Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

தீபாவளியே வருக !







ஞான பூமி தீபாவளி மலர் 2003 – October Supplement

கடந்த 2000 ஆண்டுகட்கும் மேலாகப் பண்பாடு, கலாச்சாரத்தின் அடிப்படையில் பாரதத்தில் மட்டுமின்றி, மலேயா, சீனா, ஜப்பான், நேபாளம் என பலநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீப + ஆவளி என்பதே ‘தீபாவளி’ ஆனது. இதற்கு தீபங்களின் வரிசை என்று பொருள். அதனாலேயே வடநாடுகளில் தீபாவளியன்று மாலை வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர். நேபாளத்தில் ஐந்து நாள் தீபத் திரு நாளாகவும், சைனாவில் தீய சக்திகளை எதிர்க்கும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜப்பானியர்கள் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர். சீக்கியர்கள் குரு கோவிந்தசிங் ஔரங்கசீப்பிடமிருந்து விடுதலை பெற்று அமிர்தசரஸூக்கு வந்த  நாளாகவும், சமணர்கள் மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளாகவும் கொண்டாடுவர்.

குவாலியரைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் தம் வீரர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தும் நாளாகவும், வைணவர்கள் திருமகள் மாலவனை மணந்த நாளாகவும் கொண்டாடுவர்.

தீபாவளி நம் நாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

தீபாவளிக்கு முதல் நாள் ‘தந்தே ராஸ்’, ‘தன திரதோயசி’, ‘தன்வந்திரி ஜயந்தி’ என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த 14 பொருட்களில் தன்வந்திரியும் ஒருவர். அவர் அமிர்தத்தில் தனக்கு பங்கு கேட்க, திருமால், ‘நீ திருமேனி பெற்றிருப்பதால் உலகில் ஆயுர்வேதத்தை செழிக்கச் செய்து பெயர் பெறுவாய்’ எனக் கூற அந்த நாளே ‘தனத்ரயோதசி.’

இதற்கு இன்னொரு கதையும் உண்டு. ஹிமா என்ற அரசனின் மகன் மணமான நாங்கு நாளில் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்பது அவனது ஜாதகக் கூற்று. அது அறிந்த அவன் மனைவி அன்று இரவு அவனைத் தூங்க விடாது அவனது படுக்கையறை முழுதும் அவளது தங்க நகைகள், வெள்ளிக் காசுகளை பரப்பி, ஏகப்பட்ட விளக்குகளை ஒளிர விட்டாள். இனிய பாடல்களைப் பாடினாள். அச்சமயம் பாம்பு உருவில் வந்த யமன் அந்த ஒளியினால் கண்கள் கூச, மலைபோலிருந்த நாணயங்களில் ஏறிச் செல்ல முடியாது, இசையில் மயங்கி, மறு நாள் திரும்பிச் சென்று விடுகிறான். இவ்வாறு அந்த மதியூகியான இளம் மனைவியின் செயலால் இளவரசன் காப்பாற்றப்பட்டான். அது முதல் தீபாவளிக்கு முந்தைய நாள் ‘யமதீபதான்’ என்ற பெயரில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது. இதனால் யமபயம் நீங்கும்.

இரண்டாம் நாள் ‘நரக சதுர்த்தசி’. ‘சோட்டி தீபாவளி’ என்று அழைக்கப்படுகிறது.

துவாபர யுகத்தில் பூதேவியின் புதல்வன் நரகாசுரன் பதினாறாயிரம் கன்னியரை சிறை வைத்தும், இந்திரனின் தாய் அதிதியின் கர்ண குண்டலங்களைக் கவர்ந்து செல்ல, தேவர்கள் முறையீட்டுக்கு இரங்கிய ஸ்ரீகிருஷ்ணன், தேவி சத்யபாமாவுடன் நரகனின் ஊரான ப்ராக் ஜோதிவும் மீது போர் செய்து கொன்றார். வெற்றித் திலகத்துடன் விடிகாலை திரும்பிய கிருஷ்ணனை தாதியர் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டதால் விடியற்காலை சூரியோதயத்துக்கு முன் குளிக்க வேண்டும் என்பது வழக்கம்.

சோகத்திலேயே பெரிய புத்திர சோகத்தை அடைந்த பூதேவி தன் மகன் கிருஷ்ணன் கையால் மோட்சம் பெற்றதால் மகிழ்ந்து, உலகத்திலுள்ளோர் நரகாசுரன் இறந்த நாளாய்க் கொண்டாடும் விதமாக விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு கொண்டாட வேண்டுமென பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.

நாம் துன்பப்பட்டாலும் உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம்.

தீபாவளியன்று லட்சுமி கங்கை நீரிலும், எண்ணெயிலும் இருப்பதால் அன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்ததாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று காலை யம தர்ப்பணம் செய்தால் யமதர்மன் திருப்தியடைந்து, நாம் ஒரு வருடம் செய்யும் பாபம் விலகுவதாக ஐதீகம்.

மூன்றாம் நாள் மார்வாடிகள், மற்றும் பல வட நாட்டினர் லக்ஷ்மி பூஜையை மாலையில் செய்வர். வாமன அவதாரம் எடுத்து மகா விஷ்ணு, பலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி, அவனை அழித்து அவன் சிறப்படுத்தி வைத்திருந்த லக்ஷ்மி தேவியை விடுவித்தார். அந்த நாளே வணிகர்கள் லக்ஷ்மி பூஜை செய்யும் நாளாயிற்று.

அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வழக்கம். உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரும் ஆண்டு லாப ஆண்டாக இருக்க லக்ஷ்மி தேவியை வரவேற்று, பிரார்த்தனை செய்வர்.

பார்வதி தேவி, சிவபெருமானுடன் தாயக்கட்டம் ஆடிய நாள் அது என்பதால் அன்று கண்டிப்பாக சூதாட்டம் ஆடுவது பல வட நாடுகளில் வழக்கமாயுள்ளது. அன்று இரவு சூதாட்டம் ஆடுவதால். அவ்வருடம் முழுதும் சுபிட்சமாக இருக்குமென்பது அவர்கள் நம்பிக்கை.

நான்காம் நாள் ‘பல்ப்ரதிபாதா’, ‘பலிபத்யாமி’ என்று கொண்டாடப்படுகிறது. பலியை மூன்று அடியால் பாதாள லோகத்தில் அழுத்தி அழித்த விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, அடுத்த பிரதமை அன்று வந்து அவனது அறிவு ஒளியால், உலகின் அஞ்ஞான இருட்டை அழிக்க அனுமதித்ததால், அன்று பல இடங்களில் பலிச் சக்கரவர்த்தி வழிபாடு செய்து, கோ பூஜை செய்வர்.

ஐந்தாம் நாள் ‘பாவ்பீஜ்’ என்ற பெயரில் சகோதர, சகோதரிகளுக்குள் நெருக்கம் ஏற்படுத்தும் நாள். இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு.

எமன் தன் தங்கை யமுனாவிடம் மிகவும் பாசம் கொண்டிருந்தாலும் அவளைக் காண அடிக்கடி வருவதில்லை.

தீபாவளிக்குப் பிறகு வரும் துவிதியை அன்று அதிசயமாக வந்த அண்ணன் யமனை வரவேற்ற யமுனை ஒவ்வொரு ஆண்டும் தன்னைக் காண அந்த நாளில் வருவதுடன் உலகில் எல்லா சகோதரர்களும் தங்கள் சகோதரிகளின் வீட்டுக்கு சென்று உபசரணைகளை ஏற்க வேண்டும். அவர்களுக்கு யமபயம் இருக்கக் கூடாது என வேண்டுவார்கள். அதனாலேயே அன்று சகோதரர்கள் தம் சகோதரிகள் வீட்டுக்குச் சென்று விருந்துண்ணும் பழக்கம் ஏற்பட்டது.

அன்றுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உலகுக்கே வேதமான ஸ்ரீமத் பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்த நாள்.

மஹாவீரர் நிர்வாண நிலை அடந்த நாள். உண்மையைத் தேடி அலைந்த நசிகேதன் யமனை சந்தித்து மரணத்தை வெல்லும் வழி கேட்க, ‘இறைவனைப் பற்றிய விழிப்பு நிலை பெறும்போதே, உனக்கு ஜனன, மரண பந்தம் விலகி முக்தி கிட்டும்’ என எமன் போதித்த நாளும் இதுவே.

மற்ற மாநிலங்களில் இரண்டு முதல் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி நம் தமிழ் நாட்டில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் செய்வது நம் தமிழ் நாட்டு வழக்கம். தேவி பார்வதி இந்த விரதத்தை நோற்றே, இறைவன் உடலில் பாதி பெற்றதால் இதைச் செய்யும் பெண்கள் கணவருடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

நாமும் தீபாவளியை இறைவனைத் துதித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்!





2 கருத்துகள்:

  1. தீபாவளி போல படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ஞானபூமி 2003ல் தோன்றியுள்ள ஞானத்தங்கத்திற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இனிமையான உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு