Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி


ஞான ஆலயம் செப்டம்பர் – 2000 இதழில் வெளியானது







‘கோலாஸுர பயங்கரீ...’ என்பது மஹாலக்ஷ்மி அஷ்டகத்தில் வரும் அனைவரும் அறிந்த வரி. இந்தக் கோலாஸூரனை அழித்த பயங்கரியான மஹாலக்ஷ்மி குடிகொண்ட இடமே கோலாப்புரி.

இது மஹாராஷ்டிரத்தில் உள்ளது. அசுரனுக்குத்தான் பயங்கரியே தவிர, அணுகும் பக்தர்களுக்கு அவள் செல்வத்தை வாரிவாரி வழங்கும் தயாபரியாக, கருணை மாதாவாக விளங்குகிறாள். மகா சக்தி வாய்ந்த, 6000 ஆண்டுகள் பழமையான கோயிலில் குடி கொண்டுள்ள மகாலக்ஷ்மியை இந்தத் தீபாவளி நன்னாளில் வணங்குவோமே.



‘கர்வீர் நிவாஸிநி’ என்றும் ‘அம்பாபாய்’ என்றும் போற்றப்படும் கோலாப்பூரின், பிரதான தெய்வமான ஸ்ரீதேவி மஹாலட்சுமி மிகவும் வரப்ரஸாதி. தன்னை நாடி வேண்டி வந்தோரை வளமாக்கி, அவர்கள் குறைகளை நீக்கி, மேலும் செல்வத்தை வாரி வழங்கி வாழவைக்கும் அருளன்னை அவள்.

கிட்டத்தட்ட 6000 ஆண்டு பழமையான இவ்வாலயத்தில், 40 கிலோ எடையுள்ள, மிக உயர்ந்த ஒளி பொருந்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட்டு சிலா ரூபத்தில் ஒரு சதுரமான கல்லின் மீது நின்ற திருக் கோலத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அருள் பாலிக்கிறாள். தேவியின் சிரத்தின் மேல் ஆதிசேடன் குடையாக விளங்க, பின்னால் சிம்ம வாகனமும், நான்கு கரங்களும் கொண்டு தாமரையின் மேல் நிற்கிறாள். மேலிரண்டு கரங்களில் கரும்புக் கத்தியும், கேடயமும், கீழிரண்டு கைகளிலும் ஒருவகைக் கனியும், பாத்திரமும் கொண்டு பக்தர்களுக்கு வடக்கு நோக்கி நின்று அருள் பாலிக்கிறாள்.

கோலாசுரன் என்ற அரக்கனை மஹாலட்சுமி நவ துர்க்காக்களின் உதவியுடன், எதிர்த்து அழித்ததால், இவ்வூர் கோலாப்பூர் எனப் பெயர் பெற்றது. இதனால் இந்த அம்பாள் மஹிஷாசுரமர்த்தனியாகப் போற்றப்படுகிறாள். இங்கு நவராத்திரி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாளூம் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிப்பது கண்களுக்குப் பெரு விருந்து.

அகத்தியர் தென்பகுதி யாத்திரை முடிந்து காசிக்குச் செல்லும் சமயம் களைப்பு மேளிட, சிவ பெருமானிடம் முறையிட்டபோது, பரமேசுவரன் காட்சியளித்து கோலாப்பூரை ‘தட்சிண காசி’ என்று கூறி, அங்கு தங்கினாலே அது, உத்தர காசியில் வாழ்ந்ததற்குச் சமம் என்று அருள் புரிய அகத்தியரும், அவர் மனைவி லோபா முத்திரையும் இத்தலத்திலேயே வாழ்ந்ததாக புராண வரலாறு.

இங்கு வாழ்பவர்களுக்கு பஞ்சமா பாதகங்களாகிய கொலை, கொள்ளை, மது அருந்துதல், பசுவதை, பிராமண வதை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. பிருகு முனிவர் ஸ்ரீ நாராயணனின் மார்பில் உதைத்த போது, வெகுண்ட மஹாலட்சுமி கோபித்துக் கொண்டு இங்கு வந்து விட்டதாயும் ஒரு வரலாறு உண்டு. இப்பொழுதும் நவராத்திரி சமயம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து புடவை மற்றும் சீர் வருவது வழக்கத்திலுள்ளது.

மஹாலட்சுமியின் வலப்பக்கம் ஸ்ரீ லக்ஷ்மி யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவியின் இரு பக்கங்களிலும் காளிக்கும், சரஸ்வதிக்கும் சந்நிதிகள் உண்டு. சுற்றுச் சுவரில் அமிர்த பாத்திரம், கையிலேந்திய தன்வந்திரியின் சிற்பம் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் விநாயகர், பாண்டுரங்கன், ஸ்ரீ ராமர், ஹனுமான், துல்ஜா பவானி என்று முப்பது சிறுசிறு சந்நிதிகள் உள்ளன. சனீஸ்வரனுக்கு த்னி சந்நிதி உண்டு,

தினமும் ஐந்து முறை ஆரத்தி நடத்தப்படும் மஹாலட்சுமி கோயிலில் நவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். முதல் நாள் கலச பூஜையுடன் விழா ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி அன்று இரவு அம்மன் தூங்காமல் ஊர் முழுவதும் சுற்றி வருவதாக ஐதீகம். மறு நாள் விடியற் காலை ‘தேவி ஸப்தஸதி’ பாராயணத்துடன் ஹோமம் செய்யப்பட்டு பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம் முடிவடையும்.

வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் மஹாலட்சுமியை வழிபடுமுகமாக, சூரிய ஒளி அம்பாள் மேல் விழும். திருமணம், புத்திரப் பேறு என வேண்டியதை வேண்டிய வண்ணம் நிறைவேற்றும் ஸ்ரீதேவி மஹாலட்சுமிக்கு, வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து புடவை சாற்றுவது மிக அதிகமான வேண்டுதலாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக