தீபம் அக்டோபர் 5, 2015 இதழில் வெளியானது
தன்னை மனம் ஒன்றி வணங்குபவர்களை அருளும், பொருளும்,அறிவும், செறிவும் பெற்று வாழ வைக்கும் இறைவன் ஈசன்.
அவன் அருளாட்சி செய்யும் ஆலயங்கள் பல. அவற்றுள் வேலூர் மாவட்டத்திலுள்ள
விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான, மிகப் பெரிய, பிரம்மாண்டமான கலைத்திறன் நிறைந்த கண்ணையும், கருத்தையும் கவரும் அற்புதமான ஆலயம் ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயம்.
கோபுரம் |
ஸ்வயம்பு லிங்கமாக இங்கு அருள் புரியும்
மார்க்கபந்தீஸ்வரரின் கர்ப்பக்கிரகத்தின் மேல் கூரை ருத்ராட்சத்தால் வேயப்பட்ட
சிறப்புடையது. ஆதிசங்கரருக்கு பின் அத்வைத சித்தாந்தத்தில் சிறந்த புலமை
பெற்றிருந்த அப்பைய தீட்சிதர் பிறந்த தலம் இது. திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற 1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் விரிஞ்சிபுரம் என்ற பெயர் பெற்றது எப்படி?
கஜ ப்ருஷ்ட விமானம் |
விரிஞ்சன் என்பது படைக்கும் கடவுள் பிரம்மனின் பெயர். பரமசிவனின் அடியையும், முடியையும் கண்டு பிடிக்க விஷ்ணுவும், பிரம்மனும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் சென்றது நாம் அறிந்த கதை.
விஷ்ணு அடியைக் காணமுடியாத உண்மையை ஒப்புக் கொள்ள, அன்ன வடிவில் ஆகாயத்தில் சென்ற பிரம்மனோ கீழே விழுந்த தாழம்பூவுடன் வந்து
பொய்யுரைத்ததும் நாம் அறிவோம். அந்த நான்முகனுக்கு தன் முடியைக் காட்டி அருளிய
தலமே இது. அதன்பொருட்டே இத்தலம் விரிஞ்சிபுரம் ஆயிற்று.கௌரிதேவி இத்தல இறைவனை
வழிபட்டு இங்குள்ள தீர்த்தத்தை உருவாக்கியதால் கௌரிபுரம் என்றும் அழைக்கப்
படுகிறது. விஷ்ணுபுரம், மார்க்கபந்தீஸ்வரம் என்பவை வேறு பெயர்கள்.
இத்தலப் பெருமைகள் அருணாச்சல
புராணம்,சிவரஹசியம், காஞ்சி புராணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தில் இறைவனை ஆராதித்துவந்த சிவநாதன்-நயினானந்தினி தம்பதியர்க்கு சிவசர்மா என்ற மகனாகப் பிறந்தார் படைக்கும் கடவுளான பிரம்மன். மகனுக்கு உபநயனம் செய்யும் முன்பே தந்தை இறந்துவிட, தொடர்ந்து பூஜை செய்வது தடைப்பட்டது. தன் மகனுக்கு பிரம்மோபதேசம் செய்து வைக்கும்படி நயினானந்தினி தன் உறவினரை வேண்ட, அவர்களோ ஆலய பராமரிப்பை தாமே ஏற்றுக் கொள்ளப் போவதாகக் கூறினார். மனம் நொந்த அந்தத் தாய் சிவபெருமானை வேண்டி நின்றாள். அவள் கனவில் தோன்றிய ஈசன், மறுநாள் சிவசர்மனை பிரம்ம தீர்த்தத்தில் நீராட்டி அழைத்துவரச் சொன்னார். அவளும் அப்படியே செய்து காத்திருக்க, ஈசன் வயோதிக வடிவில் அங்கு வந்து சிறுவனுக்கு பிரம்மோபதேசமும், சிவமந்திர தீட்சையும் செய்து வைத்து பின் அவ்வாலயக் குளத்தினுள் சென்று மறைந்துவிட்டார்.
அவ்வூர் மன்னரின் கனவில் தோன்றிய இறைவன்
சிவசர்மாவை ஊர்வலமாக ஆலயம் அழைத்துச் செல்லப் பணித்தார். அவ்வாறே ஆலயத்தை
நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு தானாகவே திறந்தது. தீர்த்தக்
குடத்துடன் உட்சென்ற பாலகன் இறைவனிடம் தீட்சை பெற்றதால், பூஜைகளை மரபு மாறாமல் செய்யலானான். அபிஷேகம் செய்ய தன் உயரம் போதாமல் வருந்தினான். பாலனுக்கு அருள பரமசிவனும் தன் பாணத்தை சற்றே
சாய்த்து அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டிகர்த்தாவாக இருந்தபோது காட்டாத தன்
திருமுடியை, சிறுவனாக வந்து வணங்கிக் கேட்டபோது காட்டி அபிஷேகத்தை
ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு.பணிவுடன் தன்னை வணங்குபவர்க்கு எதுவும்
செய்வேன் என்று பாமரராகிய நமக்கும் பரம்பொருள் உணர்த்திய தலம் இது.அதே கோலத்தில்
இன்றும் தலைமுடி சாய்ந்த மகாலிங்கமாக ஸ்ரீ மார்க்க பந்தீஸ்வரராகக் காட்சி
தருகிறார்.
இவருக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயர்
ஏற்பட ஒரு வரலாறு உள்ளது.குண்டல தேசத்து மிளகு வியாபாரியான தனபாலன் சிறந்த
சிவபக்தன். அவனது மிளகு மூட்டைகளை வழிப்பறித் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்று
விட்டனர். ஈசனிடம் முறையிட்ட தனபாலனுக்காக ஒரு வீரன் வடிவில் அவனுக்கு துணையாக
வந்து அவர்களிடமிருந்து மிளகு மூட்டைகளைக் காப்பாற்றிக் கொடுத்ததுடன், காஞ்சீபுரம் வரை அவனுக்கு துணையாகச் சென்றதால் மார்க்கபந்தீஸ்வரர் அதாவது
வழித்துணை நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னை வணங்கும் பக்தர்களை எந்த இன்னலிலும்
கைவிடாமல் இம்மைக்கும், மறுமைக்கும் வழித்துணையாக வருவேன் என்று
நமக்கு உணர்த்திய புண்ணியத் தலமாகும்.
இனி ஆலயத்தை தரிசிப்போம். 110 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ஏழு நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் பிரம்மாண்டமாக
காட்சியளிக்கிறது. ஐந்து பிரகாரங்களைக் கொண்ட ஆலயத்தின் நெடிதுயர்ந்த மதில்
சுவர்கள் 'திருவாரூர் தேரழகு...விரிஞ்சிபுரம் மதில் அழகு' என்ற வழக்குமொழிக்கேற்ப ஆலயத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பல அழகிய
மண்டபங்கள் அற்புதமான சிற்பக் கலையுடன் காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்ததும்
சுவாமிக்கும், அம்மனுக்குமென இரண்டு த்வஜஸ்தம்பங்களும், பலிபீடம், நந்தியும் உள்ளன.
சுற்றி வரும்போது 14 தூண்களைக் கொண்ட சக்தி மண்டபமும், சிம்மத்தின் முகம் கொண்ட குளமும் அமைந்துள்ளது. இந்த சிம்மதீர்த்தமே மகளிரின் மழலை இல்லாக் குறையை தீர்க்கும் அற்புத குளம். கார்த்திகை மாதக் கடை ஞாயிறு அன்று குழந்தை இல்லாதவர்கள் பிரம்மதீர்த்தத்திலும், சூலி தீர்த்தத்திலும்,சிம்மதீர்த்தத்திலும் குளித்துவிட்டு இரவு ஆலயத்திலேயே உறங்க வேண்டும். அவர்கள் கனவில் இறைவன் தோன்றி அருள் செய்து அவர்களின் குறையை நீக்கி பிள்ளைப் பேறு தருவார் என்பது ஐதீகம்.பலருக்கும் இது இன்றுவரை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆதிசங்கரரால் பீஜாக்ஷர பிரதிஷ்டை செய்யப்பட தீர்த்தம் இது எனக் கூறப்படுகிறது.
அடுத்து இறைவனின் கருவறைக்கு செல்வோம்.
கஜப்பிருஷ்ட விமானம். உயர்ந்து நிற்கும் த்வாரபலகர்களைத் தாண்டி சென்றால் சற்றே
ஈசானிய பக்கமாகத் தலையைத் தாழ்த்தி சுயம்பு ரூபமாக உயர்ந்த பெரிய லிங்க வடிவில்
காட்சி தரும் இறைவனின் தோற்றம் மனதைப் பரவசப் படுத்துகின்றது. எண்ணம்
மறந்து, சொல்லும், செயலும் மறந்து ஓம் நமசிவாய என்று மட்டுமே
நம்மால் ஜபிக்க முடிகிறது. பிரம்மனுக்கு மட்டுமல்ல நம் குறைகளையும் உன்னிப்பாகக்
கேட்டு நிறைவேற்றும் பொருட்டே தலையைத் தாழ்த்தி அருள் செய்வது போன்று தோன்றும்
அந்த இறைவனின் கருணாகடாட்சம் மெய்சிலிர்க்க வைக்கிறது.இறைவனின்
திருமுடிக்கு மேல் காணப்படும் ருத்ராட்சப் பந்தல் அதிசய அற்புதம். கஜபிருஷ்ட
வடிவில் அமைந்துள்ள கர்ப்பக்கிரகத்தை சுற்றிலும் கோஷ்ட தெய்வங்கலாக கணபதி, தட்சினாமூர்த்தி, துர்கை, வாசுதேவபெருமாள் ஆகியோர் கவினுறக் காட்சி
தருகின்றனர். இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிட்சாண்டவர் சந்நிதி கலை வண்ணத்துடன்
எழிலாகக் காட்சி தருகிறது.
அடுத்து அழகாகக் காட்சி தரும் மரகதாம்பிகையை தரிசிக்கலாம்.அம்மனுக்கு தனி துவஜஸ்தம்பத்துடன் கிழக்கு நோக்கிய தனி சந்நிதி. மூன்று அடி உயரத்தில் அழகு மிளிரும் முகத்துடன் அதரங்களில் நகை சிந்த நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் திவ்ய தரிசனம் தருகிறாள் அன்னை மரகதாம்பிகை. தாயே சரணம் என்று அவளை அண்டி வந்தவர்களுக்கு கற்பக விருட்சமாய் அருள் புரிபவளாம் அன்னை. அம்மன் சந்நிதியில் ஒரு நிலவறை இருப்பதாகவும், அது வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
பங்குனி
மாதம் சூரியனின் கதிர்கள் ஈசன் மேல் விழுவதால் இது பாஸ்கர க்ஷேத்ரம் என்று
போற்றப்படுகிறது. இங்கு தல விருட்சமான பனைமரம் அதிசயமானது. இதன் காய்கள் ஒரு
வருடம் கருப்பாகவும், அடுத்த வருடம் வெள்ளையாகவும் காய்க்கிறது.
அப்பைய தீட்சிதர் இத்தல இறைவனை வேண்டியே மார்க்கபந்து ஸ்தோத்திரம் இயற்றியுள்ளார்.
பிரயாணங்களின் சமயம் நாம் இந்த ஸ்லோகம் சொல்வதால் ஈசன் நம்முடன் வழித்துணை நாதராக
வந்து தடையின்றி, பயணத்தை நடத்தி வைப்பார்.
அருமையான சிற்பக்கலை.13ம் நூறாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பின் பல்லவ, விஜயநகர மன்னர்களால் மேம்படுத்தப் பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.ஆலயம் முழுதும் மண்டபங்களிலும், தூண்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லும், சிற்பங்களும் கதை பேசுவதாக அமைந்துள்ளது.சிற்பங்கள் அழகுருவமாக அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள காலம் காட்டும் கல்லில் அக்காலத்தில் நிழல் விழுவதை வைத்து நேரம் கண்டு பிடிப்பார்களாம். இங்குள்ள சகஸ்ர மகாலிங்கம் அற்புத தரிசனம். தெற்கில் இருக்கும் சிறிய ராஜகோபுரம் வழியாக இன்றும் இரவில் சித்தர்கள் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.
பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் மிக
விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதக் கடை ஞாயிறு அன்று ஆலயம் முழுதும் வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.ஆயிரக் கணக்கானோர்
சிம்மக்குளத்தில் நீராடுவர். சிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை வெள்ளிகள்,கார்த்திகை தீபம், பிரதோஷம் இவை சிறப்பாக நடைபெறுகின்றன.
சுவாமிக்கு அபிஷேகம், அம்மனுக்கு மஞ்சள் சாற்று, புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தக் ஆகியவை இங்கு சிறப்பான
வேண்டுதல்களாகும்.
குழந்தை வரத்துக்கு மிகப் பிரசித்தி பெற்ற
ஆலயம் இது.
திருமண வரம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
திருமண வரம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
பிரம்மனுக்கு ஈசனே பிரம்மோபதேசம் செய்த தலமானதால் குழந்தைகளுக்கு பூணூல் போடவும், பெரியவர்கள் மந்திர தீட்சை எடுத்துக்கொள்ளவும், வித்யாரம்பத்திற்கும் இத்தலம் மிகச் சிறப்பானதாகும்.
மிளகு வியாபாரிக்கு வழித்துணையாக சென்றதால் வியாபாரிகள் லாபம் கிடைக்க இப்பெருமானை வேண்டித் தொழுகிறார்கள்.
இத்தல வழிபாட்டால் பேய் , பிசாசு தொல்லைகள் நீங்கும் எனப்படுகிறது.
இத்துணை சிறப்புகள் பெற்று, தம்மை வழிபடுவோரை இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெற வைக்கும் எந்தை ஈசன்
வழித்துணை நாதனைக் கண்டு வணங்குவோம்.
இவ்வாலயம்
சென்னை-பெங்களூர் ஹைவேயில் வேலூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஆலய நேரம் காலை 6-11...மாலை 4-8
தொலைபேசி 0416-2914546
ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் இயற்றிய
ஸ்ரீமார்க்கபந்து ஸ்தோத்திரம்
சம்போ மகாதேவ தேவா சிவ சம்போ மகாதேவ
தேவேச சம்போ----சம்போ மகாதேவ தேவா
பாலாவநம்ரத்ந கிரீடம் பால-
நேத்ரார்ச்சிஷா தக்த பஞ்சே ஷுகீடம் |
சூலாஹதாராதிகூடம் சுத்தமர்த்தேந்து
சூடம் பஜே மார்க்க பந்தும் ||
தேவேச சம்போ----சம்போ மகாதேவ தேவா
பாலாவநம்ரத்ந கிரீடம் பால-
நேத்ரார்ச்சிஷா தக்த பஞ்சே ஷுகீடம் |
சூலாஹதாராதிகூடம் சுத்தமர்த்தேந்து
சூடம் பஜே மார்க்க பந்தும் ||
....சம்போ
அங்கே விராஜத் புஜங்கம் அப்ர
கங்காதரங்காபிரா மோத்தமாங்கம் |
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்த ஸம்ஸேவிதாங்க்ரீம்
பஜே மார்க்க பந்தும் ||
கங்காதரங்காபிரா மோத்தமாங்கம் |
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்த ஸம்ஸேவிதாங்க்ரீம்
பஜே மார்க்க பந்தும் ||
....சம்போ
நித்யம் சிதாநந்தரூபம் நிந்ஹுதா
சே ஷலோகேச வைரிப்ரதாபம் |
கார்த்தஸ்வரா கேந்த்ர சாபம்
க்ருத்திவாஸம் பஜேதிவ்யஸன் மார்க்க பந்தும் ||
சே ஷலோகேச வைரிப்ரதாபம் |
கார்த்தஸ்வரா கேந்த்ர சாபம்
க்ருத்திவாஸம் பஜேதிவ்யஸன் மார்க்க பந்தும் ||
....சம்போ
கந்தர்ப்பதர்பக்னமீசம் கால
கண்டம் மகேசம் மஹாவ்யோமகேசம் |
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடி
ஸூர்யப்ரகாஶம் பஜே மார்க்கபந்தும் ||
கண்டம் மகேசம் மஹாவ்யோமகேசம் |
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடி
ஸூர்யப்ரகாஶம் பஜே மார்க்கபந்தும் ||
....சம்போ
மந்தாரபூ தேருதூரம் மந்த
ராகேந்த்ரஸாரம் மகாகௌர்யதூரம் |
சிந்தூர தூரப்ரசாரம் சிந்து
ராஜாதிதீரம் பஜே மார்க்கபந்தும் ||
ராகேந்த்ரஸாரம் மகாகௌர்யதூரம் |
சிந்தூர தூரப்ரசாரம் சிந்து
ராஜாதிதீரம் பஜே மார்க்கபந்தும் ||
....சம்போ
அப்பய்ய யஜ்வேந்த்ரகீதம்
ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே |
தஸ்யார்த்த ஸித்தம் விதத்தே மார்க்க மத்யே
பயம் ஸாது தோஷோ மஹேச ||
ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே |
தஸ்யார்த்த ஸித்தம் விதத்தே மார்க்க மத்யே
பயம் ஸாது தோஷோ மஹேச ||
....சம்போ
சம்போ மகாதேவ தேவா சிவா சம்போ மகாதேவ
தேவேச சம்போ--சம்போ மகா தேவ தேவ...|
தேவேச சம்போ--சம்போ மகா தேவ தேவ...|
இதி ஸ்ரீ அப்பய்ய தீக்ஷித ப்ரணிதம்
ஸ்ரீமார்க்கபந்து ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||
அருமை
பதிலளிநீக்குமார்க்க பந்து ஸ்லோகம் மிகவும் மஹிமை வாய்ந்தது. என் மாமனார் அடிக்கடி எங்கு போனாலும் இதனைச் சொல்லிக்கொண்டே போவார்.
பதிலளிநீக்கு//வழித்துணைநாதர் - தீபம் அக்டோபர் 5, 2015 இதழில் வெளியானது. மகப்பேறு அருளும் மார்க்கபந்தீஸ்வரர்//
மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.