Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

மனதை மயக்கும் மகாபலேஷ்வர்

சுற்றுலா பயணிகள் மனதை மயக்கும்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து மஹாபலேஷ்வர்!

பெண்மணி – பிப்ரவரி 2002 இதழில் வெளியானது








ஒரே மாதிரியான எந்திர கதியில் செல்லும் வாழ்க்கையில் சட்டென்று ஏற்படும் அலுப்பும், சலிப்பும் நம்மை ‘எங்காவது சுற்றுலா போகலாமா?’ என்று யோசிக்க வைக்கிறது. ஆம்! களைத்துப் போன மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்க அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது மிகவும் அவசியம்தானே? எங்கே போகலாம்? ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர், ஏற்காடு... ம்ஹூம்! எல்லாம் பார்த்த இடங்கள். புதிதாக ஏதாவது?

இப்படி யோசிப்பவர்களுக்கு ஏற்ற இடங்கள் மகாபலேஷ்வர், பஞ்சகனி. இந்த இரு உல்லாசத் தலங்களும் அருகருகே அமைந்துள்ளன. அட இவை எங்கே இருக்கிறது என்கிறீர்களா? மராட்டிய மாநிலத்தில் புனேவுக்கு அருகில் உள்ள அருமையான, சிறிய, இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் அற்புதமான சொர்க்கம்தான். மகாபலேஷ்வர், புதிதாக திருமணமான தம்பதிகளின் தேனிலவுக் கூடமும் இதுதான். விடுமுறை ஓய்வு, உல்லாசச் சுற்றுலா இவற்றிற்கு ஏற்ற மலைவாசஸ்தலம் இது.

கடல் மட்டத்திலிருந்து 4,710 அடிகள் (1,672 மீட்டர்) உயரம் உள்ள இந்த இடம் மும்பையில் இருந்து புனே வழியாக 290 கிலோ மீட்டரிலும், புனேயில் இருந்து 120 கிலோ மீட்டரிலும் உள்ளது.

இங்குள்ள வெண்ணா ஏரியில் பகலில் மட்டுமின்றி இரவில் நிலவொளியிலும் படகு சவாரி செய்வது உற்சாகமான அனுபவம்.

இங்கு பல சிகரங்களும் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்களிலேயே விளங்குகிறது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், அவர்கள் நாட்டு சீதோஷ்ண நிலையைத் தேடி அலைந்து இந்த மலை வாசஸ்தலங்களைக் கண்டுபிடித்து, அவற்றிற்கு பாதை அமைத்து உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் தயவில் நாமும் அவற்றை அனுபவிக்க முடிகிறது.

இங்கு கிட்டத்தட்ட 15க்கும் மேல் ‘பாயிண்ட்கள்’ உள்ளன. ஒவ்வொரு முனையில் இருந்து காணும்போது இயற்கையழகு வித்தியாசமாகத் தோன்றி மனதைக் கொள்ளை கொள்ளும். மிக உயரமான (1,435 மீட்டர்) ‘வில்சன் பாயிண்ட்’ சூரிய அஸ்தமனம் காணவும் சிறப்பானவை.

‘ஆர்தர் சீட்’ என்ற இடத்தில் ஒரு அகலப் பாறை தனியாக நீண்டு கொண்டிருக்கும். அதனைச் சுற்றி இரும்பு கம்பி கட்டி பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். கீழே காடுகள் நிறைந்த ‘ஜோர்’ பள்ளத்தாக்கை குனிந்து பார்த்தால் குலை நடுங்கும். ஆர்தர் மேலட் என்ற ஆங்கிலேயர் தன் மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தையுடன் மேலே ஏறிப் போகும்போது அவர் மனைவியும், குழந்தையும் தவறி ஆற்றில் மூழ்கி விட்டதால், அவர் பெயரால் இது ‘ஆர்தர் சீட்’ என்று அழைக்கப்படுகிறது.

இங்கு காகிதம், சிறு மரக்குச்சி, கைக்குட்டை என எதை எறிந்தாலும் அது கீழே போகாமல் பாரசூட் போல் பறப்பது அதிசயமான நிகழ்ச்சி.

ஜெனரல் லாட்வில் பிரபு என்ற ஆங்கிலேயர் ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு, தன் நாயுடன் முதன் முதலில் மகாபலேஷ்வரைக் கண்டு பிடித்து அதன் அழகில் மயங்கி இவ்விடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கியதால் அவர் பெயரில் ஒரு பாயிண்ட் உள்ளது. இவ்விடத்தில் இருந்து கீழே தெரியும் கிருஷ்ணா, கொய்னா பள்ளத்தாக்குகளுடன் ஆங்காங்கு தெரியும் நரைமுடி போல் மலைகளில் ஓடிவரும் லிங்கமாலா, தோபி, சைனாமேன் என்ற பெயரில் உள்ள அருவிகள் வளைந்து, நெளிந்து ஓடி வரும் அழகு கண்ணைப் பறிக்கும்.

இந்த ஊருக்குப் பெயர் வரக் காரணமான மகாபலேஷ்வர் கோயில் இங்குள்ளது. முன்னொரு காலத்தில் மகாபலன், அதிபலன் என்ற இரு அசுரர்கள் முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்த, தேவர்களின் முறையீடு கேட்டு ஸ்ரீமகாவிஷ்ணு அந்த அசுரர்களை அழித்தார். அச்சமயம், மகாபலன் சிவபெருமானிடம் இந்த ஊரும், கோயிலும் அவன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென வரம் பெற்றதாக வரலாறு. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தினடியில் வருடம் முழுவதும் நீர் சுரந்து கொண்டே இருப்பது இங்குள்ள சிறப்பாகும்.

இங்குள்ள கிருஷ்ணாபாய் கோயிலில் ஒரு கோமுகத்தில் இருந்து நீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கிருஷ்ணா, கொய்னா, வெண்ணா, சாவித்திரி, காயத்ரி என்ற ஆறுகள் இம் மலையிலேயே உற்பத்தியாகின்றன. இதன் பின்னணியாக ஒரு சுவையான கதை உண்டு.

இங்குள்ள பிரம்மாரண்யம் என்ற இடத்தில் நான்முகன் ஒரு யாகம் செய்ய முடிவு செய்து, நீர்த்தேவைக்கு வேதகங்கா என்ற நதியை உற்பத்தி செய்தார். யாகம் ஆரம்பிக்கும் நல்ல நேரம் நெருங்கிவிட, முதல் மனைவி சாவித்திரி இன்னமும் வந்தபாடில்லை. நேரம் தவறக் கூடாதென்ற எண்ணத்தில் இளைய மனைவி காயத்ரியுடன் யாகம் துவங்கி விட்டார், கோபமுற்ற சாவித்திரி நான்முகன் மற்றும் யாகத்திற்கு வந்திருந்த சிவன், மகாவிஷ்ணு, காயத்ரி அனைவரையும் நதியாகும்படி சபித்து, தானு நதியாக மாறிவிட்டாள்.

மகாவிஷ்ணு கிருஷ்ணா நதியாகவும், நான்முகனும், சிவனும் முறையே கொய்னா, வெண்ணா நதிகளாகவும் மாறி விட்டார்கள். காயத்ரி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் மறைந்து விட்டாள். முனிவர்கள் மற்றும் மக்களின் பிரார்த்தனைகளுக்கு இணங்கி ஐந்து நதிகளும் ஒரே இடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தனர். அந்த இடமே கிருஷ்ணாபாய் கோயில் என்றும் பஞ்சகங்கா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்று சத்ரபதி சிவாஜியின் கோட்டையான பிரதாப் காட் ஃபோர்ட் ஆகும். மகாபலேஷ்வரில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில்தான் பீஜப்பூர் தளபதி அப்சல்கானை சிவாஜி தன் கைகளால் கொன்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இது 900 மீட்டர் உயரம் உள்ள செங்குத்தான மலையாகும். சற்று கஷ்டப்பட்டு ஏறிச் சென்றாலே இக்கோட்டையின் அழகை ரசிக்க முடியும். சிவாஜியால் கட்டப்பட்ட ஸ்ரீபவானி அம்மன் கோயிலும், அப்சல்கானைக் கொன்று புதைத்த இடமும் காணும்போது சிவாஜியின் காலத்திற்கே நாம் சென்று விட்ட உணர்வு ஏற்படுகிறது. மகாபலேஷ்வரை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றும் அழைப்பதுண்டு.

மும்பை மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள் கோடையில் மகாபலேஷ்வருக்கு ஒட்டு மொத்தமாகச் செல்ல விரும்புவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுப்புற சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுற்றுலாப் பயணிகள் தேர்ந்து எடுக்கும் இடம்தான் பஞ்சகனி.

மராட்டியத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் பஞ்சகனி அருகில் உள்ள ரெயில் நிலையம் வால்கர் என்றாலும் புனேயில் இறங்கி செல்வதும் வசதியானது. புனேக்கு விமானத்தில் போய் அங்கிருந்தும் போகலாம்.

ஏராளமான தங்கும் வசதிகள் கொண்ட பஞ்சகனியில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற புகழ்மிக்க பள்ளிகள், சானடோரியங்கள் மட்டுமின்றி தங்கும் விடுதிகளும் இன்னமும் முத்திரை பதித்து வருகின்றன.

5 மலைகளால் சூழப்பட்டு 1,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சகனியின் ஒரு பக்கம் கிருஷ்ணா ஆறு பாய்ந்து செல்வதும், இன்னொரு பக்கம் அமைந்துள்ள மரங்களின் பச்சைப்பசேல் என்ற காட்சியும் இதயத்தை விட்டு அகலவே அகலாது.

பஞ்சகனி தெருக்கள் முழுவதும் மரங்கள்தான் என்பதுடன் வீடுகளும் அவற்றை சுற்றியுள்ள தோட்டங்களும் திட்டமிட்டு அமைக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் பெரும் செல்வந்தர்களும் இங்கு முற்றுகையிடுவதற்கு அமைதி தவழும் இடம் மட்டுமல்ல, தூய்மையான காற்றும் காரணம் ஆகும்.

மகாபலேஷ்வரை விட இங்கு மழை இருக்கும் என்பதால் ஓங்கி வளர்ந்த சில்வர் ஓக் மரங்கள் எப்பொழுதும் சுத்தமான காற்றை வழங்குகின்றன. இது தவிர கிருஷ்ணா ஆறும் இங்குள்ள மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகிறது.

பஞ்சகனியின் தெருக்களில் நடந்து சென்றோ அல்லது குதிரையை வாடகைக்கு அமர்த்தி சவாரி செய்தோ இயற்கை அழகைக் கண்டுகளிக்கலாம். வாகன வசதியும் உண்டு.

பஜாரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சி பாயிண்டில் இருந்து மலைப் பாறைகள் ஊடே சலசல என்ற ஓசையுடன் பாய்ந்து ஓடும் கிருஷ்ணா நதியின் அழகைக் கண்டு ரசிப்பதுடன் உப்பங்களி நீரையும் பார்த்து மகிழலாம். சுற்றுலா பயணிகள் அதிகாலையில் இந்த இடத்துக்குச் சென்று அமர்ந்து விடுகின்றனர். இதன் அருகே கட்டப்பட்டு உள்ள பகோடா சிறுவர் பூங்காவும் பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

கிருஷ்ணா பள்ளத்தாக்கு எதிரே மலை உச்சியில் அமைந்துள்ள சிட்னி பாயிண்ட் திரைப்படத் துறையினரின் சொர்க்கம் ஆகும். பெரும்பாலான இந்திப் படத் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு இந்த இடத்தைத் தேர்ந்து எடுக்கத் தவறுவது இல்லை. விவசாய விளை நிலங்களின் பசுமைக் காட்சிகளையும் இங்கிருந்து கண் குளிர கண்டு களிக்கலாம்.

பஞ்சகனி நகரத்தின் கிழக்குப் பக்கம் அமைந்துள்ள ‘டேபிள் லேண்ட்’டை பார்க்காமல் திரும்பினால் பஞ்சகனி சென்றதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். சிவப்பு கற்களாலான குன்று மீது 60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டேபிள் லேண்ட் ஆசியாவில் இரண்டாவது பெரிய மலை பீடபூமி ஆகும். இங்கு சென்று வர திட்டமிட்டு அமைக்கப்பட்ட ரோடு வசதியும் உண்டு. அங்கிருந்து திரும்பும் வழியில் உள்ள ஒரு குகை கலைக்கூடமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஓய்வு எடுத்து உணவருந்தி செல்ல ஓட்டலும் உண்டு.

புனே செல்லும் வழியில் பஞ்சகனியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தட்சிணகாசி என்று அழைக்கப்படும் வாயு கோயில் பக்தர்களை கவர்ந்து இழுக்கத் தவறுவது இல்லை. பஞ்சகனி செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் வழிபட்டு விட்டுத்தான் திரும்புகிறார்கள். இங்குள்ளவர்கள் தயாரிக்கும் நேர்த்தியான பொம்மைகளை வாங்குவதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்வதுண்டு.

இங்கு பலவிதமான கலையழகுடன் வடிவமைத்த கைத்தடிகள் மற்றும் மென்மையான உலகத் தரம் வாய்ந்த செருப்புகளும் பிரசித்தமானவை. மலிவாகவும் கிடைக்கும். ஸ்டிராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை மிக அதிகமாக விளைவதால் அவற்றால் செய்யப்படும் ஜாம், ஜூஸ், ஜெல்லி போன்றவை அதிக அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கிறது.

பஞ்சகனியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள டூம்டாம் என்ற இடமும் இயற்கை காட்சிகளுக்கும் அமைதி தவழும் உப்பங்களிகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும். இங்கு ஒரு நாள் தங்கியிருந்து தண்ணீர் விளையாட்டுகளைக் கண்டு களிப்பது மனதுக்கு இதம் அளிக்கும்.

உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டா? ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்துங்கள். சிறிது நேர பயணம்தான். பாண்டவர் குகைகளையும், கமல் காட் கோட்டையையும் அடைந்து விடலாம். புராண, வரலாற்று ரகசியங்களை அறீந்து கொள்ள இது உதவும்.


மகாபலேஷ்வர், பஞ்சகனியின் பெருமைகளை வர்ணிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த இடங்களுக்கு நேரில் சென்று தங்கி அனுபவித்தால் மட்டுமே உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகையும், களிநடனம் புரியும் இயற்கை காட்சிகளாய்யும் முழுமையாக உணர முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக