இப்பெயர் எனவும் பல
கூற்றுகள் உள்ளன.
இவ்வூருக்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்யபுரி, கபாலபுரி
என்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் சேரரும், பாண்டியரும்,
விஜய நகர அரசரும், மைசூர் உடையாரும் ஆட்சி
புரிந்த சிறப்புடையது. மைசூர் மன்னர்களுக்கு எதிரான போராட்டத்தில், அவர்களின் மூக்கை அறுத்து வெற்றி நிலை நாட்டிய 'மூக்கறுப்போர்'
என்ற வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நிகழ்ந்தது இங்குதான். தந்தை
பெரியாரும், கணித மேதை ராமானுஜமும் பிறந்த ஊர் ஈரோடு.
பருத்தி ஆடைகளுக்கும், பெண்களின் மங்கலப் பொருளான மஞ்சள்
தயாரிப்பிலும் முதலிடம் வகிக்கும் நகரமான ஈரோடு சிறந்த தொழில் நகரமாக விளங்குகிறது.
சமயபுரம், கண்ணனூர் மாரியம்மன், தஞ்சை முத்துமாரியம்மன், கோவை தண்டுமாரியம்மன்,
சேலம் கோட்டை மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன்,
படவேட்டம்மன், இருக்கன்குடி மாரியம்மன்,
கருமாரியம்மன் போன்று ஈரோட்டின் கோட்டை
மாரியம்மன் ஆலயம் மிகப் பெருமை பெற்றது. மாரி என்பதற்கு
மழை என்று பொருள். வெப்பு நோயாகிய அம்மை நோயைத் தீர்க்கும் குளிர்ச்சியான தெய்வம்
என்பதே மாரி என்பது நாம் அறிந்ததே. அம்மை நோயுண்டானது எப்படி?
பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் இறந்தபோது அவர் மனைவி ரேணுகாதேவி
தீக்குளித்தாள். அச்சமயம் அவளைக் குளிர்விக்க இந்திரன் மழை பொழியச் செய்தான்.அவள்
அணிந்திருந்த ஆடைகள் எரிந்து, உடல் முழுதும் தீ கொப்புளங்கள் ஏற்பட்டன. அவள் தன் உடலை மறைக்க அங்கிருந்த வேப்பிலையை ஆடையாகத் தரித்து, பசிக்கு அருகிலிருந்த புலைச்சேரியில் உணவு வேண்டினாள். அவர்கள் ரேணுகாவை
வேதியப் பெண்ணாகக் கருதி பச்சரிசிமாவு, இளநீர், பானகம், வெல்லம் இவற்றை உணவாகக் கொடுத்தனர்.
தன கணவரின் உடலைக் கண்டு கதறி அழுத அவளை தேவர்களும், சிவபெருமானும் தேற்றி, 'நீ சக்தி வடிவமாதலால் கிராம
தெய்வமாக விளங்கி மக்களைக் காப்பாற்று' என ஆணையிட்டார். அவள்
உடம்பில் ஏற்பட்ட கொப்புளங்கள் உலகினருக்கு அம்மை நோய் ஆயிற்று. உடுத்திய வேப்பிலை மருந்தாயும், அவள் உண்ட இளநீர், பானகம்,
அரிசிமாவு, வெல்லம் இவை உணவாகவும் ஆயிற்று.
ஈரோடு மாரியம்மனின் அருமை, பெருமைகளைச் சொல்ல
வார்த்தையில்லை. தீவினைகளை அறுத்து, நல்வினைகள் நல்குவதில்
வல்லவள் இந்த மாரியம்மன். இவளுக்கு பெரிய என்ற அடைமொழி ஏன்? இவளுடன்
கூட அருள்புரியும் சக்திகளாக எழுந்தருளியுள்ளனர் சின்ன மாரியம்மன் என்னும்
நடுமாரியம்மனும், வாய்க்கால் மாரியம்மனும். இம்மூவருமே ஈரோடு
நகரை அல்லும், பகலும் அறனுறக் காத்து அல்லவை நீக்கி, நல்லன செய்து செல்வ வளமிக்க நகரமாக வைத்துள்ளனர்.
ஈரோட்டுக்கு பெருமை சேர்த்து,
சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக விளங்கும் தேவியே, "கோட்டை பெரிய மாரியம்மன்." மாமன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதால்
இப்பகுதிக்கு கோட்டை என்றே பெயர். அம்மனுக்கும் கோட்டை மாரியம்மன் என்று அடைமொழி
ஆகிவிட்டது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு
சோழர்களால் கட்டப்பட்ட ஆலயம். ஈரோடு நகரின் பிரதான சாலையான பிரப் சாலையில்
நகராட்சி அலுவலகம் எதிரே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும்
பழமையானது. ஆலயத்தில் உள்நுழைந்ததும் சிம்ம வாகனம் அழகுடன் காட்சி தருகிறது.
கருவறையின் முன் இரு அழகிய வண்ண துவாரபாலகர்கள் ஆண்,
பெண் பூதங்களாக இருபுறமும் விளங்குகின்றனர்.
கருவறையில் அம்மன் அழகுறக் காட்சி தருகிறாள்.சிறிய உருவம்; கருணை பொழியும் கண்கள்.புன்னகை ததும்பும் அதரங்கள்;சிரத்தில் உயர்ந்த கொண்டை; மேலிரு கரங்களில்
உடுக்கையும், பாசமும்; கீழ்க்
கரங்களில் கபாலமும், கத்தியும் கொண்டு இடக்கால் மடித்து,
வலக்கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலம். நம் கவலைகளையும், துன்பங்களையும் அக்கணமே களைந்து, வேண்டுவதையும்,
விருப்பத்தையும் நிறைவேற்றக் காத்திருக்கும் அதிரூப சுந்தரியாகக்
காட்சி தரும் மகாமாரி அன்னையின் அழகில், வசீகரத்தில் உலகமே
மறந்து உன்னத நிலையை அடைந்துவிட்ட எண்ணம் உண்டாகிறது. ஆசைகள் மறந்து, அன்னையே அனைத்தும் என்ற ஆனந்த நிலை ஏற்படுகிறது.நினைத்ததை நடத்திக்
கொடுத்து, கேட்டதைத் தரும் பரமேஸ்வரியாகக் காட்சி தருகிறாள்
தேவி.
அந்தப் பரவச நிலையில் நாம் அன்னையை வலம் வருவோம்.அம்பிகையின்
இடப்புறம் கையில் கோடரி ஏந்திய பரசுராமரின் சிலாரூபம் அமைந்துள்ளது. தாய்
ரேணுகாவின் தலையை தந்தை சொற்படி துண்டித்த பரசுராமன், பின் தாயின் உயிரையே வரமாகக் கேட்டுப் பெற்றார். தாயின்
உடல் கிடைக்காமல் போக, அவள் தலையை வேறு உடலில் பொருத்தியதால்
அவளே 'மாரி'ஆனாள் என்பது புராண வரலாறு. அதன் பொருட்டே தாயாகிய மாரியம்மனின் ஆலயங்களில்
பரசுராமரும் உடனிருப்பதாக ஐதீகம். அர்த்த மண்டபத் தூணில் நர்த்தனக் கண்ணன்,
யாளி, சிம்ம உருவங்கள் உள்ளன.கோவில் தல
விருட்சம், வேப்பமரம்.
இவ்வாலயத்தின் இணை ஆலயங்களான சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் ஆலயங்களில் உள்ள தேவியரும்
இந்த அன்னைக்கு இணையாக அருள் தரும் வரப்பிரசாதிகள் சின்ன மாரியம்மன் ஆலயத்தில்
இருபுறமும் கணபதியும், முருகனும் வீற்றிருக்க,
மகாமண்டபத்தில் காட்சி தரும் துவாரபாலக, பாலகியரைத்
தாண்டி கருவறையில் முத்தலைச் சூலம், பாம்பு, கத்தி, கபாலத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்து அன்னை
அருட்கோலம் காட்டியருள்கிறாள். பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தரும் தயாபரியாகக்
காட்சி தருகிறாள் அன்னை. இவ்வாலயத்தில் மட்டுமே அழகிய மர வேலைப்பாடுகளுடன் கூடிய
தேர் உண்டு. இந்தத் தேரோட்டமே பங்குனியில் நடைபெறும். மேலும் அன்னவாகனம், சிம்ம வாகனம், கிளுவைமர வாகனங்களும் உண்டு.
அம்மனுக்கு அமாவாசை தோறும் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடக்கும்.
காளிங்கராயன் வாய்க்காலுக்கு மேல்புறம் அமைந்துள்ளது மூன்றாவது
மாரியம்மன் ஆலயமான வாய்க்கால் மாரியம்மன் ஆலயம். இது சிறிய ஆலயம். பலிபீடம், சிம்மம் இவற்றைக் கடந்து சென்றால் கருவறையில் கத்தி,
சூலம்,பாசம், கபாலம்
தாங்கிய நான்கு கரங்களுடன்,அன்பு ததும்பும் விழிகளுடன்
அன்னையின் திருவுருவம் காட்சியளிக்கிறது. தரிசிப்போரின் பாவங்களை இல்லாதாக்கி,
வாழ்வை சீர்படச் செய்யும் பரமதயாளியாகக் காட்சி தருகிறாள்
பிருகந்நாயகி. ஆலயத்தின் எதிரில் காளியம்மன், ஹனுமானின்
தொன்மையான சிற்பங்கள் உள்ளன.
இவ்வாலயத்தின் அருகிலுள்ள காரைவாய்க்கால் மைதானம் முன்பு 'காந்தி சவுக்' என்று
அழைக்கப்பட்டதாம். இங்கு மகாத்மா காந்தி, நேரு, பாரதியார் போன்ற தேசத்தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் நடைபெறுமாம். இவ்விடத்தில்
பேசாத தலைவர்களே இல்லையாம். அத்தனை புகழ் பெற்ற மைதானமாம் இது.
பங்குனி முதல் செவ்வாயில் ஆரம்பித்து 20 நாட்கள் நடக்கும் மாரியம்மனின் பங்குனித் தேர்த்
திருவிழா மிகப் பிரம்மாண்டமான பெரிய திருவிழா. முப்பது அடி உயர தேரில் நான்கு
முனைகளிலும் அழகிய யானைகள் தாங்குவது போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவரும். இத்தேர்
முழுவதும் முருகன் மற்றும் சிவபெருமானின் திருவிளையாடல் காட்சிகளும், வீணை, குழல், மத்தளம்
வாசிப்போரின் சிற்பக் காட்சிகளும் உள்ளன.தேரோட்ட்த்தன்று அம்மன் அழகிய
அலங்காரத்துடன் பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
பங்குனி
முதல் செவ்வாய்க் கிழமை அன்று இரவு மூன்று ஆலயங்களிலும் பூச்சாட்டுதல் நடைபெறும்.
அடுத்துவரும் சனிக்கிழமை அன்று கம்பம் நடப்படும். கம்பம் நடுவது என்றால் என்ன?
பால் உள்ள மரங்களான வேம்பு, பாலை, ஆல் , அரசு, பாச்சா ஆகிய ஐந்து
மரங்களில் ஒன்றின், இரு கிளைகள் உள்ள மரத்துடன் மூன்றாம்
கிளையை இணைத்து ஆசாரி உருவாக்கிய கம்பத்தை அடிமரத்துடன் நட்டு பூசாரி. அதற்கு விபூதி, சந்தானம், குங்குமம், நவதானியம், வேப்பிலை,
மாலை அணிவிப்பார். மூன்று கிளைகள் அமைப்பதற்கு மும்மூர்த்திகள்
எழுந்தருள்வதாயும், மாரியம்மன் மூவுலகத்துக்கும் தலைவி
என்றும் பொருளாம்.
மறுநாள்முதல்
சிறுவர், சிறுமியரும் ஊர்ப் பெண்களும்
மஞ்சள் நீரில் வேப்பிலை செருகி கம்பத்திற்கு ஊற்றுவர். இங்கு, கம்பம் தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. மூன்று மாரியம்மன்
கோவில்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதும். கம்பம் நட்டதும், தினமும்
பெண்கள் மஞ்சள் நீரை விடுவர். அது தேவியை அபிஷேகம் செய்வது
போலாகும். கம்பத்திற்கு நீர் ஊற்றும்போது நாம் வேண்டிக்கொள்வது விரைவில்
நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பதினைந்தாம் நாள் குண்டம் தீ மிதித்தல், இரவு
மாவிளக்கு, கரகம் ஆகியவை நடைபெறும். பதினாறாம் நாள் பொங்கல்
வைக்கும் திருவிழா. அன்று காலை சின்ன மாரியம்மன் ஆலயத் தேர்த்திருவிழா வெகு
விமரிசையாக நடைபெறும். மூன்று நாட்களுக்கு தேர் ஆலயத்தின் சுற்று வீதிகளில் வலம்
வந்து 18ம் நாள் நிலைக்கு வரும்.
பின் பத்தொன்பதாம் நாள் கம்பம் எடுக்கும் விழா நடைபெறும். மூன்று ஆலய
கம்பங்களும் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, காளிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். அப்போது,
பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி மகிழ்வர்.
மஞ்சள் நகரம், மஞ்சள் நீரில் குளிக்கும்! அது, வடநாட்டு 'ஹோலி' என்ற
பண்டிகையை நினைவூட்டும். திருவிழாவின்போது தினமும் ஒரு வாகனத்தில் அன்னையின்
வீதியுலா நடக்கும். தினமும் ஊரெங்கும் இன்னிசை, நாட்டியம்,
நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும் அந்த 20
நாட்களும் ஊரே அமர்க்களமாக இருக்கும். திருவிழா முடிந்ததும் ஊரே
வெறிச்சோடியது போல் இருக்கும்.
பெரிய மாரியம்மன், பக்தர்கள் வேண்டியதை, விரும்புவதை நிறைவேற்றும்
சக்தி கொண்டவள். அம்மை உள்பட, வெப்பத்தால் வருகிற நோய்களை
விரைவில் குணப்படுத்தித் தருவாள், இவள் பிள்ளைவரம் தரும்
அம்மன். குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து 45 வெள்ளிக்கிழமை
இங்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் கைமேல் பலன்
கிடைக்கும். இதில் பயன் பெற்றோர் பலராம்.
ஆலயங்கள் மூன்றும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. தினமும் 50 பேருக்கு சிறப்பான முறையில் அன்னதானம்
நடைபெறுகிறது. மொத்தத்தில் ஈரோடு மக்களின் இதய
தெய்வமாக விளங்குகிறாள் பெரிய மாரியம்மன்.
ஆடி, தை மாத
வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி நாட்களிலும் அன்னைக்கு
அலங்காரம், சிறப்பு பூஜைகள் உண்டு.
தினமும் காலை 6 மணிக்கு காலசந்தியும், பகல் பன்னிரண்டு மணிக்கு
உச்சிக்கால பூசையும்,மாலை 71/2 மணிக்கு
சாயரட்சையும் நடைபெறும்.
ஆலய தரிசன நேரம் காலை 6 முதல் 11.மாலை 4 முதல் 8
மணிவரை.
ஈரோடு பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களிலிருந்து பெரிய மாரியம்மன் ஆலயத்திற்கு பேருந்து,
ஆட்டோவில் செல்லலாம்.
தொடர்புக்கு...0424 2258670
|