Thanjai

Thanjai
இன்பச் சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்பச் சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 மே, 2017

மாசில்லாத மலைவாசஸ்தலம்...பச்மரி

தி இந்து தமிழ் நாளிதழ் இணைப்பான ‘பெண் இன்று’ 28-05-2017 அன்று வெளியான சுற்றுலா பற்றிய செய்தி


கடல் மட்டத்திலிருந்து 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பச்மரி(Pachmari), மத்திய பிரதேசத்திலுள்ள ஒரே குளிர்வாச ஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம் சாத்புராவின் ராணி என அழைக்கப்படுகிறது. 1875ல் ஜேம்ஸ் ஃ போர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடம் அழகின் இருப்பிடம்! ஒரு உல்லாசப்பொழுதுபோக்கு இடத்திற்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக் கிடக்கும் அற்புதசுற்றுலாத்தலம்!

பளிங்கு போல் விழும் அருவிகள்,நெளிந்து ஓடும் நீரோடைகள்,அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள், அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான சர்ச்சுகள், கோண்ட் என்ற பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர் என்று அத்தனையும் கண்ணுக்கும், மனதுக்கும்  பெருவிருந்து!

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமான ஐந்து பாண்டவர் குகைகள் உள்ளன.அதன் பெயராலேயே இவ்விடம் பச்மரி...அதாவது பாஞ்ச்  என்றால் ஐந்து, மரி என்றால் குகை என்பதைக் கொண்டே பச்மரி எனப்படுகிறது.

சாத்புரா நேஷனல் பார்க் என்ற வனவிலங்கு சரணாலயம், அன்னை இந்திராகாந்தி 1964ல் வந்ததன் அடையாளமாக பெயரிடப்பட்ட பிரியதர்ஷினி பாயிண்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீஃபால்ஸ்(Bee Falls), டட்ச் ஃ பால்ஸ், 350 அடி உயர ரஜத் ஃ பால்ஸ், இரு உயர்ந்த மலைகளுக்கிடையே பயங்கரமான வீ வடிவ ஹண்டிகோ என்ற பள்ளத்தாக்கு, சூர்ய உதயமும், அஸ்தமனமும் அழகுறக் காட்டும் 4400 அடி உயர தூப்கார், மூன்று  பக்கமும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய ஒரு கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும் அழகு... இவற்றில் நாம் நம்மையே மறந்துவிடுவோம்..

சிவபெருமானின் வாசஸ்தலங்களான மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் இவை ஆன்மீக பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள். பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான், அவன் அவரையே தலையில் கைவைத்து சாபத்தை பரீட்சிக்க வந்தபோது அவரது ஜடை, நாகம், திரிசூலம் இவற்றை மேற்கூறிய இடங்களில் வைத்துவிட்டு, தான் அங்கிருந்த குகைக்குள் ஒளிந்து கொண்டாராம். அக்குகையில் இன்றும் இறைவனை தரிசிக்கலாம்.


காஷ்மீர், சிம்லா போன்று அனைவரும் அறியாத இடமாக இது இருப்பதன் காரணம் இங்கு ரயில், பஸ் வசதி இல்லாததே. போபால் மற்றும் ஜபல்பூரிலிருந்து இவ்விடம் செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில்பாதையிலுள்ள பிப்பாரியா என்ற ரயில் நிலையத்தில் இறங்கி, வேன், ஜீப்புகள் மூலமாக செல்லலாம்.நிறைய ஹோட்டல்கள் உள்ளன.அதிகம் யாரும் அறியாத மறைந்திருக்கும் புதையலாக,அதிக மக்கள் கூட்டமில்லாத, மாசில்லாத அழகிய பச்மரி அனைவரும் சென்று கண்டு களித்து அனுபவிக்க ஏற்ற சுற்றுலாத்தலம்!






செவ்வாய், 26 மே, 2015

ஊர் சுற்றலாம் வாங்க-ஜெர்மனி


ஒரு முறை குளிக்க 1800 ரூபாய்!

குமுதம் 13-12-2006 இதழில் வெளியானது





நீங்கள் ஒரு குளியல் பிரியரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் ஜெர்மனிக்கு ஒரு முறை போய் வாருங்கள். விதவிதமான குளியலைப் பார்த்தும், அனுபவித்தும் திக்குமுக்காடிப் போவீர்கள்.

சமீபத்தில் ஜெர்மனி சென்றிருந்த நான், சுற்றிப் பார்க்கக் கிளம்பியபோது, என் மகன் முதலில் அழைத்துச் சென்றது பாதேன்-பாதேன் என்ற ஊருக்குத்தான்.

பாதேன்-பாதேன் (Baden-Baden) என்ற அந்த ஊரில் ஏகப்பட்ட குளியலறைகள்! ஏதோ நம்மூர் குளியலறைகள் என்று நினைக்காதீர்கள்! அத்தனையும் ஸ்பெஷலான, விதவிதமான குளியல் முறைகள். அத்துடன், ரசனையுடன் கூடிய ரோமானிய முறைக் குளியலறைகள். குளிப்பாட்டி(!) விடவும் மஸாஜ் செய்யவும் தனித் தனி நபர்கள் உண்டு. ஆண்களும், பெண்களும் இணைந்து குளிக்கவும் வசதி உண்டு! பதினாறு ஸ்டெப்களில் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் அதாவது மென்னீர் குளியல், வெந்நீர் குளியல், சோப், மஸாஜ், ஷவர், தெர்மல் ஸ்டீம் பாத், வார்ல்பூல் பாத் (whirlpool bath), குளிர் நீர் குளியல் என்று விதவிதமாகக் குளிப்பாட்டி துடைத்து, மாய்ச்சரைஸிங் க்ரீம் தடவி அனுப்புவார்கள். ஒவ்வொரு குளியலுக்கும் ஒவ்வொரு இடம். இந்த சுகமான குளியலை அனுபவிக்கவென்றே, ஐரோப்பா மட்டுமன்றி, பல வெளி நாட்டினரும் இவ்வூருக்கு வந்து குளிக்கிறார்கள். ஒரு முறை குளிக்க 300 யூரோ அதாவது 1800 ரூபாய்கள். அம்மா...டி! நமக்கு நம்ம பாத்ரூமே போதும் என்று வந்து விட்டோம்!

அடுத்து நாங்கள் சென்றது ‘உல்ம்’ (Ulm) என்ற இடத்திற்கு. அங்குள்ள ப்ராடஸ்டன்ட் சர்ச்தான் உலகிலேயே மிகப் பெரியது. மிக உயரமானது. அண்ணாந்து பார்த்தாலே தலை சுற்றுகிறது! மேலிருந்து பார்த்தால் உல்ம் நகரும். அதனைச் சுற்றி ஓடும் டோனா நதியும், சுற்றிலும் உயரமாக அமைந்துள்ள வலுவான கோட்டைச் சுவர்களும் மிக அழகாக உள்ளன. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊரும் இதுவே.

இங்குள்ள மியூசியம் உலகப் புகழ் பெற்றது. 3200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிங்க மனிதன் உருவம் உலகிலேயே இங்குதான் உள்ளது.

அடுத்து நாங்கள் சென்றது ஹைடல் பெர்க் (Heidelberg) கோட்டை. ஜெர்மனியின் நாகரிகம், பண்பாட்டைப் பறைசாற்றும் மிக முக்கியக் கோட்டைகளில் இதுவும் ஒன்று.

பிரெஞ்சுப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்க இங்கு கட்டப்பட்டுள்ள பல கோட்டைகள் மிக அற்புதமாக எதிரிகளை மறைந்து தாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சிறந்த கலையழகுடன் காணப்படும் இந்த உயர்ந்த கோட்டை இன்று இடிந்து விழுந்து காணப்படுகிறது. இது 13-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட போது உலகின் எட்டாவது அதிசயமாகப் புகழப் பட்டதாம்.

இதில் அமைந்துள்ள பேலஸ், வெளித் தோட்டத்தில் ஏகாந்தமாக அழகிய ஃபௌண்டனுக்கு நடுவில் படுத்திருக்கும் ஃபாதர் ரினோவின் சிலை ஆகியவை கண்கவர் காட்சிகள்! அரண்மனையினுள் சாராயம் நிரப்பி வைக்கும் பிரம்மாண்டமான பீப்பாய் நம் வாயைப் பிளக்க வைக்கிறது! 20 அடி உயரமும், 1,00,000 லிட்டர் கொள்ளளவும் கொண்ட இந்த பீப்பாய், உலகிலேயே மிகப் பெரியது என்று கூறப்படுகிறது. இக்கோட்டையினுள் அமைந்துள்ள ஜெர்மன் பார்மஸி மியூசியத்தில் எந்த நோய்க்கு என்ன மருந்து, அதைத் தயாரித்தவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஹைடல் பெர்க்கில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் ஜெர்மனியின் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமை உடையது.





வியாழன், 25 ஜூலை, 2013

பாங்காக்











  சுற்றுலா தலம்


பழமையும் புதுமையும் கலந்து ஜொலிக்கும் பாங்காக்

(பெண்மணி-நவம்பர் 2012 இதழில் வெளியானது)

          சுற்றுலா பயணங்கள் நம் மனதிற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரே மாதிரியான வேலை, அன்றாட மாற்றமில்லாத வாழ்க்கை முறை இவை நம்மை சோர்வடையச் செய்யும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும், வாழ்வில் ஒரு வேகத்தையும் ஏற்படுத்துபவை உல்லாசப் பயணங்கள்! வேற்று நாட்டு மக்கள், மொழி, பழக்க வழக்கங்கள், உணவுமுறை இவை நமக்கு உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் கொடுப்பது உண்மை. அவ்வகையில் நாம் செல்லக் கூடிய நாடு பாங்காக்.


          ஆசியாவின் முன்னேறிய, வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலை நகரமான பாங்காக் பழமையும், புதுமையும் கலந்து பளபளவென ஜொலிக்கிறது. அற்புதமான உயர்ந்த புத்த ஆலயங்கள், மனதை மயக்கும், ஷாப்பிங் மால்கள், அந்நாட்டைப் பற்றி நாம் அறிய உதவும் அருங்காட்சியகங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் 50, 60 மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடங்கள், வித்தியாசமான உணவு முறை, வேறுபட்ட வாழ்க்கை முறை, வளமையான கிராமங்கள், அழியாத வனப்பிரதேசங்கள், நாகரீக இரவு விடுதிகள் என்று நம்மை வியக்க வைக்கிறது பாங்காக் நகரம்!


          1782-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாங்காக், அதற்கு முன் ‘அயுத்தயா’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட தலைநகரின் ஒரு சிறிய கிராமமாக விளங்கி வந்தது. தாய்லாந்து மொழியில் ‘பாங்க்’ என்றால் கிராமம். ’கோக்’ என்றால் ஆலிவ். ஆலிவ் தோட்டங்கள் நிறைந்து இருந்ததால் இவ்வூர் ‘பாங்காக்’ எனப்பட்டது.  மீன் பிடித்தலே இவர்களின் முக்கிய தொழில். இன்றும் விதவிதமான வண்ண மீன் உணவுகள் இங்கு பிரபலமாகும். 17-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் பர்மாவின் தாக்குதலில் சின்னா பின்னமான தாய்லாந்து அவர்கள் கீழ் அடிமை நாடாக இருந்தது.


          அச்சமயம் டாக்சின் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் உந்துதலால், மக்கள் போராட்டம் நடத்தி தாய்லாந்து தனி நாடாக மாறியது. டாக்சின் காலத்தில் அயுத்தயா நகரம் தலைநகராக விளங்கியது. அவருக்குப் பின் மன்னரான ‘ராமா I’ என்ற அரசரால் பாங்காக்கிற்கு தலை நகரம் மாற்றப் பட்டது. அழகிய பெரிய மாளிகை உருவாக்கப்பட்டது. அதுவே இன்றைய ‘கிராண்ட் பேலஸ்’ ஆகும். பாங்காக்கில் பல நீர்வழிக் கால்வாய்கள் இருந்ததால் இது ‘கிழக்கு நாடுகளின் வெனிஸ்’ என அழைக்கப்பட்டது. ‘ராமா I’ என்ற அரசரே அவற்றை மாற்றியமைத்து ஒரு அழகிய, இன்றைய நாகரீக பாங்காக்கை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.


          இங்கு மன்னரையே மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஊர் முழுவதும் மன்னரின் விதவிதமான உருவ பேனர்கள் சுவற்றில் ஒட்டியிருக்கும். அவரது பட்த்தைக்கூட கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளுமளவு பக்தி. தற்போது ‘ராமா-9’ அரசரின் ஆட்சி நடைபெறுகிறது. முன்னாள் அரசர்களான ராமா 1, 4, 5 ஆகியோருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். அவர்களை முறையாக வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் பெறலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாம்!


          மென்மையான குணமும், அமைதியான முகத் தோற்றமும் கொண்ட தாய்லாந்து மக்கள் பழகுவதற்கு மிக இனியவர்களாக இருக்கிறார்கள். பாங்காக் நகரின் பெயரே உலகின் மிக நீளமான பெயராக கின்னஸில் இடம் பெற்றுள்ளது. 169 எழுத்துக்களைக் கொண்டு சமஸ்கிருதத்திலுள்ள, எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத பெயரின் சுருக்கமே ‘பாங்காக்’ என்பது! பாரம்பரிய, கலாசார, பண்பாட்டு முறையைப் பின்பற்றி வாழும் இம்மக்களுக்கு 9 மிக அதிர்ஷ்டமான எண். இந்நாட்டில் புத்தமதமே பெரும்பான்மையாக எல்லோராலும் பின்பற்றப்பட்டாலும், மற்ற மதக் கோயில்களும் உள்ளன. இங்குள்ள பல புத்த விகாரங்கள் தனிச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.





          பாங்காக்கின் அடையாளச் சின்னமாகவும், மிக உயர்ந்த கோபுரமும் மொண்டு, கட்டிடக் கலையும், கண்ணைக் கவரும் சிற்பக் கலையும் மிளிர அழகுறக் காட்சி தரும் ஆலயம் ‘வாட் அருண்’. கேயோ ப்ராயா நதிக்கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு ‘அஸ்தமனக் கோயில்’ என்று பெயர். 81 மீட்டர் உயரத்தில் ‘க்மேர்’ கட்டிட முறைப்படி, அங்கோர்வாட் ஆலயம் போன்று நான்குபுறமும் மண்டபங்களும், குறுகிய படிகளும் கொண்டு நெடிது உயர்ந்து கம்பீரமாகத் தோற்றம் தருகிறது. முதல் நிலையில் மனிதனும், மிருகமும் இணைந்த சீன உருவங்கள், அடுத்து கின்னரர், வானரங்கள், மனிதனும் பறவையும் இணைந்த உருவங்கள் மேல்நிலை வரை இதனைத் தாங்கி நிற்பது போல் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.


          இரண்டாம் நிலையில் உள்ள நான்கு மண்டபங்களில் நான்குவித புத்தர் உருவங்களும், உச்சியில் நான்கு பக்கம் இந்திரன் யானை வாகனத்தில் அமர்ந்தது போன்றும் உருவாக்கப்பட்டுள்ள இக்கோபுரம் வண்ண கண்ணாடித் துண்டுகள், சிறிய சீனத்து பீங்கான் தட்டுகளைப் பல ஆயிரத்துக்கு மேல் வைத்து கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு, மாலை சூரிய வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிறது.




          ’வாட் கலயானமிட்’ (வாட் என்றால் கோவில்) என்ற ஆலயம் 1825-ம் ஆண்டில் சீனப்பிரபுக்களால் கட்டப்பட்டது. ‘ராமா-3’ அரசரால் சீர்படுத்தி விரிவுபடுத்தப்பட்ட இவ்வாலயத்தின் உயர்ந்த மேல் விதானம், மிகப் பெரிய புத்தர் சிலை ஆகியவை தாய்லாந்திலேயே மிகப் பெரியவை என்ற பெருமை பெற்றது. மோன நிலையில், சப்பணமிட்டு பொன் வண்ணத் தகட்டால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கும் புத்த பகவானை காணும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது.


 


          

















இவரை மனம் ஒன்றி வணங்கி, வேண்டி மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் சம்ர்ப்பித்தால், வியாபாரம் வளம் பெரும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. இங்குள்ள பெரிய பித்தளையினாலான மணியும் தாய்லாந்திலேயே மிகப் பெரியது எனப்படுகிறது. இவ்வாலயத்தில் நிறைய சின்ன சந்நிதிகள்; எல்லாவற்றிலும் விதவிதமான புத்தர் சிலைகள்.




         அடுத்து நாம் காண வேண்டிய முக்கியமான ஆலயம் ‘வாட் போ’. இது தாய்லாந்தின் ‘முதல் பல்கலைக் கழகம்’ என்ற சிறப்புடையது. 1360 சலவைக் கற்களில் வாழ்க்கை த்த்துவங்களும், பல அரிய விஷயங்களும் எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள சயன புத்தரின் சிலை உலகின் மிக அழகிய கலைநயமிக்க சிலைகளில் ஒன்றாகும். கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடுகிறது.




         அவருடைய சாந்தமும், சாத்வீகமும், கருணையும், காருண்யமும் கொண்ட முகம் மட்டும் 15 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. முழுவதும் தங்கக் காப்பிட்டு தகதகக்கிறது. அவரது இணைந்த இரு பாதங்கள் 3 மீட்டர் உய்ரத்தில் ‘மதர் ஆப் பேர்ல்’ எனப்படும். புத்தரின் 108 விதமான வித்தியாசமான தவக் கோலங்களை சித்தரிக்கிறது. அந்த பிரம்மாண்ட புத்தர் சிலை நம்மை பிரமிக்க வைக்கிறது.





        இவ்வாலயத்தில் மொத்தம் 99 ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் அதிகபட்ச ஸ்தூபிகள் கொண்ட ஆலயம் இது. இங்குள்ள ஆலயத்தில் உயரத்தில் அமர்ந்தாற்போல் காட்சி தரும் புத்தர் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது. இவ்வாலய வெளிப் பிரகாரத்தில் 10 அடிக்கு மேல் உயரமான 400 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் அற்புதக் காட்சி தருகின்றன.




          இதுபோன்ற அதிர்ஷ்ட புத்தர் ஆலயம், சலவைக்கல் புத்தர் ஆலயம், நின்ற புத்தர் ஆலயம் என்று ஏகப்பட்ட புத்தர் ஆல்யங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றவை. தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் மிக அருமையாக உள்ளது. மாரியம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்!






          நம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது. ஆனால் இங்கு பிரம்மா ‘எரவான்’ என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றி வைக்கிறார். இந்நாட்டினர் இவரை ‘நான்குதலை புத்தர்’ என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்.


          இது மட்டுமா? காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் ‘திருமூர்த்தி பகவான்.’  சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம்! இங்கு இளம் வயது ஆண்களும் பெண்களும் அதிகம் காணப்படுகின்றனர். வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!. சிவப்பு வண்ணப்பூக்கள், சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்த்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை!





         பாங்காக்கில் அரசமாளிகையாக விளங்கும் ‘கிராண்ட் பாலஸ்’ மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது. இந்நாட்டு தற்போதைய மன்னர் குடும்பம் இங்குதான் வசிக்கிறார்கள். இங்கு அமைந்துள்ள மரகத புத்தர் ஆலயம் அரச குடும்பத்தவரின் பிரத்தியேக ஆலயம். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தியான நிலையில் சிறு உருவமாக காட்சி தரும் புத்தர், வண்ண அலங்காரத்தில் ஜொலிக்கிறார். இங்குள்ள அரண்மனை வாயிற்காப்போர்களான 5 அடி உயர யட்சர்கள் சிலை தத்ரூபமாக உள்ளது. உள்ளே ராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்போது புத்தமதமே இங்கு பின்பற்றப்பட்டாலும், இந்து மதத்தின் சுவடுகள் நிறையவே காணப்படுகின்றன.




          இங்குள்ள மிதக்கும் சந்தைகள் காணவேண்டிய ஒன்று. அவரவர் கிராமங்களில் இருந்து காய்கறி, பழங்களை படகுகளில் வைத்துக் கொண்டு வந்து விற்பது இங்கு மிக பிரபலம். இங்கு யானைகள் அதிகம். நேஷனல் பார்க், யானை பார்க் போன்ற இடங்களில் யானைகளில் ஏறி காடுகளைச் சுற்றிப் பார்க்கலாம். காடுகளிலும், நதிகளிலும் யானைகள் மீது அமர்ந்து செல்வது ஒரு திகிலான, த்ரில்லான அனுபவம்!




          இங்குள்ள தாய்-பர்மா டெத் ரெயில்வே பார்க்கவேண்டிய ஒன்று. இரண்டாம் உலகப் போரின்போது (1942), ஜப்பான் அரசர் இதைக் கட்டினார். இதனைக் கட்ட ஆசியத் தொழிலாளிகளையும், சிறையிலிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கைதிகளையும் உபயோகப்படுத்தினர். உணவு, சூழ்நிலை, தட்பவெப்ப நிலை காரணமாக இதற்கென வேலை செய்த பல உழைப்பாளி மக்கள் உயிரை இழந்தனராம். அதன் நினைவாக இப்பாலத்திற்கு ‘டெத் ரெயில்வே’ எனப் பெயரிடப்பட்டது. இப்பாலம் ‘க்வாய்’ என்ற நதி மேல் கட்டப்பட்டுள்ளது. இதனை விளக்கும் ஒரு அருங்காட்சியகமும் அருகிலேயே உள்ளது. அந்தத் தொழிலாளர்களை நினைக்கும்போது மனம் உருகுகிறது.


          பாங்காக்கில் இரவுநேரக் காட்சிகள் நிறைய நடக்கின்றன. தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் இசை, நடனம், நாட்டியம், பொம்மலாட்டம், இதிகாசங்களி விளக்கும் வண்ணக் காட்சிகள், நாடகங்கள் ஏராளம்! இவற்றிற்கு முன்பதிவு செய்து கொண்டு செல்வது அவசியம்.




          இரவுநேர சந்தைகளும் இங்கு மிக அதிகம். எல்லாப் பொருட்களையும் பேரம் பேசி வாங்கலாம். விதவிதமான நாகரீக உடைகள், தாய்லாந்தின், கைவினைப் பொருட்கள் என்று அனைத்தும் கண்ணை நிறைக்கின்றன. ‘சட்டுசாட்’ என்ற மிகப்பெரிய மார்க்கெட்டில் மொத்தம் 15,000 கடைகளுக்கு மேல் உள்ளது. இவை தவிர ஷாப்பிங் மால்கள் எக்கச்சக்கம். சியாம் பாரகன், செண்ட்ரல் வேர்ல்ட், சியாம் டிஸ்கவரி என்று பெரிய மால்களில் உலகத்த்ரம் வாய்ந்த அத்தனைப் பொருட்களும் கிடைக்கின்றன.




          ’சயாம் ஓஷன் வோல்ட்’ தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கடல் உலகம் எனப்படுகிறது. இங்கு கண்ணாடியாலான ‘கடல் குகை’யில் நடந்து செல்லும்போது நம்மைச் சுற்றி மிகப்பெரிய சுறாக்களையும், விதவிதமான மீன்களையும் பார்ப்பது கண்ணுக்கு பரவசம். இங்குள்ள 4டி தியேட்டரில் சினிமா பார்ப்பதும், மீன்களுடன் நீந்துவதும் குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விஷயங்கள்.


          இங்குள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ வேக்ஸ் மியூசியம் சென்று நூற்றுக்கும் பேற்பட்ட உலகப் பிரமுகர்களுடன் கைகோர்த்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 200-க்கும் மேற்பட்ட உணவகங்களில் எந்த நாட்டு உணவையும் ருசிக்கலாம். தாய்லாந்தின் நீர்வாழ் உணவுகள் உலகெங்கும் பிரசித்தம். தாய்லாந்தின் பைனாப்பிள் ப்ரைடு ரைசும், ரெட் கறியும் உண்மையிலேயே நல்ல ருசி.


          தாய்லாந்தின் பிரத்தியேக கைவினைப் பொருட்களை நைட் மார்க்கெட்டுகளிலும், பெரிய ஆலயங்களுக்கு அருகிலுள்ள கடைகளிலும் பேரம் பேசி வாங்கலாம். இங்கு ‘பாட்’ என்பதே நாணயமாகும். நம் ஒரு ரூபாய் என்பது தாய்லாந்தில் 1½ பாட் ஆகும். பாங்காக்கைச் சுற்றிப் பார்க்க ஐந்து நாட்கள் தேவை.



          நம் நாட்டின் மெட்ரோ நகரங்களில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்து உண்டு. வித்தியாசமான அனுபவங்களைப் பெற நீங்களும் ஒரு முறை பாங்காக் சுற்றுலா பயணம் சென்று வரலாம்.