Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-4

Thevur.jpg

ஞான ஆலயம் ஜூலை 2003 இதழில் வெளியானது

அஷ்ட விநாயகர் – 4


ஸ்ரீ சிந்தாமணி வினாயகர்



தேவேந்திரனால் உருவான அரக்கன் மத்ஸராசுரன். அவன் சுக்கிராச்சாரியாரிடமிருந்து சிவ பஞ்சாட்சர மந்திரத்தைக் கற்றுக் கடும் தவம் புரிந்தான். ஈசனும் அவன் முன் தோன்றி அவனுக்கு அழியாவரம் கொடுத்தார். அதனை அறிந்து மகிழ்ந்த அசுரகுரு அவனை அசுரர்களின் தலைவனாக்கினார். அதனால் கர்வமடைந்த மத்ஸராசுரன் ஏனைய அசுரர்களின் தூண்டுதலோடு மூன்று லோகங்களையும் தன் வசப்படுத்தி தேவர்களையும், முனிவர்களையும் மற்றும் ஏனைய ரிஷிகளையும் கொடுமைப்படுத்தினான். அவனால் துன்புற்ற தேவர்கள் கயிலாயத்தில், பிரம்மா, விஷ்ணுவுடன் தியானத்திலிருந்த சிவபெருமானிடம் சென்று முறையிட, அவரும் அவனது கொடுமைகளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் மத்ஸராசுரனோ சிவபெருமானையே பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு, கயிலாயத்தில் அமர்ந்து தானே ஈசுவரன் என்று பிரகடப்படுத்தினான்.

இதனால் என்ன செய்வதென்று தெய்ரியாமல் தவித்த தேவர்கள் முன் தத்தாத்ரேயர் தோன்றி, கணேசரின் ஏகாட்சர மந்திரத்தை ஜபித்து அவரை வேண்டும்படி கூறினார். அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய கணபதி வக்ரதுண்ட வடிவத்தில் ஏராளமான தன் அம்சமான கணங்களுடன் மத்ஸராசுரனின் நகரைச் சுற்றி வளைத்துப் போர் புரிந்தார்.

அசுரனின் மகங்களான சுந்தர்ப்ரியாவும், விஷ்ய்ப்ரியாவும் அழிந்துவிட அதனைக் கண்டு பயந்த மத்ஸராசுரன் கணபதியிடம் சரணடைந்தான். தேவர்கள் மீண்டும் தேவலோகம் சென்று தங்கள் கடமைகளைத் தொடர்ந்தனர். இவ்வக்ரதுண்ட கணபதியே புனே மாவட்டம் ஹவேலி தாலுக்காவிலுள்ள தேவூர் என்ற ஊரில் சிந்தாமணி கணபதி என்ற பெயரில் கோவில் கொண்டு பக்தர்களின் இடர்களைத் தீர்ப்பவர். முலா, முத்தா, பீமா ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அபிஜித்திற்குக் குழந்தைப் பேறு இல்லை. வைசம்பாயன முனிவரின் சொற்படி அவன் தன் மனைவி குணவதியுடன் பல்லாண்டு கடுந்தவம் மேற்கொண்ட்தன் பயனாக கணராஜா என்ற மகனைப் பெற்றான். ஒருமுறை வேட்டைக்குச் சென்று வரும் வழியில் கணராஜா கபில முனிவரின் ஆசிரமத்தில் தங்கி உணவு உண்டான். கபில முனிவர் இந்திரனிடமிருந்து மெற்ற சிந்தாமணிக் கல்லின் உத்வியோடு, கணராஜாவின் அத்தனை சேனைக்கும் சுவையான உணவு படைத்ததை அறிந்து, அக்கல்லை தனக்குத் தரும்படி கேட்டான். முனிவர் மறுக்க அதனை பலவந்தமாகப் பறித்துச் சென்றான்.

வருத்தமுற்ற கபில முனிவர் துர்க்கையிடம் சென்று முறையிட அவள் கணபதியை வழிபடச் சொன்னாள். முனிவரின் வேண்டுதலுக்கு மகிழ்ந்த விநாயகப் பெருமான், கணராஜாவுடன் கடம்ப மரத்தினடியில் போரிட்டு அவனை வதம் செய்தார். அவனுடைய தந்தை அபிஜித் சிந்தாமணிக் கல்லை கபில முனிவரிடம் கொடுத்து மன்னிப்புக் கோரினான்.

கபில முனிவரும் அக்கல்லினால் விநாயகரை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அதுமுதல் இத்தல இறைவன் சிந்தாமணி விநாயகர், கபில விநாயகர், சுமுக விநாயகர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

கௌதம முனிவரின் பத்தினி அகலிகையை இந்திரன் வஞ்சகமாக, முனிவர் நீராடச் சென்ற சமயம் ஏமாற்றியதால் முனிவரின் சாபத்துக்கு ஆளானான். அவன் உடல் முழுவதும் ஆயிரம் துளைகள் ஏற்பட வேண்டுமென்ற முனிவரின் சாபத்தால் இந்திரன் அவமானமடைந்தான். அத்துளைகளிலிருந்து வடிந்த துர் நீரினால் ஏற்பட்ட நாற்றத்தை எப்படி நீக்குவது என கௌதம முனிவரிடம் அன்னிப்பு கேட்டு இறைஞ்சினான்.

அவர் கூறியபடி கடம்ப நகராகிய தேவூர் வந்து கணபதியை வணங்கி, அங்குள்ள சிந்தாமணி தீர்த்ததில் நீராடி துர் நீரும், நாற்றமும் நீங்கப்பெற்றான். துளைகள் மறைந்து ஆயிரம் கண்களாக மாறின. அதுமுதல் இந்திரன் ‘ஸஹஸ்ராக்ஷன்’ என்று பெயர் பெற்றான்.

பிரம்ம தேவர் சிருஷ்டி செய்ய முடியாமல் தன் மனம் அலை பாய்ந்தபோது, இத்தலத்திற்கு வந்து தவம் செய்து மனம் அமைதி அடையப் பெற்றார். ‘சிந்தா’ என்றால் சமஸ்கிருதத்தில் கவலை. மனதின் கவலைகளை நீக்கும் இவர் ‘சிந்தாமணி கணபதி’ ஆவார்.

இவ்வாலயம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலின் வெளிமண்டபம் மரத்தால் கட்டப்பட்டு நடுவில் ஒரு கருங்கல் நீரூற்று உள்ளது. ஆனால் அது இப்போது செயல்படுவதில்லை. சிறிய பிரகாரத்தினுள் கிழக்கு நோக்கி இடப்பக்கம் திரும்பிய தும்பிக்கையுடன் அம்ர்ந்த நிலையில் காட்சி தரும், சிந்தாமணி விநாயகரின் இரு கண்களிலும் ஒளி பொருந்திய வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுருண்டு படமெடுத்தாற் போன்ற நிலையில் நாக உருவிலான வெள்ளி பீடம் பின்னால் பளீரிடுகிறது. இருபுறமும் சிறிய ரித்தி, சித்தியின் விக்கிரகங்கள் உள்ளன.

கர்ப்பக் கிரகம் சிறியதானாலும் வெளிப்பிரகாரம் மிகப் பெரியது. இங்கு ஒரு சிவன் சன்னதி உள்ளது. வெளி மண்டபத்திலுள்ள சிவபெருமான், பார்வதியின் இரு கண்கள் இணைந்து இடையில் வினாயகர் காட்சி தரும் புகைப்படம் கண்களைக் கவர்கிறது. சிந்தாமணி விநாயகரின் முன் கண்மூடி சில நொடிகள் நின்றாலே, நம் சிந்தையை மயக்கும் கவலைகள் கண்காணாமல் போவதை உணர முடிகிறது. இவ்வாலய வெளிப் பிரகாரத்தில் மிகப்பெரிய வெண்ணிற மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இங்கு விநாயக சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வரும் அங்காரக சதுர்த்தி நாட்களில் அன்னதானம் செய்வது மிக விசேஷமாகும். சிந்தாமணி விநாயகர் மாதவராவ் பேஷ்வா குடும்பத்தாரின் குலதெய்வம். தன் இறுதி நாட்களில் அவர் ‘கஜானன்’ என்று உச்சரித்தபடியே உயிரை விட்டார். அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் அக்கால வழக்கப்படி உடங்கட்டை ஏறினார். இதை நினைவுறுத்தும் வகையில் அவர்கள் இறந்த நாளான கார்த்திகை அஷ்டமி இவ்வாலயத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அவரது மாளிகை இன்று ஒரு பெரிய பூந்தோட்டமாகக் காட்சி தருகிறது.


மாதவராவ் பேஷ்வாவினால் பெரிது படுத்தப்பட்டு கட்டப்பட்ட இவ்வாலயத்திற்கு ஔரங்கசீப் நன்கொடைகள் கொடுத்தாகக் கூறப்படுகிறது. பூனாவிலிருந்து 25 கி.மீட்டரில் உள்ள இத்தலம் அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்றாக பூனாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள தலமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக