Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

கோடைக்கு ஏற்ற வெள்ளரி


சினேகிதி மே 2003 இதழில் வெளியானது




கோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது! வெயிலுக்கு ஏற்ற தாகத்தைப் போக்கும் இயற்கையான நீர்ச்சத்து நிறந்த, ருசியான ஒரு காய்கறியான வெள்ளரியும் நிறைய கிடைக்கும் சீசன் இது! மலிவான இந்த வெள்ளரியில் நோய் தீர்க்கும் பல சத்துக்கள் உண்டு. நூறு கிராம் வெள்ளரியில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?

ஈரச்சத்து – 96.3%
புரோட்டீன் – 0.4%
கொழுப்புச் சத்து – 0.3%
நார்ச்சத்து – 0.4%
கார்போஹைடிரேட் – 2.5%

இதிலுள்ள தாதுக்கள் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், நியாசின், வைட்டமின் சி-7 இதில் அதிகம். அவற்றுடன் பொட்டாசியம், சோடியம், கந்தகம், மக்னீசியம், சிலிகான், குளோரின், ஃபுளோரின் போன்ற மூலகங்களும் கொண்டது.

வாயுத் தொல்லை, குடற்புண், வயிற்றில் அசிடிட்டி ஆகிய நோய்களுக்கு வெள்ளரிக்காய் சாறு அருந்துவதால் விரைவில் குணம் கிடைக்கும்.

நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றை வெள்ளரி குணப்படுத்தும்.

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலுக்கு வெள்ளரி விதையை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரி அழகு சாதனப் பொருளும்கூட! வெள்ளரியைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியன மறைந்து சருமம் பளபளக்கும்.

வெள்ளரித் துண்டுகளை கண்களை மூடி அவற்றின் மேல் வைத்திருந்தால் கண்கள் குளிர்ச்சி அடைந்து பார்வை கூர்மையடையும்.

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, உப்பு, எலுமிச்ச சாறு சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஒரு கப் சாப்பிட்டால் வெயிலின் தாகம், சோர்வு, களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

வெள்ளரி, காரட், பீட்ரூட் இவற்றைச் சீவி மிக்ஸியில் போட்டு அரைத்து அத்துடன் சர்க்கரை, பால் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். தலை முடி நன்கு வளரும்.


இதனை வேகவிடுவதால் இதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் கூடியவரை பச்சையாகவே சாலட், பச்சடி, ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக