மங்கையர் மலர் ஜூலை 2012 இதழில் வெளியான என் அனுபவம்...
சென்ற ஆண்டு ஜெர்மனியிலுள்ள என் மகன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அச்சமயம் என் பேத்தியைப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார்கள். அது பற்றி என் பேத்தியிடம் பள்ளிக்கு சென்று என்ன செய்ய வேண்டும், எப்படி ஆசிரியர்களிடமெல்லாம் பழக வேண்டும் என்று என் மருமகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
என் பேத்தியோ கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி சென்று வருகிறாள். நான் 'அவளுக்குத்தான் எல்லாம் தெரியுமே.ஏற்கெனவே பள்ளி செல்கிறாளே' என்று கேட்டேன். அதற்கு என் மகன் 'இங்கல்லாம் முதல் வகுப்பில் இருந்துதான் ஸ்கூல் என்பார்கள். அதுவரை வெறும் கிண்டர்கார்டன்தான். அதனால் அந்த முதல் பள்ளி நாளை திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். நீயும் பார்க்கலாம் வா. நம்ம நாட்டில எங்களை அழ அழ ஸ்கூல்ல விட்டுட்டு திரும்பிப் பார்க்காம போற மாதிரி இங்கல்லாம் கிடையாது!' என்றான் வேடிக்கையாக!
ஆம்! கிண்டர்கார்டனில் குழந்தையை சேர்த்துவிட்டு அந்தக் குழந்தை பழகி, அழாமல் இருக்கும்வரை எத்தனை நாட்கள் ஆனாலும் அம்மாவும் கூடவே இருக்கலாமாம்! நிறைமாதமாக இருந்த என் மருமகளோ 'அந்த ஃ பங்க்ஷன் நடக்கும்வரைக்கும் எனக்கு வலி எடுக்காம இருக்கணுமே' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்!
ஒரு மாதம் முன்பிலிருந்தே அந்தக் குழந்தையை புதிய பள்ளி செல்ல தயார்படுத்துகிறார்கள்.. கிண்டர்கார்டனில் கட்டுப்பாடு அதிகம் இல்லை. விளையாட்டுதான் அதிகம். ஆனால் பள்ளி அப்படி இல்லை என்பதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறார்கள். அந்தக் குழந்தையை முன்பே அவர்களின் வகுப்புக்கு அழைத்துச் சென்று ஒரு ஆர்வத்தையும், பிடிப்பையும் உண்டாக்குகிறார்கள். புதிய பள்ளிக்கென அழகான பை, பேனா. பென்சில், நோட்டு, புத்தகங்கள் அனைத்தும் பள்ளியின் அறிவுரைப்படியே வாங்க வேண்டுமாம். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில்தான் நல்ல கல்வித்தரம் இருக்கும் என்பதால் பணக்காரர்கள் கூட அவற்றில்தான் சேர்ப்பார்களாம். (நம்ம நாட்டில் அதற்கு நேர்மாறாச்சே!)
பள்ளி ஆரம்பிக்கும் நாளுக்கு 15 நாட்கள் முன்பாகவே அந்தக் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லும்விதமாக ஒரு பெரிய கூம்பு வடிவ கி ஃ ப்ட் பேக்கில் (இவை கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது) நிறைய பரிசுப் பொருள்களைப் (பேனா, பென்சில் , ஸ்டிக்கர், கலர்பென்சில்கள்) போட்டு மூடி பெயர் எழுதி குழந்தைகளுக்குத் தெரியாமல் பள்ளிகளில் கொடுத்துவிட வேண்டுமாம். இவற்றை பள்ளி முதல் நாளன்று குழந்தைகளுக்குக் கொடுப்பார்களாம். பள்ளி வாழ்க்கையை இனிதே தொடங்க ஒரு உற்சாகப் பரிசு இது. அத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்ள பெற்றோரால் அழைக்கப்படும் உறவினர்களும், நண்பர்களும் பரிசளித்து குழந்தையை வாழ்த்துகிறார்கள்!
என் மருமகள் தனக்கு டெலிவரி ஆகிவிட்டால் வரமுடியாதே என்று என்னையும், என் கணவரையும் அழைத்துச் சென்று பள்ளியையும், என் பேத்தியின் ஆசிரியரையும் அறிமுகப் படுத்தி விழா எங்கு நடக்கும், என்ன முறை என்பதெல்லாம் சொல்லிக் கொடுத்தாள். நானும் மிக ஆவலாக அந்த விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!
அந்த ஸ்பெஷல் நாளன்று எல்லாரும் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு சென்றோம். என் மருமகளுக்கு அதுவரை வலி எடுக்காதது அவளுக்கு பரம சந்தோஷம்! நம் நாட்டுப் புடவையில் சென்ற என்னை அத்தனை பேரும் அதிசயமாய்ப் பார்த்தார்கள்! குழந்தைகளை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் வரிசையாக அழைத்துச் சென்றனர். பெற்றோர்களுக்கான இருக்கைகளில் நாங்கள் அமர்ந்தோம்.
முதலில் அப்பள்ளியில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் புதிய குழந்தைகளை வரவேற்குமுகமாக பாடல், நாடகம், நடனம் இவை அழகாக நடத்தப் பட்டன. பின் முதல் வகுப்பின் மூன்று பிரிவுகளின் ஆசிரியர்களும் அந்தந்த பிரிவு குழந்தைகளை மேடையில் அழைத்து பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார். என் பேத்தி பெயரை 'ஸோ ஃ பியா பாலசுப்ரமணியன்' என்று (பாலசுப்ரமணியன் என் கணவரின் பெயர்...என் மகனின் ஸர்நேம்) நிதானமாக உச்சரித்தபோது என் கணவர் முகத்தில் மகிழ்ச்ச்யைப் பார்க்கணுமே!
பிறகு அந்தக் குழந்தைகளை வகுப்புக்கு அழைத்துச் சென்று சிற்றுணவு அளித்து வெளியே மைதானத்துக்கு அழைத்து வந்தார்கள். அங்கு ஒவ்வொரு பிரிவிலும் பெற்றோர் ஏற்கெனவே கொடுத்திருந்த பரிசுப் பொருளை அழகாக வைத்திருந்தார்கள். குழந்தைகள் தன்னுடையதை எடுத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் முதல் பள்ளி ஆரம்பம்.
அதன்பின் இரண்டு நாளில் எனக்கு அழகிய சின்னப் பூவாய் ' அனிதா ' என்ற இன்னொரு பேத்தி பிறந்தாள். ஒரு புதிய, நாம் அறியாத ஒரு நிகழ்ச்சியைக் கண்டு களித்த சந்தோஷம் எங்களுக்கு! ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் எவ்வளவு ரசித்து அனுபவிக்கிறார்கள் அந்த நாட்டில் !
மிகவும் அருமையான அழகான பயனுள்ள கட்டுரை. மீண்டும் கருத்தளிக்க சற்றே தாமதமாக வருவேன்.
பதிலளிநீக்குஜுலை 2012 மங்கையர் மலரில் வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு>>>>>
//நம் நாட்டுப் புடவையில் சென்ற என்னை அத்தனை பேரும் அதிசயமாய்ப் பார்த்தார்கள்! //
பதிலளிநீக்கு:)))))
//ஒரு மாதம் முன்பிலிருந்தே அந்தக் குழந்தையை புதிய பள்ளி செல்ல தயார்படுத்துகிறார்கள்.. கிண்டர்கார்டனில் கட்டுப்பாடு அதிகம் இல்லை. விளையாட்டுதான் அதிகம். ஆனால் பள்ளி அப்படி இல்லை என்பதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறார்கள். அந்தக் குழந்தையை முன்பே அவர்களின் வகுப்புக்கு அழைத்துச் சென்று ஒரு ஆர்வத்தையும், பிடிப்பையும் உண்டாக்குகிறார்கள். //
பதிலளிநீக்குமிக அருமையான திட்டம்.
>>>>>
// நம்ம நாட்டில எங்களை அழ அழ ஸ்கூல்ல விட்டுட்டு திரும்பிப் பார்க்காம போற மாதிரி இங்கல்லாம் கிடையாது!'//
பதிலளிநீக்குஅவர் சொல்வதெல்லாம் இங்கு உண்மைதான். அங்கு அவ்வாறு இல்லாமல் இருப்பது கேட்க மகிழ்ச்சி.
>>>>>
//அதன்பின் இரண்டு நாளில் எனக்கு அழகிய சின்னப் பூவாய் ' அனிதா ' என்ற இன்னொரு பேத்தி பிறந்தாள்.//
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் பாட்டியாகும் நல்லதொரு அரிய வாய்ப்பு உங்களுக்கு ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//ஒரு புதிய, நாம் அறியாத ஒரு நிகழ்ச்சியைக் கண்டு களித்த சந்தோஷம் எங்களுக்கு! ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் எவ்வளவு ரசித்து அனுபவிக்கிறார்கள் அந்த நாட்டில் ! //
மிகவும் சந்தோஷம். நாங்களும் இந்தக்கட்டுரையை ரசித்து அனுபவிக்க வாய்ப்பளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அன்புடன் கோபு
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி திரு கோபு சார்...2012ல் பிரசுரமான இந்தக் கட்டுரையை இப்போதான் பதிவில் ஏற்றினேன்.
நீக்குஎந்த நாடு / மனிதர்கள் என்றால் என்ன...? ஆனந்த அழுகை வரும்...
பதிலளிநீக்குவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி திரு தனபாலன்....
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு