ஆடி மாதம் பிறந்து விட்டாலே
வரிசையாக பண்டிகைகள் ஆரம்பித்துவிடும். ஆடி வெள்ளி, கோகுலாஷ்டமி, விநாயக
சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி , திருக்கார்த்திகை, தை வெள்ளி, தைப்பொங்கல் என்று
அத்தனையும் பெண்களுக்கான விழாக்கள், பூஜை நாட்கள். இதில் ஆவணி மாதம் வரும் ஆவணி
அவிட்டமும், காயத்ரி ஜபமும் ஆண்களுக்கான முக்கியப் பண்டிகையாகும்.
ஆன்மாவைப் பாவங்களிலிருந்து நீக்கி
பண்படுத்துவது பண்டிகை. ஸ்ராவணம் என்னும் ஆவணி அவிட்டம் பிராமணர், க்ஷத்திரியர்,
வைசியர் ஆகிய மூவர்ணத்தாரும் கடைப் பிடிக்க வேண்டிய பண்டிகை. இதில் செய்யப்படும்
காயத்ரி ஜபம் மிக சக்தி வாய்ந்த கர்மா. மூன்று வேதங்களிலிருந்தும் சாரமாக எடுக்கப்
பட்டது. மூன்று பாதமுள்ள காயத்ரி. ‘காயத்ரி’ என்பது தன்னை தியானம் செய்பவர்களை
ரக்ஷிப்பது என்று பொருள். வேத மந்திரங்களின் அன்னை போன்றது காயத்ரி.
கயந்தம் + த்ராயதே – காயத்ரி – தன்னை
ஜபிப்பவரை ரக்ஷிக்கும் தன்மையுடையது. 24 எழுத்து மந்திரங்களும் எல்லா தேவதைகளையும்
குறிப்பது. இக்கர்மா பிரம்மசாரி, கிரஹஸ்தன், வானப்ரஸ்தன் ஆகிய மூவரும் செய்ய
வேண்டியது. இதுவரை செய்த பாவங்களை நீக்கி நம்மைப் புனிதப்படுத்துவதற்காக செய்யப்
படுவதே ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிதலும், காயத்ரி ஜபத்தன்று காயத்ரி
மந்திரம் ஓதுவதும். ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீராமரும் கூட ஆவணி அவிட்டம் செய்ததாக
புராணங்கள் உரைக்கின்றன. ஆவணி அவிட்டத்தன்று வேதம் ஓதுவது மிக விசேஷமானது.
பூணூல் அணிபவர் தாயின் வயிற்றில்
பிறக்கும் பிறப்புடன், ஞானப் பிறவியையும் அடைவதாக இந்து மதம் கூறுகிறது. அதனாலேயே
அவர்கள் ‘த்விஜர்’ (இரு பிறப்பானவர்) எனப்படுவர். வேதங்களின் மாதாவான ஸ்ரீகாயத்ரி
தேவியை காலையில் பிரம்ம ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசாவித்ரி தேவியை மதியம் ருத்ர
ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசரஸ்வதி தேவியை மாலையில் விஷ்ணு ஸ்வரூபிணியாயும் த்யானம்
செய்வதே ‘த்ரி கால சந்த்யா வந்தனம்’ எனப்படுகிறது.
உபவீதம் எனும் பூணூல் தயாரிக்கும்
முறைகளும் நம் புராணங்களில் காணப்படுகிறது. கண்டிப்பாக மூவர் இணைந்தே உபவீதத்தை
முறுக்க வேண்டும். பூணூலில் உள்ள ஒன்பது இழைகளில் பிருதிவி, ஜலம், தேஜஸ், வாயு,
ஆகாயம், பிராணன், ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா ஆகிய தேவதைகள் உள்ளார். பிரம்மா,
விஷ்ணு, மஹேஸ்வரர், க்ரந்த தேவதைகள், பரப்ரம்மமே யக்ஞோபவீத தேவதையாக பாவித்து,
ஆவாஹனம் செய்து பூஜித்த பின், சூரியனுக்கு காண்பித்து, 108 காயத்ரி மந்திரம்
ஜபித்த பின்பே அணிய வேண்டும்.
‘யக்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவின்
ஜீவஸ்வரூபத்தைக் கொண்டதும், மிக புனிதமானதும், எல்லா தோஷங்களையும் நீக்கி
பரிசுத்தம் செய்யக் கூடியதும், ஆயுளைக் கொடுக்கக் கூடியதும், மிக உயர்வுள்ளதும்,
வெண்மையாக பிரகாசிப்பதுமான யக்ஞோபவீதமே, நீ எனக்கு மோட்சத்தை அளிப்பாயாக’ என்பதே
உபவீதம் அணியும் போது கூறும் மந்திரத்தின் பொருள். உபவீதத்தின் பெருமை பரப்ரும்ம
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
நூல் பிரிந்த உபவீதத்தை
தரிக்கலாகாது. உபநயனம் ஆனபின்பு ஒரு நாள் கூட பூணூல் இல்லாமல் இருக்கக் கூடாது.
அப்படியிருந்தால் மறுபிறவியில் நாயாகப் பிறப்பர் என்று சாஸ்திரம் கூறுகிறது.
உபவீதம் நாபிக்கு மேலிருந்தால்
ஆயுள் குறைவு. நாபிக்கு (தொப்புள்) கீழ் இருந்தால் தப ஜபங்களின் பலன் குறையும்.
நாபிக்கு சம்மாக இருப்பதே சரியானது. சந்தியா வந்தனம் செய்வதன் சிறப்பு பற்றி ஸ்ரீ
காஞ்சி காமகோடி மக பெரியவர் அருளிய உபதேசம்:
‘காயத்ரி மந்திரத்தை,
சொல்லப்பட்டிருக்கும் ஸங்க்யை குறையாமலும், சௌகர்யப்படும் வரை அதற்கு அதிகமாகவும்,
பிரதி தினமும் சரியான காலத்தில் மனம் சலிக்காமல் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம்
மிகவும் உத்க்ருஷ்டமானது. எவனொருவன் சிரத்தையுடனும், பக்தியுடனும் இந்த மந்திரத்தை
தியான பூர்வமாய் ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி சிரத்தையை அனுசரித்து அதே
ஜன்மாவிலோ, அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ, அவனே அந்த ஸௌர மண்டல
ரூபியான சூர்யனாகி (சூர்ய பகவானே ஸ்ரீமந் நாரயணன். அவரே எல்லா மூர்த்திகளின்
தோற்றம்) மோட்சத்தை அடைகிறான்!’
சந்தியா வந்தனம் உபவீதம்
தரித்தவர்கள் அவசியம் செய்ய வேண்டிய கடமை. காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் அவர்
மட்டுமன்றி அவர் சந்ததி, அவர் சமூகம், உலகுக்கே க்ஷேமம் ஏற்படுகிறது. சிரத்தையுடன்
வேதமாத காயத்ரி தேவியை தியானித்து நற்பலன்களைப் பெறுவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக