Thanjai

Thanjai

செவ்வாய், 29 மார்ச், 2011

ஆயிரம் ஆலயத் தீவு பாலி

ஆயிரம் ஆலயத் தீவு

குமுதம் சிநேகிதி டிசம்பர் 16-31, 2010 இதழில் வெளியானது.பயணங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன... உயிர்ப்பூட்டுகின்றன! வாழ்வை ரசிக்க வைக்கின்றன. அப்படியொரு ரசனையான பயணத்தை சமீபத்தில் நான் அனுபவித்தேன். சிங்கப்பூரில் இருக்கும் என் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அப்படியே அங்கிருந்து அதற்கு மிக அருகிலுள்ள இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவுக்கு குடும்ப சகிதமாக சென்றிருந்தோம்.


திரும்பிய இடமெல்லாம் நீலக் கடலும், நீல வானும் கைகோர்த்து விளையாடும் காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கிறது. பாலித்தீவில் நாங்கள் சென்றிருந்த ஒவ்வொரு இடமும் 'ஆஹா...அற்புதம்' என் குதூகலிக்க வைத்தன.


பாலி முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் தீவு. ஊரில் திரும்பிய இடமெல்லாம் கோயில்கள்! சின்னச் சின்ன சந்நதிகள்! ஆனால் எதிலும் ஆண்டவன் உருவமில்லை. அருவத்தையே இறைவனாக வணங்குகிறார்கள் இவர்கள். இரண்டு வீடுகளுக்கு ஒரு ஆலயம் உள்ளதால் பாலியை 'ஆயிரம் கோயில் உடைய தீவு' என்றே அழைக்கிறார்கள்! ஆனால் என்ன, எந்தக் கோயிலுக்குள்ளேயும் நம் யாரையும் அனுமதிப்பதில்லை. 'நாங்களும் இந்துக்கள்தான்' என்று சொன்னாலும் ம்ஹூம்! நோ என்ட்ரிதான்! பாலி மக்களும்கூட ஆலயத்திற்குள் செல்ல பிரத்யேக உடை அணிந்தே செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தட்டில் பழங்கள், இனிப்புகளை அழகாக அடுக்கி வைத்தபடி செல்லும் அந்த அழகே தனிதான்.
'அகுங்க்' என்ற மலையில் அமைந்துள்ள 'புரா பெஸாகி' என்ற தேவி ஆலயம் இங்குள்ள மிகப் பழமையான, புனித ஆலயமாகப் போற்றப்படுகிறது.


'புரா தீர்த் ஆம்புல்!' என்ற ஆலயம் மிகப் பெரியது. இதில் உள்ள சிலைகளும், கருட உருவங்களும் மிக அற்புதமான கலையழகுடன் விளங்குகின்றன. இங்கு உள்ள புனித நீரூற்றுகளில் நீராடுவதால் உடல் ஆரோக்கியமும், செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை. தானா லாட் என்ற கற்கோயில், கடலுக்கு நடுவில் உள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜாவா தீவுகளிலிருந்து வந்த குருமார்களால் 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்கிறார்கள். கொடிய விஷமுள்ள நாகங்கள் இப்பாறையில் இருந்து கொண்டு தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவதாக இந்த மக்கள் நம்புகிறார்கள். இப்பாறையில் மூன்று முகங்களைக் கொண்ட நீரூற்று உள்ளது. இதனை சுயம்புவாக உருவான சிவா, விஷ்ணு, பிரம்மா உருவங்களாகவே வழிபடுகிறார்கள். இவற்றிலிருந்து வரும் நீர் இனிப்பாக உள்ளதும் அதிசயமே!


குடா, ஜிம்பரான், நுஸாதுவா, படங்க்-ப்டங்க், ஸானூர், செராங்கன் என்று இங்கு நிறைய பீச்சுகள்...! கடலுக்கு நடுவில் உள்ள டர்டில் ஐலண்டில் மிகப் பெரிய ஆமைப் பண்ணை உள்ளது. ஆமைகளை கைகளில் தூக்குவதும் தடவுவதும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது!


கிண்ட்டாமணி என்ற இடத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலையையும் நேரில் சென்று பார்த்தோம். அது ஒரு பகீர் அனுபவம். எரிமலை உருகி வெளியான குழம்பு நிலங்களில் படிந்துள்ளதைக் காணும்போது அதன் வீரியத்தை உணர முடிகிறது.


'படூர் ஏரி' பாலியின் மிகப் பெரிய ஏரி. பாசனத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இம்மக்களின் உணவு அரிசி என்பதால், நெல் வயல்கள் இங்கு நிறைய! நெற்பயிர் இங்கு போல் சமதரையில் பயிரிடப்படாமல் மலை சரிவில் வளர்க்கப்படுவது வித்தியாசமாக இருக்கிறது. இந்த 'ரைஸ் டெர்ரஸ்கள்' கண்ணுக்கு பசுமை விருந்து!பசுமை விருந்து படைக்கும் நெல் வயல்கள்

சரி! ஊர் சுற்றியாச்சு! ஷாப்பிங்? அது இல்லாமலா? இங்கு மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் மிக அதிகம். விரலளவு முதல் ஆளுயரம் வரை மனித உருவங்கள், விலங்குகளைச் செய்து விற்கிறர்கள். வெள்ளியில் மிக நுணுக்கமான கலை ரசனை மிக்க பொருட்கள் அற்புதமாக உள்ளன.


பாலியைச் சுற்றிப் பார்த்து அனுபவிக்க நான்கு நாட்கள் நிச்சயம் தேவை. நான் சொல்லியிருப்பது சாம்பிளுக்குத்தான்!


பாலி செல்ல சிங்கப்பூர், மலேஷியாவில் இருந்து விமான வசதி இருக்கிறது. ஒருவரின் விமான பயணத்துக்கு (3 இரவு 2 பகல் அங்கே தங்கவும்_ ரூ. 51,000-ல் டூர் பேக்கேஜ்கள் கிடைக்கின்றன!