Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

உதவிக்கரம் நீட்டும் உப்பு

சினேகிதி செப்டம்பர் 2003 இதழில் வெளியானது




‘உப்பு போட்டு சாப்பிட்டால்தான் சுரணை வரும்’ என்றும், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்றும் எத்தனை பெருமைகள் உப்புக்கு. அந்த உப்பு சமையலுக்கு மட்டுமன்றி நமக்குப் பலவிதங்களிலும் உதவியாக இருக்கிறது.

·       இரும்பு தோசைக்கல்லில் தோசை எடுபடவில்லையெனில் ½ டீஸ்பூன் உப்பைப் போட்டு அதில் எண்ணெய் விட்டு கல் சூடானதும், அந்த உப்பைக் கல் முழுவதும் நன்கு தேய்த்துவிட்டு, பின் தோசை வார்த்தால் பட்டு  பட்டாக வரும்.

·       பல் ஈறுகளில் வலி, ரத்தம் கசிந்தால் அவற்றில் உப்பைத் தடவித் தேய்த்தால் வலி குறையும்.


·       உங்கள் ஆடைகளில் ரத்தக் கறை பட்டுவிட்டால், உடன் அந்த இடத்தில் உப்பு பொடி தூவி ஊற வைத்து பின் சோப்பைப் போட்டு அலசினால் கறை நீங்கி விடும்.

·       தேங்காய் மூடி, எலுமிச்சை மூடியில் சிறிது உப்பு தடவி வைத்தால் வெளியில் வைத்தாலும் வீணாகாது.



·       வெள்ளைத் துணிகள் துவைத்து அலசும் சமயம் சிறிது உப்பு சேர்த்த நீரில் அலசினால் துணிகள் பளிச்சிடும்.

·       மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய அதன் கீழ் உப்புப் பொடி தூவி நிறுத்தி வைக்கவும்.



·       தொண்டைக் கட்டு, கரகரப்பிற்கு வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளிக்கவும், உடன் தொண்டை சரியாகும்.

·       சிறு குழந்தைகளின் அஜீரணம் சரியாக, ஒரு பல் பூண்டு, சிட்டிகை உப்பு, ¼ டீஸ்பூன் ஓமம் சேர்த்து நைஸாக அரைத்து வடிகட்டிக் கொடுக்கவும்.


·       மிளகாய் வற்றல் வறுக்கும்போது 2 கல் உப்பைச் சேர்த்து வறுத்தால் அதிகம் கமறாது. மிளகாய் வற்றலும் கருகாது.

·       ஈக்களின் தொல்லையா? உப்புக் கரைத்த நீரைத் தெளித்தால் ஓடிவிடும்!



·       எந்த இனிப்பு செய்தாலும் அவற்றுடன் சிட்டிகை உப்பு சேர்த்தால் தித்திப்பை எடுத்துக் காட்டும்.

·       பித்தளை, செப்புப் பாத்திரங்களில் பொட்டுப் பொட்டாக கறையா? டோண்ட் ஒர்ரி! உப்பையும், புளியையும் சேர்த்துத் தடவி ½ மணி ஊரவிட்டுத் தேய்த்தால் பளிச்சென்றாகிவிடும்.



·       தேள்கடிக்கு துளசிச் சாற்றுடன் உப்பு கலந்து கடிவாயில் தடவ உடனடி குணம் கிடைக்கும்.

·       காதில் எறும்பு மற்றும் சிறிய பூச்சிகள் சென்றுவிட்டால், சிறிது உப்பு நீரை விட்டு காதைக் குலுக்கி, காதைச் சாய்த்து நீரை வெளியேற்றினால் அவை வெளி வந்துவிடும்.



·       பாதவலிக்கு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் ¼ மணி நேரம் பாதங்களை வைத்து அமர்ந்தால் வலி குறையும், பாதம் சுத்தமாகி பளிச்சிடும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக