ஞான ஆலயம் செப்டம்பர், 2008இதழில் வெளியானது
ராதாஷ்டமி – செப்டம்பர் – 8, 2008
கிருஷ்ணன் என்றாலே
நமக்கு நினைவில் முதலில் தோன்றுவது ராதையின் நினைவுதான்! இறைவனை வழிபடும் பக்தனின்
பல பாவங்களில் ஒன்றான ‘காதல்’ பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக
இணைந்து, ராஸ லீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த
ராதையின் பக்திக்கு அளவேது? பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ரூபிணி
ராதை! அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு இணைத்து ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார். அந்த
ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி, உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த ‘பர்ஸானா’
என்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கோகுலத்தில் யாதவ குலத்தில் வ்ருஷபானு மற்றும் கமலாவதி தம்பதியருக்கு மகளாகத் தோன்றினாள் ராதா. கண்ணன்
பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதை, கண்களைத் திறந்தது கண்ணன் பிறந்த பின்புதானாம்!
கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதையின் அன்பு மட்டுமே அவனைக்
கட்டிப் போட்டதாம்! கண்ணனின் மேல் ராதையின் அன்பு ஒரு பெருங்கடல் என்றால் மற்ற
கோபியரின் அன்பு ஒரு சின்ன குளத்தளவே!
அயனா என்ற யாதவனின் மனைவியான ராதை,
கண்ணனின் குழலோசை கேட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வந்து விடுவாளாம்! திருமணமான
பெண்தான் என்றாலும் கிருஷ்ணன் மேல் கொண்ட காதலை அவளால் தடுத்து நிறுத்த
முடியவில்லை. கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதையுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார்!
கண்ணன் கடவுள்; அவரது ஆத்மா ராதா! உலகுக்கு ஆற்றலை அளிப்பவன் கண்ணன். அவனது சக்தி
ராதா!
உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு
அருகில் ‘பிரம்மஸரண்’ என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய
ஊர்தான் ராதை பிறந்த இடம். ராதை இங்கு ‘ராதாராணி’ என்றே குறிப்பிடப்படுகிறாள்.
இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675-ம் ஆண்டு, செந்நிறக்
கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்ட்து. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால்
கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது.
இவ்வூர் மக்கள் ஒருவரை ஒருவர் ‘ராதே
ராதே’ என்று சொல்லி பேசிக் கொள்வது, இவர்கள் ராதாபக்தியை உணர்த்துகிறது. ராதை
செல்லமாக இங்கு ‘லாட்லிஜி’ என்று அழைக்கப்படுகிறாள். ராதை வழிபாடு நடைபெறும் ஒரே
ஆலயம் இது மட்டுமே! இங்குள்ள ‘ப்ரேம ஸரோவர்’ என்ற நதிக் கரையில்தான் ராதையும்
கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்! இவ்வூரில் ஹோலி மிக விமரிசையாக
நடைபெறும். கோகுலாஷ்டமிக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் (2008) செப்டம்பர்
எட்டு ராதாஷ்டமி.
ராதையின் கிருஷ்ண பக்தியைப்
பற்றிக் கூறும் வேடிக்கையான ஒரு கதை இது! ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ராஸலீலா
வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து
கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும்
பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய
பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த
ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன்
கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள். பரமசிவன்
அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபி வடிவத்தில் வந்த
ஈசன் ‘கோபிநாத் கோபேஸ்வர்’ எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை
தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.
கண்ணனின் ஆசைக் காதலியாக கண்ணனை
விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப்பாடி கூடி மகிழ்ந்த
ராதை, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம்; தன்
கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல்
இருந்தாள் என்று உத்தவர் ‘பிரஹ்லாத சமிதை’யில் கூறுகிறார்.
“கண்ணா, உன்னை விட்டு நான்
வாழ்வதெப்படி?” என ராதை கேட்க, “நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்”
என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைவுறும்போது, முதலில் ராதைதானே வந்து
நிற்கிறாள். அன்று கிருஷ்ணர் ராதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; ஆனால் இன்று
ராதா கல்யாணம் எல்லா இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகிறது. ராதா இல்லாமல்
கிருஷ்ணன் இல்லையே?
வணக்கம்
பதிலளிநீக்குஇதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ராதாஷ்டமி சிறப்பு...
பதிலளிநீக்கு