சோழநாட்டு வைணவத் திருப்பதிகளில்
ஒன்று திருக்கூடலூர் என்ற ஆடுதுறை பெருமாள் கோவில். இத்தலம் பிரார்த்தனை
ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.
முன்பொரு காலத்தில் இரண்யாட்சகன்
என்ற அசுரன், இவ்வுலகைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட மூவுலகங்களும் தடுமாறியது.
அச்சமயம் தேவர்கள் அனைவரும் நந்தக முனிவருடன் கூடி இவ்வுலகை மீட்பது பற்றி
ஆலோசித்த ஸ்தலம் இது. அனைவரும் ‘கூடி’ நின்று
மகாவிஷ்ணுவை துயர் நீக்கி அருளுமாறு வேண்டியதால் இவ்வூர் ‘கூடலூர்’ என்றாயிற்று.
அந்த வேண்டுதலைக் கேட்ட பக்தவத்சலனும், அனாத ரட்சகனுமாகிய திருமால் வராக அவதாரம்
எடுத்து, பாதாள லோகம் சென்று இரண்யாட்சகனை வதம் செய்து உலகை மீட்டு ரட்சித்தார்.
அதன் பொருட்டே இப்பெருமாள் ‘ஜகத்ரட்சகன்’, ‘வையம் காத்த பெருமாள்’ என்றெல்லாம்
அழைக்கப் பெற்றார்.
ஆதி ஆலயம் கொள்ளிட வெள்ளத்தால்
அழிந்து போய்விட்டதாம். பின் 15ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாவால் பாதுகாக்கப்பட்ட
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தற்போதைய ஆலயம் உருவாக்கப்பட்டது. இதனை எடுத்துக்
கூறும் விதமாக ராணி மங்கம்மா, அவரது மந்திரிகளின் சிலை உருவங்கள் ஆகியன ஆலய
மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட
ஆலயம். விமானம் சுத்த சத்வ விமானம். ஸ்ரீபத்மாசனி, ஸ்ரீபுஷ்பவல்லி தேவியருடன்
இணைந்து அருள் தரிசனம் தரும் ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு
நோக்கிக் காட்சி தருகிறார். ஆண்டாள், வரதராஜப் பெருமாள், ஆழ்வார்களுக்கு எனத்
தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தல தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’. காவேரி நதி
இப்பெருமாளை வணங்கி, இழந்த புகழையும், பொலிவையும் திரும்பப் பெற்று தானும் ஒரு
தீர்த்தமாக விளங்குகிறாள்.
இங்கு எம்பெருமான் கையில்
வைத்திருக்கும் சக்கராயுதம் நேராக இன்றி, எந்நேரத்திலும் இறைவன் கையிலிருந்து
கிளம்பி விடுவோமோ என்று பிரயோகிக்கும் நிலையில் உள்ளது. இப்பிரயோக சக்கரம் இங்கு
அதிசயமான, சிறப்பான சக்திகளுடன் விளங்குவதாகக் கூறப்படுகிறது.
துன்பமும், குறையுள்ளவர்களும்
மூன்று சனிக் கிழமைகள் மூன்று முறை வலம் வந்து பெருமாள் சந்நிதியில் விளக்கேற்றி
மானசீகமாக வேண்டினால், இச்சக்கர மகிமையால் எதிர் வந்த இடர்கள், தடங்கல்கள் தகர்த்தெறியப்பட்டு,
பிரச்சினைகள் நொடியில் நீங்குவது கண்கூடு என்று இவ்வாலயத்தில் உள்ளவர்கள்
கூறுகின்றனர்.
இறைவன் தான் இருப்பதை உணர்த்தும்
விதத்தில் இக்கலி காலத்திலும் அற்புதங்கள் நிகழ்த்துவதை அவ்வப்போது காண்கிறோம்.
அத்தகைய அதிசயம் இவ்வாலயத்தில் சில மாதங்களாக நடைபெறுகிறது. இவ்வாலயத்தின்
வெளிப்பிரகாரத்திலுள்ள பெரிய பலா மரத்தில் இறைவனின் அம்சமாக ஒரு சங்கு உருவாகியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டடிக்கு மேல் உயரமுள்ள இந்த சங்கை காணும்போது மெய் சிலிர்க்கிறது.
அதனைத் தெளிவாகக் காணும் பொருட்டு அதன் மேல் சந்தனம் பூசப்பட்டுள்ளது. இந்த அதிசய
சங்கு ரூபத்தைத் தரிசிக்க தினசரி கூட்டம் பெருகுகிறது.
மிகவும் பழமையடைந்து விளங்கிய
இவ்வாலயத்திற்கு ஸ்ரீசௌம்ய நாராயணன் எம்பெருமானார் அறக்கட்டளையினர், ஸ்ரீமத்
ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் தலைமையில் திருப்பணிகள் மேற்கொண்டு, ஆலய கும்பாபிஷேகம்
வைகாசி 28ம் நாள் அதாவது ஜூன் மாதம் 11ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தனை
பழங்கால் சிறப்புகளும், பெருமையும், சமீபத்திய சங்கு தோன்றிய அதிசயமும் நிறந்த
இவ்வாலயத்தின் முகவரி – அருள்மிகு ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள் கோவில்,
(திருக்கூடலூர்), ஆடுதுறை பெருமாள் கோவில், உள்ளிக்கடை – 614 202, பாபநாசம்
தாலுக்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக