Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

புன்னகை என்ன விலை


அவள் விகடன் 02-08-2002 இதழில் வெளியானது




நம் உள்ளத்து உணர்வுகளை ‘பளிச்’சென வெளிக்காட்டுவது நம் முகம். அந்த முகம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்?

ஒரு புன்னகை சிந்த விலையேதும் தேவையில்லை. ஆனால். அந்த ஒரு புன்னகை அவரை பெரிய கூட்டத்திலும் கூட நடுநாயகமாக்கும் தன்மையுடையது.

‘சிடுசிடு’வென்ற முகத்துடன் இருப்பவரை யார்தான் விரும்புவர்? சிரிப்பதற்கு கஞ்சப் படுபவர்கள் பல சந்தோஷங்களை வாழ்வில் இழந்தவர்களாவர். சிரிப்பதற்கு ஆகும் நேரம் சிறிது. ஆனால், அதன் பலனோ மிகப் பெரியது.

வாயால் சொல்லும்வரை காதல் புரிவதில்லை. அது போல் புன்னகை புரியும் வரை அதற்கு மதிப்பில்லை! புன்னகையை விலைக்கோ, கடனுக்கோ வாங்க முடியாது. திருடவும் முடியாது! மோனாலிசாவின் மயக்கும் சிரிப்பை மறக்க முடியுமா?

மருத்துவர் மற்றும் நர்ஸூகளின் பரிவான புன்னகை எத்தனை பெரிய நோயாளியையும் சீக்கிரம் குணமடையச் செய்யும்! காதலர்களுக்கிடையே, தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேறுபாட்டை நிமிடத்தில் விலக்கி, உடைந்த இதயங்களை இணப்பது அன்பான காதல் புன்னகையே!

வரவேற்பாளர்களின் புன்னகை இனிய வரவேற்பு! விற்பனையாளார்களின் புன்னகை அவர்களின் வியாபார உத்தி! சிரித்த முகத்துடன் இருப்பவர்களை உலகில் எவரும் விரும்புவர்.

நிறைவான மனதுடன், மகிழ்ச்சியாக வாழும் மனிதனால்தான் சிரித்த முகத்துடன் உலவ முடியும். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு திருவிழா. அவர்களோடு பேசுபவர்களுக்கும், பழகுபவர்களுக்கும் கூட அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

மனம் நிறந்த மகிழ்ச்சியால் மலரும் புன்னகை எவரையும் வசப்படுத்தும் சின்னப் புன்னகை பெரிய காரியங்களைக்கூட நிறைவேற்றும்.

நம் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.


நாம் எந்த விஷயத்தையும் எப்படி அணுகுகிறோமோ, அதன்படிதான் விளைவுகளும் இருக்கும். நம் முகத்தின் ஒரு சின்ன வளைவு, பல பிரச்சினைகளை நேராக்கும் தன்மையுடையது. எந்த விஷயத்துக்கும் கோபப்படாமல், சிடுசிடுக்காமல், மலர்ந்த முகத்துடன் காணப்படுவது ஒரு சிறந்த கலை. அதற்கு நல்லெண்ணெங்கள், கடவுள் நம்பிக்கை, திருப்தியான மனநிலை ஆகியவை அவசியம். ‘நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் நம் ஆயுள் கூடுவதாக’க் கூறப்படுவதால், இன்று சிரிப்பதற்குக் கூட சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் மனம் திறந்து மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுங்கள். அனைவரும் உங்களை விரும்புவர். பிறர் சிரிக்கும்படி வாழாமல், சிரித்து வாழுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக