Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-3


ஞான ஆலயம் ஜூலை 2003 இதழில் வெளியானது

அஷ்ட விநாயகர் – 3


ஸ்ரீமஹாகணபதி – ரஞ்சன் காவ்ன்





ஒருமுறை செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற கயிலாயம் சென்றார். அங்கு சென்று பார்வதி பரமேசுவரரை தரிசனம் செய்த சமயம் லோகமாதா பார்வதியின் அழகில் மயங்கி அன்னையின் அழகைப் பற்றிப் பேச, கோபம் கொண்ட பார்வதி அவனை அசுரனாகும்படி சபித்தாள்.

அந்த நிமிடமே லோபாசுரனாக மாறிய குபேரன் அசுர குரு சுக்ராசாரியாரிடம் சென்று ‘ஓம் நம சிவாய’ என்ற பஞ்சாட்சரத்தை உபதேசம் பெற்று தவம் செய்ய ஆரம்பித்தான். தவத்திற்கு மெச்சிய ஈசன் என்றும் அழியாவரம் கொடுத்துவிட்டார். அதனால் கர்வமடைந்த லோபாசுரன் சிவபெருமானையே போருக்கு அழைத்தான். தான் கொடுத்த வரத்தை எண்ணி, போர் செய்யத் தயங்கிய ஈசன் கயிலாயத்தை விட்டு வெளியேறிவிட, லோபாசுரனின் அட்டூழியத்தாலும், ஆக்கிரமிப்பாலும் தேவலோகமே திணறியது.

முனிவர்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்திய லோபாசுரனை அழிக்க ஸ்ரீகஜானனரைத் துதிக்கும்படி ரைப்ய முனிவர் அறிவுறுத்தினார். அவர்களைக் காப்பாற்ற விரும்பிய கஜானனரும் சிவபெருமானை தனியே லோபாசுரனிடம் அனுப்பினார். ஈசனும், சுக்ராசாரியாரும் லோபாசுரனுக்கு அறிவுரை கூறி கஜானனரிடம் சரணடைந்து விடும்படி கூற, கஜானனரின் சக்தி மகிமையை உணர்ந்து கொண்ட லோபாசுரன் அப்படியே செய்து தேவலோகத்தை விட்டுப் பாதாள லோகம் சென்றான்.

சொர்க்கலோகம் திரும்பிய தேவர்களும், கடவுளர்களும் கஜானனரைத் துதித்துப் பாடினர். அந்த கஜானன வடிவமாகக் கோவில் கொண்டுள்ளவரே புனே அகமத் நகர் சாலையில் உள்ள ராஞ்சன்காவ்ன் என்ற இடத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீமஹாகணபதி.

திரேதா யுகத்தில் வாழ்ந்த கிரித்ஸமதா ரிஷியின் கதையை ‘மகத்’ தல புராணத்தில் அறிந்தோம். காணாபத்ய சம்பிரதாயத்தை உலகுக்கு எடுத்துரைத்து, விநாயகராலேயே அதனை உருவாக்கியவர் என்று புகழப் பெற்ற க்ரித்ஸமதாவுக்கு அவரது தாய் முகுந்தா, ஒரு அரக்கன் மகனாகப் பிறக்க வேண்டுமென்று சாபம் கொடுத்தாள்.

ஒருமுறை க்ரித்ஸமதா வேகமாக இருமியபோது சிவந்த நிறமுள்ள ஒரு குழந்தை அவரது வாய்வழியே வெளிவந்தது. அக்குழந்தை அவரைப் பார்த்து “நான் உன் மகன். நான் மூவுலகையும் வென்று இந்திர பதவி பெறுவேன்” என்றான்.

உடன் க்ரித்ஸமதாவும் ‘கணானாம்த்வா’ என்ற மந்திரத்தை உபதேசித்து விநாயகரை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். அக்குழந்தை 5000 வருடங்கள் கணபதியை நோக்கித் தவம் செய்ய விநாயகர் அவன் முன் தோன்ற, தான் மூவுலகும் சென்று வாழும் வரத்தை அச்சிறுவன் கேட்டான்.

கணபதியும் “உனக்கு தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று கோட்டை நகரங்களைத் தருகிறேன். நீ திரிபுராசுரன் என்று அழைக்கப்படுவாய். சிவபெருமான் விடும் ஒரு அம்பினால் உன் மூன்று நகரங்களும் அழியும்போது நீயும் அழிவாய்” என்று வரம் கொடுத்தார். வரம் பெற்ற இருமாப்பில் தேவலோகத்தையே தன் வசமாக்கினான் திரிபுராசுரன். பிரம்மனும், விஷ்ணுவும் இமயமலையில் ஒளிந்து கொள்ள, சிவ பார்வதியோ கயிலாயத்தை விட்டு மந்தர மலையில் வாழ்ந்தனர். திரிபுராசுரனின் மகன்களான சண்டனும், பிரசண்டனும், பிரம்ம, விஷ்ணு லோகங்களை ஆட்சி செய்ய, அவர்களால் தேவர்களும், முனிவர்களும் அளவற்ற கொடுமைகளை அனுபவித்தனர்.

அச்சமயம் தேவர்கள் முன் தோன்றிய நாரத மகரிஷி ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்து, ‘சங்கட நாசன் கணபதி சுலோகத்தைச்’ சொல்லி விநாயகரைத் துதிக்கும்படி கூற, தேவர்களும் அவ்விதமே செய்தனர். கணபதியும் அவர்கள் முன் தோன்றி, “கஷ்டத்தில் இருக்கும் யார் இந்த சுலோகம் சொன்னாலும், அவர்கள் என்னால் காப்பாற்றப்படுவார். திரிபுராசுரன் சிவபெருமானால் அழிய நான் உதவுகிறேன்” என்று சொல்லி, ஒரு பிராமண வடிவுடன் திரிபுராசுரன் முன் சென்றார். அவனிடம், “நான் உனக்கு அதிசய சக்தி உடைய மூன்று விமான்ங்களைத் தருகிறேன். நீ அவற்றில் ஏறி நினைத்த இடங்களுக்குச் சென்று, நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்குப் பிரதியாக நீ சிவபெருமானிடம் உள்ள சிந்தாமணி விக்கிரகத்தை எனக்குப் பெற்றுத் தரவேண்டும்” என்றார்.

உடன் திரிபுரன் படைகளுடன் சென்று சிந்தாமணி விக்ரகத்தைத் தரும்படி வேண்ட, அவர் மறுக்க இருவருக்கும் ஏற்பட்ட போரில் வெற்றிபெற்ற திரிபுரன் சிந்தாமணி விக்ரகத்துடன் நாடு திரும்ப, வரும் வழியில் திடீரென அவ்விக்கிரகம் மாயமாய் மறைந்தது. மீண்டும் திரிபுரன் கொடுமை அதிகமாயிற்று.

நாரத முனிவர் சிவபெருமானிடம் கணபதியை வணங்காமல் போர் செய்ததால்தான் தோல்வி ஏற்பட்ட்து என்று கூற, ஈசன் தண்டகாரண்யம் சென்று கணபதியை எண்ணி தவமிருக்க, அவரும் ஐந்து தலை, பத்து கரங்கள், மண்டை ஓட்டு மாலை, நாகாபரணம், தலையில் நிலவுடன் விசித்திர உருவில் காட்சியளித்து. “என்னுடைய பீஜ மந்திரத்தை உச்சரித்தபடி அம்பு எய்தால் திரிபுரனின் மூன்று விமானங்களும் தூளாகும். என் சகஸ்ர நாம ஸ்தோத்திரம் சொல்லியபடியே அவனையும் வதம் செய்வாயாக” என்று கூறினார்.

உடன் அவ்விடத்திலேயே சிவபெருமான் ஒரு ஆலயம் உருவாக்கி, அந்த விசித்திர ரூபமான கணபதியை ஸ்தாபித்து மீண்டும் திரிபுரனை போருக்கு அழைத்தார்.

பூமியை ரதமாகவும், சூரிய சந்திரரை இரு சக்கரங்களாகவும், பிரம்ம தேவர் சாரதியாக, மேருவை வில்லாகவும், திருமாலை அம்பாகவும், அசுவினி குமாரர்களை குதிரையாகவும் கொண்டு உருவாக்கிய ரதத்தில் ஈசுவரன் திரிபுரனுடன் போரிட்டு அவனை அழித்தார். அந்த நாள் கார்த்திகை பௌர்ணமி நாளானதால் அதுமுதல் அந்நாளில் மாலையில் விளக்குகளை நிறைய ஏற்றி வைத்து இறைவனை வழிபடும் வழக்கம் ஆரம்பமாயிற்று. ஈசன் அதுமுதல் ‘திரிபுராரி’ என்று அழைக்கப் பட்டார். இன்றும் இத்தலத்தில் கார்த்திக் பூர்ணிமா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுயம்பு வடிவில் அகன்ற நெற்றியுடன், கால்களை சப்பணமிட்டு அமர்ந்து தும்பிக்கை இடம்புரியாகக் காட்சி தரும் ஸ்ரீமஹாகணபதியின் மேல் தினமும் சூரிய கிரணங்கள் நேராக விழுவது சிறப்பான காட்சியாகும். ரித்தி, சித்தியின் சிலைகள் இருபுறமும் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றன. சுற்றிலும் அழகிய வேலைப்பாடமைந்த பீடத்தில் தரிசனம் தரும் ஸ்ரீமஹாகணபதி மஹாவரப்ரசாதியாகப் போற்றப்படுகிறார்.

இவ்வாலயத்தில் விநாயக சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இவ்வூரில் யாரும் பிள்ளையார் விக்ரகங்களை வீட்டில் வைத்து விநாயக சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் கிடையாது. விநாயக சதுர்த்தியிலிருந்து நான்கு நாட்கள் அவ்வூர் மக்கள் இவ்வாலய மூர்த்திக்குத் தம் கையாலேயே பூஜை செய்யலாம். ‘த்வார்யாத்ரா’ என்ற பெயரில் கணபதியை சுமந்த பல்லக்கு ஊரின் பல பாகங்களுக்குச் செல்லும். மக்கள் இவ்விறைவனுக்கு பூஜை செய்வர். ஆறாம் நாளன்று இவ்வாலயத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சிணம் செய்வது வழக்கமாக உள்ளது.

ஆதியில் இருந்த அபூர்வரூப மஹாகணபதி பத்து தும்பிக்கைகள், 20 கைகளுடன் ஆலயத்தில் ஒரு பாதாள அறையினுள் இருப்பதாகவும், அதை பொது மக்கள் பார்வைக்கு அனுமதிப்பதில்லை என்றும் நிர்வாகத்தார் கூறுகின்றனர். வெளிப் பிரகாரத்தில் விட்டல் ருக்மணி, ஹனுமன் சன்னிதிகள் உள்ளன.

ராஞ்சன் காவ்ன் பூனாவிலிருந்து 50 க்.மீ. தொலைவில் பூனா-அகமத் நகர் ஹைவேயில் அமைந்துள்ளது.

தேவர்களால் கணபதியை துதித்து பாடப்பட்ட, துன்பங்களை நீக்கி இன்பம் தரும் ‘சங்கட நாசனம் ஸ்ரீகணபதி ஸ்தோத்திரம்’

1. ப்ரணாம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம் |
பக்தாவாஸம் ஸ்மரே நித்யம் ஆயுகாமார்த்த ஸித்தயே ||
2. ப்ரதமம் வக்ரதுண்டம் ஏகதந்தம் த்வீதியகம் |
த்ரீதயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்ரம் சதுர்த்தகம் ||
3. லம்போதரம் பஞ்சமம்ச விஷ்டம் விகட மேவசம் |
சப்தமம் விக்னரேஜேந்த்ரம் தூம்ரவர்ணம் த்தாஷ்டகம் ||
4. நவமம் பாலசந்த்ரம்ச தசமம் து விநாயகம் |
ஏகாதசம் கணபதி துவாதசம் து கஜானனம் ||
5. த்வாதசைதானி நாமானி த்ரிசந்த்யா யா பதேன்னரம் |
நசம் விக்ன பயம் தஸ்யா ஸர்வசித்தி கரம் ப்ரபோ ||
6. வித்யார்த்தி லபதே வித்யா தனார்த்தி லபதே தனாம்
புத்ரார்த்தி லபதே புத்ரா மோக்க்ஷார்த்தி லபதே கதிம் ||
7. ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸே பலம் ப்ரதம் |
ஸம்வத்ஸரேன் சித்திஞ்ச லபதே நாத்ர ஸன்ஷய: ||
8. அஷ்டோப்யோ ப்ரம்மணேஸ்ய லிகித்வாய: ஸமர்ப்பயேத் |
தஸ்ய வித்யா பவேத்ஸர்வா கணேஷஸ்ய ப்ரஸாதந: ||
இதிஸ்ரீ நாரத புராணே ஸங்கட் நாசனம்
ஸ்ரீகணபதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக