Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

வல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்

ஞானபூமி செப்டம்பர் 2003 இதழில் வெளியானது
தமிழ்க் கடவுளான அழகன் முருகனுக்கு தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் கூட ஆலயங்கள் உண்டு. இவற்றில் சிறப்பு பெற்ற ஆறு தலங்கள் அறுபடை வீடுகள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் படுகின்றன. அழகன் முருகன் கோபம் கொண்டு ஆண்டிக் கோலத்தில் ஆவினன்குடி என்ற மலையில் நின்று ஆட்சி செய்யும் ஸ்தலமே பழநி. சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணச் சிலையே இன்றுவரை பழநி ஆலயத்தில் காட்சி தரும் பழனியாண்டவர் மூல விக்ரகம். அதே போன்று சென்னையில் 3 சித்தர்களால் பூஜிக்கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலயமாகி, சென்னை வாழ் பக்தர்களுக்கு இன்னருளை வாரி வழங்குவது வடபழநி ஆண்டவர் ஆலயம்.

17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது இன்றைய சென்னை. புலியூர்க் கோட்டம் என்பது அதன் பெயர். அங்கு வாழ்ந்த அண்ணாசாமி நாயக்கர் என்பவர் சிறந்த முருக பக்தர். நாளும் பொழுதும் அழகன் முருகனை வணங்குவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். பழநி முருகனின் மேல் அவருக்கு அபார பக்தி. ஏனைய வாழ்வியல் ஆசைகளில் நாட்டமில்லாது அல்லும் பகலும் குமரக் கடவுளையே துதித்து வந்தார். அவரது பெரிய சொத்தாக அவர் வைத்து வழிபட்டது பழநி ஆண்டவரின் ஒரு புகைப்படம்.

அவரது பக்தியில் கட்டுண்ட கதிர்வேலன் ஒரு நாள் அவர் கனவில் தோன்றினான். அவரது வீட்டையே கோவிலாக்கி வழிபடும்படி ஆணையிட்டான். மெய் சிலிர்த்து விழித்த அண்ணாசாமி நாயக்கர் இறைவன் ஆணையை நிறைவேற்றினார். அவரது இல்லம் கோயிலாயிற்று. பழநி ஆண்டவன் வடபழநி ஆண்டவன் என்ற பெயர் பெற்றான். அண்ணாசாமி நாயக்கர், அண்ணாசாமி தம்பிரான் என்ற பெயருடன், முருகன் அருளால் பல சித்துக்களை நிகழ்த்தினார். முருகனை மனதில் கொண்டு, ஆலயம் வருவோர்க்கு குறி சொல்ல, அவனருளால் அவர் வாக்கு மெய்ப்பட ஆரம்பித்தது. வடபழநி ஆண்டவனின் புகழும் பரவியது.

அவரது காலம் முடிந்த பின், அவரது சீடர் இரத்தினசாமி தம்பிரான் என்பவரால் பணிகள் தொடர்ந்து நடந்தன. அவருக்குப்பின் அவரது சீடர் பாக்யலிங்கத் தம்பிரான் முருகன் அருள் பெற்று, கடமைகளைத் தொடர்ந்தார். 1931ஆம் ஆண்டு அவர் சித்தியடைந்தபின், அங்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த பக்தர்களால் ஆலயப் பணி தொடரப்பட்டது.

மூன்று சித்தர்களின் சமாதியும் ஆலயத்தின் பின்புறம் அமைக்கப்பட்டு முறையாக பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒரு சிறிய வீடே ஆலயமாக இருந்தது. இன்று வானளாவிய கோபுரம், அழகான சன்னதிகள், திருமண மண்டபம், தங்க ரதம் என்று மிகப் பெரிய ஆலயமாக விளங்குகிறது. ஆலயத்தில் நுழையும்போதே பக்தி அலைகள் இறைவனின் கருணை நம்மை ஈர்ப்பதை நன்கு உணர முடிகிறது. வரசித்தி விநாயகரின் ஆசியுடன் வடபழநி ஆண்டவரைத் தரிசிக்கச் செல்கிறோம்.

சிறிய பீடத்தின் மேல் இடக் காலை சற்று வளைத்து வலக்கையில் வேலும், தண்டமும் தாங்கி, இடக்கையை இடுப்பில் தாங்கி, ஒயிலாக தரிசனம் தரும் ஐயன் ஆனந்தக் குமரனை விட்டு நகரவே மனம் வரவில்லை. கண்களைச் சொக்க வைக்கும் குழந்தை பாலனை அருகில் சென்று அள்ளி அணைக்க ஆவல் ஏற்படுகிறது.

ராஜ அலங்காரத்திலும், சந்தன, விபூதிக் காப்பு அலங்காரங்களிலும் அர்ச்சகர்களின் கை வண்ணத்தில் இறைவன் காட்டும் புன்சிரிப்பு உலகையே மறக்கவைக்கிறது. அற்புத தரிசனத்திலிருந்து விலக முடியாமல் நகர வேண்டியுள்ளது.

கற்பக் கிரஹத்தை சுற்றி வந்தபோது, தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேசுவரர் சன்னதிகளும் உற்சவ விக்கிரகங்களும் காட்சியளிக்கின்றனர்.

பிரம்மாவின் உருவம் சுற்றுச் சுவரில் உள்ளது. வெளிச்சுற்றில் சொக்க நாதர், மீனாட்சி சந்நிதிகள் உள்ளது. இவை தவிர அங்காரகன், ஆறுமுக வேலவர், அருணகிரி நாதர், ஆஞ்சநேயருக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

ஆலயத்தின் பின்பகுதியில் வள்ளி திருமண மண்டபம் உள்ளது. அதன் அருகில் கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களான ஸ்ரீஅண்ணாசாமி தம்பிரான், ஸ்ரீஇரத்தினசாமி தம்பிரான், ஸ்ரீபாக்கிய லிங்கத் தம்பிரான் ஆகியோரின் சமாதி ஆலயம் உள்ளது. அங்கு அவர்கள் உபயோகித்த பொருட்கள் உள்ளது. அவர்கள் குறி சொல்லும்போது உபயோகித்த சிறிய கம்பினால் சந்நிதியில் தரிசிப்பவர்களின் தலையில் தட்டுவதால், அவர்கள் துன்பங்கள் தீருவதாகக் கருதப்படுகிறது.

சந்நிதி எதிரில் ஒரு தியான மண்டபம் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு அபிஷேகமும், பின் அன்னதானமும் நடைபெறுகிறது. இங்கு ஒவ்வொரு கார்த்திகை, சஷ்டி, விசாக நாட்களில் விசேஷ வழிபாட்டுடன், கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், தைப்பூச உற்சவங்கள், பங்குனி உத்திரத்தன்று தெப்பம் இவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சிறிய தங்கத் தேரில் அலங்கார பூஷணனாய் என்னப்பன் முருகன் ஆடி ஆடி வரும் அழகுக் காட்சி கண்களுக்கு பெருவிருந்து.

வேண்டியன நிறைவேற்றும் வேலாயுதனுக்கு பக்தர்கள் தங்கத் தேர் இழுப்பது அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. சென்னையின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் இஷ்ட தெய்வமாக வடபழநி முருகன் விளங்குவதாக அவ்வாலய அர்ச்சகர் கூறினார்.

இவ்வாறு சென்னை நகர மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும், ஏன் வெளி நாட்டிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து வடபழநி ஆண்டவனைத் தரிசித்து, அவனருள் பெற்றுச் செல்கின்றனர்.


தன் வெற்றி வேலினால் நம் வினைகளைத் தூர விரட்டும் வடபழநி ஆலயம் சென்று தரிசித்து அவனருள் பெறுவோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக