Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

கீதை பிறந்த இடம்

குமுதம் பக்தி ஸ்பெஷல் பிப்ரவரி 2003 இதழில் வெளியானது




மஹாபாரதப் போர் நடைபெற்ற இடம் குருக்ஷேத்திரம்


அச்சமயம் பகவான் கிருஷ்ணர் உபதேசித்த ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் சுலோகத்திலேயே தர்ம க்ஷேத்திரம் எனப் புகழப்படுகிறது. உலகிலேயே மிகப் புண்ணியத் தலமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரம், ரிக்வேதம் தோன்றிய காலத்திற்கும் பழமை வாய்ந்தது.

கௌரவ பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவரான குரு மகாராஜா, இவ்விடத்தில் உண்மை, தயை, அன்பு, தூய்மை, தானம், தர்மம், தவம், பிரம்மசரியம் இவை தழைக்க வேண்டி, தன் உடலை சிதைத்து விதைகளாகத் தர, மகாவிஷ்ணு அவற்றை அப்பூமியில் விதைத்தார். அவரது தியாகத்தை மெச்சிய விஷ்ணு, இரு வரங்கள் தர, குருவும் இவ்வூர் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு வாழ்ந்தவர் எத்தனை பாபம் செய்தாலும் சொர்க்கம் அடையவும் வரம் கேட்டார். சரஸ்வதி, யமுனை ஆறுகளை எல்லைகளாகக் கொண்டு கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய குருக்ஷேத்திரம், இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் பெருமை குன்றினாலும், தன் புனிதம், புகழ் இவற்றை இன்றளவும் இழக்கவில்லை.

இங்கு கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள், கண் பார்த்த இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றுக்கு சான்றாக நிற்கின்றன! நம்மை மகாபாரத காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன.

தீர்க்கதரிசியான பகவான், பகவத் கீதையை உபதேசிக்க குருக்ஷேத்திரம் சரியான இடம் என்பதை அறிந்தே, இவ்விடத்தை பாரதப் போர் நடத்தத் தேர்ந்தெடுத்தார். போரின் சமயம் அர்ஜூனனைக் காப்பாற்றும் பொருட்டு சூரிய கிரகணத்தை, கிருஷ்ணர் உருவாக்கியதால், சூரிய கிரகணத்தன்று இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவது மிக்க பலன் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை.

இங்குள்ள ‘ஜ்யோதிசர் தீர்த்’ என்ற இடமே அர்ஜூனனுக்கு பகவான் கீதையை போதித்த இடமாகும். மனம் வெதும்பி, தைரியம் இழந்து, உளம் சோர்ந்து, விரக்தி அடைந்து அர்ஜூனன் போர் செய்ய மறுத்தபோது, கண்ண பரமாத்மா தர்மத்தை எடுத்துச் சொல்லி, ‘பிறப்பும், இறப்பும் என்றும் நிகழக் கூடியது; உன் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! தர்மத்தை நிலை நாட்ட போர் செய்ய வேண்டியது க்ஷத்திரியனாகிய உன் கடமை. பாசங்களிலிருந்து மனதை விலக்கி உன் கடமையைச் செய்!’ என்று அறிவுறுத்தி, தன் விசுவரூப தரிசனத்தைக் காட்டி, அர்ஜூனனை உற்சாகம் பெறச் செய்த இடம். அவ்விடத்தைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது.

அங்குள்ள ஆலமரத்தினடியில்தான் கீதோபதேசம் நடந்ததாக்க் கூறப்படுகிறது. அம்மரம் 5000 வருடத்திற்கும் மேற்பட்டதாம். பலமுறை வெட்டப்பட்டும் துளிர்த்து விட்டதாம். அம்மரத்தின், விழுதுகளை அளவாக வெட்டி, மேல்பக்கம் கம்பி வலை போட்டு பராமரிக்கிறார்கள். அம்மரத்தின் கீழ் கிருஷ்ணரின் பாதங்கள் பளிங்கினால் செய்து வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான, அகன்ற, பெரிய ஆல மரத்தைக் காணும்போது, ‘இதன் இலையும், வேரும், விழுதுகளும் ஆண்டவனின் உபதேசத்தைக் கேட்டிருக்குமோ?’ என்று வணங்கி, வழிபடத் தோன்றுகிறது. அருகில் கீதோபதேச சிலை ஒன்று காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளால், கண்ணாடிப் பெட்டிக்குள் அமைக்கப் பட்டுள்ளது.



அருகிலுள்ள மற்றொரு ஆலமரத்தினடியில் மிகப் பழமையான சிவாலயம் உள்ளது. ஆதி சங்கரர், தன் நான்கு சீடர்களுடன் அமர்ந்த சன்னதி உள்ளது. மற்றும் பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணனின் விசுவரூபக் காட்சிகள் வண்ணச் சிலைகளாக, தனித் தனியாக வைக்கப் பட்டுள்ளன.

இங்குள்ள தீர்த்தத்தின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. ‘ஜ்யோதிசர் தீர்த்’ 1000 அடி நீளமும், 500 அடி அகலமும் உள்ளது. சூரிய கிரகணத்தின்போது இங்கு வரும் மக்கள் இத்தீர்த்த நீரை, ஆலமரத்திற்கு ஊற்றி, இதில் நீராடி நீத்தார் கடன் செய்து, இங்கு அமர்ந்து பகவத் கீதையைப் படித்து விட்டுச் செல்வார்களாம். உலகின் புனித நூல்களில் தலை சிறந்ததான கீதை தோன்றிய இடத்தில் அமர்ந்து தியானம் செய்து, மனக் கண்ணால் கீதாசாரியனைக் காணும்போது மனம் எங்கோ பறப்பது போலுள்ளது! அவ்விடத்தை விட்டு அகலவே மனமில்லை.

இது தவிர, கௌரவ, பாண்டவர் ஆலயம், பத்ர காளி ஆலயம், பிரம்மசரோவர், பீஷ்மர் அம்புப் படுக்கையிலிருந்த இடம், அபிமன்யு வதம் செய்யப்பட்ட இடம், பாண்டவர் குளித்த சுனை, பிர்லா மந்திர், கீதாபவன் என்று பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நவம்பர் – டிசம்பரில் நடக்கும் ‘கீதா ஜயந்தி’ உற்சவத்திற்கு உலக நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் கூடுவார்களாம். நம் வாழ்வில் ஒருமுறை கண்டிப்பாகச் சென்று, தரிசித்து புண்ணியம் பெற வேண்டிய இடம் குருக்ஷேத்திரம்.

குருக்ஷேத்திரம் டில்லியிலிருந்து சண்டிகர் செல்லும் வழியில் 180 கி.மீ. தொலைவில் உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக