Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

தங்கள் வரவு நல்வரவாகுக

அவள் விகடன் 10.05.2002 இதழில் வெளியானது





உங்கள் உறவினரோ, நண்பரோ உங்களை விருந்துக்கு அழைத்துள்ளார்களா? சந்தோஷமான சமாசாரம்தான்! அவர்கள் வீட்டில் நாம் நடந்து கொள்ளும் முறை நட்புக்குப் பாலமாக அமைய வேண்டியது அவசியமில்லையா? அவர்கள் சந்தோஷப்பட்டு அடிக்கடி வாங்க! என மனமுவந்து சொல்லும்படி நடந்து கொள்ள இதோ சில டிப்ஸ்:

போகும்போது பழங்கள், இனிப்பு, பிஸ்கட் என்று ஏதாவது வாங்கிச் செல்லுங்கள். என்னதான் வருந்தி அழைத்தாலும் வெறும் கையுடன் போகாதீர்கள். ‘ஐயோ, எதுவும் வாங்காமல் வந்து விட்டேனே?’ என்று ஆக்ட் கொடுப்பது இன்னும் தப்பு!

அழைத்த நேரத்துக்கு முன் போக வேண்டாம். தாமதமும் தவறு. இரவு விருந்து என்றால் இன்னும் கவனம். மறு நாள் அவர்கள் பள்ளி, அலுவலகம் செல்ல, ரெடியாக அவகாசம் தேவைப்படலாம். இரவு 9 மணிக்கு மேல் சென்று விருந்து முடிய 11 மணி ஆகி, அவர்கள் அலுத்துக் கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டாம்.

அழைத்தவரின் வீட்டருகில் நமக்கு தெரிந்த நண்பரோ, உறவினரோ இருக்கலாம். ‘அவங்க வீட்டுக்கு போய் எட்டிப் பார்த்துட்டு வந்துர்றேன்’ என்று போய், இலை போடும்வரை அங்கு அரட்டை அடித்துவிட்டு வருவது மகா பாவம், ‘ஏதாவது உதவி செய்ய வேண்டியிருக்குமோ?’ என நீங்கள் தப்பித்து ஓடுவதாக அவர்கள் நினைக்ககூடும்! அது மரியாதைக் குறைவும் கூட.

உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத அயிட்டங்கள் பற்றி முன்னரே அவர்களிடம் சொல்வதில் தவறில்லை. உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்காத காலிஃப்ளவரில் அவர்கள் அமர்க்களமாக சமைத்து வைக்க, குழந்தைகள் சாப்பிடாமல் வீணாக்கும்போது அவர்களுக்கு நஷ்டம்; நமக்கும் கஷ்டம். இன்றைய விலை வாசியில் எதையும் வீணாக்குவது கிரிமினல் குற்றம் மாதிரி!

நீங்கள் செய்யும் பிஸிபேளாஹூளியோ, சர்க்கரைப் பொங்கலோ அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், அதை நீங்களே கொஞ்சம் செய்து அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர், யார் வீட்டுக்குச் சாப்பிடப் போனாலும் அவர்களுக்குப் பிடித்த ஒரு அயிட்டத்தை செய்து எடுத்துச் செல்வார்.

சமையலில் குறை இருந்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் இருப்பதுதான் பண்பு. ருசியாக ஸ்பெஷலாக இருந்த அயிட்டங்களைப் பாராட்டி, அவற்றின் செய்முறையைக் கேட்டுக் கொள்ளலாம். வாயால் பாராட்ட காசு பணம் செலவு இல்லையே!

சாப்பிட்டு முடிந்ததும் ஹாயாக ஹாலில் டி.வி. முன் உட்காராமல் டைனிங் டேபிள், சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்ய ஒத்துழைக்கலாம். அவர்கள் தடுத்தாலும், உதவி செய்து, ‘அவர்களைப்போல் நல்ல நண்பர்கள் உண்டா?’ என்று பிறரிடம் உங்களைப் பாராட்ட அடித்தளம் போடுங்கள்!


கடைசியாக ஒரு வார்த்தை விருந்துக்கு சென்று வந்ததோடு மறந்துவிடாமல் போன் செய்து அல்லது ஒரு தேங்க்ஸ் கார்டு போட்டு நன்றி தெரிவியுங்கள்!


3 கருத்துகள்:

  1. ஆஹா ! தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு உள்ளன !!!!! நானும் இதைப்படித்துவிட்டு வியந்ததுடன் என் ஆத்துக்காரியிடமும் ஒருமுறை படித்துக்காட்டினேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். இதிலுள்ள எல்லா நற்குணங்களும் அமைந்த தாங்கள் இதை எழுதியுள்ளதுதான் மிகவும் பொருத்தமே.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ஏன் சார்..நீங்க மட்டும் விருந்தோம்பலில் குறைந்தவரா என்ன?

    பதிலளிநீக்கு