Thanjai

Thanjai

செவ்வாய், 5 நவம்பர், 2019

குமுதம் சிநேகிதியில் எங்க வீட்டு கொலு..2019













வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நன்றுடையான் விநாயகர்

5.9.2019 இதழில் தீபம் இதழில் பிரசுரமானது

நம் நாட்டில் முதல் கடவுளான முக்கண்ணன் மகன் விநாயகருக்கு ஆற்றங்கரையிலும், மூலை  முடுக்குகளில் கூட ஆலயங்கள் உண்டு. அதில் பிரபலமான ஆலயங்கள் பலப் பல. திருச்சியின் உச்சிப் பிள்ளையார் ஆலயம் மிக பிரசித்தி பெற்றது. அனைவரும் அறிந்தது. அந்த ஆலயத்துக்கும் முற்பட்ட  பழமையான ஒரு விநாயகர் இவ்வூரில் அருள் செய்வது பலரும் அறியாத விஷயம். இவ்வாலயம் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் காணப்பட்ட ஆதி விநாயகர்  காட்சி தரும் நன்றுடையான் ஆலயம் உச்சிப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பே தோன்றியது. நன்றுடையான் என்றால் 'நல்ல காரியங்களை உடன் முடித்துக் கொடுப்பவர்' என்று பொருள்.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே திராவிட கலாச்சார முறையில் உருவாக்கப் பட்டுள்ள இவ்வாலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்று அறிய முடியாத அளவு பழமையானது. திலதைப்பதியில் மட்டுமே நாம் தரிசிக்கக் கூடிய நரமுக விநாயகர் இங்கு காட்சி தருவது எந்த ஆலயத்திலும் இல்லாத அதிசயம் எனப்படுகிறது.

சிறிய கோபுரம் தாண்டி உள்நுழைந்ததும் ஆஞ்சனேயஸ்வாமி தரிசனம் தருகிறார். அவரை வணங்கி இடப்பக்கமாக உள்ளே சென்றால் அவரது பின் பக்கம் ஐந்து அடி  உயர நன்றுடையான் விநாயகர் அழகுறக் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன்,கரங்களில் அங்குசம், பாசம், மோதகம் இவற்றுடன் வரங்களை வாரி வழங்கும் வரத ஹஸ்தத்துடன் நாகாபரணம், சர்வாபரண பூஷிதராக இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரின் அழகில் நாம் மயங்கி நிற்கிறோம். அவரின் கம்பீரமும், கருணையும் வணங்கியவரின் துன்பங்களை காணாமல் போகச் செய்யும் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கிறது.

அவருக்கு முன்பாக வெளிபிரகாரத்தில்  கிழக்கு திசையில் காணப்படும் பிரம்மாண்ட நந்தீஸ்வரர் நாகநந்தி என அழைக்கப் படுகிறார். சிவனுக்கு முன்பாக இருக்கும் நந்தி இங்கு கணபதிக்கு முன்பாகக் காட்சியளிப்பது வித்யாசமாக உள்ளது. பிரதோஷம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அருகிலேயே சிவபார்வதிக்கு ஒரு சிறிய சன்னதி  உள்ளது.

ஆலயத்தினுள் நன்றுடையான் விநாயகரின் வலப்பக்கம் உள்ள ஒரு சன்னதியில்தான் நாம் நரமுக விநாயகரை தரிசிக்கலாம். நான்கடி உயரத்தில் வலக்கையில் அங்குசமும், இடக்கையில் மோதகமும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆதி விநாயகரின் இருபுறமும் ஆதி சங்கரரும், சதாசிவ ப்ரம்மேந்திரரும் காட்சி தர, அருகில் பட்டினத்தார், வேத வியாசர், காயத்ரி தேவியும் காட்சி தருகின்றனர். ஆதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி மற்றும் வியாழக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்  படுகிறது. திருஞான சம்பந்தர் இவ்விநாயகரை தம் பதிகத்தில் பாடியுள்ளார்.

அறுபது வருடங்களுக்கு முன்பு இவ்வாலயத்தை தரிசித்த மகாபெரியவர் இவ்வாலய மஹிமையை எடுத்துச் சொல்லி தினமும் வேத பாராயணம் செய்யச் சொன்னதால் தினமும் இங்கு வேதம் ஓதப்படுகிறதாம்.அகஸ்திய மகரிஷி சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இங்கு வந்து ஆதி விநாயகரை வழிபடுவதாகக் கூறுகிறார்கள். மேலும் இங்கு முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், துர்கைக்கும் சன்னதிகள் உண்டு. இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூர்ய பகவானை நோக்கி எல்லா கிரகங்களும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானது. இங்கு நவக்கிரக வழிபாடு பக்தர்களின் பல சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் உடையது.

விநாயக சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இங்கு கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் சங்கீதக் கச்சேரிகள் வெகு பிரசித்தம். மதுரைமணி அய்யர் போன்ற மிகப் பெரிய பாடகர்கள் இங்கு இவ்விநாயகரின் அருள் பெறவேண்டி வந்து கச்சேரி செய்வார்களாம்! இரவு நேரங்களில் நன்றுடையான் விநாயகரும், நந்தி தேவரும் கச்சேரிகளை பற்றி விரிவாக்கப் பேசிக் கொள்வார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டாம்!

இங்கு நவராத்திரி, கிருத்திகை, சிவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி என்று அத்தனை விசேஷங்களும் கொண்டாடப் படுகின்றன. இவ்விறைவனை வணங்கி வழிபடுவோர் குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, திருமணம், மக்கட்பேறு  இவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருச்சியில் கிழக்கு புலிவார் தெருவில் நெருக்கமான கடைகளுக்கிடையே சிறிய கோபுரத்துடன் காணப்படும் இவ்வாலயம் திருச்சி மக்கள் பலரும் அறிவதில்லை. முருகன் தியேட்டர் அருகில் என்று சொன்னாலே ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு புரிகிறது. திருச்சிக்கு வருவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பான ஆலயம்.



செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

என் மனைவியைப் பற்றி




மங்கையர் மலர் ஏப்ரல், 1999 ஆண்டு வெளியானது



ஒரு ஆண் வாழ்வின் முதல் 25 வருடங்களை தாய், தமக்கை, தங்கை என்ற பெண்களுடன்தான் கடத்துகிறான். நாட்கள் ஆக ஆக அந்தப் பெண்கள் சிறிது சிறிதாக அவன் வாழ்விலிருந்து ஒதுங்கிப் போகும் நேரம். அவன் மனம் தனக்காகவே வாழ்ந்து, தன்னை மட்டுமே காதலித்து, தனக்காகவே வாழ்வின் ஒவ்வொரு நாளையும் வாழப்போகும் மனைவியைப் பற்றி அநேக கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறது.



அந்த மனைவி அவனது எண்ணங்களைப் புரிந்து கொண்டு, எதிலும் விட்டுக் கொடுத்து, அழகான வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, அன்பு, பாசம், காதல், தாய்மை நிறைந்தவளாக இருந்து விட்டால் அந்த மனைவி இறைவன் கொடுத்த வரம் மட்டுமா! அவள் வாழ்வே சொர்க்கம்தானே? நானும் அப்படிப் புண்னியம் செய்ததன் பலன் தானோ, அப்படி ஒரு மனைவியைப் பெற்றிருக்கிறேன் என்று பலமுறை இறைவனுக்கு நன்றி சொன்னதுண்டு.



கணவன், மனைவி என்றால் சண்டையும் பிணக்கும் வராதா என்ன? ஊடல் இல்லாத வாழ்வில் உவகை ஏது? எங்களுக்குள்ளும் சண்டை வந்ததுண்டு. ஆனால் என் மனைவியோ என்ன சண்டையானாலும் பேசாமல் இருந்ததோ, சமைக்காமல் இருந்ததோ... ஊஹூம். என் 23 வருட மண வாழ்வில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததேயில்லை. இதற்கு முக்கிய காரணம் அவளது விட்டுக் கொடுத்தல் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடன் மிகச் சில மணி நேரம் கூட சண்டையினாலோ வேறு காரணங்களாலோ என் மனைவி பேசாமல் இருந்ததில்லை. எனக்கு என்ன மனக் கவலை ஏற்பட்டாலும் அவளின் புன்சிரிப்பும், ஆறுதல் தரும் வார்த்தைகளும் அவற்றை நொடியில் நீக்கிவிடும் டானிக்!



எத்தனையோ வருடமாக என்னிடமிருந்த வெற்றிலை, சீவல் பழக்கத்தை மிகப் பொறுமையாக எடுத்துச் சொல்லி என்னை விட வைத்த பெருமை என் மனைவியையே சாரும். எங்களுக்குள் ஈகோ இல்லை; இரண்டு எண்ணங்கள் இருந்ததில்லை. இருவரும் எல்லா விஷயங்களையும் இணைந்து பேசியே முடிவெடுப்போம். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என் மனைவியைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் சந்தோஷம் புதிதாகவே இருப்பது எனக்கு வியப்பளிக்கும் விஷயம்! என்னுடைய இந்த அன்பு, உறவினர்களால் ‘பெண்டாட்டிதாசன்’ என்று சொல்லப்பட்டாலும் நான் கவலைப்படுவதில்லை! அன்பிற்கு அரவம் கூட கட்டுப்படும்போது என் மனைவியில் தன்னலமற்ற அன்பில் நான் கட்டிப்போடப்படுவதில் என்ன தவறு?



பெண்களுக்கு சந்தேகம் உடன் பிறந்த ஒன்று. தாங்கள் பாராட்டப்பட வேண்டும், மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணமும் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம். ஆண்களுக்கு வீடு, மனைவி, குழந்தைகள் மட்டுமே முக்கியமல்ல. அவர்களின் பணி, அதில் ஆற்ற வேண்டிய கடமைகள் குடும்பத்தைவிட முக்கியம் என்பதை பெண்கள், அது தாயோ, தாரமோ, மகளோ யாரும் புரிந்து கொள்வதில்லை என்பது என் வருத்தம்.



வெளியில் ஒரு ஆண் பலருடன் பழக வேண்டியிருக்கிறது. இன்றைய வேகமான உலகில் பல பேருடன் தொடர்பு கொண்டு, பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவன் குடும்பத்தின் சில கடமைகளை மறந்து விடுவது சாத்தியமே. மேலும் மனைவி என்ற ஒருத்தி தன்னையும் குடும்பத்தையும் மிகச் சரியாக நிர்வகிப்பாள் என்ற நம்பிக்கைதான் அந்த ஆணை வெளி உலகில் பல விஷயங்களைச் சாதிக்க வைக்கிறது. ஆனால் மனைவியின் ஆசைகளும், ஏக்கங்களும் உதாசீனப் படுத்தப்படும்போது அந்த ஆணுக்கு, வெளியில் பலராலும், பலவிதமாக புகழ்ந்து பாராட்டுப் பெறும் மனிதனுக்கு பூஞ்சோலையாகவும், சொர்க்கமாயும் இருக்க வேண்டிய வீடு சண்டைக் களமாகிறது. இது அவனது உடல், மனம் இரண்டையும் பாதிக்க, வாழ்க்கை திசை மாறி, வழித்துணையுடன் ஏற்படும் சண்டையால் வாரிசுகளும் பாதிக்கப்பட்டு, அழகாக வாழ வேண்டிய வாழ்க்கை அவலமாகிறது.



வாழ்க்கை இறுதிவரை இனிக்க வேண்டுமானால் தன் கடமை, வேலை என்று வாழும் கணவர்கள் மனைவி பக்கமும் கொங்சம் கண்ணையும், மனதையும் திருப்ப வேண்டியது அவசியம். ஒரு சின்ன பாராட்டு, பிறந்த நாள், மண நாளிற்கு பரிசு, அவ்வப்பொழுது தனிமையில் தம்பதியராகச் செல்லும் ஒரு சிறிய பயணம், இவை போதுமே அந்தப் பெண்களை மகிழ்ச்சிப் படுத்த. கணவன், குழந்தைகள் என்று ‘அவர்களையே உலகமாக எண்ணி, தன் சுக துக்கங்களை மறந்து வாழும்’ மனைவிக்கு கணவன் செய்யும் மிகச் சிறிய கடமைதானே இது?



பொதுவாகப் பெண்களிடம் இருக்கும் மிகப் பெரிய குறை, தங்கள் உடல் நிலையில் ஏற்படும் குறைகளை, சுகவீனங்களை பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. உடல் நிலை மோசமாகும் வரை விட்டு கடைசியில் தானும் கஷ்டப்பட்டு, அடுத்தவர்களையும் துன்பப்பட வைப்பதில் அவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷமோ? பல பிரச்சனைகளோடு போராடும் ஒரு கணவன், மனைவியின் குறையை சொன்னால்தானே தீர்த்து வைக்க முடியும்? கணவனாகவே அறிந்து தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், சரி செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைப்பதை மாற்றிக் கொள்வார்களோ?



ஆண்களுக்கும் மனம் உண்டு; ஆசைகள் உண்டு. ஆயிரம் ஊர்கள் சுற்றி வந்தாலும், மனதில் ஆயிரத்தெட்டு கவலைகள் இருந்தாலும், ‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவன் தேடுவது அன்பு நிறைந்த மனைவியின் ஆதரவான வார்த்தைகளைத்தான். அதைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல மனைவியின் கடமை. அந்த அன்பில் கட்டுப்பட்ட எந்த ஆணும் மகுடிக்கு ஆடும்  நாகம்தான்.