Thanjai

Thanjai

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆயிரத்தெண் விநாயகர்

ஏப்ரல் 20 தீபம் இதழில் பிரசுரமானது...



 


















விநாயகருக்கென தமிழகத்தில் தனியாக அமைந்துள்ள முக்கிய கோயில்களில் ஒன்று ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்  விநாயகர் ஆலயம். தேர், கொடிமரத்தொடு விநாயகப் பெருமான் இங்கு திருவிழாவும் காண்கிறார்.


'முதாகராத்த மோதகம்'....இந்த தோத்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீ கணேச  பஞ்சரத்னம். இதை இயற்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர் என்பதும் நாம் அறிந்த விஷயம். அந்த தோத்திரத்தை ஆதிசங்கரர் இயற்றியது எங்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஆயிரத்து எண்  விநாயக'ரின் சந்நிதியில்தான்.


எல்லா விநாயகர் ஆலயங்களையும் போன்று அரசமரத்தின் அடியில் இருந்த இந்த விநாயகர் ஆதி சங்கரரால் பாடப்பெற்றது எப்படி? மஞ்சளிலும், களிமண்ணிலும் உருவாக்கினாலும், எளிதில் இலவசமாகக் கிடைக்கும் அருகும், தும்பையும்  சாற்றினாலும், அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் அமர்ந்து தன்னை நாடி வந்தோரின் குறைகளைக் களையும் நம் பிள்ளையாரப்பன் ஆறுமுகமங்கலத்தில் அருளாட்சி செய்து வருகிறார். சுமார்  2000 ஆண்டுகளுக்கும் முன்பு உருவானவர்  இவ்விநாயகர் என்கிறது வரலாறு. அந்நாளில் யஞ்ஞம்மாள்புரம் என்ற அந்தணர் தெருவில் வாழ்ந்த  வேதியர்களால் ஒரு சிறு ஆலயத்தில் வணங்கப்பெற்றவர்.

நான்காம் நூற்றாண்டில் சோமர வல்லபன் என்ற அரசன் நர்மதை நதி தீரத்திலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து ஒரு யாகம் நடத்தினான். அதில் 1008க்கு ஒருவர் குறைவாக இருக்க, விநாயகர் தானே ஒரு பிராம்மணராக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்ததால் அவர் பெயர் 'ஆயிரத்துஎண்  விநாயகர்' ஆயிற்றாம். யாகத்தை முடித்துக் கொடுத்த விநாயகர் ஆறுமுக மங்கலத்திலேயே தங்கி  ஆலயம் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.

                                                            ஆலய விமானம்


பலகாலம் முன்பு ஒரு சிறிய சந்நிதியில் கோயில் கொண்டிருந்த கஜமுகனின் பெருமையும், இடர்களை நீக்கி அருளும் அவரது திருவருளும்  எங்கும் பரவ, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஆலய மண்டபங்களும்கொடிமரம்,பலிபீடம்தேர் போன்றவையும்  உருவாக்கப்  பட்டன. தமிழ் நாட்டின் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பிள்ளையாரின் ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாக நடைபெறும்.விநாயகருக்கான பிரத்யேக ஆலயமாக விளங்கிய இவ்வாலயத்தில் உக்ரம பாண்டியனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ கல்யாணி அம்மன் சந்நிதிகள் உருவாக்கப்பட்டன. இவ்வூரின் எல்லைக் காவல் தெய்வங்களான சுடலைமாடன், தோப்பாச்சி அம்மன், இளையநாயனார் மூவரின் ஆலயங்கள் வடக்கு, தெற்கு, மேற்கில் முக்கோண வடிவமாக அமைந்திருக்க, பிந்து ஸ்தானமாகிய நடுவில் இந்த பெருமான் கோயில் கொண்டுள்ளது மிகச் சிறப்பான தோற்றமாகும்.

                                                                  

 1945ம் ஆண்டில் பஞ்சலோகத்தாலான பஞ்சமுக விநாயகர், நடராஜா, முருகப் பெருமான் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஐந்து திருமுகங்களும், பத்து முத்திரைகள் கொண்ட திருக்கரங்களும் கொண்டு ஹேரம்ப வினாயகர் என்ற பெயரில் காட்சி தரும் இப்பெருமானின்  அழகு மனத்தைக் கொள்ளை கொள்கிறது. 




இங்குள்ள நடராஜரின் தலையில் விரிசடையோ, ஜடாமுடியோ இன்றி கிரீடம் இருப்பது வித்யாசமான தோற்றமாகும்.இங்குள்ள ஒன்பது அடி உயரமுள்ள நடராஜாவின் சப்பரம் இப்பகுதியிலுள்ள சப்பரங்களில் மிக உயரமானதும், வித்யாசமான வேலைப்பாடு அமைந்ததுமாகும்.




இப்பெருமான் வரப்பிரசாதியாவார். கேட்டவற்றையும், நினைத்தவற்றையும் உடன் நிறைவேற்றுவதில்  இவருக்கு இணை இவரே என்கின்றனர். திருமணம், பிள்ளைப் பேறு, கல்வி, வேலை, வியாபாரம்  இவற்றிற்கான வேண்டுதல்கள் இங்கு அதிகம். அடிக்கடி விபத்து ஏற்படுவதுதிருமணம், படிப்பில் தடை ஏற்படுவது, வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு இவற்றிற்கு இவ்வாலய இறைவனை வேண்டி 108, 1008 தேங்காய்கள் உடைப்பதும், 108, 1008 விளக்குகள் ஏற்றுவதும் இவ்வாலயத்தின் சிறப்பான, தனிப்பட்ட வழிபாடாகும்.  அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் 1008 விளக்கு ஏற்றும் வேண்டுதல் மிகப் பிரபலமாக நடைபெறுகிறது. பரிகாரங்களாக கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், அபிஷேக ஆராதனைகள் அடிக்கடி நடைபெறுகின்றன.


பண்டைய நாட்களில் இங்கு அன்னதானங்களும், உற்சவங்களும் மிக சிறப்பாக நடந்தனவாம். தற்போது ஆகம முறைப்படி இங்கு நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.சித்திரையில் நடைபெறும் பத்து நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் அம்மை, அப்பன் சகிதமாக விநாயகர் எழுந்தருள்வார். பத்தாம் நாள் அன்று தேரோட்டம் நடக்கும். அந்த நாட்களில் இங்கு நடக்கும் அன்னதானம் மிகச் சிறப்புடையதாம். விநாயகர் கேது கிரகத்தின்  அதிபதி என்பதாலும், காளஹஸ்தீஸ்வரர்  இங்கு அருள் புரிவதாலும், காளஹஸ்தியைப் போன்றே இவ்வாலயம் கேது கிரக தோஷம், மற்றும் நாகதோஷத்திற்கான பரிகார நிவர்த்தித்  தலமாக விளங்குகிறது.


ஆதி சங்கரர் விஜய யாத்திரையாக திருச்செந்தூர் சென்றபோது வழியில் இவ்வாலய கணபதியை வணங்கி கணேச பஞ்சரத்னத்தை பாடினார். பின் செந்தூர் சென்று 33 ஸ்லோகங்களால்  முருகப்பெருமானை வியந்து, புகழ்ந்து பாடினார். ஆதி சங்கரர் முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய ஒரே தோத்திரம் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம். இதனை சொல்பவருக்கு சகல நன்மையையும் ஏற்படும் என்பது சங்கர பகவத் பாதரின் வாக்கு. இன்றும் திருச்செந்தூரில் தினமும் கணேச பஞ்சரத்னம் பாடிய பின்பே சுப்ரமணிய புஜங்கம் ஓதப்படுகிறது. ஆதிசங்கரரின் திருப்பாதங்கள் பட்ட இவ்வாலயத்தை நாமும் தரிசித்து ஆயிரத்து எண் வினாயகரின் திருவருளைப் பெறுவோம். தமிழ் அறிஞர் திரு கி.வா.ஜ.அவர்கள் இவ்வாலய இறைவனை சிறப்பித்து பாடியுள்ளார்.


திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தூரமுள்ள ஏரல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரமுள்ள ஆறுமுகமங்கலத்திற்கு பஸ் அல்லது  ஆட்டோ மூலம் செல்லலாம். 
ஆலய நேரம்...காலை 6-11...மாலை--5-8
தொலைபேசி...0461 232 1486





ஆதி சங்கரர் அருளிச் செய்த ஸ்ரீ கணேச பஞ்சரத்ன ஸ்லோகம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம் |
நதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம் || 1 ||

நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் || 2 ||

ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்சனாஸ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

நிதாந்த  காந்த  தந்த காந்தி மந்த காந்த  காத்மஜம் |
அசிந்த்ய ரூபமந்த  ஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதன்ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |
தமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||

மஹாகணேஸ பஞ்சரத்னமாதரேண யோ‌ன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||




காதால் கேட்கவும்



1 கருத்து: