கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு செல்வது எப்படி?
பூனாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலுள்ள கோலாப்பூருக்கு
பூனா, பெங்களூர், மும்பையிலிருந்து ரயில், பஸ் வசதி உள்ளது. சென்னையிலிருந்து
திருப்பதி சென்று, திருப்பதி-கோலாப்பூர் ‘ஹரிப்ரியா’ எக்ஸ்பிரசிலும், பெங்களூர்
சென்று அங்கிருந்து செல்லும் ‘ராணி சென்னம்மா’ எக்ஸ்பிரசிலும் கோலாப்பூர் சென்று
அடையலாம். மும்பையில் இருந்து ‘மகாலட்சுமி’ மற்றும் ‘ஸஹயாத்ரி’ எக்ஸ்பிரஸ்
ரெயில்கள் கோலாப்பூர் செல்லும்.
‘நமஸ்தே கருடாரூடே
கோலாஸுர பயங்கரீ’
என்று ஸ்ரீமகாலட்சுமி
அஷ்டோத்தரத்தில் போற்றப்படும் தேவியே, மராட்டியத்தில் கோலாப்பூரில் கோவில் கொண்டு,
தன்னை வணங்குவோர்க்கு அளவிலா செல்வம் தந்து கருணா கடாட்சம் செய்யும் கரவீர
நிவாஸினி, மகாலட்சுமி தேவி!
இவ்வாலயம் 108 கல்ப காலத்திற்கு (1
கல்பம் = 100 ஆண்டுகள்) முந்தையது என புராண நூல்களில் காணப்படுகிறது. கி.பி.
எட்டாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்களால் இவ்வாலயம்
கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அடர்ந்த காடுகளும், பள்ளத் தாக்குகளும்
நிறைந்திருந்த இத்தலத்தை மகாலட்சுமி தன் கையால் தூக்கி நிலப்பரப்பில் வைத்து
கோவில் கொண்டதால் இவ்வூர் ‘கரவீர்’ என்றும், அன்னை ‘கரவீர நிவாஸினி’ என்றும்
அழைக்கப் படுகிறார். இன்றும் இவ்வாலயம் உள்ள இடம் பள்ளமாகவே உள்ளது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில்
முகமதியர்கள் ஆட்சியிலும் இவ்வாலயம் தன் சிறப்பை இழக்காமல் இருந்ததே இதன் பெருமை.
இன்றும் இதனருகில் முகமதிய தர்காக்களும், குடியிருப்புகளும் உள்ளன. கோலாப்பூருக்கு
நடு நாயகமாக விளங்கும் இவ்வாலயத்தைச் சுற்றியே, அன்று முதல் இன்று வரை அரசாங்கக்
கட்டிடங்கள் அமைந்துள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் இவ்வூரைத் தலை நகராகக் கொண்டு
ஆட்சி செய்த ராணி தாராபாய் காலத்தில் இவ்வாலயத்திற்கு பல தொண்டுகளும், சீர்திருத்தங்களும்
செய்யப்பட்டன.
இத்தலம் காசிக்கு இணையாக ‘தட்சிண
காசி’ என்று போற்றப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நைமிசாரண்யத்தில்
வசித்த காஸ்யபர், கவுதமர், கார்க்கியர், ஆங்கிரஸர், பிருகு, வசிஷ்டர் முதலான
80,000 ரிஷிகள் ஒன்று கூடி சுத முனிவரிடம் காசி, கங்கை, பிரயாகை, கோகுலம் இவை –
அனைத்தும் இணைந்த ஓரிடத்தைக் காட்டும்படி கூற, அவரும் கோலாப்பூரே அவற்றுக்கிணையான
புனித க்ஷேத்திரம் என்று உரைத்தார்.
அச்சமயம் அடர்ந்த பயங்கர காடுகள்,
மலைகளால் சூழப்பட்ட இவ்விடத்தில் பல அரக்கர்களும், யட்சர்களும் துவம்சம் செய்து
வந்தனர். அவர்களின் தலைவனான கோலாசுரன், முனிவர்களுக்கும், தவத்துக்கும் இடையூறு
செய்ய, முனிவர்கள் மகாலட்சுமியிடம் அவர்களை அழிக்க வேண்டினர். தேவியும் 9 கோடி
சைனியத்துடனும், நவ துர்க்கைகளுடனும், பைரவர், வீரபத்ரர், சித்த பாதுகேஸ்வர்,
ஜோதிபா, காத்யாயனி ஆகியோருடனும் இணைந்து போர் செய்து கோலாசுரனை அழித்தாள். இறக்கும்
சமயம் அவன் வேண்டிக் கொண்டபடி இவ்வூர் கோலாப்பூர் ஆயிற்று. தேவர்கள், முனிவர்கள்
வேண்டு கோளிற்கிணங்க தேவியும் அவ்விடத்திலேயே கோவில் கொண்டாள். கோலாசுரனுக்கு
பயங்கரமான தேவி, தன்னை வணங்கும் பக்தர்களின் பயங்களைப் போக்கும் ஆபத்சகாயி ஆனாள்.
ஒருமுறை சிவபெருமானுக்கும்,
மகாலட்சுமிக்கும் ‘புனிதத் தலங்களுள் சிறந்தது காசியா, கோலாப்பூரா’ என்ற தர்க்கம்
ஏற்பட்டபோது, கோலாப்பூர் இருந்த தட்டு தாழ்ந்தே இருக்க, அம்பிகை வாராணசி இருந்த
தராசு தட்டில் ஒரு அரிசியை வைக்க, இரண்டும் சமமாயிற்றாம். அதனால் வாராணசியை விட
ஒரு அரிசி அளவு அதிக புண்ணியம் கொண்டது கோலாப்பூர் என்று புராணங்கள் கூறுகின்றன.
அது முதல் சிவபெருமானாலேயே இது ‘தட்சிண காசி’ என்று போற்றப்படுகிறது.
ஒரு முறை காசியில் வாழ்ந்து
கொண்டிருந்த அகத்திய முனிவர் ஏதோ காரணத்தால் ஈசனிடம் கோபம் கொண்டு அவ்வூரை விட்டு
வெளியேறினார். வேறு பல இடங்களுக்கு சென்றும் அவரால் ஈசனைப் பிரிந்து வாழ
முடியவில்லை. திரும்ப காசிக்குச் செல்லவும் மனமில்லாத குறுமுனி மனம் நொந்தார். இறைவனிடம்
காசிக்கு இணையான ஓரிடத்தைக் காட்டும்படி கண்ணீர் சிந்த வேண்டினார். அச்சமயம்
காசியைப் போன்றே தான் நித்திய வாசம் செய்யும் தட்சிண காசி எனப் போற்றப்படும்
கோலாப்பூரில் சென்று தங்கும்படி கூறினார் ஈசன். அகத்தியர் தம் மனைவி லோபாமுத்திரையுடன்
இங்கு பல காலம் வாழ்ந்ததாக ‘கரவீர் மகாத்மியம்’ உரைக்கிறது.
பிருகு முனிவர் ஒருமுறை
மும்மூர்த்திகளுள் சாத்வீக குணமுள்ளவர் யாரென்பதைக் கண்டுபிடிக்க பிரும்ம லோகம்,
கைலாசம், வைகுண்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். சிவபெருமானும், பிரும்மனும் அவரை
அவமதித்து கோபப்பட, வைகுண்டம் வந்த பிருகு முனிவர் விஷ்ணுவும் தம்மை அவமதிப்பதால்
வெகுண்டு, அவரது திருமார்பில் உதைத்தார். திருமாலோ சற்றும் கோபிக்காது, ‘என்னை
உதைத்த உங்கள் கால் வலிக்குமே?’ என்று முனிவரின் காலைப் பிடித்தார். தான் வாழும் மார்பை
உதைத்த முனிவரின் காலைப் பிடித்ததால், வெகுண்ட மகாலட்சுமி, கோபத்துடன் புறப்பட்டு
கோலாப்பூர் சென்று விட்டாள். அன்னை இங்கு 200 வருடங்கள் வாழ்ந்ததாக வெங்கடேச
புராணம் கூறுகிறது. இன்றும் நவராத்திரியின் போது அன்னைக்கு திருப்பதியிலிருந்து
புடவை சீராக வரும் வழக்கம் உள்ளது.
இத்தனை புண்ணியமும், சிறப்பும்
நிறைந்த இவ்வூரில் வாழ்பவர்களுக்கு பஞ்சமா பாதகங்களான கொலை, கொள்ளை, மது
அருந்துதல், பசுவதை, பிராமண வதை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்குமென்று புராணக்
கூற்று. இவ்வூரின் வடக்கில் கிருஷ்ணா, வாரணா நதிகளும் கிழக்கில் கணிகி, தெற்கில்
வேதா, யக்ஷா மற்றும் சிவா, மயூரி ஆகிய நதிகளும் பாய்கின்றன. கிழக்கில் ராமேஷ்வர்,
தெற்கில் வக்ரேஷ்வர், மேற்கிலும், வடக்கிலும் முறையே சங்கர், மல்லிகார்ஜூனரும்
லிங்க வடிவில் கோவில் கொண்டுள்ளனர். நான்கு திசைகளிலும் உஜலை, காத்யாயனி, சித்த
பாதுகேஷ்வர், ஜோதிபா ஆகிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாக உள்ளனர். இவை தவிர ‘கோவில்
நகரம்’ எனச் சொல்லும்படி நிறய ஆலயங்கள் உள்ளன. மொத்தம் 66 புனித இடங்கள் இங்கு
உள்ளன.
சிவபெருமான், மகாலட்சுமி இருவரின்
அருளாட்சி நிறந்த இவ்வூர் செல்வச் செழிப்பாக இருப்பதில் வியப்பென்ன?
கி.பி. பதினாறாம் நூற்றாண்டிற்கு
பின்பே இவ்வாலயம் கோபுரம், சுற்றுப் பிரகாரம், இதர தெய்வ சந்நிதிகள் என்று பெரிய
ஆலயமானதாக ஆராய்ச்சிகளிலிருந்து தெரிய வருகிறது. ஆலயத்திற்கு நான்கு வாயில்களும்,
ஐந்து கோபுரங்களும், ஏழு உயர்ந்த அழகிய தீப ஸ்தம்பங்களும் உள்ளன. ஆலயத்துள்
நுழைந்ததும் கருட மண்டபத்தில் நான்கு கரங்களுடன், ஒளி நிறைந்த கண்களுடன் கம்பீரமாக
அமர்ந்து காட்சி தரும் கணபதியை வணங்கி உள்ளே செல்கிறோம்.
இரண்டு துவார பாலகர்கள் காவல்
செய்யும் தேவியின் சந்நிதியில் நுழைந்தால், அன்னையின் தரிசனம், தூரத்திலிருந்தே
நம் மனதைக் கொள்ளை கொள்ளும். அகன்ற பெரிய கர்ப்பக் கிருகத்தில் உள்ள மகாலட்சுமியின்
விக்கிரகம் 8,000 ஆண்டுகள் பழமையானது. 40 கிலோ எடையுள்ள மிக உயர்ந்த ஒளி பொருந்திய
கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட்டு, சிலா ரூபத்தில் காட்சி தரும் அன்னை, அதே
போன்று ஒளி பொருந்திய சதுர வடிவக் கல்லின் மீது நின்றபடி அருள் செய்கிறாள்.
கீழுள்ள கல் ஆவுடையாகவும், மேலே நிற்கும் அன்னை சிவலிங்கம் போன்றும் தோற்றம்
தருவது, சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது.
அம்பிகையின் சிரத்தின் மேல்
ஆதிசேடன் குடையாக விளங்க, சிம்ம வாகனத்தின் முன்பு, தாமரையின் மீது மனித
சிருஷ்டிக்கு ஆதாரமான வடக்கு திசை நோக்கி நின்றபடி காட்சி தருகிறாள். சதுர்
புஜதாரியாக, மேலிரண்டு கரங்களில் வாளும், கேடயமும், கீழுள்ள வலக்கையில் ஒருவகைக்
கனியும், இடக்கையில் பாத்திரமும் கொண்டு அன்ன பூரணியாகக் காட்சி தருகிறாள்.
இந்த தேவிக்கு வித்தியாசமான முறையில்
சேலை கட்டப்படுவதால், அம்பாளின் அழகு கொஞ்சும் முகம் தவிர வேறு எதுவும் தெரியாது.
மூல விக்கிரகத்திற்கு வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் நடைபெறும்போது மட்டுமே சிலாரூப
தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் உற்சவ விக்கிரகத்திற்கே அபிஷேகங்கள்
நடைபெறும். கர்ப்பக் கிரகத்திற்கு மேல் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு தினமும்
அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதனை பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை. கர்ப்பக்
கிரகத்தை சுற்றிலுமுள்ள சிறிய பிரகார சுற்றில் மகாலட்சுமியின் சுலோகங்கள் அழகாக,
சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு வெளியே வலப்பக்கம், ஸ்ரீலட்சுமி
யந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தியுடன் பூஜித்தோர்க்கு செல்வம் பெருகும்
என்பது சாஸ்திரம்.
அன்னை மகாலட்சுமியின் அழகுத்
தோற்றம் நம்மை அகலவிடாது செய்கிறது. அன்னையை தரிசித்து வெளிவந்து, எதிரிலுள்ள
மண்டபத்தில் அமர்ந்து கண்மூடி தியானித்தால், நமக்கு உலகமே மறந்து, தேவியின் அருட்
சக்தி ஈர்ப்பை நம்மால் நன்கு உணர முடியும். தம்மை பக்தியுடன் நினைப்பவர் பரம
ஏழையாக இருந்தாலும், அவர்களை செல்வச் சீமானாக்கி விடுவாள் மகாலட்சுமி.
அண்டினோர்க்கு அடைக்கலம் தந்து,
வேண்டுவோர்க்கு வேண்டியன அருளும் அன்னைக்கு புடவை வாங்கி சாற்றுவது இங்கு மிக
முக்கியமான வேண்டுதலாகும். இதற்கென ஆலயத்திலேயே ஒரு புடவைக் கடையும் உள்ளது.
மராட்டியத்தின் முதல் தெய்வமாகக் கொண்டாடப்படும் தேவி, பலரின் குல தெய்வமாயும்
விளங்குகிறாள். இங்கு ஆண்கள் தேவஸ்தான விதிப்படி, அவர்கள் தரும் மடிவஸ்திரம்
அணிந்து, கருவரையில் சென்று அபிஷேகம் செய்யலாம்.
மகாலட்சுமியின் இரு பக்கங்களிலும்
மகாகாளி, மகாசரஸ்வதிக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளது. வெளிப் பிரகாரச் சுற்றுச்
சுவரில் அமிர்த கலசம் கையிலேந்திய தன்வந்திரி சிலை உள்ளது. காளி சந்நிதியின்
வெளிச் சுவரில் 2 அடி உயரத்தில் நான்கு கைகளும், நீண்ட தும்பிக்கையும், இடக்கையில்
எழுது கோல் கொண்டு, பக்தர்களின் வருகையைப் பதிவு செய்யும் ‘சாட்சி விநாயகர்’
சிற்பம், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு. சுற்றுச் சுவரின் சிற்ப அழகு
சிந்தையை மயக்கும். ஆலயத்தினுள் சித்தி விநாயகர், ஸ்ரீராமர், ஹனுமான், துல்ஜா பவானி,
நவக்கிரகம், பாண்டுரங்கன், தத்தர், சனீசுவரன் என்று 35 தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
அன்னைக்கு சாஸ்திர முறைப்படி
பூஜைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. விடிகாலை 4 மணிக்கு அன்னையின் பாத
தரிசனத்துடன் ‘கக்கட ஆரத்தி’ முதல் ‘மங்கள ஆரத்தி’, ‘கற்பூர ஆரத்தி’, ‘போக் ஆரத்தி’,
‘ஷேஜ் ஆரத்தி’ என்று ஐந்து முறை ஆரத்தி நடைபெறுகிறது.
நவராத்திரி இங்கு முக்கிய
திருவிழாவாகும். ஒன்பது நாட்களும் ஒவ்வொருவித அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிப்பது
கண்களுக்கு பெரு விருந்து. ஆலயம் முழுவதும் அப்போது விளக்குகளால்
அலங்கரிக்கப்படும். முதல் நாள் கலச பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு, அஷ்டமி அன்று அன்னை தூங்காமல் ஊர் முழுதும் சுற்றி வந்து,
மறு நாள் ‘தேவி ஸப்தசதி’ பாராயணம், ஹோமம், பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம்
முடிவடையும். அச்சமயம் அம்மனின் தரிசனம் பெற 4, 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க
வேண்டும்.
வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன்
மகாலட்சுமியை வழிபடுமுகமாக, சூரிய ஒளி தேவியின் மேல் விழுவது அரிய காட்சி.
திருமணம், புத்திரப் பேறு, வேலை வாய்ப்பு என்று எதையும் நிறைவேற்றி, பக்தர்களின்
குறை தீர்க்கும் அன்னையின் ஆலயம், மகாலட்சுமி பீடமாகப் போற்றப்படுகிறது. அண்மை
காலத்தில் அன்னையின் அருளைப் படித்தும், கேட்டும் அறிந்து தரிசனத்திற்கு வருபவர்கள்
எண்ணிக்கை லட்சத்திற்கும் மேல் ஆகும். பல கோடி ஆண்டுகள் பழமையான, அபூர்வமான,
அற்புத சக்தி நிறைந்த இவ்வாலயத்தை அனைவரும் வாழ்வில் ஒருமுறை தரிசித்து அன்னையின்
அருளைப் பெற வேண்டியது அவசியம்.
கோலாப்பூரைச் சுற்றிலும் உள்ள
நரசிம்மவாடி, தத்தர் ஆலயம், ராம்லிங்க் மந்திர், ஜோதிபா, கனேரி, திரியம்போலி,
பாஹூபலி, பன்னாலா போன்ற பல இடங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும். இங்கு
தங்குவதற்கும், சுற்றிப் பார்க்கவும் மராட்டிய அரசால் நட்த்தப்படும் ஓட்டல்களும்,
சிறப்பு பஸ் வசதியும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக