Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

அழகு மிளிரும் ஸ்ரீ வீர கோதண்டராமர்


ஞான ஆலயம் ஏப்ரல் 2003 இதழில் வெளியானது




ஸ்ரீ ராமருக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் சிறப்பும், வியப்பும் கொண்டு விளங்கும் திருத்தலம் தில்லை விளாகம் ஸ்ரீவீர கோதண்ட ராமர் ஆலயம். இவ்வாலயம் உள்ள இடமே தண்டகாரண்யம். ஸ்ரீராமர் ராவணனை வென்றபின் சேதுக்கரை வழியே வந்தபோது, இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறுகிறது தல புராணம்.

ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்ட இவ்வாலயத்தின் தல விருட்சம் தில்லை மரம். இங்கு உள்ள புண்ணிய தீர்த்தங்கள் ஹேமபுஷ்கரிணி, ராம தீர்த்தம், ஹனுமன் தீர்த்தம்.

இங்கு போர் முடிந்து வீர கோதண்ட ராம ஸ்வாமியாக கையில் வில் கொண்டு, வலப்புறம் சீதை, இடப்புறம் இளைய பெருமாள், நின்ற திருக்கோலத்தில் அனுமனும் காட்சி தர கண்ணை அள்ளும் அழகோடு காட்சி தருகிறார் பெருமாள்.

இம்மூர்த்தியின் அமைப்பு வியப்பும், அதிசயமுமாக உள்ளது. இறைவனின் கைகள், மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும், விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. வில் ஏந்திய கையின் வளைவு நெளிவுகள் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இறைவனின் அருள் பொங்கும் அழகு நம்மை அகல விடாமல் தடுக்கிறது. மனதில் பரவசம் பொங்குகிறது.

இவ்வாலயத்தில் வீர கோதண்ட ராமர் சந்நிதி மட்டுமே உள்ளது. இந்த மூர்த்திகள் 150 ஆண்டுகட்கு முன் அருகிலுள்ள சிவாலயத்திற்கு அருகில் கிடைத்தனவாம். இங்கு மூலவர் கிடையாது. பெரிய அளவிலுள்ள உற்சவ மூர்த்தியே பிரதான மூர்த்தி. புறப்பாட்டுக்கு சிறிய அளவு சிலைகள் உள்ளன. இதுவும் இத்தலத்தில் மட்டுமே உள்ள விசேஷம்.

அம்பும் வில்லும், அருட்பார்வையும் கொண்டு அழகுற காட்சி தரும் அண்ணல் ராம பிரானை வெண்டி, வணங்கியோர்க்கு, நினைத்ததை நிறைவேற்றுவார் சீதா மணாளன். தூய மனதுடன் வேதாரண்யக் கடலில் நீராடி இவரை வழிபடுதல் சிறப்பு. இங்கு வைகானஸ முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோவிலின் வலப்புறம்ராஜர் கோயில் உள்ளது.

தில்லைவளாகம் ஆலயத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக