Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

திலகம்

சிநேகிதி மே 2004 இதழில் வெளியானது





திலகம், பிந்து, பொட்டு என்றெல்லாம் அழைக்கப்படும் நாம் நெற்றியில் இடும் அந்த அழகிய குறி, ஆண்-பெண் இருபாலருமே அவசியம் அணிய வேண்டுமென்பது ஆதிகாலம் முதல் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

இரண்டு விழிகளுக்கு இடைப்பட்ட பாகத்தில் ‘ஆக்ஞா சக்கரம்’ என்ற ‘அறிவு நிலை’ காணப்படுவதால், அங்கு அணிகலனாக திலகம் இடவேண்டியது அவசியம் எனப்படுகிறது.

‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பதேற்கேற்ப, பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்தனம், விபூதி, கோபி சந்தனம் போன்றவற்றை அவரவர் குல வழக்கபடி அணிய வேண்டும். அது முகத்திற்கு ஒரு தெய்வீகக் களை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

ஆரிய நாகரிகத்திலிருந்து பெண்கள் திலகமிடும் வழக்கம் ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. ஆரியர் காலத்தில் பெண்கள் பூமித் தாய்க்கு சமமாகப் போற்றப்பட்டனர். உயிர்களை பலி கொடுத்த பின்பே அறுவடையை ஆரம்பிக்கும் அந்நாளில், அந்த இரத்தத்தை எடுத்து தன் மனைவி நெற்றியில் இடும் வழக்கம் அன்று இருந்ததாகத் தெரிய வருகிறது. பின்னாளில் உயிர் பலி நின்று விட, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனத்தால் உருவாக்கப்பட்ட மணமுள்ள, சிவந்த நிற களிம்பை நெற்றியில் அணியும் வழக்கம் ஆரம்பமாயிற்று.

வட நாட்டுப் பெண்கள் திருமணத்திற்குப் பின்பே பொட்டு வைத்துக் கொள்வர். நெற்றியைவிட அவர்களுக்கு வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிந்தூர் மிக முக்கியமானது. தென்னிந்தியாவில் திருமணத்திற்கு முன் எந்த வண்ணத்திலும் திலகம் இட்டுக் கொண்டாலும், திருமணத்திற்குப் பின்பு சிவந்த வட்ட வடிவ திலகமே வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அந்நாளைய வழக்கம்.

இன்று வட்ட வடிவம் மாறி பல நிறங்கள், வடிவங்கள், அளவுகளில் பெண்களின் நெற்றியில் பொட்டுகள் மின்னுகின்றன. எதையும் உயர்வாகப் பேசும்போது, ‘திலகம் போல திகழ்வதாக’ உவமை கூறுவதுண்டு. அது போல் பெண்களின் அலங்காரமும், திலகமின்றி சோபிக்காது, முழுமையும் அடையாது.

பெண்ணுக்கு முக்கிய அணிகலன்களாகக் கூறப்படும் 16 வகை அணிகளில் திலகத்திற்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. இந்நாளில் புடவைகளின் நிறத்துக்குப் பொருத்தமாகத் திலகங்கள் வைத்துக் கொள்வது நாகரிகமாகி விட்ட்து. மணி, கற்கள், ரத்தினங்கள் வைக்கப்பட்ட பொட்டுகள் தற்காலத்தில் 5 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திருமணம் போன்ற விசேஷங்களில் இந்த வகை டிசைன் பிந்திகள் நெற்றியில் மட்டுமின்றி, புருவம், கைகள் மற்றும் கழுத்தையும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன.

குறுகலான நெற்றியையுடையவர்கள் சிறிய வட்டப் பொட்டுகளை வைத்துக் கொள்ளலாம், நீள் வடிவ, திலகம் போன்ற பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

அகன்ற நெற்றியுடையவர்கள், மிகவும் கீழே பொட்டு வைக்காது சற்று மேற்புறமாகப் பொட்டு வைத்துக் கொண்டால் நெற்றி அகலத்தை குறைவாகக் காட்டும்.


மங்கலத் தோற்றத்தையும், எதிராளியை வசீகரிக்கும் தன்மையையும் கொண்ட சுத்தமான மஞ்சளால் செய்யப்பட்ட குங்குமம் நெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பலதரப்பட்ட டிசைன்களில் பொட்டுகளை வைத்துக் கொண்டாலும், அவற்றின் கீழே குங்குமம் இட்டுக் கொள்வது முகத்திற்கு தனி அழகையும், கவர்ச்சியையும் தரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக