ஆடி பிறந்து விட்டாலே வரிசையாக
பண்டிகைகள் ஆரம்பித்துவிடும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்ததாகும். ஆடிப் பதினெட்டு
காவேரி அம்மனுக்கு விசேஷமான நாள். ஆடிப்
பூரம் ஆண்டாளுக்கு உரியது. ஆடியின் அத்தனை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும்
அம்மனுக்கு விசேஷமான நாட்கள். அதற்கு ஏற்றாற் போல் ஒரு வெள்ளிக் கிழமை வரலட்சுமி
நோன்பாகிவிடும்.
வீடுகளில் மட்டுமின்றி,
ஆலயங்களிலும் ஆடி மாதத்தில் சிறப்பான உற்சவங்களும், திருவிழாக்களும், சிறப்பான
அலங்காரங்களும் நடைபெறும். ஆடிப் பூரத்தன்று பெண்கள் அம்மனுக்கு வளையல்
சாற்றுவதால் அன்பான கணவன், அழகான குழந்தை, தீர்க்க சௌமாங்கல்யம் பெறலாம்.
ஆடிப் பெருவிழாவை மிகப் பெரிய
திருவிழாவாகக் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல நன்மைகளையும் தரும்
தெய்வமே பெரிய பாளையத்தம்மன் எனும் ஸ்ரீபவானி அம்மன். சென்னையில் திருவள்ளூருக்கு
அருகே வடக்கில் பெரிய பாளையத்தில் அகம் மகிழ்ந்து உறைகிறாள் அன்னை பவானி.
எப்பொழுது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியாத இவ்வாலயம், சதாசிவ முனிவர்,
பகீரதனைப் போல் தவம் செய்து பூமிக்கு வரவழைத்த ஆரணி ஆற்றுக் கரையின் மேற்கே
உள்ளது.
பெரிய பாளையத்தம்மன் என்ற பெயரில்
இங்கு அம்மன் குடி கொண்ட வரலாற்றைப் பார்ப்போம். கிருஷ்ணாவதாரத்தின்போது சிறையில்
தேவகிக்குப் பிறந்த கண்ணன், தன்னை கோகுலத்தில் உள்ள யசோதையின் வீட்டில் விட்டு, அங்குள்ள
மாயை எனும் பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் கொடுக்கச் சொன்னார்.
வசுதேவரும் அவ்விதமே செய்ய, குழந்தை பிறந்த செய்தியை அறிந்த கம்சன், “இந்தப்
பெண்ணா என்னைக் கொல்லப் போவது? இதோ இப்பொழுதே இவளைக் கொல்வேன்” என்றபடி அச்சிசுவை
வானில் எறிந்து பாறையில் மோத முற்பட, சக்தியின் தமோ குணம் பெற்றவளும், தவம்,
மோகம், அவித்தை, அனித்தம் ஆகியவற்றால் உண்டாகும் ஆற்றலும், உயிரினங்களின் துன்பம்
போக்கும் ஆற்றலும் கொண்ட அந்த மாயை கம்சனை நோக்கி, “கம்சனே! உன்னைக் கொல்ல
உதித்தவன் பேராற்றல் மிக்கவன். நந்தகோபன் மனையில் வளரும் அந்த மாமாயன் உன்னை
அழிப்பான்” என்று கூறி, அங்கிருந்து அகன்று பெரியபாளையம் வந்து பவானி அன்னையாக
அமர்ந்தாள் என்பதே தல புராணம்.
சிறிய கோயிலாக இருந்து அன்னையின்
அருளால், பல பக்தர்களின் வரவால், இன்று பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது. இங்கு
காட்சி தரும் அன்னையின் உருவம் வித்தியாசமானது. அன்னை பவானி அரை உருவுடன், வலது
மேற்கையில் சக்கரமும், இடப்புறம் சங்கும் ஏந்தி, வலப்புற கீழ்கையில் வாளும்,
இடக்கையில் அமிர்த கலசமும் கொண்டு, ஐந்து தலை நாகம் சிரசை அலங்கரிக்க,
கர்ப்பக்கிரஹத்தில் உயர்ந்து காட்சியளிக்கும் கோலம் கண்களை நிறைக்கிறது.
சுயம்புவான அன்னையின் தோற்றம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அன்னையின் சன்னிதியில் நிண்று
கண்களை மூடினால் நம் கவலைகள், துன்பங்கள் அனைத்தும் தூசாகிப் போய் மனம்
நிச்சலனமடைவதை நன்கு உணர முடிகிறது. அன்னையின் கண்களில் காணும் கருணை இம்மாய
உலகையே மறக்கச் செய்கிறது, உலக மாயையிலிருந்து நம்மை விடுபடச் செய்யவே மாயையாகிய
அன்னை இவ்விடம் கோயில் கொண்டுள்ளாள் போலும். அன்னையின் உருவத்தின் முன் சிறிது
பள்ளமான இடத்தில் குழவி வடிவில் காட்சி தரும் சுயம்புவிற்கே அபிஷேகம், அர்ச்சனை
ஆகியவை நடைபெறுகிறது. சுயம்புவான அம்மனுக்கு சிரசில் நாகம் தாங்கிய வெள்ளி முகக்
கவசம் சாற்றி அலங்காரம் செய்தபின் காணும் அன்னையின் தரிசனம், மெய் சிலிர்க்க
வைக்கிறது.
அன்னையின் தரிசனம் தீராத நோய்களைத்
தீர்த்து வைக்கும். பிள்ளைச் செல்வம் தரும். அண்டியவர் துன்பங்களைப் போக்கி
நல்வாழ்வு தரும் பவானி அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணிந்து ஆலய ப்ரதட்சணம் செய்வதே
சிறந்த வேண்டுதல். வேண்டியது நிறைவேறியபின், வேப்பிலை ஆடையுடன் ஆலயம் வலம் வரும்
பக்தர்களை அதிகம் காண முடிகிறது. அன்னை மேல் சாற்றிய மஞ்சளும், அபிஷேக நீரும்,
தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையது.
ஆண்டு தோறும் இவ்வாலயத்தில்
நடைபெறும் ஆடிப் பெருவிழா மிகப் பிரசித்தமானது. ஆடி முதல் ஞாயிறு தொடங்கி 14
ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து நடைபெறும். இவ்விழாவில் பத்தாவது ஞாயிறு மிக
விசேஷமானதாகும். அன்று சூரிய பகவான் அம்மனை சிரத்திலிருந்து பாதம் வரை தொழுவதைக்
காண கண் கோடி வேண்டும். இதனைத் தரிசித்து தம் தீவினையைப் போக்கிக் கொள்ளவே
பெரும்பாலான பக்தர்கள் அன்று வருவார்களாம். சென்னையில் வாழும் மீனவப் பெண்கள் தம்
கணவர் கடல் மீது சென்று நலமுடன் திரும்பி வர வேண்டி, ஆடிப் பெருவிழா சமயம்
அன்னைக்கு தன் தாலியை காணிக்கையாக்கி, புதுத்தாலி தம் கணவர் கையால் அணிந்து
கொள்வதை பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
அன்னை பவானி பக்தர்க்கு அருள்
புரிந்த திருவிளையாடல்கள் பலப்பலவாம். இவ்வாலய பரம்பரை அறங்காவலர் திரு பி.எஸ்.
சேதுரத்தினம் உடல் நிலை சரியில்லாதபோது பவானி அன்னை கனவில் வந்து தன்னை
தரிசிக்கும்படி கூற, அவரும் மாதம் ஒரு முறை பெரியபாளையம் சென்று தரிசித்து நோய்
நீங்கியதுடன், அன்னை அருளால் அவள் மேல் பல துதிப்பாடல்களையும் எழுதி புத்தக
வடிவில் வெளியிட்டுள்ளார். மக்கட் செல்வம் வேண்டி வழிபடுவோரை மகாசக்தி
கைவிடுவதில்லை. வேப்பிலை ஆடையுடன் அன்னையின் ஆலயத்தை வலம் வந்தால் வேண்டியதை உடன்
நிறைவேற்றுவாள் பவானித் தாய். பலருக்கு குல தெய்வமாய் விளங்கும் பெரிய
பாளையத்தம்மன் பெயரைச் சொன்னால் சீறி வரும் நாக தேவன் மறைந்து விடும் அதிசயம்
இன்றும் நடக்கின்றதாம்.
ஆலய வெளிப் பிரகாரத்தில் ‘சக்தி
மண்டபம்’ என்ற பெயரில் உள்ள சந்நிதியின் முன் அமர்ந்து நமக்கு வேண்டியவற்றை எண்ணி
சில நிமிடங்கள் தியானம் செய்தாலே நினைப்பது நிறைவேறும். அங்குதான் ஆதிபவானி
தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்ரபதி சிவாஜி அவ்வழியே சென்ற சமயம் தன் இஷ்ட
தெய்வமான பவானி சிலையுடன் சென்றதாகவும், அவ்விடத்தில் அம்மனை வைத்துவிட்டு
களைப்பாறிய பின் திரும்ப அன்னையை எடுக்க முயற்சித்தபோது, அன்னை அசரீரியாக, தான்
அவ்விடத்திலேயே கோயில் கொண்டு பக்தர்களின் குறை தீர்க்கப் போகின்றேன் என்று
சொன்னதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ள ஒரு
புற்றுக் கோயிலும் பவானி ரூபமாகவே கருதப்படுகிறது. புற்று தினமும் வளர்ந்து
வருவதாகக் கூறுகிறார்கள். சுமார் ஏழடி உயரப் புற்று – காணும் போதே நம்மை மெய்
சிலிர்க்க வைக்கிறது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்
கிழமைகளில், தைப் பூசம், ஆடிப் பெருவிழா போன்ற நாட்களில் பக்தர்களின் பரவசக்
கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பெரிய இடர்களை சிறிதாக்கி, அதனையும் இல்லாதாக்கும்
பெரிய பாளையம் பவானியம்மனை தரிசிக்க சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள்
செல்கின்றன. சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை, திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள்
பெரிய பாளையம் வழியாகச் செல்லும்.
சென்னை அடையாற்றிலும், மேற்கு
மாம்பலம் துரைசாமி சப்வே அருகிலும் பெரிய பாளையத்தமனுக்கு ஆலயங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக