சென்ற மாதம் நானும், என் மூத்த
மகனும் என் இளைய மகனைப் பார்க்கச் சண்டிகர் சென்றிருந்தோம். திரும்ப மும்பை
புறப்படுவதற்கு முதல் நாள் மாலை, பெட்டியில் எல்லாம் சரி செய்து வைத்துவிட்டு,
டிக்கெட்டை என் மகனிடம் கொடுத்துவிட எண்ணிப் பார்த்தபோது டிக்கெட்டைக் காணவில்லை.
எனக்கு பகீரென்றது,
டில்லியிலிருந்து மும்பை
வருவதற்கான ராஜ்தானி ரயிலுக்கான ரூ 3000 மதிப்புள்ள டிக்கெட், பர்ஸ், ஹேண்ட் பேக்
எங்குமில்லை. துணிகளுக்கிடையே சிக்கியிருக்குமோ என்றெண்ணி அத்தனை துணிகளையும்
தனித்தனியாக பிரித்து உதறி விட்டேன். ம்ஹூம்... எங்கும் இல்லை.
பதற்றத்துடன் என் மகனிடம் சொல்ல,
அவன் பங்கிற்கு மறுபடியும் தேடினான். பெட்டியிலிருந்த டிக்கெட் எங்கு போகும்?
டிக்கெட் கிடைக்காவிட்டால், மும்பை வரை எப்படிச் செல்வது? ஜெனரல்
கம்பார்ட்மெண்டில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது என்ற கவலை.
டிக்கெட் என் கணவர் கிரெடிட்
கார்டு மூலம் வாங்கியது என்பதால், உடனே என் மகன் மும்பைக்கு ஃபோன் செய்து என்
கணவருக்கு விஷயத்தைச் சொன்னான்.
அவர் உடனே, அவருக்குத் தெரிந்த ரயில்வே
மேலதிகாரியிடம் விசாரிக்க, அதிகாரி, தான் அங்கிருந்து டில்லி ஸ்டேஷன்
அதிகாரிகளுக்கு ஃபோன் செய்வதாயும், எங்கள் ஐ.டி கார்ட் ஏதாவது காண்பித்தால்தான்
முடியுமென்றும் சொல்லிவிட்டார். டிக்கெட் தொகையில் 25% கட்ட வேண்டுமென்றும்
சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் ஐ.டி. கார்டுக்கு எங்கு போவது, என்ன செய்வது என்று
ஒரே குழப்பம்.
சட்டென்று எனக்கு அரைக்காசு அம்மன்
நினைவு வர,
“அரைக்காசு அம்மா! நீதான் டிக்கெட்
கிடைக்க அருள் புரிய வேண்டும். உனக்கு வெல்லம் நிவேதனம் செய்கிறேன்” என்று
வேண்டிக் கொண்டு, மீண்டும் தேட ஆரம்பித்தேன்.
ஞான ஆலயத்தில் சண்டிகரிலுள்ள
சக்திபீடத்தில் ஒன்றான மானஸா தேவி கோயில் பற்றிப் படித்ததால், அந்த ஆலயம் சென்று
தரிசிக்க எண்ணி, அது பற்றி மஞ்சுளா ரமேஷ் எழுதியிருந்ததை எடுத்துச்
சென்றிருந்தேன்.
முதல் நாள் மானஸா தேவியின் தரிசனம்
மிக அருமையாகக் கிடைத்தது. அங்கு தலபுராணப் புத்தகம், அம்மன் புகைப்படம்
வாங்கினேன். அந்தப் புத்தகத்தை எடுத்தபோது டிக்கெட் அழகாக அதனிடையே இருந்தது. அதே
புத்தகத்தை நான் இரண்டு முறை எடுத்துத் தேடியும் கிடைக்காத டிக்கெட், அப்பொழுது
எப்படி அதில் வந்தது? அரைக்காசு அம்மன் அருளை அப்பொழுது தான் பூரணமாக உணர்ந்து
கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக