Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

மும்பையில் ஸ்ரீ சனிபகவான்

ஞான ஆலயம் மே, 2004 இதழில் வெளியான கட்டுரை


நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு தனிப்பட்ட ஆலயங்கள் இருப்பது அரிது. தமிழ் நாட்டில் திருநள்ளாறு, குச்சனூர் போல், மகாராஷ்டிராவில் சீரடிக்கு அருகிலுள்ள சனி சிங்கணாப்பூர், சனி வழிபாட்டிற்கு சிறப்பான தலம். இங்கு சனி பகவான் உருவமில்லாது உயர்ந்த பாறை வடிவில் காட்சி தருகிறார். மும்பையிலும் சனி பகவானுக்கு சில சிறிய ஆலயங்களும், சன்னதிகளும் உள்ளன.

ஆனால் சனி பகவான் தன் பக்தர் ஒருவர் கனவில் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்பச் செய்து, அவர் மூலமாகவே ஆலயம் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அற்புதமான, சிறிய ஆலயம் ஒன்று செம்பூர் பஞ்சராபோலே என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இருபது வருடங்களுக்கு முன்பு, செம்பூரைச் சேர்ந்த ராமஸ்வாமி என்ற தையல்காரரின் தாயார் இறந்துவிட, காரியங்களைச் செய்ய அவர் கர்நாடகா சென்றார். திரும்ப மும்பை வரும் உத்தேசம் அவருக்கு இல்லை. தாயின் மேல் அதிக அன்பு கொண்ட அவரால், தாயின் இழப்பைத் தாங்க முடியவில்லை. பதின்மூன்று நாட்களுக்கான காரியம் முடிந்த அன்று, இரவு அவர் கனவில் சனீஸ்வர பகவான் காட்சியளித்தார்.

‘நீ திரும்ப மும்பை சென்று உன் கடையிலிருக்கும் என் புகைப்படத்தை வைத்து எனக்கு ஒரு ஆலயம் உருவாக்கு’ எனக் கட்டளையிட்டார். ஒன்றும் புரியாத ராமஸ்வாமி இக்கனவு பற்றி அவரது குருவிடம் கேட்க அவரும், ‘உனக்கு சனீஸ்வர பார்வை பட்டுள்ளது. அவர் அருளியபடியே செய்’ என்றார்.

உடன் மும்பை திரும்பியவர் தன் கடையின் ஒரு பகுதியில் சனீஸ்வர பகவானின் புகைப்படத்தை வைத்து 1993ஆம் ஆண்டில் ஒரு சிறிய ஆலயத்தை நிர்மாணித்தார். தானே முறைப்படி பூஜித்து, ஆலயம் வரும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்து வந்தார். நாளடைவில், அவர் சொன்னது சொன்னபடி நடக்க ஆலயம் பிரபலமாகியது. பக்தர்களின் நன்கொடையும், ஈடுபாடுமே இன்றைய அழகிய ஆலயத்தை உருவாக்கக் காரணம். 1987ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் திரைப்பட நடிகர் திரு தர்மேந்திரா அவர்கள் முன்னிலையில், சனி பகவானின் உருவச் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.

இங்குள்ள ஆறடி உயர ஸ்ரீ சனி பகவானின் உருவம் கருப்புக் கல்லினால் ஆனது. காக வாகனத்துடன் கைகளில் ஆயுதங்களும், வலக் கீழ்க்கை அபய ஹஸ்தமாயும் காட்சி தரும் சனி பகவானின் கண்களின் தீர்க்கம் நம் மனதை என்னவோ செய்கிறது. ‘சனிப்பார்வை’ என்பது இதுதானோ?

இவ்வாலயத்தில் சனிக்கிழமை தோறும் ஒரு அற்புதம் நடக்கிறது. குரு ராமஸ்வாமி அவர்கள் மேல் சனீஸ்வர பகவான் ஆட்கொண்டு, தம் குறைகளை சொல்லும் பக்தர்களுக்கு, நல்வாக்கும் பரிகாரமும் சொல்கிறார். மாலை ஆறு மணிக்கு காவி நிற உடையுடன் சனி பகவானுக்கு ஆரத்தி காட்டும் குருஸ்வாமிக்கு, அப்பொழுதே சனி பகவானின் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவர் ஆரத்தி சுற்றும் வேகமே நம்மை பிரமிக்க வைக்கிறது. அவர் முகமும் மாற்றமடைந்து விடுகிறது. அந்த நிலையில் அவர் அணிவது இரும்பு ஆணிகளாலான செருப்பை (சனி பகவானுக்கு ஏற்ற உலோகம் இரும்பு), உட்காரும் நாற்காலியும் முழுவதும் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டது. இதில் அவர் அமர்ந்தபடியே நல்வாக்கு அருள்கிறார்.

சனிக்கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கேள்வி கேட்க விரும்புவோர் 2 எலுமிச்சம் பழங்களுடன் வரவேண்டும். அத்தனை பேரையும் அவர் குறிப்பிட்டு அழைத்து அவர்களின் குறைகளைப் பொறுமையாகக் கேட்டு அதற்கு பரிகாரமும் சொல்கிறார்.

‘உன் கவலைகள் என்னுடையவை. நீ தைரியமாகச் செல், எல்லாம் நன்றாக நடக்கும்’ என்று அவர் மூலமாக சனீஸ்வர பகவான் சொல்வதைக் கேட்கும்போதே நம் துன்பங்கள் பறந்தோடி விட்ட நிம்மதி ஏற்படுகிறது. இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை.


‘ஆலயம் சிறிது; மகிமை பெரிது’ என்பது போல் மும்பையின் ஜன நெருக்கடி அதிகமான மையப் பகுதியான செம்பூர் பஞ்சராபோலே என்ற இடத்தில் ஆர்.கேஸ்டூடியோவுக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக