Thanjai

Thanjai

செவ்வாய், 9 ஜூன், 2015

மங்கையர் நலம் காக்கும் குங்குமசுந்தரி


ஞான ஆலயம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது
ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, உ, ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. தஞ்சையில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது.

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, “எப்பொழுது உபதேசம் பெற வரலாம்?” என்று கேட்க, குமரனோ, “எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு” கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு.

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது!

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். வடப்புறத்தில் ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது,


போட்டோ அனுப்புங்க...சேதி சொல்லுங்

போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!

அஞ்சனை மைந்தா... நமோ... நமோ...!அவள் விகடன் 04-06-2010 இதழில் வெளியானது

புவனேஸ்வர் நகரைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தபோது, அழகான ஆஞ்சநேயர் கோயில் எங்களை ஈர்த்தது. மண்டபத் தூண்களிலிருந்த சிற்பங்களும், பிரகாரத்தைச் சுற்றி மெகா சைஸில் அற்புதமாக வரையப்பட்ட ராமாயணக் காட்சிகளும் எங்களை வெகுவாகக் கவர்ந்தன. “அம்மா, அப்படியே ஆஞ்சநேயர் தோள்ல ஃப்ரெண்ட்லியா கை வை” என்று சொல்லி, என் மகன் ‘க்ளிக்’கிய காட்சிதான் இது. எட்டிப் பார்க்கும் அரக்கி, என்னைப் பார்த்து ‘யார் இந்த புது சீதை?’ என்று ஆச்சரியப்படுவது போல் இல்லை...!
பஞ்ச வரதர்20.6 2015 தீபம் இதழில் 'காஞ்சிபுரம் மாவட்ட ஆலயங்கள்' பகுதியில் பிரசுரமான உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலய தரிசனக் கட்டுரை..


அலங்காரப் பிரியரான பெருமாள் சுந்தர வரதனாக நின்றும், இருந்தும், கிடந்தும் கோயில் கொண்ட தலம் உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் ஆலயம். இங்கு மூன்று தளங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார். பஞ்ச பாண்டவர்களுக்கு தனித் தனியாகக் காட்சி தந்த பெருமாள் இங்கு 'பஞ்சவரதர்' என்று போற்றப்படுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அரசாண்ட நந்திவர்ம பல்லவனால் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் பல்லவர்களின் சிற்பத் திறனுக்கும், கலைத்திறனுக்கும்  ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இவ்வாலயம் கருங்கற்களும், செங்கற்களும், சுண்ணாம்புக் கற்களும் கலந்து கட்டப்பட்டுள்ளது.Displaying uthmer.jpg

இவ்வூரின் பெயர் சதுர்வேதி மங்கலம் எனப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நந்திவர்ம பல்லவன் 1200 வைணவ வேத பண்டிதர்களுக்கு இவ்வூரை தானமாகக் கொடுத்ததாகவும்இங்கு அவர்களால் நான்கு வேதமும் சதா காலமும் ஓதப்பட்டு வந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டதாம். இவ்வாலயத்தில் பரந்தாமனின் ஒன்பது உருவங்கள் இருப்பதால் இது 'நவமூர்த்த்தி ஸ்தலம்' என்றும் போற்றப்படுகிறது. மூன்று நிலைகளில் மகாவிஷ்ணு காட்சி தரும் சிறப்பு பெற்ற திவ்ய ஸ்தலங்களுடன், திவ்ய தேசத்தில் இடம் பெறாத இவ்வாலயமும் ஒன்றாகும். மற்றவை திருக்கோஷ்டியூர், காஞ்சி பரமேஸ்வர விண்ணகரம் மற்றும் மதுரை கூடல் அழகர் ஆலயம். மற்ற ஆலயங்களில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு மூர்த்தி மட்டுமே காட்சியளிக்க, இக்கோயிலில் கீழிரண்டு நிலைகளில் நான்கு, நான்கு  மூர்த்திகளும், மேல்நிலையில் ஒரு மூர்த்தியுமாக ஒன்பது உருவங்கள் கொண்ட சிறப்பை பெற்றது.ஒன்பது திருவுருவங்களும் சிறந்த வரப்பிரசாதிகளாகப் போற்றப்படுகின்றனர்.


Displaying umerure.jpg


இனி ஆலயம் சென்று இறைவனை தரிசிப்போம். ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.கீழ் நிலையில் நின்ற பெருமாளாகக் காட்சி தருகிறார் சுந்தர வரதர். பெயருக்கேற்றவாறு அழகு மிளிரும் முகத்துடன், நான்கு கரங்களுடன், இரு பக்கமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் இறைவனின் முன் நிற்கும்போது மனம்  ஒன்றுபட்டு நிச்சலனமடைவதை உணர முடிகிறது.

Displaying Sundaravaradar.jpg                          

       Displaying sundaravaradar.jpg 

ஆனந்தவல்லி தாயார் அமர்ந்த அழகுத் திருக் கோலத்தில் தனி சந்நிதியில் அருள் புரிகிறாள். அவளை தரிசித்த மாத்திரத்திலேயே ஆனந்தம்  நம்முள் ஏற்படுவதை உணரமுடிகிறது. கர்ப்பக்கிரகத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் பிரதானமாகக் காட்சி தரும் சுந்தர வரதரைச் சுற்றிலும் வெளிப் பிரகாரத்தில் தெற்கில் அச்சுத வரதரும், மேற்கில் அனிருத்த வரதரும். வடக்கில் கல்யாண வரதரும் இணை தெய்வங்களாக அற்புதக் காட்சி தருகின்றனர்.Displaying Thayar.jpg 
திருமணம் ஆகாதவர்கள் தம் ஜாதகத்துடன் ஐந்து  புதன்கிழமைகள் தொடர்ந்து வந்து கல்யாண வரதரை அர்ச்சித்து வழிபட விரைவில் மணமாலை கிட்டும்.வேலை வேண்டுவோர் அச்சுத வரதரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட வேண்டும். விரும்பிய வேலை விரைவில் கிடைக்கும்.


இரண்டாம் தளத்தில் கருவறையில் அமர்ந்த நிலையில் காட்சி தருபவர் வைகுண்ட வரதப் பெருமாள். சுற்றுச் சுவர்களில் அர்ச்சுனனுக்கு கண்ணபரமாத்மா உபதேசம் செய்யும்  கீதோபதேசக் காட்சி கண்கவர் கலைவண்ணம். அத்துடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள தட்சிணா மூர்த்தியின் சிற்பம் எந்த வைணவக் கோயிலிலும் காணக்  கிடைக்காத காட்சி.  இங்குள்ள நர நாராயணரின் உருவங்கள் சிறப்பானவை. பத்ரிநாத்துக்கு  செல்ல முடியாதவர்கள் இந்த நர நாராயணரை வணங்கித் தொழுதால், அவர்களின் எந்த வேண்டுதலும் நிறைவேறுமாம்.
 Displaying Yokanarasimmar.jpg                            


  Displaying lakshmivarahar.jpg

மகாவிஷ்ணுவின் அவதார ரூபங்களான யோக நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் லக்ஷ்மி வராகப் பெருமானும் இத்தளத்தில் அழகாகக் காட்சி தருகின்றனர். சோளிங்கபுரம் சென்று பல படிகள் ஏறி நரசிம்மரை  தரிசிக்க முடியாதோர் இந்த யோக   நரசிம்மரை வணங்கி வளம் பல பெறலாம். திருவிடந்தையில் நின்ற நிலையில் அருள் புரியும் வராகப் பெருமாளுக்கு இணையானவர் இந்த லக்ஷ்மி வராக சுவாமி.

Displaying Anjaneya.jpg

பரந்தாமனுக்கு எதிரில் காட்சி தரும் ஆஞ்சநேயர் கையில் கதையும், இடக்காலை முன் வைத்தும்  செல்வது போல அமைக்கப் பட்டுள்ளது. சீதையைக் கண்டுபிடிக்க கிளம்பிச்  செல்லும்போது பகைவர்களின் தோல்வியை எண்ணி ஆஞ்சநேயர் இடக்காலை முன் வைத்து செல்வதாகக் கூறப்படுகிறது.


Displaying anantha pad.jpg

மேலும் சில படிகள் ஏறிச்  சென்றால் நாம் தரிசிப்பது கிடந்த நிலையில் காட்சி தரும் அனந்தபத்மநாபப் பெருமான். இவர் ரங்கநாதரின் திருவுருவம் போல காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இந்த சந்நிதியில் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து  பிரம்மாவும், பாதத்தின்  அருகில் மானும், மழுவும் ஏந்திய சிவனும் காணப் படுவது விசே ஷமான அமைப்பாகும். கங்கையும், யமுனையும் இந்த கர்ப்பக்கிரகத்தின் இருபுறமும் துவாரபாலகர்களாகக் காட்சி தருவது எந்த வைணவக் கோயிலிலும் காண முடியாத காட்சி.


Displaying Temple.jpg

மேலும் சில படிகள் ஏறிச்  சென்றால் நாம் தரிசிப்பது கிடந்த நிலையில் காட்சி தரும் அனந்தபத்மநாபப் பெருமான். இவர் ரங்கநாதரின் திருவுருவம் போல காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இந்த சந்நிதியில் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து  பிரம்மாவும், பாதத்தின்  அருகில் மானும், மழுவும் ஏந்திய சிவனும் காணப் படுவது விசே ஷமான அமைப்பாகும். கங்கையும், யமுனையும் இந்த கர்ப்பக்கிரகத்தின் இருபுறமும் துவாரபாலகர்களாகக் காட்சி தருவது எந்த வைணவக் கோயிலிலும் காண முடியாத காட்சி.
பஞ்ச பாண்டவர்கள் ஒருவருடம் அஞ்ஞாத வாசம் செய்த சமயம் காடுகளில் மறைந்து கிடந்த இவ்வாலயத்தை வழிபட்டு ஆட்சியை மீண்டும் பெற்றனராம். ஐந்து பாண்டவர்களும் ஒவ்வொரு வரதரை வணங்கி அருள் பெற்றனராம். தர்மர், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் முறையே வைகுண்ட வரதர், அச்சுத வரதர், சுந்தர வரதர், அனிருத்த வரதர், கல்யாண வரதரையும், திரௌபதி ஆனந்தவல்லி அம்மையையும்   வணங்கியதாகக் கூறுகிறது தலபுராணம். அவர்கள் இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக இங்கு சுற்றுப்புற ஊர்கள் அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனாலேயே இத்தலம்  'பஞ்சவரதத் தலம்' எனப்படுகிறது.

1013 ராஜேந்திர சோழனும், 1520ல் கிருஷ்ணதேவ ராயரும் இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்ததாக கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாலயம் 'துலாபாரக் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு துலாபாரம் ஒரு முக்கியமான பிரார்த்தனையாகும். இவ்வாலயத்தை ஒருவர் 48 நாட்கள் பிரதட்சிணம் செய்து எதை வேண்டிக் கொண்டாலும் இத்தல வரதர் அவற்றை நொடியில் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. ஒன்றல்ல...ஒன்பது பெருமாள்கள் இணைந்திருக்கும்போது கேட்டதும், நினைத்ததும் கிடைக்காதா என்ன?

இவ்வாலய இறைவனை திருமங்கை  ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், பொய்கை ஆழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். பல சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்ட இத்தல இறைவனை ஒருமுறை தரிசித்தாலே இம்மைக்கும், மறுமைக்கும் பேறு பல பெறலாம்.
சித்திரையில் பிரம்மோத்சவம், புரட்டாசியில் சுதர்சன ஹோமம், ஆடி பவித்ரோத்சவம் ஆகியவை இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. 

உத்திரமேரூருக்கு சரித்திரப் பின்னணியும்,வரலாற்றுச் சிறப்பும், அரசியல் முக்கியத்துவமும் உண்டு.ஜனநாயகத்தின் பிறப்பிடம் இவ்வூர். கி.பி.10ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் இங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தும் விதம், உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுக்கும் முறை,உறுப்பினர் ஆவதற்கான தகுதி, தலைவரைத் தேர்வு செய்வது என்ற குறிப்புகளை இங்குள்ள கல்வெட்டுகள் அழகாக எடுத்துரைக்கின்றன. அரசியலுக்கு வருவோர் எவ்வளவு நேர்மையாகவும், நீதியுடனும் இருக்க வேண்டும் என்பது அவற்றில் வலியுறுத்தப் பட்டுள்ளன. அந்நாளைய 'குடவோலை' என்ற தேர்தல் முறையே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. 

இவ்வாலயம் சென்னையிலிருந்து 85 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.உத்திரமேரூருக்கு நேரடி பேருந்து வசதி உண்டு. 

ஆலய நேரம்...காலை 7-12...மாலை..4-8


தொலைபேசி...94430 68382


ஒன்றுக்கு ஒன்பதாக பலன் தரும் நவராத்திரி!

ஞான ஆலயம் அக்டோபர் 2009 இதழில் வெளியானது

நம் காலில் சிறு முள் குத்தினால் கூட நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை “அம்மா...” என்பதே. தேவியாகிய பராசக்தியே உலகிற்கெல்லாம், அண்ட சராசரங்களுக்கெல்லாம் அன்பான தாயாக நிற்கிறாள். அந்த தேவியை ஒன்பது நாட்கள் சிறப்பாக, இறை சிந்தனையோடு நாம் வழிபடுவதே நவராத்திரி.

ரிக் வேதம் தேவியை ‘அண்ட சராசரத்தின் பேரரசி’ என வர்ணிக்கிறது. கேனோபநிஷதம் தேவியின் பெருமையை அழகாக எடுத்துரைக்கிறது. குப்தர் ஆட்சியில் புகழோடு விளங்கிய அன்னை வழிபாடு, சீனா, ஜப்பான், சுமேரியா, கிரீஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியது.

தந்திர சாஸ்திரத்தில் பராசக்தியின் பத்து வடிவங்கள் ‘தசமஹாவித்யா’ என சிறப்பித்துப் பேசப்படுகின்றன. காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, திரிபுரசுந்தரி, சின்னமஸ்தா, தூமவதி, பகுளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா எங்கிற இந்த பத்து சக்தி வடிவங்களில் இருந்தே விஷ்ணுவின் தசாவதாரங்களும் தோன்றினவாம். ‘கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருத்யை’ எங்கிறது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்.

நவராத்திரியில் தேவியை எப்படி வழிபட வேண்டும் என்பதை தேவி பாகவதம் கூறுகிறது. துர்காதேவி நவராத்திரி சமயம் ஊசி முனையில் நின்று தவம் செய்ததாக புராணங்கள் உரைக்கின்றன. நவராத்திரி நாட்களில் தினமும் தேவி வழிபாடும், தேவி மஹாத்மியம் படிப்பதும் அளவற்ற நன்மைகளைத் தரும் என்கிறது தேவி பாகவதம். துர்கா சப்தசதி எனும் இந்நூலில் எழுநூறு சுலோகங்கள் உள்ளன. பதினான்கு அத்தியாயங்கள் உள்ளன.

எழுநூறு மந்திரங்களைக் கொண்ட ஸ்ரீசப்தசதி பாராயணம், நவராத்திரியில் செய்வது அளவிடற்கரிய நன்மைகளைத் தரும். இம்மையில் மட்டுமன்றி, மறுமையில் மோட்சத்திற்கும் வழிகிட்டும் என்கிறது தேவி பாகவதம். நேரமிருப்பவர்கள் தேவி மஹாத்மிய பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் எளிய தேவியின் துதிகளை, ஒன்பது நாட்களும் சொல்லி, அவளின் திருவடி பணிந்து நிவேதனம் செய்து, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், அலங்காரப் பொருட்கள், வஸ்திரம் வைத்துக் கொடுத்தால் பல மடங்கு பயனைப் பெறலாம். ஒன்றுக்கு ஒன்பதாகப் பலன் தரும் தேவியை நவராத்திரி நன்னாளில் வழிபட்டு பலன் பெறுவோம்!
ஞாயிறு, 7 ஜூன், 2015

Pond's Age Miracle

Pond's Age Miracle
காஜூ சேலஞ்ச்


 மங்கையர் மலர் மார்ச் 2010 இதழில் வெளியானது
குக்கரி க்வீன்-மிக்ஸ் அண்ட் மேட்ச் சமையல் போட்டியில் பரிசு பெற்ற சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:

பால் 1 லிட்டர் (கோவா காய்ச்சி அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்)
பாதாம் – 10
பொடித்த முந்திரி - ½ கப் (பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும்)
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்

பாகிற்கு:

1½ கப் சர்க்கரை
கேசரி கலர் – சிட்டிகை
ஏலப்பொடி, நெய், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மைதா, நெய், உப்பை தேவையான அளவு நீர் சேர்த்து, பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கோவா, பாதாம்-முந்திரி பொடி, ஏலப்பொடி, நெய் – ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விழுதாக்கவும்.

பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒரு சப்பாத்தியின் மேல் கோவா விழுதை சமமாகத் தடவி, மேலே மற்றொரு சப்பாத்தி போட்டு இறுக்கி சுருட்டி கத்தியால் சிறு துண்டுகளாக்கவும்.

சர்க்கரையுடன் அதே அளவு நீர் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் கேசரி கலரும், ஏலப்பொடியும் சேர்க்கவும்.

எண்ணெயை மிதமாகக் காய வைத்து, அதில் வெட்டிய சப்பாத்தி துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து, சூட்டுடன் சர்க்கரைப் பாகில் ஊற விடவும். நன்கு ஊறியதும், எடுத்து வைக்கவும்.

சுவையான இந்த ‘காஜூ சேலஞ்ச்’ உங்கள் நாவுக்கு ஒரு சேலஞ்சான இனிப்பு!