Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-5


ஞான ஆலயம் செப்டம்பர் 2003 இதழில் வெளியானது

அஷ்ட விநாயகர் – 5

ஸ்ரீ சித்தி விநாயகர் - சித்தடேக்



மதாசுரன் என்ற அசுரன் பலமும் பராக்கிரமும் கொண்டவன். அவன் அசுரகுரு சுக்கிராசாரியாரிடம் சென்று மூவுலகையும் வெல்லும் உபாயம் கேட்க, அவரும் தேவியின் ‘ஹ்ரீம் பீஜாக்ஷர’ மந்திரத்தை ஜபிக்கச் சொன்னார். அதன்படி மதாசுரனும் பல்லாண்டுகள் தவமிருந்து பகவதியின் தரிசனம் பெற்றான். மூவுலகும் வென்று மரணமில்லா வாழ்வு வாழும் வரம் பெற்றான்.

பூலோகத்தைத் தன் வசப்படுத்தியபின், சுவர்க்க லோகம் சென்று தேவர்களைக் கொடுமைப் படுத்தியதால், அஞ்சிய இந்திரன் உடனாய தேவர்கள் ‘சனத் குமார’ ரிஷியின் உதவியை வேண்டினர். அவர் அவர்களி சமாதானம் செய்து கணபதியின் ‘ஏகதந்த கணேச’ வடிவத்தைப் பூஜிக்கச் சொன்னார். அவர்களின் வேண்டுதலில் மகிழ்ச்சியான விநாயகர், மதாசுரனை அழிப்பதாகக் கூறினார்.

மதாசுரனின் அரண்மனைக்குச் சென்ற நாரத முனிவர், ‘ஏகதந்த கணேசரால் நீ கொல்லப்படுவாய்’ என்று சொல்லியும் கேளாத மதாசுரன், பெரும் சேனையுடன் போருக்கு வந்தான். மூஞ்சூறு வாகனத்தில் போர் செய்த ஏகதந்தர், தன் கோடரியை மதாசுரன் மீது வீச அக்கணமே மயக்கமடைந்தான். மயக்கம் தெளிந்தபின் எகதந்தருடன் தன்னால் போரிட முடியாது என்றுணர்ந்தவன், அவரிடம் சரணடைந்து அவரது ஆசிகளை வேண்டினான். கணபதியும் தன் பக்தர்களைத் துன்புறுத்தாமல் இருக்குமாறு கூறி அவனை மன்னித்தார். இத்தகைய ஏகதந்த ரூபமாக பீமா நதிக்கரையில் சித்தடேக் என்ற மலை உச்சியில், வணங்குவோருக்கு சித்தியைத்தரும் சித்தி விநாயகராகக் காட்சி தருகிறார் விநாயகப் பெருமான்.

திரேதாயுகத்தில் பிரம்ம தேவன், உலகைப் படைத்த விநாயகரின் அருளை வேண்டி, அவரது ஏகாட்சர மந்திரத்தை ஜபித்தப்டி தவமிருந்தார். அச்சமயம் பிரம்ம தேவனுக்கு முன் ரித்தி, சித்தி என்ற இரு சிறுமிகள் தோன்றி ஆசிரமத்தில் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர்களைத் தம் பெண்களாக எண்ணி பிரம்மா வளர்த்து வந்தார். பிரம்மனின் தவத்தில் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு சிருஷ்டிக்கும் ஆற்றலைத் தந்து, பிரம்மாவின் வேண்டுதல் படி ரித்தி, சித்தியைத் திருமணம் செய்து கொண்டார். பிரம்ம தேவர் தன் இரு தோள்கள் மற்றும் மடியிலிருந்து பல்வேறு மனிதர்களை உற்பத்தி செய்தார்.

அவரது இருதயத்திலிருந்து நிலவு, கண்களிலிருந்து சூரியன், தலையிலிருந்து சுவர்க்கம், காதுகளிலிருந்து காற்றும், உயிரும், கால்களிலிருந்து பூமி இவற்றை உண்டாக்கினார். அதன்பின் கடல், ஆறு, மரங்கள், செடி கொடிகள், விலங்கின்ங்களை உருவாக்கினார்.

அச்சமயம் விஷ்ணுவோ இது எதுவும் அறியாது யோக நித்திரையில் இருந்தார். அச்சமயம் அவரது காதுக் குறும்பையிலிருந்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் உருவாகி அவர்கள் பிரம்ம தேவனுக்கு இடர் செய்தனர். இதனால் துன்புற்ற பிரம்ம தேவன், பிரித்வி, ஆதிசேஷன் ஆகியோர் நித்ராதேவியை விஷ்ணுவை விட்டு நீங்குமாறு வேண்ட, அவளும் விலக மகாவிஷ்ணு எழுந்து மது கடபர்களுடன் 5000 ஆண்டுகள் போர் பசெய்தார். ம்ஹூம்! அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. காரணமும் தெரியவில்லை!

போரை நிறுத்திய மகாவிஷ்ணு ஒரு கந்தர்வ வடிவமெடுத்து, கையில் வீணையுடன் பாட ஆரம்பித்து விட்டார். அதன் இனிமையில் மயங்கிய கைலாசபதி தன் கணங்களான நிகும்பன், புஷ்ப தந்தன் என்ற இருவரை அனுப்பி அவரை கயிலாயம் அழைத்துவர பணித்தார். அவரைத் துதித்து மிக இனிமையாகப் பாடிய திருமாலுக்கு என்ன வரம் வேண்டும் என்று ஈசன் கேட்க, அவரும் மது, கைடபரை அழிக்கும் வரம் கேட்டார். ஈசனும், கணபதியை முதலில் தொழாததனாலேயே வெற்றி கிடைக்காததை எடுத்துக் கூறி, அவரை சித்தி க்ஷேத்திரம் சென்று கணபதியின் சடாக்ஷர மந்திரத்தை உச்சரிக்கச் சொன்னார்.

மகாவிஷ்ணு அவ்வாறு 100 ஆண்டுகள் இந்த சித்தடேக் ஸ்தலத்தில் தவம் செய்து, கணபதியின் தரிசனம் பெற்று மது, கைடபரை வெல்லும் வலிமையைப் பெற்றார். இவ்விட்த்தில் கண்டகி நதியிலிருந்து கொண்டுவந்த கல்லினால் சித்தி விநாயகர் சிலை செய்து, நான்கு வாசல்களை உடைய மிகப் பெரிய ஆலயத்தினை உருவாக்கினார்.


 

பின் மீண்டும் மது, கைடபரைப் போருக்கு அழைத்து ஏதாவது வரம் கேட்கும்படி சொல்ல, அவர்களோ அகந்தையில் தாங்களே விஷ்ணுவுக்கு வரக் கொடுப்பதாகக் கூறினார். மகாவிஷ்ணுவோ சாமர்த்தியமாக என் கையால் உங்கள் உயிர் போக வேண்டும் என்று கேட்க, அதிர்ச்சியடைந்த மது, கைடபர் ‘நீர் சூழாத இட்த்தில் எங்களைக் கொல்ல முடியுமா?’ என்று இறுமாப்போடு கேட்டனர். உடன் விசுவரூபமெடுத்த திருமால் அவர்களைத் தன் மடியில் கிட்த்தியபடி வதம் செய்தார்.

மகாவிஷ்ணு ஸ்தாபித்த ஆலயம் அழிந்தபின், அப்பகுதியில் மாடு மேய்த்த சிறுவன் ஒருவன் கனவில் தோன்றிய விநாயகர், தான் இருக்குமிடம் சொல்லி வழிபாடு செய்யும்படி கூறினார். அவனும் தனக்குத் தெரிந்த பூஜா முறைகளைச் செய்துவர, விநாயகர் மீண்டும் கனவில் தோன்றி, ஒரு பிராமணரை நியமித்து முறைப்படி பூஜை செய்யும்படி கூர, அச்சிறுவனும் அவ்வாறே செய்தான். தற்போதைய ஆலயம் பேஷ்வாக்களின் காலத்தில் கட்டப்பட்டது.

பீமா நதிக்கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு பூனாவிலிருந்து ஷிராப்பூர் வரை சென்று, அங்கிருந்து படகில் பீமா நதியைக் கடந்து செல்ல வேண்டும். மலை மீது ஆலயம் இருப்பதால் ஏறிச் செல்ல வேண்டும். போகும் வழியில் வியாச முனிவர் யாகம் செய்த இடம் உள்ளது. இங்கு பல ஆண்டுகட்கு முன் யாக சாம்பல் நிறைந்திருந்ததாம். காலப் போக்கில் அவ்விடம் மூழ்கி விட்டதாம்.

 

வடக்கு நோக்கி அமைந்துள்ள சுயம்பு சித்தி விநாயகர் மூன்றடி உயர மூர்த்தம், வலம்புரி துதிக்கையுடன், தொடையின் மீது ரித்தி, சித்தியை அமர்த்தியபடி காட்சியளிக்கிறார். இவ்விநாயகரின் வயிறு பெரிதாக இல்லாதது வியப்பு. மூர்த்தத்தின் மேல் அடர்த்தியாக செந்தூரம் பூசியுள்ளதால் ரித்தி, சித்தி தேவியர் தெளிவாகத் தெரியவில்லை. இரு கண்கள், தொப்புளில் வரக் கற்கள் பளீரிடுகின்றன. கருவறையில் சிவ பஞ்சாயதன பூஜைக்கான விக்கிரகங்களும், ஒரு சிறிய சிவன் சந்நிதியும் உள்ளன.


 




இவ்விறைவன் முன் கண்மூடி, மனமுருகி சில நொடிகள் நின்றாலும் நாம் மனதில் எண்ணியவை சித்தியாகும். இவ்வாலயத்தை கிரி பிரதட்சிணம் செய்வதால் எண்ணியது ஈடேறும். பேஷ்வாவின் சேனாதிபதியான ஹரிபந்த் ஃபாட்கே என்பவர் தன் பதவியை இழந்தபோது, இவ்விடம் வந்து 21 நாட்கள் இவ்வாலயத்தைப் பிரதட்சணம் செய்து இழந்த பதவியைப் பெற்றாராம். அதனால் மகிழ்ந்த ஃபாட்கே கோயிலுக்கு சீரான பாதை அமைத்ததுடன், பீமா நதியில் ஒரு ஸ்நான கட்டமும் கட்டியுள்ளார்.

தினமும் 4 மணிக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வேளையிலும் நிவேதனமும், ஆரத்திகளும் நடைபெறும். இவ்வாலயம் இரவு 9.30 வரை திறந்திருக்கும்.


பூனாவிலிருந்து 78 கி.மீ தூரத்திலுள்ள தௌண்ட் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஷிராப்பூ சென்று, அங்கிருந்து படகில் பீமா நதியைக் கடந்து செல்வது ஒரு சுவாரசியமான பயணமாக இருக்கும். பீமா நதியின் இக்கரை பூனா மாவட்டத்திலும், ஆலயம் அமைந்துள்ள சித்தடேக் அகமத் நகர் மாவட்டத்திலும் உள்ளது. தரை வழியாகச் செல்வதானால் தௌண்டிலிருந்து பேட்காவ்ன் வழியே 48 கி.மீ. செல்ல வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக