Thanjai

Thanjai

செவ்வாய், 9 ஜூன், 2015

மங்கையர் நலம் காக்கும் குங்குமசுந்தரி


ஞான ஆலயம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது




ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, உ, ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. தஞ்சையில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது.

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, “எப்பொழுது உபதேசம் பெற வரலாம்?” என்று கேட்க, குமரனோ, “எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு” கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு.

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது!

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். வடப்புறத்தில் ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது,


1 கருத்து:

  1. அன்புள்ள சகோதரி திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 22ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/22.html

    பதிலளிநீக்கு