இந்து தர்மம் ஒன்றுதான், தானே உருவான பெருமை படைத்ததாகும்
என்கிறது உபநிஷத்துக்கள். அடுத்தவருக்குத் துன்பம் செய்ய அச்சப்படுபவனே உண்மையான
இந்து என்பது உபநிஷத்தின் வாக்கியம். இறைவன் எல்லா இடத்திலும்
நிறைந்திருக்கும்போது தனியாக ஆலயம் சென்று வணங்கக் காரணம் என்ன? கோபுரம்,
கொடிமரம், கர்ப்பக்கிரஹம் இவற்றின் பொருள் என்ன? தூப தீபங்களின் தாத்பர்யம் என்ன
என்பது பற்றி பெரியோர் யாது கூறியிருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.
ஆலயம்: ஆன்மாக்கள் ஆண்டவனிடம் லயிக்குமிடம். ஆணவ மலம்
அடங்குமிடம். கோயில் – கோ என்றால் இறைவன். இல் என்பது தங்குமிடம். கடவுளின்
இருப்பிடம்.
இறைவனை ஆலயம் சென்று வணங்கக் காரணம், ஒரு லென்ஸை சூரிய
ஒளியில் பிடித்தால் ஒளிக் கற்றைகள் குவிந்து வெப்பம் தருவது போல், இறைவனின் சக்தி
விக்கிரகங்களில் சேகரிக்கப்பட்டு அமைந்தவையே ஆலயங்கள்.
கோபுரம்: ஸ்தூல லிங்கத்தை உணர்த்தும் கோபுரம் போல் ஆன்மீக உணர்வில்
நாம் ஓங்கி உயர்வதைக் குறிக்கும்.
கொடிமரம்: யோகி பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி தியானம்
செய்தால், மனம் முதலான அந்த கரணங்கள் நின்று உலகு மறந்து, தெய்வ தரிசனம் ஏற்படும்
தன்மையை உணர்த்தும்.
பிரகாரங்கள்: அன்னம், பிராணன், மனம், விஞ்ஞான, ஆனந்த மயம் என்று ஐந்து
கோசங்களையும் பஞ்ச இந்திரியங்களையும் குறிக்கும்.
மூன்று
பிரதட்சணங்கள்: ஸ்தூல,
சூட்சும, காரண சரீரங்களைக் குறிப்பது.
மண்டபங்கள: அர்த்த, மஹா, ஸ்நபன, அலங்கார, சபா எனப்படும் ஐந்து
மண்டபங்கள் குறிப்பன – நிவ்ருத்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம் என்ற
ஐந்து கலைகளைக் குறிப்பவை.
அபிஷேகம்: ஆலயத்தில் அமைந்துள்ள ஆண்டவன் குளிர்ந்தால் அவனுள்
அடங்கியுள்ள உயிர்களும் தழைத்து விளங்கும்.
தேங்காய்
உடைத்தல்:
ஆன்மாக்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்கள் உண்டு. தேங்காய் மீதுள்ள
பச்சை மட்டை மாயா மலம். உரித்தெடுக்கும் நார் கன்ம மலம். ஓடு ஆணவ மலம். இம்மூன்று
மலமும் அகன்றால் வெண்ணிற பருப்பு தோன்றும். இறைவனை நம் மும்மலங்களையும்
அகற்றும்படி வேண்டி குறிப்பு தருவதே இதன் பொருள்.
தூபம்: ‘நான்’ என்ற அகந்தையைப் பொசுக்குவது தூபத்தின் தத்துவம்.
தீபம்: அஞ்ஞான இருளைப் போக்கி, ஞான ஒளி ஏற்படுவதைக் குறிப்பது,
கற்பூரம் ஜோதியில் எரிந்து கரியோ, சாம்பலோ இல்லாமல் மறைவது போல், ஆன்மா ஜோதியில்
கரைந்து ஒன்றுபடுவதைக் குறிப்பது.
நிவேதனம்: நம் குணங்களாகிய அகங்காரம், குரோதம் முதலானவற்றை
ஆண்டவனுக்கு அமுதமாக சமர்ப்பித்து, நாம் தூய்மை பெறுவதை உணர்த்துவதாகும்.
அர்ச்சனை: வாழ்வு மலரவும், மணம் பெறவும், மலர்களால் இறைவனுக்கு
அர்ச்சனை செய்கிறோம்.
அரோஹரா: ‘ஹர’ என்றால் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ‘அர’
என்பது சிவ நாமம். ‘அரஹர’ என்று சொல்வதால் நம் துன்பங்கள் தீயிலிட்ட பஞ்சாக எரியும்.
உபவாசம்: பாவங்கள் செய்யாது, சுகபோகங்களை விட்டு, மந்திர ஜபம்,
பூஜை, சத்சங்கம், ஆகாரம் உண்ணாதிருத்தல் இவையே உபவாசத்தின் குணங்களாகும்.
கோலம்: வாழ்க்கை சுக துக்கம் பின்னல்களால் உருவானது. எறும்பு
முதலான ஜீவன்களிடமும் நாம் கருணை காட்டவே அரிசி மாவால் கோலம் போட வேண்டும்.
நமஸ்காரம்: பெண்கள் பஞ்சங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும்
செய்தல் வேண்டும்.
விபூதி: நாம் இறுதியில் சாம்பலாகப் போவதை உணர்வதே விபூதி தரிப்பதன்
பொருள். நாம் மண்ணில் கலப்பதை அறிவிப்பதே வைணவர்களின் திருமண். விபூதியை மூன்று
பட்டைகளாகத் தரிப்பதன் பொருள் – ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்களும் தகிக்கப்
பட்டதை உணர்த்துவது.
இறைவன்
வீதி உலா: நோய்வாய்ப்
பட்டோர், முதியோர், ஆலயம் செல்ல முடியாத தீட்டு உடையோர் ஆகியவர்களுக்கு இறைவன்
தரிசனம் அளிக்க ஏற்பட்டதே திருவீதி உலா.
பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது... நன்றி...
பதிலளிநீக்குThanks for your comment...
நீக்கு