Thanjai

Thanjai

வியாழன், 23 ஜூன், 2016

சிரிக்கும் குபேரர்

தி இந்து தமிழ் நாளிதழ் தேதி 23-06-2016 யுடன் வெளி வந்த ஆனந்த ஜோதி இணைப்பில் வெளியான கட்டுரை.

நேரடியாக செய்தித் தாள் கட்டுரையைப் படிக்க இங்கேசொடுக்கவும்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் செல்லும்போது தகதகக்கும் அந்த ஆலயத்தை பார்த்துக் கொண்டே செல்வோம். இந்த முறை அவ்வாலயத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பல ஆலயங்களில் சன்னதி உண்டு. சில சிறப்பான தனிப்பட்ட ஆலயங்களும் உண்டு. ஆனால் வித்யாசமான ரூபத்துடன் வானுயர்ந்து நின்று காட்சி தந்து, தன்னை வணங்குவோரின் ஆசைகளையும், வேண்டுதல்களையும்
  நிறைவேற்றி வைக்கும் செல்வ குபேரரைக் காண நீங்கள் விழுப்புரம் மாவட்டம் ஓங்கூருக்கு செல்ல வேண்டும்.

தஞ்சை மாவட்டம் குடவாசலை சொந்த ஊராகக் கொண்ட சென்னை P.R ஜுவெல்லரி உரிமையாளரான திரு.ரவீந்திரன் அவர்கள் மனதில்  உலக மக்களின் ஆனந்தத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் தோன்றியதாம். அதன் விளைவாக அவரால் உருவாக்கப் பட்டதே இவ்வாலயம். இங்குள்ள  மண்டபத்தில் அமர்ந்து தம் கோரிக்கைகளை வேண்டினால் அனைத்திலும் வெற்றி பெற்று சகல செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்நிலை அடையலாம்.

அவரால்  உருவாக்கப்பட்ட இவ்வாலயம் தங்கம் போல் தகதகக்கிறது. நாம் ஹேப்பிமேன் என்று சொல்லும் Laughing Budhdha உருவம்தான் தங்க வண்ணத்தில் சிரித்த முகத்துடன், பெருத்த தொப்பையுடன், பொற்காசு மாலை தாங்கி நெடிதுயர்ந்து நின்று செல்வகுபேரராகக் காட்சி தருகிறார். அவரது சிரித்த மகிழ்ச்சியான உருவம் கண்டதுமே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அப்பொழுதே நம் துன்பங்கள் தூரப்போய் விட்டாற்போன்ற மகிழ்ச்சி மனதை ஆட்கொள்கிறது.
இவ்வாலயத்தின் சிறப்பம்சமாக 10800 சதுர அடியில் ஒன்பது என்ற கூட்டு எண்ணிக்கையில் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து நவக்கிரகங்களும் தமக்குரிய திசையில், அவரவர் வாகனங்களுடன், தனித்தனி சந்நிதி, மரம், பூ அமைக்கப் பட்டு, அவர்களுக்கான ஸ்லோகம் எழுதப்பட்டு, சிறப்பாக அமைந்துள்ளது. ஆனந்த நர்த்தன விநாயகர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி ஹயக்ரீவர், கன்னிகா பரமேஸ்வரி, லக்ஷ்மி நாராயணர்,ஷீர்டி பாபா, அன்னை, அரவிந்தருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரமிடு வடிவ கோபுரங்கள் மேலே கலசங்களுடன் அற்புதக் காட்சி அளிக்கின்றன. கோபுர  தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு பிரமிடு வடிவ கோபுரங்கள் காலை சூரிய வெளிச்சத்தில் மின்னுவது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி! ஒவ்வொரு சந்நிதியிலுள்ள தெய்வங்களும் தங்கக் கவசத்தில் பொலிவோடும், அழகோடும் காட்சி தருகின்றனர். ஆலயத்தில் ஒரு தெய்வீகம் நம்மை ஆட்கொள்வதை உணர முடிகிறது.செல்வா குபேரர் நம்மைப் பார்த்து 'கவலைப் படாதே. உன் எண்ணங்கள் ஈடேறும்' என்று புன்னகையுடன் சொல்வதுபோல் தோன்றுகிறது. 
கடந்த 2014ம் ஆண்டு செப்டெம்பர் நாலாம் தேதி கும்பாபிஷேகம் கண்ட இக்கோயில் மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது. ஆலயம் முழுதும் மிதியடிகள் போடப்பட்டு, வெயிலின் சூடு தாக்காமல், அம்புக்குறி போட்ட வழியே சென்று நாம் வரிசையாக தெய்வங்களை தரிசிக்கும்படி சிறந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒரே வண்ண புடவை அணிந்த பெண்கள் நமக்கு அனைத்தும் விளக்கி சொல்கிறார்கள். எல்லா சன்னதிகளிலும் கண்ணாடிப் பெட்டிக்குள் அணையா விளக்குகள் உள்ளன. சன்னதிகளின் எண்ணிக்கைக்கு தக்கபடி அவர்களிடமே விலைக்கு கிடைக்கும் எண்ணையை வாங்கி நாம் அத்தனை விளக்குகளுக்கும் ஊற்றி  வழிபடலாம். 

அங்குள்ள மண்டபத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பெயர், ஊர், தொலைபேசி எண், இமெயில் விலாசம் பதிவு செய்து செல்வ குபேரரிடம் நம் கோரிக்கைகளை வேண்டிக்கொண்டால் அவர் அத்தனையும் விரைவில் நிரைவேற்றுவார் என்ற திரு ரவீந்திரன் அவர்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அங்கு எழுதப் பட்டிருப்பது எவருக்கும் கண்டிப்பாக மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

 இங்கு உண்டியல் கிடையாது. வரும் அனைவருக்கும் அன்னதானம் உண்டு. நன்கொடைகள், வழிபாட்டுக் கட்டணம் கிடையாது. அன்னதானத்திற்கு மட்டுமே தொகை வசூலிக்கப் படுகிறது. ஆன்மீக  புத்தகங்கள், மற்றும் தெய்வ விக்கிரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் NH45ல் சென்னையிலிருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓங்கூரில் அமைந்துள்ளது  ஸ்ரீ செல்வகுபேரர் ஆலயம். ஆலய நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை. சொந்த வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஆலயம் தரிசித்து செல்வ குபேரரின் அருளைப் பெறலாம்.


3 கருத்துகள்:

  1. உண்டியல், வழிபாட்டுக் கட்டணம் கிடையாது என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தி.நீங்கள் கொடுத்திருக்கும் சிறப்பான தகவல்கள் இந்தக் கோவிலைப் போய் சேவித்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு