“ஹாய் மாலா! என்ன அடையாளமே தெரியாம
பெருத்துட்டியே, காலேஜ் நாளில் இருந்த மாலாவா நீ?”
“ஜானு! நீ பின் சீட்டில்
உட்கார்ந்ததும் ஸ்கூட்டரே அமுங்கி விட்டது பார்!”
அம்மா! உன்னைப் பார்க்க எதிர்த்த வீட்டு குண்டு ஆண்ட்டி வந்திருக்காங்க!”
இது போன்ற பேச்சுக்களை அவ்வப்போது
கேட்க நேரும் 35 முதல் 40 வயதிருக்கும் பெண்மணியா நீங்கள்? நிதானமாகக் கண்ணாடியில்
பார்த்தபோது, இத்தனை நாள் தெரியாத பருமன் இப்பொழுது விசுவரூபமெடுத்து தெரிகிறதா?
உங்களுக்கு மட்டுமல்ல, பல பெண்களின் பெரிய பிரச்சினை இது.
பாபா பட்த்தில், குடும்பப் பெண்கள்
அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளில் என்னென்ன யோகாசன முறைகள் அடங்கியிருக்கின்றன
என்ற ஒரு வசனம் வரும். அது சினிமாவுக்கான சமாச்சாரம் அல்ல. உண்மையிலேயே பெண்கள்
சிந்திக்க வேண்டிய விஷயம்.
அக்காலப்
பெண்மணிகள் குனிந்து பெருக்கி, துடைத்து, அம்மி, கல்லுரலில் அரைத்து, துணி
துவைத்து, வாசல், முற்றம், கொல்லை என்று நிறைய நடந்து... அடேயப்பா! எத்தனை
உடற்பயிற்சிகள்? அதனால்தான் அன்று பெரும்பாலான பெண்மணிகள் அளவான, அழகான,
ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருந்தார்கள். இன்றோ எல்லாவற்றிற்கும் மிஷின். கொரிக்க,
குடிக்க ‘ரெடிமேட்’ ஸ்நாக்ஸ், பானங்கள்! சதா நேரமும் டி.வி.யின் ‘மெகா சீரியல்’கள்
முன் ஆசனம்! இன்றைய முக்கால்வாசிப் பெண்களின் ‘ஓவர் வெயிட்’டுக்கு இவையே முக்கியக்
காரணங்கள்.
திருமணமாகி குழந்தை பிறந்ததுமே
பெண்களுக்கு தங்கள் அழகு பற்றிய உணர்வு குறைந்து விடுகிறது. குழந்தை வளர்ப்பு,
அவர்கள் படிப்பு, சாப்பாடு, டிபன், வேலை என்று குடும்பத்திலேயே உழன்று தன்னை
மறந்துவிடும் குடும்பத் தலைவிக்கு அழகு பற்றிய ஆர்வம் 35 வயதுக்கு மேல்
ஏற்படும்போது, தன் பருமனைக் குறைக்க எது செய்யவும் தயாராகிறாள். இதுதான் தவறான
அணுகுமுறை என்பது. ஆரம்பத்திலிருந்தே கீழ்க்கண்ட விஷயங்களில் கவனமாக இருக்க
வேண்டும்.
நன்கு பசித்த பின்பே சாப்பிட
வேண்டும். நொறுக்கு தீனிகளை அடிக்கடி சாப்பிடக்கூடாது.
என் தோழி ஒருத்தி பருமனைக் குறைக்க
ஒரு நாளைக்கு நான்கு முறை ‘வாக்கிங்’ செல்வாள்! ஒரு வேளை மிகச் சிறிதளவு
சாப்பிடுவாள்! பலன்? உடம்பு குறையவில்லை! அனீமியா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட்
ஆனதுதான் மிச்சம்! உடல் எடை படிப்படியாகக் குறைய வேண்டும். கடுமையான உடற்
பயிற்சிகள் உடலை எளிதில் சோர்வடையச் செய்யும்.
v நொறுக்குத் தீனிகளை அடிக்கடி
சாப்பிடக் கூடாது.
v இனிப்பு உடல் எடையை அதிகரிக்கும்
என்பதால், இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படும்போது. சிறிது பற்பசையால் பற்களைத்
தேய்த்தால், பற்பசையின் இனிப்பு, அந்த ஆசையை நீக்கி விடும்.
v வாரம் ஒரு முறை எடையைப்
பார்க்கவும்.
v எளிய உடற்பயிற்சிகள், தினமும் அரை
மணி நேரம் வேக நடை, எடை குறைப்புக்கு எளிய வழி.
v 8 முதல் 10 டம்ளர்கள் வரை தினமும்
தண்ணீற் குடிக்க வேண்டும்.
v சாப்பிடும் எண்ணம் ஏற்படும்போது
ஒரு சிறு துண்டு ஊறுகாய் அல்லது எலுமிச்சை துண்டை வாயில் அடக்கிக் கொண்டால், அந்த
எண்ணம் போய்விடும்.
v சமைத்த உணவை விட பச்சைக்
காய்கறிகள், பழங்கள், முளை வந்த தானியங்களை அதிகம் சாப்பிடவும்.
v முட்டைக்கோஸ், தக்காளி இவற்றிற்கு
எடை குறைக்கும் சக்தி அதிகம். தினமும் காலை ‘கோஸ் சாலட்’ செய்து சாப்பிடவும். காலை
உணவுக்கு பதில் 2 பழுத்த தக்காளிகளை சாப்பிடவும்.
v கேழ்வரகை கஞ்சி, தோசை செய்து
சாப்பிட்டால் எடையும் குறையும்; உடலுக்கு சத்தும் கிடைக்கும்.
v டென்ஷன், கவலை இவையும் ஆரோக்கியத்தின்
எதிரிகள்.
v பசியைக் கட்டுப்படுத்தும்
‘ஆம்பெடமைன்ஸ்’ என்ற மருந்து சாப்பிடுவதால் இதயம், நரம்பு சம்பந்தமான நோய்கள்
வருவதாக ‘ஃபெடரல் ட்ரேட் கமிஷன்’ (அமெரிக்கா) இவற்றைத் தடை செய்துள்ளது.
v எபிட்ரின் கலந்த மருந்துகள் ஹார்ட்
அட்டாக், பக்கவாதம் இவற்றை ஏற்படுத்தும்.
v ‘ஒரே வாரத்தில் 5 கிலோ குறையலாம்,
10 கிலோ குறையலாம்’ என வரும் அறிவிப்புகள் முற்றிலும் பொய்யானவை.
v கொழுப்பைக் கரைத்து எடையைக்
குறைக்கும் எந்த மருந்தும், மற்ற வைட்டமின் சத்துப் பொருள்களையும் கரைத்து
விடுமென்பதை நாம் உணரவேண்டும்.
v சில மின் உடற்பயிற்சி சாதனங்களை
சரியாக உபயோகப் படுத்தாவிடில் அவையும் ஆபத்தானவையே. அவற்றால் தசையின் நாளங்கள்
பாதிக்கப்படும். ஷாக், உடல் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
v எனவே இயற்கையான உணவு முறை, எளிய
உடற் பயிற்சி போன்றவை மட்டுமே உடல் எடையைக் குறைக்க உதவும், உத்தமமான வழிகள்.
மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகிருஹ ஷோபா 2002ல் இதைப் படிக்காமல் போய்விட்டோமே என்ற துக்கத்துடன் இன்றைய குண்டு மாமா [கோபு 93-94 Kgs.].
என்னோட கட்டுரையெல்லாம் இப்போதான் படிக்கறேலா? இதல்லாம் அப்போ இமேஜ் (image) ல போட்டதால எழுத்து சின்னதா இருக்கும்.
பதிலளிநீக்குநானே ஒல்லியா இருந்தப்போ எழுதின கட்டுரை இது...இப்போ நான்...ஹ்ம்ம்...இளைக்க ஆசையா இருக்கு!! முடியலியே!!!