Thanjai

Thanjai

ஞாயிறு, 4 ஜூன், 2017

அற்புதம் புரியும் அவதாரம்


தீபம் ஜூன் 20, 2017 இதழில் வெளியான கட்டுரை

மஹாபெரியவா ஜெயந்தி...8.6.2017

பெரியவா சரணம்

ஸதா சிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்!
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!!
அபார கருணாசிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்!
ஸ்ரீசந்த்ரசேகரகுரும் ப்ரணமாமி முதான்வஹம்!!

மகாபெரியவர், ஆசாரியாள், ஜகத்குரு என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி தினம் ஜூன் 8ம் தேதி வருகிறது, அவரது 124வது ஜயந்தி விழா கொண்டாடும் இந்நாளில் அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சுப்ரமணிய சாஸ்திரி, மகாலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு, வைகாசி 2ம் நாள், அதாவது மே 20ம் தேதி, அனுஷா நட்சத்திரத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் ஆசாரியார் அவதரித்தார்.

வீட்டில் அவர் தந்தையிடமே ஆரம்பப் பாடங்களைப் படித்தவர், எட்டு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1905ம் ஆண்டு உபநயனம் எனும் பூணூல் போடும் வைபவம் நடைபெற்றது.

1906ம் ஆண்டு நான்காவது ஃபாரமில் படித்தபோது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் பிரின்ஸ் ஆர்தராக அற்புதமாக ஆங்கிலம் பேசி நடித்த தன் மகன், பின்னாளில் பெரிய அதிகாரியாக வருவாரென அவர் தந்தை எண்ணினார். ஆனால் ஆண்டவனின் எண்ணம் வேறாயிற்றே!


காஞ்சியின் 66வது ஆசார்யர் தென் ஆற்காடு மாவட்டம் சென்றிருந்த சமயம் தந்தையுடன் தரிசனத்திற்கு வந்திருந்த சுவாமிநாதனே தனக்குப் பின் பீடத்தை ஆரோகணிக்கப் போவதை அறிந்து, தக்க முறைகளுடன் அவரை காஞ்சிக்கு வரச் செய்து, 68வது பீடாதிபதியாக அறிவித்தார். 1907, பிப்ரவரி 13, சுவாமிநாதன் காஞ்சி பீடத்தின் 68வது குருவானார். காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்.

பின் வேத சாஸ்திரங்களை அதற்கான பண்டிதர்களிடம் முறையாகப் பயில, கும்பகோணம் மடத்துக்கு அனுப்பப் பட்டார். பீடமேறிய அவரால் நடத்தப் பெற்ற முதல் கும்பாபிஷேகம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1908 பிப்ரவரி 6ம் நாள் நடைபெற்றது. குடந்தை மடத்தில் சுவாமியைத் தரிசிக்கவும், சந்திக்கவும் அடிக்கடி மக்கள் வந்தது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்ததால் திருச்சிக்கு அருகே உள்ள மகேந்திர மங்கலத்தில் தங்கி படித்தார். வேத சாஸ்திரம் மட்டுமின்றி, ஜோதிடம், இசை, இலக்கியம், தத்துவம் என்று பலவும் படித்தார்.

மார்ச் 1919ல் முதன்முறை காசி யாத்திரை சென்றவர் தொடர்ந்து பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தார். தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், சத்யமூர்த்தி, சேட் ஜம்னாலால் பஜாஜ், ராஜாஜி ஆகியோரை சந்தித்த மகா பெரியவர் 1920 முதல் கதர் ஆடை மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டார்.

ஜனவரி 1931ல் பால் பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளர் பெரியவருடன் சந்தித்துப் பேசி, அதனைப் பற்றி அவரது ‘ஸர்ச் இன் சீக்ரெட் இண்டியா’ (Search in Secret India) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.தாயின் மரணத்தை எந்த உணர்வும் இன்றி அமைதியாக ஏற்றுக் கொண்டது அவரது சன்னியாசத்தின் உயர்வைக் காட்டுகிறது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார். பெரியவாளின் மனதுள் ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’  என்ற எண்ணம் ஏற்பட்டது.

1932 செப்டம்பர் 28 சென்னைக்கு முதன் முறையாக விஜயம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் இளம் ஆசாரியாரைக் காண வரும் கூட்டம் கட்டுக் கடங்காது. 1933, மே 18ம் நாள் முதன் முறையாக சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்தார். இந்தியாவின் பல இடங்களுக்கு சுவாமிகள் கால் நடையாகவே சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

1954ம் ஆண்டு மார்ச் 22, தனக்கு அடுத்த பீடாதிபதியாக மன்னார்குடியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். 1957 செப்டம்பர் 6ம் நாள் ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் முன்னிலையில் மகா பெரியவருக்கு காஞ்சியில் கனகாபிஷேகம் நடைபெற்றது.

இரண்டு ஆச்சாரியர்களுமாக இணைந்து பல தலங்களுக்கும், ஊர்களுக்கும் தொடர் விஜயம் செய்தனர். 1966ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 1969 மே 23 வரை இருவரும் நான்கு ஆண்டுகள் காஞ்சிபுரத்திலேயே இல்லாமல் ஆந்திரா முழுவதும் தொடர் விஜயம் செய்தது குறிப்பிடத் தக்கது. அதன் பின் 9 வருடங்கள் காஞ்சியிலேயே தங்கியிருந்த பெரியவர் திடீரென கிளம்பி பாத யாத்திரையாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா முழுதும் 6 ஆண்டுகள் பயணம் செய்தார். 80 வயதில் அவர் செய்த பாத யாத்திரை அவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்.

1983, மே 28ம் நாள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அச்சமயம் ஆந்திராவிலிருந்த மகா பெரியவரை இருவருமாகச் சென்று தரிசித்து, அவ்வருட வியாச பூஜையை மூன்று ஆசார்யருமாக இணைந்து செய்தனர். 1984 தமிழ் வருடப் பிறப்பன்று மூவருமாக காஞ்சி திரும்பினர்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம், பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்த ஹரி என்ற பக்தரிடம் ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொல்லி,அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் கூறிய  பெரியவா, சிறு வயதில் தான் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார். சட்டென்று அவரிடம்  ஈச்சங்குடியில் உள்ள தன் தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார்  உடனே ஹரி, ”இது என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

பிறகென்ன…அந்தவீடு, விலைக்கு வாங்கப்பட்டு, அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யார்   அறிவார்?

விழுப்புரம் சங்கர மடம்


பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டு,அவரை ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார். ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. அவரது பாதுகை இப்பாடசாலையில் அழகுறக் காட்சி தருகிறது.

விழுப்புரத்தில்  பெரியவரின் அவதார ஸ்தலமாகிய அவரது இல்லமே 'பாதுகா மண்டபம்' என்னும் சங்கர மடமாக உள்ளது. அவர் பிறந்த அறையில் அவரது  திருவுருவ சிலையும், பாத தரிசனமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மடத்து நிர்வாகி, பெரியவர் அங்கு பலமுறை வந்து தியானத்தில் அமர்ந்து பூஜை செய்திருக்கிறார் என்றும், இப்பொழுதும் ஸ்ரீ ஜெயேந்திரரும், பால பெரியவரும் அடிக்கடி வந்து பூஜை செய்வார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு மாத அனுஷமும் அங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுவதாகக் கூறினார்.

அந்த வீட்டில்தான் பெரியவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த இடம் என்பதைக் கேட்டபோது மனமும், மெய்யும் சிலிர்த்து விட்டது. சுவாமிகள் நடந்த அந்தப் புனிதமான இடத்தில் இன்று நாமும் அமர்ந்திருப்பதை நினைக்க 'என்ன தவம் செய்தோமோ நாம்' என்று ஆனந்தம் ஏற்பட்டது.

பாதுகா மண்டபம்

அங்குள்ள பெரிய அறையில் மகாபெரியவரின் அழகான சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நேரிலேயே அவர் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. ஒரு பல்லக்கில் பெரியவரின் புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.இவ்வருட ஜெயந்தி மஹோத்சவம் ஜூன் 5 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மஹாபெரியவா


விழுப்புரம் பெரியவரின் அவதார ஸ்தலமும், ஈச்சங்குடி வேத பாடசாலையும் அவசியம் மகாபெரியவரின் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய இடங்களாகும். நூற்றாண்டுகள் வாழ்ந்து, நடமாடும் தெய்வமாய் விளங்கி, பலரின் வாழ்விலும் அதிசயங்களையும், அற்புதங்களையும் இன்றும் நிகழ்த்தி தம் இறையருளை உலகம் முழுதும் பரவச் செய்த ஜகத் குருவின் காலத்தில் வாழும் பாக்கியம் பெற்ற நாம், அவரது தெய்வத் திருவடிகளை இந்நாளில் தியானித்து, ஹரஹர சங்கர...ஜெயஜெய சங்கர என்று ஜபித்து அவரருள் பெறுவோம்.

ஈச்சங்குடி பாடசாலா